தொடருமா புலி வேட்டை? உண்மையில் இந்தக் கைதுகளுக்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்? –கருணாகரன்..!!

Read Time:18 Minute, 28 Second

timthumbபுலிகள் மீண்டும் கைது செய்யப்படுகிறனர். ஆனால், இது முன்னாள் புலிகள். அதிகாரம் இல்லாத, கட்டமைப்பு இல்லாத, தலைமை இல்லாத, ஒருங்கிணைப்பும் திட்டங்களுமில்லாத புலிகள். மட்டுமல்ல, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போராளிகள்.

போரின் பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்து, விசாரணைகள், புனர்வாழ்வு நடவடிக்கைகளை எல்லாம் முடிந்து, இயல்பு வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களே கைதாகியிருக்கிறார்கள்.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட தளபதியாக இருந்த ராம், சார்ள்ஸ் அன்டனி படையணியின் தளபதியாக இருந்த நகுலன், புலனாய்வுத்துறையில் செயற்பட்ட கலையரசன் உட்பட பலர், கடந்த வாரங்களில் கைதாகியிருக்கின்றனர். இந்தக் கைதுகளுக்கான காரணங்களை அரசாங்கம் தெளிவாகச் சொல்லவில்லை. ரீ.ஐ.டி எனப்படும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரே இந்தக்கைதுகளைச் செய்திருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.

இந்தக் கைதுகள் தொடர்பாக பொலிஸிடமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தக் கைதுகள் தொடர்பாகக் கொழும்பிலே நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘இது குறித்துக் கவனமெடுக்கப்படும்’ என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறார். அது என்னமாதிரியான நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் விளக்கவில்லை. அது எப்படியான நடவடிக்கையாக இருக்கும் என்றும் தெரியவில்லை.

இந்தக் கைதுப் படலம் எப்பொழுது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது. எதற்காக இந்தக் கைதுகள் நடக்கின்றன என்று தெரியாத மாதிரியே எப்பொழுது இந்தக் கைதுகள் நிற்கும் என்றும் தெரியாது.

இப்படி எதுவுமே தெரியாத ஒரு நிலையில் கைதுகள் நடப்பதால் முன்னாள் புலிகளிடத்தில் அச்ச உணர்வு உண்டாகியுள்ளது.

போர் முடிந்து, விசாரணைகளை எதிர்கொண்டு, புனர்வாழ்வுக்கும் சிறைத்தண்டனைக்கும் உள்ளாகி, விடுதலை பெற்று வந்தாலும் தங்களைச் சூழ்திருக்கும் துயரம் முடிவுறவில்லை என்பது இவர்களின் கவலை. இந்த நிலை இப்படியே நீடிக்குமானால் தங்களுடைய எதிர்காலம் எப்படியாக அமையும் என்பது முன்னாள் புலிகளின் முன்னால் தோன்றியிருக்கும் பதிலற்ற பெருங் கேள்வி.

உண்மையில் இந்தக் கைதுகளுக்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்?

‘யாரும் எந்த மாதிரியான எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது.

எப்போதும் விழிப்பு நிலையில் நாங்கள் இருக்கிறோம்’ என்று உணர்த்துவதற்காக, இந்த மாதிரி நடவடிக்கைகளை படைத்தரப்பு மேற்கொள்கிறது என்று சிலர் சொல்கின்றனர்.

இந்த அடிப்படையில்தான் கடந்த ஆண்டுகளிலும் சில கைதுகளும் தெய்வீகன், கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டதும் நடந்தது என்றும் இவர்கள் கூறுகிறார்கள். போர் முடிந்த பின்னர் இப்படியானதோர் இறுக்க நிலையைப் பேணுவது படைத்தரப்பின் இயல்பு. அதற்கு அது ஒரு தேவை என்பது இவர்களுடைய கருத்து.

அப்படியானால், புலிகள் குறித்த எச்சரிக்கை உணர்வும் அச்சமும் மெய்யாகவே படைத்தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் உண்டா என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது.

