ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்து, ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -11)

Read Time:21 Minute, 42 Second

timthumbராஜிவைக் கொல்வது சிரமம். ஏனெனில் ராஜிவ் மயிலாடுதுறைக்கு வருவது பகலில். பகலில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரச்னையில்லாமல் காரியத்தை முடிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
முடித்தாலுமேகூட, தப்பிப்பது அதைவிட சிரமமாக இருக்கும். இரவு நேரக் கூட்டம்தான் சாதகம் என்று தீர்மானமாகத் தோன்றியது. எனவே வேறு வழியில்லை. 21ம் தேதி இரவு, ஸ்ரீபெரும்புதூர்தான்!

இந்த முடிவுக்கு வந்ததுமே சின்ன சாந்தனை அழைத்து, ஸ்ரீபெரும்புதூரில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாதகங்களை ஆராயச் சொல்லி உத்தரவிட்டார். மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகர் அப்போது சென்னை ஷெனாய் நகரில் வசித்துவந்தார்.

அவரது மனைவி ஓர் இலங்கைப் பிரஜை. எனவே அவர்கள் மூலம் மரகதம் சந்திரசேகரை அணுகுவது எளிது என்று தெரிந்தது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி உத்தரவிட்டு, எதற்கும்

இருக்கட்டும் என்று ஒரு மாற்று ஏற்பாட்டையும் யோசித்தார்.

21ம் தேதி ராஜிவ் ஸ்ரீபெரும்புதூருக்கு வரும்போது திட்டத்தைச் செயல்படுத்த முடியாது போகுமானால் மறுநாள் மாலை கிருஷ்ணகிரியில் வைத்து முடித்துவிடலாம்.

வாழப்பாடி ராமமூர்த்தி
ஒரு வசதி, அங்கே வாழப்பாடியும் இருப்பார். இருவரையும் சேர்த்தே தீர்த்துவிடலாம் என்பதுதான் சிவராசனின் எண்ணம். ஏனெனில், வாழப்பாடியும் அப்போது விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்தார்.

இதற்கும் வழிகள் செய்தாகவேண்டும். வாழப்பாடி ராமமூர்த்தியின் செயலாளராகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காங்கிரஸ் பிரமுகர், கிள்ளி வளவன். அவரோடு, அந்நாளில் தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் பலருக்கு நல்ல தொடர்பு இருந்தது.

புலிகளுக்கு இருந்த தொடர்பினைக் காட்டிலும், புலிகளின் சரணாலயமாக இருந்த சுபா சுந்தரத்துக்குக் கிள்ளி வளவனை நன்றாகத் தெரியும்.

தேர்தல் பிரசாரத்துக்காக ‘வாழவைக்கும் கை’ என்றொரு டாக்குமெண்டரி படம் எடுக்கும் பணியையே காங்கிரஸ் கட்சி அப்போது சுபா சுந்தரத்திடம் ஒப்படைத்திருந்ததை சிவராசன் நினைவுகூர்ந்தார்.

அந்தத் தொடர்பைப் பயன்படுத்தி, கிள்ளிவளவன் மூலம் ராஜிவ் காந்தியின் பயணத் திட்டத்தை, நடவடிக்கைகளை, திட்டங்களை முன்கூட்டியே அறிய முயற்சி செய்தார் சிவராசன்.

உதாரணமாக, 17.5.91 அன்று பயணத்திட்டம் இறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்ததும் வாழப்பாடி ராமமூர்த்தி, ராஜிவ் காந்திக்கு ஒரு ஃபேக்ஸ் அனுப்புகிறார்.

‘நீங்கள் வருவது உறுதி என்றாலும், ஸ்ரீபெரும்புதூரில் தங்கும் திட்டம் மட்டும் தயவுசெய்து வேண்டாம்.

ராஜ்பவனில் தங்குங்கள். அல்லது மீனம்பாக்கம் விமான நிலைய கெஸ்ட் ஹவுஸில் தங்கினாலும் சரி. ஸ்ரீபெரும்புதூர் அத்தனை பாதுகாப்பான இடமல்ல’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் விஷயம் சிவராசனுக்குக் கிடைக்கிறது!

வாழப்பாடியின் எச்சரிக்கை அர்த்தமில்லாததில்லை. ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் எங்கே தங்குவார்?

