முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்!!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –17)

Read Time:19 Minute, 29 Second

timthumbஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம்.

அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் பயஸ், ரமணன் போன்றவர்கள். விசேஷம் என்னவென்றால் முருகன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய நண்பர்களும் தனித்தனியே தொடர்ந்து நளினியின் அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவருடனும் நளினிக்கு நட்பு ஏற்பட்டது. நெருக்கமானார்கள்.

நளினிக்கு மகிழ்ச்சிதான். முருகன் என்கிற நபர் அவரது வாழ்க்கையில் வந்த பிறகுதான் அவருக்குத் தன் குடும்பத்தாருடன் இருந்த கோபங்கள் குறைய ஆரம்பித்து, பழைய உறவுகள் பலப்படத் தொடங்கியிருந்தன.

புதிதாகவும் பல நட்புகள் கிடைத்திருந்தன.

அருமையான மனிதர். நளினி, முருகனை மனத்துக்குள் விரும்பத் தொடங்கினார்.

ஒருநாள் நளினி, முருகன், ரமணன், நளினியின் தங்கை கல்யாணி, கல்யாணியின் தோழி பாரதி அனைவரும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கோல்டன் பீச்சுக்கு இன்பச் சுற்றுலா சென்றார்கள்.

ரமணன் ஒரு விடுதலைப் புலி என்னும் விஷயம் நளினிக்கு அப்போது தெரிந்தது. முருகன் ஓர் இலங்கைத் தமிழர் என்பதும் அவரது நண்பர்கள் அனைவரும் (ஹரி பாபு நீங்கலாக) இலங்கைத் தமிழர்கள் என்பதும் முன்னமே தெரியும் என்றாலும் இந்தத் தகவல் நளினிக்குப் புதிதாக இருந்தது.

விடுதலைப் புலிகள்! ஆர்வமுடன் அவர் புலிகள் இயக்கம் குறித்து விசாரிக்கத் தொடங்கியதும் முருகன் சொன்னார்.

நானும் ஒரு விடுதலைப் புலி. அப்படியா? நளினியின் வியப்பு பல மடங்கு அதிகரித்தது.

‘ஆம். என்னை எங்கள் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் இந்தியாவுக்கு அனுப்பியிருக்கிறார்.

இங்கே சிவராசன் என்பவர் எங்களுடைய இந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்.

நான் அவருக்குக் கீழே பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன்.

’ முருகன் ஒரு விடுதலைப் புலி என்ற விஷயம் தெரிந்த பிறகுதான் நளினி அவரிடம் தனது காதலைத் தெரியப்படுத்தியிருக்கிறார். ஆனால் முருகன் மறுத்தார்.

‘வேண்டாம். நான் இயக்கத்துக்கு என்னை அர்ப்பணித்தவன். எனக்கென்று தனிவாழ்வு ஏதும் கிடையாது.’ அதுதான் நளினியின் ஆர்வத்தைத் தூண்டியது.

இயக்கத்தைப் பற்றியும் அவர்களுடைய செயல்பாடுகள் பற்றியும் அதன்பிறகு ஆர்வமுடன் முருகனிடம் விசாரிக்கத் தொடங்கினார்.

முருகன் மெல்ல மெல்ல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்டம் குறித்தும் இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்ற நாள் முதல் அங்கே நிகழ்ந்த கொடூரங்கள் குறித்தும் யுத்தம் குறித்தும் நளினிக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்தார்.

ஏப்ரல் மாதம் 18ம் தேதி (1991) சென்னை மெரினா கடற்கரையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கவிருந்தது.

காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அறிவித்த பிறகு ராஜிவ் காந்தியும் ஜெயலலிதாவும் இணைந்து அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

‘நாம் அந்தக் கூட்டத்துக்குப் போகலாமா?’ என்று முருகன் நளினியிடம் கேட்டார்.

நளினிக்கு அரசியலில் பெரிய ஆர்வம் கிடையாது என்றாலும் முருகன் அழைத்ததால் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு புறப்பட்டார். இருவரும் ஆட்டோவில் மெரினா கடற்கரைக்குச் சென்றார்கள்.

போகிற வழியில்தான் முருகன் சொன்னார். கூட்டத்துக்கு ஹரி பாபுவும் வருவார்.

முன்னதாக அதே ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் ஒருநாள் நளினி தனது ராயப்பேட்டை வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கே சிவராசனைப் பார்த்தார்.

சிவராசன்-
நளினியின் தாய் அவரை அறிமுகப்படுத்தி வைக்க, அப்போதுதான் முருகன் ‘இந்தியாவில் எனது பாஸ்’என்று சிவராசனைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்.

