சிவசேனாவின் வருகை சொல்லும் செய்தி…!! கட்டுரை

Read Time:15 Minute, 38 Second

article_1476886201-prujothவேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை முன்னிறுத்திக் கொண்டு என்ன வகையான ‘வேளாண்மை’யையும் தமிழ் மக்களிடம் செழிப்புடன் செய்யலாம் என்கிற திட்டத்தோடும் எதிர்பார்ப்போடும் பல தரப்பினரும் வடக்கு – கிழக்கைச் சுற்றி வருகின்றனர். குறிப்பாக, பிரபாகரன் நேரடியாக ஆளுமை செலுத்திக் கொண்டிருந்த காலத்தில், ஓடி ஒழிந்து கொண்டவர்களும் அரங்கிற்கு வர மறுத்தவர்களும் கூட, பிரபாகரனின் அடையாளத்தைத் தங்களுடைய தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள். அப்படியான நிலையில், இந்தத் தரப்பினரின் பின்னணி என்ன? நோக்கம் எவ்வகையானது? என்பது பற்றியெல்லாம் தமிழ் மக்கள் மிகவும் அவதானத்தோடு இருக்க வேண்டிய காலகட்டம் இது.

“பிரபாகரன் மீது எவனாவது கை வைத்தால்; அது இந்தியாவாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” என்று சிவசேனாவின் மறைந்த தலைவர் பால் தாக்ரே தன்னிடம் தெரிவித்திருந்ததாகத் தமிழரசுக் கட்சியின்ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், தமிழறிஞருமான மறவன்புலவு க.சச்சிதானந்தம் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். இந்தக் கூற்றினை அவர் வெளியிட்ட தருணம் சுவாரஸ்யமானது. ஏனெனில், கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலின் முன்னோடிகளில் ஒருவராகக் குறிப்பிட்டளவான பதிவுகளைக் கொண்டிருக்கின்ற மறவன்புலவு க.சச்சிதானந்தம்; தற்போது புதிய வாளொன்றைத் தன்னுடைய கைகளில் ஏந்தி வந்திருக்கின்றார். அந்த வாளின் பெயர் ‘சிவசேனா (சிவசேனை)’.

வவுனியாவில் கடந்த ஒன்பதாம் திகதி சிவசேனா என்கிற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கையில் இந்து மதத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற அச்சுறுத்தல் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, இந்து மதத்தினைப் பாதுகாக்கும் நோக்கிலேயே குறித்த அமைப்பினை ஆரம்பித்துள்ளதாக அந்த அமைப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மறவன்புலவு க.சச்சிதானந்தம் தெரிவித்திருக்கின்றார். அந்த அமைப்பின் இன்னொரு முக்கியஸ்தர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்.

மத – மார்க்கப் பின்பற்றுகை என்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட சுதந்திரம். அதுபோல, மத- மார்க்க நெறிகளைப் பாதுகாக்கும் நோக்கில்அமைப்புக்களையும் நிறுவனங்களையும் ஆரம்பிப்பதும் கொண்டு நடத்துவதும் கூட ஜனநாயக உரிமை. அப்படிப்பட்ட நிலையில், சிவசேனாவின் வரவு ஏன் இவ்வளவு அதிர்வுகளை உண்டு பண்ணியிருக்கின்றது என்கிற கேள்வி எழுகின்றது. அந்தக் கேள்வியிலிருந்து சிலவிடயங்களைப் பார்க்கலாம்.

இந்தியாவில் இரத்தக் களறிகளோடு சம்பந்தப்பட்ட பதிவுகளைக் கொண்டிருக்கின்ற அமைப்பு சிவசேனா. அதுபோல, இலங்கையில் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் பௌத்த அடிப்படைவாதத்தை வலியுறுத்தி ஏனைய மதங்கள், மார்க்கங்களின் மீது தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகின்ற அமைப்பு பொதுபலசேனா. இந்த இரண்டு அமைப்புக்களும் மத அடிப்படை வாதத்தினை முன்னிறுத்துகின்ற அமைப்புக்கள். ‘சேனா’ அல்லது சேனை என்றாலே அடிப்படைவாதிகள் என்கிற உணர்வுநிலை மக்களிடம் ஏற்கெனவே இருக்கின்ற ஒன்று. அப்படிப்பட்ட நிலையில்தான், மறவன்புலவு க.சச்சிதானந்தம் சிவசேனாவை வடக்கு, கிழக்கிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றார்.