மரகதம் சந்திரசேகர், ஒரு சேட்டு வீட்டில் ராஜிவ் தங்க ஏற்பாடு செய்திருந்தார். யாரோ ஒரு நபரின் வீடு! அவர் யார், அவர் வீட்டில் ஏன் தங்கவேண்டும், அந்த இடத்தின் பாதுகாப்பு எப்படி என்று எதையும் ராஜிவ் கேட்கவில்லை.

‘ஆன்ட்டி’யின்மீது அவருக்கு இருந்த அன்பும் நம்பிக்கையும் அப்படிப்பட்டது. இந்த விஷயம் சற்று வியப்பாக இருக்கலாம்.

ஆனால் ராஜிவ் குடும்பத்துக்கும் மரகதம் சந்திரசேகருக்கும் இடையே இருந்த நெருக்கத்தை நான் 1977ம் ஆண்டிலிருந்தே அறிவேன். பணியின் தொடக்க காலத்திலிருந்தே சி.பி.ஐ.யில் பணியாற்றி வந்தவன் நான்.

அப்போது, டெல்லியில் எனக்கு வேலை. சி.பி.ஐயின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவி இயக்குநராக வி.ஆர். லட்சுமி நாராயணன் ஐ.பி.எஸ். அவர்கள் இருந்த சமயம் அது.

மத்தியில் ஜனதா அரசு வந்திருந்த புதிது. முந்தைய இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசின் ஊழல்கள், சஞ்சய் காந்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்று அடுக்கடுக்காக வழக்குகள் போடப்பட்டு விசாரணை நடந்துகொண்டிருந்த சமயம்.

சம்மன் கொண்டு கொடுப்பதற்காகவும் வேறு ஏதேனும் சந்தேகம் கேட்கவேண்டியிருப்பின் கேட்டுப் பெறுவதற்காகவும் அப்போது அடிக்கடி இந்திரா காந்தியின் வீட்டுக்கு நான் போகவேண்டியிருந்தது.

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, மேனகா காந்தி என்கிற அந்தக் குடும்ப உறுப்பினர்கள் தவிர, வெளி நபர்கள் யாரும் அந்த வீட்டில் இருக்க மாட்டார்கள்.

கட்சிக்காரர்களோ, வேறு யாருமோகூட வீட்டுக்கு வருவதில்லை. தவாண் மாதிரி சீனியர் காங்கிரஸ்காரர்கள் வந்தால்கூட வாசல்பக்க அறையில் வெறுமனே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்திரா காந்தியின் 12, வெலிங்டன் ரோடு வீட்டுக்கு வருவார்.

அனைவருடனும் சகஜமாகப் பழகுவார்.

வீடு முழுக்க அவரை ஆன்ட்டி, ஆன்ட்டி என்று கொண்டாடும். இந்திரா காந்தி எப்படிப்பட்ட மூட் அவுட்டில் இருந்தாலும் ‘ஆன்ட்டி’ வந்துவிட்டால் மட்டும் முகம் மாறிவிடும்.

அனைத்தையும் மறந்து சிரித்துப் பேசுவார். கலகலப்பாகிவிடுவார். கட்சித் தொடர்புகளுக்கு அப்பால், தனிப்பட்ட முறையில் மரகதம் சந்திரசேகர் அந்தக் குடும்பத்துடன் இரண்டறக் கலந்தவர்.

அவருக்கு நேரு குடும்பத்துக்குப் பிறகுதான் மற்ற யாருமே.

அத்தனை அன்பு, விசுவாசம், பாசம். அப்படிப்பட்ட மரகதம் சந்திரசேகரைக் குறிவைப்பதுதான் தங்கள் திட்டம் வெற்றியடையச் சரியான வழி என்று சிவராசன் தீர்மானித்தார்.

ஒருபுறம் லலித் சந்திரசேகரின் இலங்கை மனைவியை எப்படியாவது அணுகி, மரகதம் சந்திரசேகருடன் அறிமுகம் செய்துகொள்ள வழி தேடிக்கொண்டிருந்தபோதே மறுபுறம் டரியள் பீட்டர்ஸ் என்றொரு நபர் மூலம் லலித் சந்திரசேகரை நெருங்கவும் முயற்சி செய்தார்கள்.