நிச்சயமாகச் சொல்லமுடியும். அப்படியொரு அச்ச உணர்வு படைகளுக்கும் இல்லை.

அரசாங்கத்துக்கும் இல்லை. ஆனால், போரில் வெற்றியடைந்த எந்தத் தரப்பும் இந்த மாதிரியான ஒரு முன்னாயத்த நிலையிலும் சந்தேக நிலையிலும் இருப்பதுண்டு. அதில் பலிக்கடாவாகிக் கொண்டிருப்பது தோற்றத் தரப்பு. இதுதான் இங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு சாரார் இதை வேறு விதமாகப் பார்க்கின்றனர்…

இலங்கையைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்காக, இலங்கையின் ஸ்திரத்தன்மையில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் வெளிச்சக்திகள், இப்படி முன்னாள் புலிகளையும் பயன்படுத்தலாம்.

ஆகவே, வெளிச்சக்திகளின் தூண்டுதலின் பேரில் முன்னாள் புலிகள் செயற்படக் கூடும் என்ற உணர்வின் விளைவாகவே, இந்தக் கைதுகளை ஓர் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் செய்கிறது.

இதன் மூலம் வெளிச்சக்திகளின் கைகளில் சிக்கிவிடாதிருக்கும் ஓர் எச்சரிக்கை உணர்வை முன்னாள் புலிகளிடத்தில் உண்டாக்குவதே நோக்கம். கைது செய்யப்படுவோரின் நிலையைப் பார்க்கும் ஏனையவர்கள், தங்களைக் குறித்து எச்சரிக்கையோடு இருப்பர் என்ற எதிர்பார்ப்பை அரசாங்கம் கொண்டுள்ளது. வெளிச்சக்திகளின்

தூண்டுதல்களுக்குள்ளானால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். அந்த நடவடிக்கைகள் வெற்றியளிக்கப்போவதில்லை என்பதை உணர்த்துவதே இதன் அடிப்படை என்கின்றனர் இவர்கள்.

இதை விட இன்னொரு விதமாகவும் இதை இன்னொரு தரப்பினர் நோக்குகிறார்கள்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, நாட்டின் பொருளாதார நெருக்கடி, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிர்த்தரப்பின் அரசியல் எதிர்ப்புப் போன்றவற்றைத் திசை திருப்புவதற்காக, இந்த மாதிரிப் புலிப் பூச்சாண்டியொன்றை அரசாங்கம் காட்டுகிறது.

அதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பாக தாம் கரிசனையோடு செயற்படுவதாகவும் ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுகிறது. கூடவே, போரச்சம் இன்னும் முற்றாக நீங்கி விடவில்லை என்ற உணர்வையும் பராமரிக்க முற்படுகிறது என்பது இவர்களுடைய கருத்து.

இந்த மூன்று விதமாக அபிப்பிராயங்களிலும் உண்மைகள் உண்டு. ஆகவே இவற்றை முற்றாக நிராகரிக்க முடியாது. இதற்கு அப்பாலான காரணங்களும் இருக்கலாம்.

ஆனால், எல்லாவற்றுக்கும் அப்பால், இந்தக் கைதுகள் முன்னாள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அத்தனைபேருக்கும் ஓர் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.

அரசாங்கத்தின் கணக்கின்படி, 12,000 பேருக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனரென்றால், அத்தனைபேருக்கும் இது நெருக்கடியே. இதை விட, புலிகள் இயக்கத்தில் செயற்பட்டு உயிரிழந்த மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அடுத்த கட்டங்களில் இலக்கு வைக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு பரவலாக உண்டு. இது சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

போர் முடிந்து மிகக் கடினமாக மீள் வாழ்வைக் கட்டியெழுப்பி வரும்போது, இப்படி இன்னொரு விதத்தில் புதிய நெருக்கடிகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள முடியும். அப்படியென்றால் புனர்வாழ்வளித்தல், விடுதலை செய்யப்படுதல் என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம்.

இப்படி நிச்சயமற்றதொரு வாழ்க்கையில், சந்தேகிக்கப்படும் ஒரு சூழ்நிலையில் எப்படி அமைதி கொள்ள முடியும்.

இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கும் 12,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலையைக் கவனத்திற் கொண்டு, இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தருவது யார், ஜனாதிபதியின் வார்த்தைகள் நம்பிக்கையையும் நீதியான தீர்வையும் தருமா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தப் பிரச்சினையை அரசாங்கத்துடன் பேசி உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்ளுமா.

ஏற்கெனவே அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பாகவே கூட்டமைப்பினால் எதையும் செய்ய முடியாதிருக்கும்போது, இந்தக் கைதுகளை அது எப்படிக் கட்டுப்படுத்தும். இந்த விவகாரத்தில் அது எப்படி வெற்றியடையும். அப்படியென்றால், இந்தப் பிரச்சினை இப்படியே தன்போக்கில் போய்த்தான் தீருமா. அதுவரையிலும் பாதிக்கப்படுவோர் பாதிக்கப்பட்டுக்கொண்டேயிருக்க வேண்டியதுதானா?

இதைத்தவிர்ப்பதற்கான மனிதாபிமான வழிமுறைகள் பற்றி ஏன் சிந்திக்கப்படவில்லை. ஏனென்றால், அடிப்படையில் இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை.

பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால். அதற்கப்பால் இது ஒரு சட்டப் பிரச்சினையும் கூட. சரணடைந்து விசாரணைகளுக்கு முகம்கொடுத்து, தண்டனையைப் பெற்று முறைப்படி விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவது சட்டரீதியாக அணுகப்பட வேண்டியது.

ஆனால் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. இன்னொரு தளத்தில் இது மனித உரிமைகளோடு சம்மந்தப்பட்ட இன்னொரு விவகாரம். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் இயல்பு வாழ்வில் ஈடுபடுவதும் அதற்கான தகுதிகளைப் பெறுவதும் அடிப்படை உரிமை சார்ந்தது.

இதற்கான நெகழ்நிலைமையில் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த மாதிரியான கைதுகள் அமைகின்றன. இது சமூகம் இவர்களை விட்டு விலக முற்படும் அபாய நிலையை உண்டாக்குகிறது.

இலங்கையில், யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்கள் வேறாகவும் சிங்களவர்கள் வேறாகவும் சிந்திக்கும் போக்கு மாறவில்லை. ஆட்சி மாறினாலும் கூட இதுதான் நிலை. தமிழர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் சிங்களத்தரப்பை நம்பத்தயாரில்லை.

அதைப்போலத்தான் சிங்களத்தரப்பிலும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைப் புரிந்து கொள்ளும் முயற்சிகள் போதிய அளவில் நிகழவில்லை.

இதனால், தமிழர்கள் புலிகளை இன்னும் தங்களுக்கு நெருக்கமான சக்தியாகவே பார்க்கின்றனர். பதிலாகச் சிங்களவர்கள் புலிகளை எதிர்நிலையிலேயே உணர்கின்றனர். புலிகளின் சாயலிலேயே தமிழர்களையும் பார்க்கின்றனர். இது மேலும் சிக்கலான புரிதல்களுக்கு வழியேற்படுத்தியுள்ளது.

மாறாக, போருக்குப் பிந்திய ஏழு ஆண்டுகளில் முற்றிலும் ஒரு புதிய பிராந்தியத்தில் இலங்கைச் சமூகங்களின் உணர்கை நிகழத்தொடங்கியிருக்க வேண்டும். கசப்பான அனுபவங்களையும் பேரழிவையும் அனுபவமாகக் கொண்ட இலங்கைச் சமூகங்கள், மெய்யாகவே பகை மறப்புக்கும் நல்லிணக்கத்துக்கும் நகர்ந்திருக்க முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.

தொடக்கத்தில், ஒன்றிரண்டு ஆண்டுகளில் பல மட்டங்களிலும் பகை மறப்புக்கும் நல்லிணக்கத்துக்குமான முயற்சிகளும் உரையாடல்களும் நடந்தன. அவையும் போருக்குப் பிந்திய நடவடிக்கைகளின் ஆரம்பம் என்ற அளவில், மேற்குலகின் அனுசரணையிலும் வழிகாட்டலிலும் நடந்தவையே.