சிவசேனாவை ஆரம்பித்ததன் பின்னர் மறவன்புலவு க.சச்சிதானந்தம், இந்தியத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வி, மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. அந்தச் செவ்வி முழுவதும் ‘தமிழ் இந்துக்கள்’ தனித்து இயங்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டினை வலியுறுத்தி வருகின்றார். அல்லது, ஈழத்தமிழர்கள் என்கிற அடையாளத்துக்குள் இருக்கின்ற இந்துக்களையும் (‘சைவர்கள்’ என்று அவர் குறிப்பிடவில்லை) கிறிஸ்தவர்களையும் இரு வேறு பிரிவுகளாகப் பிரித்துவிட்டு அரசியலை அணுக வேண்டும் எனும் தொனியோடு பேசுகின்றார்.

ஆரம்பத்தில் பௌத்த மத அத்துமீறல்கள், ஆக்கிரமிப்புக்களிலிருந்து வடக்கு, கிழக்கினையும் இந்து மதத்தினையும் காப்பாற்ற வேண்டிய அவசியமே சிவசேனையை ஆரம்பிக்கத் தூண்டியதாகக் கூறும் அவர், இறுதிக் கட்டத்தில் மிகவும் தெளிவாக, தமிழ்க் கிறிஸ்தவர்களைப் பிரித்து தனியே விட வேண்டும் என்கிறார். அதற்காக, அவர் வரலாற்றுப் பக்கங்களைச் சுட்டிக்காட்டுகின்றார்.

அதாவது, “இலங்கை மதச் சார்பற்ற நாடல்ல; மாறாகப் பௌத்த மதத்தை அரசியலமைப்பிலேயே முதன்மையாகக் கொண்டிருக்கின்ற மதச்சார்புள்ள நாடு. 1956 ஆம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின், நாடு பூராவும் பௌத்தமே என்கிற கொள்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. ஆக, அதிலிருந்து எம்மைக் காத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

இன்னொரு பக்கம், தமிழ் பேசும் மக்களாக இருந்த இஸ்லாமியர்கள் இந்திய அமைதிப் படையின் வருகையோடு (1987), தமிழ் அரசியல் தலைமைகளைப் புறக்கணித்துவிட்டுத் தனியாகச் சென்று விட்டார்கள். அவர்கள், இன்றைக்கு தனித்தே இயங்கி வருகின்றார்கள். அவர்கள், தமிழர் அடையாளத்துக்குள்ளும் வருவதில்லை.

தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்கள் 2009 இன் மோசமான விளைவுகளைச் சந்தித்ததற்கு கிறிஸ்தவர்களே காரணம் என்று இந்துக்கள் கருதுகின்றார்கள். இந்தியாவின் ஆதரவு இல்லாமல், ஈழத்தமிழர்களின் சிக்கல் தீராது என்கிற கொள்கைக்கு மாறாக கிறிஸ்தவர்கள் செயற்பட்டார்கள் என்கிற கருத்தும் உண்டு. மேலை நாட்டு ஆதரவுடன் இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம் என்கிற கருத்தினைக் கிறிஸ்தவர்கள் முன்வைத்தார்கள். இந்தியா எங்களுக்கு தேவையில்லை; ஏனெனில், இந்தியா இந்துத்துவ நாடு; இந்துப் பெரும்பான்மை நாடு; இந்தியா வந்தால் தங்களுடைய செல்வாக்குக் குறைந்துவிடும் என்ற கண்ணோட்டத்தில் மேலை நாடுகளின் தலையீட்டை கிறிஸ்தவர்கள் விருப்பினார்கள். எங்களுடைய பின்னடைவிற்கு அது பெரிய காரணம்” என்கிற விடயங்களை மறவன்புலவு க.சச்சிதானந்தம் குறிப்பிட்டிருக்கின்றார்.

தமிழ்த் தேசிய அரசியல் போராட்டங்களின் போக்கில் தமிழ் பேசும் இஸ்லாமியர்களை எங்களுடைய அரவணைப்புக்குள்ளிருந்து தொலைத்துவிட்டு, இலங்கையில் சிறுபான்மையினங்களின் பலத்தினைப் பிளவுபடுத்தி விட்டு, ஏமாற்றமடைந்திருக்கின்ற தருணத்தில், தமிழ் மக்களுக்குள் சிறிய தொகையிலிருக்கின்ற கிறிஸ்தவர்களையும் பிரித்துவிட்டு ஒற்றைப் படையான குழுவாக இயங்கக் கோருகின்ற அடிப்படையை சிவசேனாவின் ஆரம்பம் முன்வைக்கின்றது. இந்த நகர்வு, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் சாதி ரீதியிலான அடையாளங்கள் சார்ந்தும் பிளவுகளை ஏற்படுத்தி, ஆறுமுகநாவலர் கலாசாரத்தினை மீளவும் தீவிரமாக விதைத்து விடுமோ என்கிற அச்சத்தினையும்தோற்றுவித்திருக்கின்றது.