இந்த டரியல் பீட்டர்ஸின் மனைவி ஒரு மத்திய அரசு ஊழியர்.

திருமங்கலம் சி.பி.டபிள்யூ குவார்ட்டர்ஸில் குடியிருந்தார்கள். சின்ன சாந்தனின் இடைவிடாத ஆராய்ச்சிகளின்மூலம் டரியள் பீட்டர்ஸுக்கும் லலித் சந்திரசேகருக்கும் இடையே உள்ள நட்பு தெரிய, நேரே டரியலைச் சந்தித்து, மயக்கும் விதமாகப் பேசி, லலித்தைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்கள்.

‘ஐயா நாங்கள் இலங்கை அகதிகள். ஈ.பி.ஆர்.எல்.எஃப் அனுதாபிகள். இந்தியாவில் எங்களுக்கு எல்லாமே ராஜிவ் காந்திதான்.

அவர் இந்தத் தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். எங்களால் முடிந்த சிறு தொகையை தமிழ்நாடு காங்கிரசுக்குத் தேர்தல் நிதியாகத் தர விரும்புகிறோம்’ என்று சொன்னார்கள்.

லலித் சந்திரசேகர் அவர்களைப் பற்றி தம் தாயார் மரகதம் சந்திரசேகருக்கு எடுத்துச் சொல்லி, சிவராசன் குழுவினரை ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று தன் தாயாரைச் சந்திக்கச் சொல்லி அனுப்பிவைத்தார்.

எதிர்பார்த்தது அதைத்தானே? எனவே சந்தோஷமாகப் புறப்பட்டுப் போனார்கள். ஸ்ரீபெரும்புதூரில் மரகதம் சந்திரசேகர் வீட்டில் அவர்களுக்கு லதா பிரியகுமாரின் அறிமுகம் கிடைத்தது.

அவர் ஆன்ட்டியின் மகள். அவர் மூலம் அவரது சிநேகிதி லதா கண்ணனின் தொடர்பும் கிடைத்தது.

மரகதம் சந்திரசேகரிடம் தேர்தல் நிதி என்று சொல்லி ஐந்து லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, லதாவிடம் ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’க் கேட்டார்கள்.

லலித் சந்திரசேகர், ‘நீங்கள் கூட்டத்துக்கு வாருங்கள். லதா கண்ணன் உங்களைத் தலைவர் அருகே அழைத்துச் செல்வார்’ என்று சொன்னார்.

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த இலங்கை அகதிகளின் இந்தச் சிறு விருப்பத்தை நிறைவேற்றினால் என்ன?

ஆனால் அவரோ, மரகதம் சந்திரசேகரோ, லதா பிரியகுமாரோ அந்தக் கூட்டத்தில் இந்த வேலையைச் செய்ய முடியாது.

கட்சி ஊழியர்கள் என்ற வகையில் அவர்களுக்கும், வேட்பாளர் என்ற வகையில் மரகதம் சந்திரசேகருக்கும் ஏகப்பட்ட டென்ஷன் இருக்கும். வேலைகள் இருக்கும்.

எனவே லதா பிரியகுமாரின் உதவியாளரான லதா கண்ணனிடம் இந்தப் பொறுப்பை அளித்துவிட்டு, சிவராசனுக்கு விடைகொடுத்தார்கள்.

இது எத்தனை பெரிய அபாயத்தில் முடியப்போகிறது என்பது அப்போது மரகதம் சந்திரசேகருக்குத் தெரியாது.

ராஜிவ் காந்தியும் அவரது குடும்பத்தாரும் அவருக்குத் தன்னுடைய குடும்பத்தினரைவிட முக்கியமானவர்கள்.

ராஜிவ் படுகொலை என்பதை அவரால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. அப்படியொரு நோக்கத்துடன்தான் தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்று தெரியுமானால் நடந்திருப்பதே வேறு! ஆனால் வேறு வழியில்லை. வந்தவர்களின் நோக்கம் அதுதான். தன்னையறியாமல் அதற்கு வழி செய்துகொடுப்பவராக மரகதம்

சந்திரசேகர் ஆகிப்போனதை வேறெப்படிச் சொல்ல முடியும்? விதி!

