By 27 May 2016 0 Comments

உகண்டா பயணச் செலவை, சிறிலங்கா அரசின் தலையில் கட்டிய மகிந்த..!!

timthumb (1)கடந்த வாரம் ஒரு காலைப் பொழுது,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கைத்தொலைபேசி சில தடவைகள் ஒலித்தது. அவர் அப்போது தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்தார்.

கொழும்பு நகரில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றான, ஸ்ரான்ட்மோர் கிரசன்ட்டில் அந்த வதிவிடம், சிறிலங்காவின் விமானப்படை மற்றும் இராணுவத் தளபதிகளின் வதிவிடங்களுக்கு நடுவே உள்ளது.

சில காகித வேலைகளில் மூழ்கியிருந்த அவர் அந்த தொலைபேசிக்குப் பதிலளித்தார். அந்த அழைப்பை எடுத்தது, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச. அவர் தனது உகண்டா பயணத்துக்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், பணஉதவி செய்ய வேண்டும் என்று கோரினார்.

“ராஜபக்சக்களிடம் இப்போது பணம் இல்லையா?” என்று கேட்டார் மங்கள சமரவீர. அவர்கள் இருவரும் சிரித்தார்கள். அந்த உரையாடல் நீண்டது.

அதன் விளைவாக, ராஜபக்சவுக்கு, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், உகண்டா செல்வதற்கான விமானப் பயணச் சீட்டைப் பெற்றுக் கொடுத்தது.

கொழும்பில் இருந்து டுபாய்க்கு எமிரேட்ஸ் விமானத்தில் முதல் வகுப்பு இல்லாததால், சாதாரண வகுப்பிலும், டுபாயில் இருந்து உகண்டாவின் என்டபே விமான நிலையத்துக்கு முதல்வகுப்பிலும் பயணம் செய்ய பயணச்சீட்டு பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இருவழிப் பயணத்துக்கான அந்த விமானக் கட்டணத்தின் பெறுமதி, 425,000 ரூபா. அவருடன் பயணித்த ஏனையவர்களுக்கு அவர்களே விமானக் கட்டணத்தைச் செலுத்தினர்.

கடந்த வியாழக்கிழமை கம்பாலாவில் பதற்றத்துக்கு நடுவே இடம்பெற்ற, யொவேரி முசவேனியின் ஆறாவது பதவியேற்பு நிகழ்வில், மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். அங்குள்ள நீதிமன்றங்கள், எதிர்ப்பு பேரணிகளை நடத்த தடை விதித்திருந்தன.

சிம்பாப்வேயின் அதிபர் ரோபர்ட் முகாபே, தன்சானியாவின் அதிபர் ஜோன் மகுபுலி, தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, சம்பியாவின் அதிபர் கட்கர் லுங்கு ஆகியோருடன், மகிந்த ராஜபக்சவும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றிருந்தார்.

பதவியேற்பு விழா நடந்த போது, கம்பாலாவை, ஆயுதப்படையினரும், கலகத் தடுப்பு காவல்துறையினரும் சுற்றிவளைத்திருந்தனர்.

உகண்டாவின் பிரதான எதிர்க்கட்சியான, ஜனநாயக மாற்றத்துக்கான அமைப்பு, முசவேனி அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கவில்லை. அவருக்கு 61 வீத வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, கிசா பெசிக்யேவுக்கு 35 வீத வாக்குகளும் கிடைத்திருந்தன.

தேர்தலைக் கண்காணித்த உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள், தேர்தல் வாக்கு மோசடிகளுடன் முறைகேடாக இடம்பெற்றதாக தெரிவித்திருந்தனர்.

இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக அறிவித்த எதிர்க்கட்சி வேட்பாளர், கிசா, அப்போது தொடக்கம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி செயற்பாடுகள் குறித்து அறிக்கையிடுவதற்கு முசவேனி அரசாங்கம் தடை விதித்த பின்னர், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தான், எதிர்க்கட்சியினருக்கு எஞ்சியிருந்தது. அரசின் உத்தரவை மீறும் எந்த ஊடகமும், அனுமதியை இழக்கும் ஆபத்து உள்ளது.