தமிழ்த் தேசியப் போராட்டங்களின் போக்கில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என்கிற பிரிவினை எந்தத் தருணத்திலும் வந்ததில்லை; குறிப்பாக, தமிழ்த் தேசியத் தந்தையாக கிறிஸ்தவ மதத்தினைப் பின்பற்றிய எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தைத் தமிழ் மக்கள் கொள்கின்றார்கள். அதுபோல, புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனும் மதம் சார்ந்தோ, சாதிகள் சார்ந்தோ எதனையும் முன்னிறுத்தியதில்லை. அப்படிப்பட்ட நிலையில், சிறு பிளவினை முன்னிறுத்தும் விடயமும் கூட மிகவும் அவதானமாகக் கையாளப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்களின் பெரும்பான்மையானவர்கள் கவனமாக இருக்கின்றார்கள்.

சிவசேனாவுக்கும் இந்தியாவின் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளுக்கும் நேரடியாகத் தொடர்புகள் இல்லை என்று மறுக்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தம், சிவசேனாவின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சை ரவுத் தமக்கு உடனடியாக ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதாவும் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த விடயங்களையெல்லாம் அவர் கூறுகின்ற நிலையில், மிகத் தெளிவாகக் கட்டமைக்கப்பட்ட திட்டங்களோடும் நோக்கங்களோடும் இயக்குகின்ற திறனைக் கொண்டவர் போலக் காட்டிக் கொள்கின்றார். அதுவும் ஒருவகையிலான அச்சுறுத்தலை உண்டு பண்ணுகின்றது. ஏனெனில், மதமொன்றை காப்பாற்றுவதற்கான அமைப்பினை ஆரம்பித்துள்ளதாகக் கூறிக்கொள்ளும் ஒருவர், இரத்தக் களறிகளோடு சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவு கிடைத்துள்ளதான மகிழ்வினைப் பெருவாரியாக வெளியிடுவதும், தமிழ்க் கிறிஸ்தவர்களைத் தனித்து அனுப்ப வேண்டும் என்பதை எந்தவித பதற்றம் இன்றிக் கூறுவதையும் நிச்சயமாக யாராலும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாதது.

பௌத்த சிங்கள தேசியவாதம் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் நாடொன்றின் ஏனைய சமூகத்தினர், தங்களது அடையாளங்களைத் தக்கவைக்கப் போராடித்தான் ஆக வேண்டும். ஆனால், அந்தப் போராட்டங்கள் இன்னும் இன்னும் குழப்பங்களையோ பிரிவினைகளையோ ஏற்படுத்துதல் ஆபத்தானது. இலங்கையில் பௌத்த அடிப்படைவாத சிந்தனையாளர்கள் மாத்திரமல்ல; இந்து அடிப்படைவாதிகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளும் உண்டு. இவற்றில் மூர்க்கத்தோடு இயக்கும் அமைப்புக்களும் உண்டு. அவ்வாறான அமைப்பொன்றின் வீரியமான வடிவமாகவே சிவசேனாவின் அறிமுகத்தினைப் பார்க்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில், அது முன்மொழியும் விடயங்கள் அப்படியிருக்கின்றன. இதனிடையே, சிவசேனாவின் ஆரம்பம் தொடர்பில் உள்நாட்டு ஊடகங்கள் கவனம் செலுத்தியதைக் காட்டிலும் தென்னிந்திய ஊடகங்கள் பேசிக் கொண்டவை ஏராளம். அதன் பின்னணி பற்றித் தேடிப் பார்த்தாலும் அது எதிர்மறையான விடயங்களையே கொண்டு வந்து சேர்க்கின்றது.

ஆயுத மோதல்களின் முடிவும் கடந்த வருடம் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் வடக்கு, கிழக்கில் நிறைய விடயங்களையும் தரப்புக்களையும் புதிதாகக் கொண்டு வந்திருக்கின்றன. அவற்றில் பல தமிழ்த் தேசிய அரசியலின் இருப்புக்கும் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலானவையாகவே காணப்படுகின்றன. அதன் நீட்சியாகவே மறவன்புலவு க.சச்சிதானந்தம் சுழற்றியுள்ள ‘சிவசேனா’ என்கிற வாளையும் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனாலும், அதற்கான ஆதரவினைத் தமிழ் மக்கள் வெளியிடுவதற்கான வாய்ப்புக்கள் அவ்வளவுக்கு இல்லை. சமூகத்தில் புற்றை ஏற்படுத்துவதற்கான நோய்க்கூறினை கண்டறிந்தால் அதனை அகற்றுவதுதான் புத்திசாலித் தனமான அணுகுமுறையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளமை நிலைத்திருக்க வேண்டுமா? இஞ்சியே அதற்கு தீர்வு…!!
Next post அது குறித்து ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 உண்மைகள்…!!