அதுநாள் வரை சந்தோஷத்தையோ, கஷ்டத்தையோ, கோபத்தையோ, வேறு எந்த விதமான உணர்ச்சியையோ தவறியும் வெளிப்படையாகக் காட்டியிராத சிவராசன், அந்த மே 18ம் தேதி மரகதம் சந்திரசேகரின் மகன் மற்றும் மகளின்மூலம் தான் நினைத்த காரியம் நல்லபடியாக நடக்கப்போகிறது என்பது உறுதியானதும் தன்னை மறந்த பரவச நிலைக்கு உள்ளானார்.

கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் காவல் நிலையத்துக்குச் சற்றுத் தள்ளி இருந்த ஜெயக்குமார் என்பவரின் வீட்டில்தான் சிவராசன் அப்போது தங்கியிருந்தார்.

சுபா, தணு இருவரையும் இலங்கையிலிருந்து தமிழகம் அழைத்து வந்தபோது, அந்த வீட்டுக்கு அருகேதான் இன்னொரு வீடெடுத்து அவர்களை முதலில் தங்க வைத்திருந்தார். (பாஸ்கரன், விஜயன் என்ற இருவர் இதற்கு உதவியவர்கள்.)

ஸ்ரீபெரும்புதூரில் திட்டத்துக்கான ஏற்பாடுகளை நல்லபடியாகச் செய்துமுடித்த மகிழ்ச்சியுடன் கொடுங்கையூர் திரும்பிய சிவராசன், வந்ததுமே ஜெயக்குமாரின் மனைவியை அழைத்து, தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கட்டு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார். ‘போய் மாட்டுக்கறி வாங்கி வா. சமையல் அமர்க்களமாக இருக்கவேண்டும் இன்றைக்கு’ என்று

சந்தோஷத்துடன் சொன்னார். கையோடு சுபா, தணு அனைவருக்கும் தகவல் சொல்லி சாப்பிட வரச் சொன்னார்.

ஜெயக்குமாரின் மனைவி தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சத்தை வைத்துவிட்டு வெளியே போக, அவர்களது மகன் பார்த்திபன் அந்த நூறு ரூபாய் கட்டைப் பார்த்தான்.

சிறுவன். விளையாட்டாக அதை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றவன், அங்கே நின்றபடி ஒவ்வொரு தாளாக உருவிப் பறக்கவிட ஆரம்பித்தான்.

சில நிமிடங்களில் அக்கம்பக்கத்து வீடுகளிலெல்லாம் நூறு ரூபாய் நோட்டுகள் பறந்து வந்து விழ ஆரம்பிக்க, பலபேர் என்னவென்று புரியாமல் வியப்புடன் வீதிக்கு வந்தார்கள். மொட்டை மாடியில் நின்றுகொண்டிருந்த சிறுவனோ, எது பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து பணத்தைப் பறக்கவிட்டுக்கொண்டே இருந்தான்.

‘என்னங்க, உங்க பையன் இப்படி பணத்தைப் பறக்கவிடுறானே, என்ன விஷயம்?’ என்று ஜெயக்குமாரை அவர்கள் கூப்பிட்டுக் கேட்க, அப்போதுதான் அவர்களுக்கு விபரீதம் புரிந்திருக்கிறது.

‘ஒன்றுமில்லை. என் மாமாவுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. வீட்டில் அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டு இருந்தோம். எங்களுக்குத் தெரியாமல் பையன் பணத்தை எடுத்துக்கொண்டு மேலே போய்விட்டான்.

அப்பா, அம்மா சந்தோஷமாக இருக்கிறார்களே என்று அவனும் கிடைத்ததைப் பறக்கவிட ஆரம்பித்துவிட்டான்’ என்று சொல்லி சமாளித்தார்கள்.

அத்தனை நாள் கொடுங்கையூர் வீட்டில் இருந்தாலும் அன்றைக்குத்தான் சிவராசன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரிந்தவரானார்.