நளினிக்குக் கொஞ்சம் வியப்பாக இருந்தது. முருகன் உள்பட அவரது நண்பர்களான இலங்கைத் தமிழர்கள் அனைவரும் இலங்கைத் தமிழிலேயே பேச, சிவராசன் மட்டும் சுத்தமாகத் தமிழ்நாட்டுத் தமிழர் போலவே பேசினார்.

பேச்சை வைத்து அடையாளம் காணவே முடியாது.

தான் ஓர் இலங்கைப் பிரஜை என்று அவராகச் சொன்னால்தான் தெரியும். ‘அவரது இடது கண்ணுக்கு என்ன ஆனது?’ நளினி கேட்டபோது முருகன்தான் விவரம் சொன்னார்.

‘யுத்தத்தில் குண்டடிபட்டு அந்தக் கண் போய்விட்டது.’ சிவராசன் கண்ணாடி அணிந்திருந்தார். பெரும்பாலும் அமைதியாக இருந்தார். அன்பாகப் பேசினார்.

அடிக்கடி சந்திக்கலாம் என்று சொல்லி விடைபெற்றார். அப்போதே நளினி தனது வில்லிவாக்கம் வீட்டை காலி செய்துவிட்டு ராயப்பேட்டையில் அம்மா வீட்டுக்கே வந்துவிடலாம் என்று நினைத்தார்.

முருகன் அங்கேதங்கியிருந்ததுதான் முக்கியமான காரணம். அவரால் முருகனைக் காதலிக்காமல் இருக்க முடியவில்லை. அவர் இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் என்பது தெரிந்த பிறகும்.

சற்றே தீவிரமாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கிய சமயம் முருகன் சொன்னார்: ‘கொஞ்சம் பொறு. கொஞ்ச நாளைக்கு அந்த வீட்டை காலி செய்ய வேண்டாம்.

சிவராசன் புதிதாக இரண்டு பெண்களை இலங்கையிலிருந்து அழைத்து வருவதற்காகப் போயிருக்கிறார். நான்தான் அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அவர்களைத் தங்க வைக்க இடமில்லை. உன் வீடு இருந்தால் வசதியாக இருக்கும்.’ சரி என்று உடனே ஒப்புக்கொண்டார் நளினி.

மே மாதம் இரண்டாம் தேதி சிவராசன், அந்த இரண்டு பெண்களை அழைத்து வந்து நளினிக்கு அறிமுகம் செய்து வைத்தார். சுபா என்றும் தணு என்றும் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.

இருவரும் தங்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இயக்கத்துக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் என்றும் நளினியிடம் சொன்னார்கள்.

பழகத் தொடங்கிய சில நாள்களிலேயே நளினிக்குத் தெரிந்துவிட்டது. இயக்கம் அவர்களுக்குக் கோயில் போன்றது. தலைவர் பிரபாகரன், கடவுளுக்குச் சமம்

ஒரு காதல் கதை

வில்லிவாக்கம் வீட்டில் தனியே வசித்து வந்த நளினிக்கு, திடீரென்று இரண்டு பெண்கள் பேச்சுத்துணைக்குக் கிடைத்தது, அதுவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்களாக அவர்கள் இருந்தது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது.

அவர்கள் பேசுகிற அத்தனை விஷயமும் பரபரப்பானவை.

திகைப்பூட்டுபவை. திடுக்கிடச் செய்பவை.

தூக்கிவாரிப் போடச் செய்பவை.

யுத்தக் களங்கள், படுகொலைகள், குண்டு வெடிப்புகள், போர் வியூகங்கள், மாற்று இயக்கங்கள், இலங்கை அரசு, இந்திய ராணுவம், பாலியல் வன்முறைகள், பசி, பட்டினி, பஞ்சம், புலிகள் இயக்கக் கட்டமைப்பு, பிரபாகரனின் ஆளுமை என்று அவர்கள் பேசிப் பேசி நளினியின் மனத்தில் ஏற்றிய விஷயங்கள் நளினியை ஒரு முழுமையான புலிகள் அனுதாபியாக மாற்றியது.

குறிப்பாக சுபா, தணுவுடன் முருகனும் சேர்ந்துகொண்டு, ஐ.பி.கே.எஃப். காலத்து அராஜகங்கள் என்ற பொருளில் பேச ஆரம்பித்துவிட்டால் நளினிக்கு ரத்தம் சூடேறிவிடும்.

ஈழத்தில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் பாலியல் பலாத்காரங்களுக்கும் பேரிழப்புகளுக்கும் ராஜிவ் காந்திதான் காரணம் என்று நளினி தீர்மானமாக நம்பத் தொடங்கினார்.

