வாந்தி வருவது ஏன்?

Read Time:9 Minute, 22 Second

13260093_1132924870061577_6374188707183032829_n-615x429வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது. நம் வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாவோ, ரசாயனமோ புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம்.

இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் உள்ள சென்ஸார் செல்கள் உடனே உணர்ந்து, ‘வேகஸ்’ நரம்பு வழியாக முகுளத்துக்குத் தகவல் அனுப்பும். வாந்தி எடுத்தால்தான் பிரச்சினை சரியாகும் என்று முகுளம் தீர்மானித்துவிட்டால், அந்தச் செய்தியை வாந்தி மையத்துக்கு அனுப்பிவைக்கும். உடனே அது ‘வாந்தி எடு’, ‘வாந்தி எடு’ என்று வயிற்றை அவசரப்படுத்தும். இந்தக் கட்டளைகள் பிரெனிக் நரம்பு, வேகஸ் நரம்பு, தண்டுவட நரம்பு, பரிவு நரம்பு, மூளைமைய நரம்புகள் வழியாக வயிற்றுக்கு வந்து சேரும்.

பேட்டரி சார்ஜ் தீர்ந்த கார் நடுவழியில் நின்றுபோனால், சம்பந்தமில்லாத நான்கு பேர் உதவிக்கு வந்து அதைத் தள்ளிவிடுகிற மாதிரி, இரைப்பை சிரமப்படும்போது, இரைப்பைக்குச் சம்பந்தமில்லாத வயிற்றுத் தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறுகுடலையும் இரைப்பையையும் அழுத்தும்.

அப்போது உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் உள்ள ‘வால்வு’ திறந்துகொள்ள, இரைப்பையில் உள்ள உணவு, நச்சு, அமிலம் எதுவானாலும் ‘ஓவ்’ என்ற பெரிய சத்தத்துடன் வெளியேற்றப்படும். இதுதான் வாந்தி. பெரும்பாலும் வாந்தி வருவதற்கு முன்னால் வாயில் எச்சில் ஊறுவது, வயிற்றைப் புரட்டுவது, புளித்த ஏப்பம் போன்ற முன்னறிவிப்புகளை வயிறு நமக்குத் தெரிவிக்கும்.

வாந்தி நல்லதா, கெட்டதா? வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான். அதற்காக ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் தண்ணீர்ச் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும். குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இது ஆபத்து. முக்கியக் காரணங்கள் கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவது, ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது, இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது, முன் சிறுகுடல் அடைப்பு, உணவுக் குழாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்று. வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சினைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப் பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோய் மருந்துகள் போன்றவை வாந்தியை ஏற்படுத்தும். காதும் ஒரு காரணம்தான்! காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்சினைகளாலும் வாந்தி வரும். காதில் ‘வெஸ்டிபுலர் அப்பாரட்டஸ்’ என்று ஓர் அமைப்பு உள்ளது.

இதுதான் நம்மை நடக்கவைக்கிறது; உட்காரவைக்கிறது; உடலைச் சமநிலைப்படுத்துகிறது, இந்த அமைப்பு தூண்டப்படும்போது வாந்தி வரும். இதனால்தான் பேருந்தில் பயணிக்கும்போது, கடல் பயணம்/விமானப் பயணங் களின்போது வாந்தி வருகிறது. கர்ப்பகால வாந்தி! கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் சில ஹார்மோன்களின் அளவு திடீர் திடீரென்று ஏறி இறங்குவதால், மசக்கை வாந்தி வருகிறது. முதல் நாள் இரவில் நிறைய மது குடித்தவர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு.

சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது. தவிர, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் வாந்தி வரும். ஒற்றைத் தலைவலி, தலையில் அடிபடுதல், மூளையில் கட்டி, மூளை நீர் அழுத்தம் போன்றவற்றாலும் வாந்தி ஏற்படும். பூச்சிக் கடி, பாம்புக் கடி போன்ற விஷக் கடிகளின்போதும் வாந்தி வரும். ஊசி மருந்து, மாத்திரை அலர்ஜி ஆனாலும் வாந்தி வருவது நிச்சயம். உளவியல் காரணங்கள் சிலருக்குக் கவலை, கலக்கம், பயம், பதற்றம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வாந்தி உண்டாவது வழக்கம்.

இந்த வாந்தி பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவு சாப்பிட்ட பின்பு ஏற்படும். பகல் நேரப் பணிகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயப்படுபவர்களுக்கு இம்மாதிரி வாந்தி வரும். உதாரணமாக, பள்ளிக்குச் செல்லப் பயப்படும் குழந்தைகள் காலையில் சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது இவ்வகையைச் சேர்ந்தது.

சின்னச் சின்னக் காரணங்கள் பார்வை, நுகர்தல், தொடுதல் போன்றவையும் வாந்தியை வரவழைக்கும். பள்ளி/கல்லூரி விடுதிகளில் பல்லி விழுந்த பாலைப் பார்த்தால் மாணவர்கள் எல்லோருக்கும் வாந்தி வருவது, துர்நாற்றம் வீசும் இடங்களைக் கடக்கும்போது உண்டாகும் வாந்தி, பல் தேய்க்கும்போது பல்துலக்கித் தொண்டையைத் தொட்டுவிட்டால் வாந்தி வருவது போன்றவை இதற்குச் சில உதாரணங்கள். என்ன செய்யலாம்? வாந்தியை நிறுத்துவதற்குப் பல மருந்துகள் உள்ளன.

என்றாலும், வாந்திக்கு என்ன காரணம் என்று தெரிந்து, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றால்தான் வாந்தி சரியாகும். அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது. வாந்தியைத் தடுக்க வழி! # உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவையும் கெட்டுப்போன உணவையும் சாப்பிடாதீர்கள்.

# அவசர அவசரமாகச் சாப்பிடாதீர்கள். அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாதீர்கள். # அஜீரணத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிற கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த நொறுக்குத் தீனிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

# வாந்தி எடுத்து உடல் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம். அல்லது காய்ச்சி ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் உப்பையும் கலந்து ஒவ்வொரு டீஸ்பூனாகக் குடிக்கலாம்.

# பயண வாந்திக் கோளாறு உள்ளவர்கள் பேருந்துப் பயணம் செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு ‘அவோமின்’ போன்ற வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை டாக்டர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாயின் உணவை சாப்பிட்டு அவஸ்தைப்பட்ட பிரபலம்…!!
Next post கர்ப்ப காலத்தில் தூக்கமின்றி அவதிப்படுவது ஏன்?