ஜெயக்குமாரின் மாமா என்பதாக. அன்றைக்கு, திட்டத்தில் சம்பந்தப்பட்ட பலபேர் கொடுங்கையூர் வீட்டுக்கு வந்தார்கள். மாட்டுக்கறி விருந்து சாப்பிடுவதற்கு என்று வைத்துக்கொள்ளலாம். சின்ன சாந்தனும் இருந்தார். அவர்தான் இந்த விவரங்களை சி.பி.ஐயிடம் தெரிவித்தது.

அன்றைக்கு வந்தவர்களுள் வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை அணிந்த மனிதரும் ஒருவர். மதியத்துக்குமேல் கொடுங்கையூர் ஜெயக்குமார் வீட்டுக்கு வந்த அந்த நபரை சிவராசன் தனியே மாடிக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருக்கிறார்.

பேசிவிட்டுக் கீழே இறங்கி வரும்போது அந்த வெள்ளை பேண்ட், வெள்ளைச் சட்டை நபர் மகிழ்ச்சியுடன் சிவராசன் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘இந்தக் காரியத்தை முதலில் நல்லபடியாக முடியுங்கள்.

அடுத்த இலக்கு வைகோவை சி.எம். ஆக்குவதுதான்’ என்று சொல்ல, சிவராசனும் புன்னகையுடன் தலையசைத்தார். இச்சம்பவத்தை சி.பி.ஐ.யிடம் விவரித்தது சின்ன சாந்தன் மட்டுமே.

வழக்கில் கைதான நளினியோ, முருகனோ, வேறு யாருமோ எத்தருணத்திலும் இப்படியொரு சம்பவம் கொடுங்கையூர் வீட்டில் நடந்ததாகக் குறிப்பிடவில்லை.

சின்ன சாந்தன் பேசும்போது, குறிப்பிட்ட அந்த வெள்ளை பேண்ட், வெள்ளைச் சட்டை நபரின் பெயர் சீனிவாசய்யா என்று குறிப்பிட்டார். ‘ஐயா’ என்பது மரியாதை கருதிச் சேர்த்ததாக இருக்கலாம்.

ஆனால் நாங்கள் இத்தகவல் கிடைத்ததும் விசாரிக்கத் தொடங்கியதில் அன்றைக்குக் கொடுங்கையூரில் சிவராசனைச் சந்தித்துப் பேசிய நபர் வைகோவின் சகோதரர் ரவிச்சந்திரனாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டோம்.

ஆனால், இதற்கு ஆதாரம் எதுவுமில்லை.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட பிறகுதான் தமிழக உளவுத்துறை அதிகாரிகள், இதற்குக் கண், காது, மூக்கு வைத்துக் கருணாநிதியிடம் ஏராளமாக அச்சத்தை விதைத்து, தி.மு.க. விலிருந்து வைகோவை நீக்க வழி செய்தார்கள் என்பது பின்னால் நடந்த சரித்திரம்.

வைகோவுக்கு விடுதலைப் புலிகளுடன் இருந்த தொடர்பு என்பது ஊரறிந்த விஷயம்.

இதனை ஒரு வழக்காகக் கணக்கில் எடுத்து, வைகோவின் சகோதரர் ரவிச்சந்திரனையும், தொடர்புள்ள மற்றவர்களையும் விசாரிக்க நாங்கள் விரும்பினோம்.

சின்ன சாந்தன் ‘சீனிவாசய்யா’ என்று பெயர் குறிப்பிட்டிருந்தாலும், அவர் விவரித்த தோற்றம், உயரம், நடை, உடை, பாவனைகள் பற்றி எல்லாம் வேறு சிலரும் விவரித்த விதம் அனைத்தும் எங்களுக்கு அது ரவிச்சந்திரனாகத்தான் இருக்க வேண்டும் என்கிற ஆழமான சந்தேகத்தை எழுப்பியது.

ஆனால் மேற்கொண்டு எந்த விசாரணையும் செய்யாமல், அவரை பத்மநாபா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று கூறி, கைது செய்யும்படி உத்தரவிடப்பட்டதாகப் பின்னர் தெரியவந்தது.

தொடரும்…

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோயம்பேடு வாலிபர் கொலையில் 3 பேர் கைது..!!
Next post நூடுல்ஸ் சாப்பிட்டவரின் பரிதாப நிலை…. பார்த்த பின்பு இனி தொட்டுக்கூட பார்க்க மாட்டீங்க..!! வீடியோ