இதற்கெல்லாம் பதிலாக ராஜிவுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் எண்ணத் தொடங்கினார். இந்தச் சமயத்தில் சிவராசன், நளினிக்கு ஒரு புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்து, படிக்கச் சொன்னார்.

சாத்தானின் படைகள். நளினி எம்.ஏ. படித்தவர். ஆங்கிலத்தில் அவரால் சரளமாகப் பேசவும் எழுதவும் வாசிக்கவும் முடியும். ஒரே நாளில் அந்த பிரம்மாண்டமான புத்தகம் முழுவதையும் வாசித்து முடித்தார்.

மனம் முழுதும் ராஜிவ் மீதான வன்மம் மேலோங்கியிருந்தது. இதுதான் தருணம். மெல்ல மெல்ல விடுதலைப் புலிகளின் திட்டத்தை அவருக்கு விளக்க ஆரம்பித்தார்கள்.

எடுத்த உடனேயே ராஜிவைக் கொல்லப் போகிறோம் என்று சொல்லாமல், சுபாவும் தணுவும் இந்தியாவில் சில காரியங்களைச் செய்து முடிக்க வந்திருக்கிறார்கள்;

ஆனால் அவர்களுடைய மொழி அவர்களுக்குப் பெரிய பிரச்னை.

வாயைத் திறந்தாலே ஈழப் பெண்கள் என்று தெரிந்துவிடும். எனவே அவர்களை நீதான் அடைகாக்க வேண்டும்.

அவர்களுடைய குரலாக உன் குரல்தான் இருக்கவேண்டும் என்று சிவராசன் சொன்னார்.

இது ஒரு பெரிய விஷயமா? யாராவது தலைவரை நீதான் கொல்லவேண்டும் என்று சொன்னால் கூடச் சற்றும் தயங்காமல் சரி என்று சொல்லும் மனநிலைக்கு அவர் அப்போது வந்துவிட்டிருந்தார்.

மே மாதம் இரண்டாம் தேதி சிவராசனும் சுபாவும் தணுவும் நளினியிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார்கள்.

தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

சில பொதுக்கூட்டங்களுக்கு நாங்கள் போகவிருக்கிறோம். தலைவர்களுக்கு மாலை போடப் போகிறோம். நளினிக்குப் புரிந்துவிட்டது.

ஆனால் யாரைக் குறி வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி வெளிப்படையாக அவர்கள் அப்போது சொல்லவில்லை. சொல்லித்தான் ஆகவேண்டுமென்ற அவசியமும் இல்லை.

‘நாம் சில பொதுக்கூட்டங்களுக்குப் போய் மாலை போட்டுப் பழகவேண்டும். போலீஸ் இருக்கும். செக்யூரிடி பிரச்னைகள் இருக்கும். அனைத்தையும் மீறி தலைவர்களை நாம் நெருங்குவதற்குப் பயிற்சி தேவை. போகலாமா?’ சிவராசன் கேட்டார்.

அவர்கள் போகத் தொடங்கினார்கள். ‘இதோ பாருங்கள் நளினி. எங்கள் பணியைவிட உங்கள் பணிதான் பெரிது. சுபாவும் தணுவும் பிரச்னையில்லாமல் தலைவர்களை நெருங்க வேண்டுமென்றால் நீங்கள் உடன் இருந்தால்தான் முடியும்.

யார் என்ன கேட்டாலும் நீங்கள்தான் பேசி சமாளிக்க வேண்டும். அவர்கள் வாயே திறக்கக் கூடாது’ என்று சிவராசன் சொன்னார்.

நளினியின் வீட்டுக்குத் தங்குவதற்காக அவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டிருப்பதாக முதலில் முருகன் சொன்னாலும் சுபாவும் தணுவும் வாரக் கடைசிகளில் மட்டும்தான் வில்லிவாக்கத்தில் தங்கினார்கள்.

மற்ற தினங்களில் அவர்கள் கொடுங்கையூரில் விஜயன், பாஸ்கரன் என்கிற தமது கூட்டாளிகளின் வீட்டில்தான் தங்கியிருந்தார்கள். அடிக்கடி சந்திப்பார்கள்.

அக்கம்பக்கத்து தியேட்டர்களில் சினிமாவுக்குப் போவார்கள்.

பெரும்பாலும் நாதமுனி தியேட்டர் அல்லது ராயல் தியேட்டர். மே மாதம் 4, 5ம் தேதிகளில் சுபா, தணு, நளினி மூவரும் மாலை வேளைகளில் சினிமா பார்த்துவிட்டு வில்லிவாக்கம் வீட்டில் வந்து தங்கினார்கள்.