அதற்கான நிதி ஊட்டங்களையும் மேற்குலகம் வழங்கியிருந்தது. அதைப் பெற்றுக்கொண்ட தொண்டு நிறுவனங்களும் புத்திஜீவிகளும் சில தொடக்க நிலைக் காட்சிகளை மட்டும் காண்பித்தனர். அதற்கு அடுத்த புள்ளிகளை யாரும் இடவில்லை.

அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்கு வெளியே உள்ள சக்திகளுக்கும் இதைக்குறித்த அக்கறைகள் இருக்கவில்லை. எனவே, நிலைமை இப்போது மீண்டும் பினோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது. பின்னோக்கிச் செல்லும் போக்கின் விளைவுகளாகவே இந்த மாதிரி எதிர்நிலைச் சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன.

படைமுகாம்களை மீளப்பலப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் முன்னாள் புலிகள் உறுப்பினர்களின் கைதுகளும் அரசியற் கைதிகள் விடுதலைத் தாமதங்களும் இன்ன பிறவும் பினோக்கிச் செல்லும் போக்கின் விளைவுகளே.

இது தனியே இந்தக் கைதுகளோடும் முன்னாள் புலிகள் உறுப்பினர்களோடும் மட்டும் நிற்காது. அடுத்த கட்டத்தில் மேலும் இறுக்கமான, விரும்பத்தகாத அரசியற் சூழலை உண்டாக்கும்.

இப்பொழுது இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வுக்கெதிரான நெருக்கடிகள் தீவிரமடையத் தொடங்கி விட்டன.

தமிழ், சிங்களத்தரப்புகளின் பின்தளத்தில் நலிந்திருந்த தீவிர நிலைப்பாடுடைய சக்திகள் முன்னரங்குக்கு வந்துகொண்டிருக்கின்றன. அமைதியைக் குறித்த பேச்சுகளை விட, அமைதிக்கெதிரான பேச்சுகளும் செயற்பாடுகளும் மும்முரமாக நடக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தனும் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற அவசியத்தையும் அதற்கான தயார்ப்படுத்தல்களைப் பற்றியும் பேசி வருகிறார்கள்.

தமிழ்தரப்பின் அரசியற் கோரிக்கைக்கான அடிப்படைகளையும் நியாயயத்தையும் மே தின உரையில் கூட ஜனாதிபதி விளக்கியிருக்கிறார். ஆனால், இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதே இன்றைய கேள்வி. ஏனென்றால், புற நிலையில் ஏனைய சக்திகள் இனவாதத்தைப் பலமாக்கும் முயற்சிகளில் கடுமையாகச் செயற்பட்டு வருகின்றன.

பரவலான அளவில் மேற்கொள்ளப்படும் புத்திபூர்வமான கூட்டுச் செயற்பாடுகளின் மூலமே, நம்முன்னாலுள்ள சவால்களை முறியடித்து, புதிய களத்தை நோக்கி நகர முடியும்.

ஆனால், அதற்கு எதிரான இன நிலைப்பட்ட போக்குகளே வலுப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இவற்றின் விளைவுகளே புலி உறுப்பினர்களின் இந்தக் கைதுகளும். இது அடுத்த கட்டத்தில் இன்னும் விரிவடைந்து பலரையும் சுற்றி வளைக்கும். அதைத்தான் எல்லோரும் விரும்புகிறோமா, அதைத்தான் வரவேற்கிறோமா?

பகை மனதை வளர்ப்பது இலகுவானது. அதை வெல்வதோ மிகமிகக் கடினமானது…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவிக்கு மருத்துவ செலவு செய்ய முடியாமல் திண்டாடிய கணவர்: எடுத்த விபரீத முடிவு…!!
Next post ஏழு வார குழந்தை தெள்ள தெளிவாக ஹலோ சொல்லும் அதிசய காட்சி…!!