மங்கள சமரவீரவுடனான, தொலைபேசி உரையாடலின் போது, முன்னாள் அதிபர் என்ற வகையில், தமது வெளிநாட்டுப் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கடந்த மாதம், ராஜபக்ச தாய்லாந்து சென்ற போது, இந்த நெறிமுறை உதவியை கோரியிருக்கவில்லை.

மகிந்தவின் கருத்துக்குப் பதிலளித்த, மங்கள சமரவீர, “உங்களின் ஆட்சிக்காலத்தில் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து, விடுதிக்குச் செல்வதற்கு எனக்கு சிறிலங்கா தூதரக வாகனம் மறுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

அதற்கு அவசரமாகப் பதிலளித்த மகிந்த ராஜபக்ச, அது, அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் வேலையாக இருக்கலாம்” என்றார்.

அப்போது, ரோகித போகொல்லாகமவே வெளிவிவகார அமைச்சராக இருந்தார் என்று, மகிந்தவின் கருத்தை மங்கள சமரவீர திருத்தினார்.

முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்குக் கூட நெறிமுறை உதவிகள் மறுக்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமது அமைச்சுக்கு முறைப்படியான வேண்டுகோளை அனுப்புமாறு மங்கள சமரவீர தெரிவித்தார். இதையடுத்து, ராஜபக்சவின் தனிப்பட்ட செயலர் உதித் லொக்குபண்டார, வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வராவுக்கு கடிதம் எழுதினார்.

அதில் அவர்,“ கம்பாலாவில்,மே 11முதல், 15 வரையான காலப்பகுதியில் தங்கியிருக்கும் போது ஏற்படும், உணவு மற்றும் தங்குமிடச் செலவுகளை க் கருத்தில் கொள்ளுமாறு கேட்டிருந்தார்.

அந்த விண்ணப்பம், பரிசீலனையில் இருந்த போது, உதித் லொக்கு பண்டார, மங்கள சமரவீரவைத் தொலைபேசியில் அழைத்தார்.

மகிந்த ராஜபக்ச, டுபாய் விமான நிலையத்தில், நான்கு மணிநேரம், என்டபே செல்லும் விமானத்துக்காக காத்திருக்க வேண்டும் என்றும், அதுவரை அவர் டுபாயில் வசதியான ஒரு விடுதியில் தங்குவதற்கான செலவை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோரினார்.

மரியாதை நிமித்தமாக முன்னாள் அதிபருக்கு, விமானப் பயணச்சீட்டை மட்டுமே வழங்க முடியும் என்றும், ஏனைய செலவுகளை அவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மங்கள சமரவீர தெரிவித்து விட்டார்.

“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தமாத இறுதியில் ஜப்பான் செல்கிறார். அவர் கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்று, அங்கிருந்தே இணைப்பு விமானம் மூலம் நகோயா செல்கிறார்.

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் அவர் இணைப்பு விமானத்துக்காக ஐந்து மணிநேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் அவர் சிங்கப்பூரில் எந்த விடுதி வசதியையும் கோரவில்லை.

சாங்கி விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் பகுதியில், ஐந்து மணிநேரம் காத்திருக்க அவர் முடிவு செய்துள்ளார்.” என்றும் மங்கள சமரவீர அவருக்கு கூறிமுடித்தார்.

மகிந்த ராஜபக்சவுடன் நால்வர் கொண்ட குழுவும் உகண்டா சென்றது. காமினி லொக்குகே, லொகான் ரத்வத்த, உதித் லொக்குபண்டார, தனசிறி அமரதுங்க ஆகியோரே அவர்கள்.

மகிந்த ராஜபக்சவின் எல்லா இராணுவப் பாதுகாப்பும் விலக்கப்பட்டு விட்டதாக செய்திகள் கூறிய போதிலும், இரண்டு அதிகாரிகளும், இரண்டு படையினரும் அவருடன் சென்றிருந்தனர். கேணல் மகேந்திர சம்பத், மேஜர் நெவில் வன்னியாராச்சி, சமன் உதய அமரசிங்க, ஹர்ச விக்கிரமஆராச்சி ஆகியோரே அவர்கள்.

பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் பகுதி வழியாக நுழைவதற்கான முன் அனுமதி பெறுவதற்கு, சமர்ப்பிக்கப்பட்ட வாகனங்கள் கூட, இராணுவப் பதிவெண்களையே கொண்டிருந்தன. அவர்கள் கொழும்பில் இருந்து டுபாய் சென்று, அங்கிருந்து என்டபே சென்றனர். அவர்கள் என்டபேயில் இருந்து டுபாய் வழியாக நாடு திரும்புகின்றனர்.

அரசாங்கத் தலைவர்களுக்கு கம்பாலா நிகழ்வுக்கு அழைக்கப்படாதது ஏன் என்று வெளிவிவகார அமைச்சு உயர்மட்டத்தில் கேள்வி எழுப்பப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கான அழைப்பை மகிந்த ராஜபக்சவுக்கு உகண்டாவின் வெளிவிவகார மற்றும் அனைத்துலக விவகார இணை அமைச்சர் ஓர்யெம் ஹென்றி ஒகேலோவே அனுப்பியிருந்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிபராகப் பணியாற்ற தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள அதிபர் முசவேனியின் பதவியேற்று விழா மே 12ஆம் நாள் நடக்கவுள்ளதாகவும் அதில் பங்கேற்குமாறு அழைப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

இந்த நிகழ்வுக்கு தற்போதைய அரசாங்கத்தில் இருந்து எவரும் அழைக்கப்படவில்லை. மகிந்த ராஜபக்ச ஒரு அரசியல் கட்சியின் தலைவராகக் கூட இப்போது பதவி வகிக்கவில்லை. ஆனாலும் சிறிலங்காவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இதனால் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட கொள்கை வகுப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. முன்னைய அரசாங்கத்தின் பரப்புரையாளர்களாகப் பணியாற்றிய தூதுவர்கள் சிலர் இன்னமும் பல நாடுகளின் தலைநகரங்களில், கோலோச்சுகின்றனர்.

மகிந்தவுக்கு விமானப்பயணச்சீட்டு பெற்றுக் கொடுத்தமை, தற்போதைய அரசாங்கத்தின் முன்னுதாரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆளும்கட்சியின் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாத போதும், அரச செலவில் முன்னாள் அதிபரை அனுப்பி வைத்திருக்கிறது.

அதிபர் தேர்தலுக்குப் பின்னரும், நாடாளுமன்றத் தேர்தல்களின் போதும், ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடுகளில் சொத்துக்களைப் பதுக்கி வைத்திருப்பதாக அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது. ராஜபக்ச குடும்பத்தினர் விசாரிக்கப்பட்டு, சொத்துக்கள் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்படும் என்றும் அரசாங்கம் கூறியது.

இதுதொடர்பாக இந்த வாரம் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உதவி கோரியிருந்தார்.

கடந்த ஆண்டு சிறிலங்கா வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியும் இதற்கு உதவுவதாகத் தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் சொத்துக்களை மீட்பதற்கான செயலணிக் குழுவொன்றை அமைத்த போதும், கடந்த ஒரு ஆண்டில், எந்த விளைவுகளும் ஏற்படவில்லை.

ராஜபக்சவைப் பொறுத்தவரையில் விமானக் கட்டணமான 425,000 ரூபா என்பது சிறிய தொகை. விமானக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் தான் மகிந்த ராஜபக்ச இருக்கிறார் என்றால், அவருடன் பயணம் செய்த- பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட ஏழு பேருக்கான செலவினங்களையும் யார் பொறுப்பேற்றது என்ற சுவாரசியமான கேள்வி எழுகிறது.

மகிந்தவுக்கான இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்டதாக அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்த போதிலும், இராணுவ பாதுகாப்பு அணியொன்று, கேணல் தர அதிகாரி தலைமையில் ராஜபக்சவுடன் பயணம் மேற்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரச்சினை எழுப்ப அமைச்சர்கள் பலரும் இப்போதே தயாராகிவிட்டனர்.Post a Comment

Protected by WP Anti Spam