6ம் தேதி சிவராசன் வந்து அவர்களைச் சந்தித்து ஒரு தகவலைச் சொன்னார்.

‘ஏழாம் தேதி மாலை வி.பி. சிங் வருகிறார்.

தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம். நாம் வி.பி. சிங்குக்கு மாலை அணிவிக்கிறோம்.’ திரளான பொதுமக்கள் மத்தியில் அந்த ஒத்திகை ஆரம்பமானது.

அடடே, ஒத்திகையில் ஹரி பாபுவுக்கும் பங்குண்டா என்ன?

அவர் கேமராவுடன் எதிரே தயாராக இருப்பதை நளினி பார்த்தார்.

முருகன், நளினியிடமும் ஒரு யாஷிகா கேமராவைக் கொடுத்து ‘நீயும் படம் எடு என்று சொல்லியிருந்தார்.

தலைவருக்கு அருகே போகிற வாய்ப்பு உனக்கு இருக்கிறது. உன்னாலும் படமெடுக்க முடியும்.’ முன்னதாக லஸ் கார்னரில் இரண்டு பெரிய ரோஜா மாலைகள் வாங்கிக்கொண்டு சுபாவும் தணுவும் நளினி உதவியுடன் கூட்டத்துக்கு வந்திருந்த பெண்கள் மத்தியில் இடம் பிடித்து அமர்ந்திருந்தார்கள்.

நளினி, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சிலரை அணுகி, நைச்சியமாகப் பேசி மாலை அணிவிக்க வாய்ப்புக் கேட்டார்.

ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. போராடிப் பார்த்தும் பலனில்லை. வேறு வழியில்லை.

அதிரடி முயற்சிதான் செய்து பார்த்தாக வேண்டும்.

வி.பி. சிங் வருகை நேரம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. நள்ளிரவு கடந்து ஒன்றரை அல்லது இரண்டு மணிக்குத்தான் அவர் மைதானத்துக்கு வந்தார்.

அனைவரும் பரபரப்பானார்கள். சுபாவும் தணுவும் முண்டியடித்துக்கொண்டு வி.பி. சிங்கை நெருங்கி மாலைகளை அவர் கையில் திணித்தார்கள்.

அருகே இருந்த நளினி அதைப் படமெடுக்க முயற்சி செய்தார். ஆனால் யாஷிகா கேமராவை அதற்குமுன் அவர் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை என்பதால், படமெடுப்பது எப்படி என்பது கடைசி வினாடியில் சரியாகத் தெரியாமல் போயிற்று.

எதெதையோ அழுத்திப் பார்த்தார். ஃப்ளாஷ் அடிக்கவில்லை.

முன்னதாக பொதுக்கூட்ட மேடைமீது ஏறி நின்று, படமெடுக்கத் தயாராகக் காத்திருந்த ஹரி பாபுவுக்கும் இந்த திடீர்ச் சம்பவம் புரியவில்லை.

மேடைக்கு வந்து மாலையிடுவார்கள், அப்போது படமெடுக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு இடப்பட்டிருந்த உத்தரவு.

ஆனால் இதென்ன திடீர் மாற்றம்? அவராலும் சரியாகப் படமெடுக்க முடியாமல் போயிற்று.

நிகழ்ச்சி நடந்து முடிந்து கூட்டம் முழுக்கக் கரைந்த பிறகு சிவராசன்,முருகன், தணு, சுபா, நளினி, ஹரி பாபு ஆகிய ஆறு பேர் மட்டும் மேடைக்குப் பின்புறம் நின்றிருந்தார்கள்.

சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன? நடந்தது என்ன? நீங்கள் ஏன் மேடைக்குச் செல்லவில்லை?’ என்று சிவராசன் மூவரையும் பார்த்துக் கேட்டார்.

‘அது அத்தனை சுலபமில்லை. மாலை போடுவதற்கு முன் அனுமதி வாங்கியிருக்க வேண்டும்.

திடீரென்று கேட்டால் யாரும் தர மாட்டார்கள். குறைந்த பட்சம் கூட்ட நிர்வாகிகளுக்கு நாம் ஏதாவது லஞ்சமாவது கொடுத்திருந்தால்தான் அது சாத்தியம்’ என்று நளினி சொன்னார்.

தொடரும்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலம்: ஷூவில் புகுந்த பாம்பு கடித்தத்தில் மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதி…!!
Next post மாணவர்கள் வகுப்பு ஆசிரியருக்கு அளித்த மாரியாதையை பாருங்கள்…. என்னக் கொடுமை இது…!! வீடியோ