ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார், திக்.. திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி.. வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள்…!!

Read Time:23 Minute, 12 Second

timthumbராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார், திக்.. திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி.. வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன? நடந்தது என்ன? நீங்கள் ஏன் மேடைக்குச் செல்லவில்லை?’ என்று சிவராசன் மூவரையும் பார்த்துக் கேட்டார்.
‘அது அத்தனை சுலபமில்லை. மாலை போடுவதற்கு முன் அனுமதி வாங்கியிருக்க வேண்டும்.

திடீரென்று கேட்டால் யாரும் தர மாட்டார்கள். குறைந்த பட்சம் கூட்ட நிர்வாகிகளுக்கு நாம் ஏதாவது லஞ்சமாவது கொடுத்திருந்தால்தான் அது சாத்தியம்’ என்று நளினி சொன்னார்.

முன்னைய தொடரின் தொடர்ச்சி..

சிவராசன் யோசித்தார். சரிதான். மாலை போடுவதென்பது விளையாட்டுக் காரியமல்ல. அதற்கு அனுமதி தேவை. அனுமதி கிடைக்கக் கொஞ்சம் செலவு செய்யத்தான் வேண்டும்.

‘ஆனாலும் நீங்கள் மிகவும் பதற்றமாக இருந்தீர்கள்! முகத்தில் அப்படிப் பதற்றம் தெரியக் கூடாது’ என்று சிவராசன் நளினியிடம் சொன்னார். வெகுநேரம் அங்கேயே பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் கலைந்து போனார்கள்.

எட்டாம் தேதி மாலை அலுவலகத்திலிருந்து புறப்பட்டு நளினி நேரே தன் தாய் வீட்டுக்குப் போனார். முந்தைய நாள் நடந்த சம்பவங்களே அவரது மனத்தை ஆக்கிரமித்திருந்தன.

யாரிடமாவது சொல்ல வேண்டும். ஆர்வமும் பதற்றமும் அச்சமுமாகக் கழிந்த இரவின் சம்பவங்கள். வீட்டில் நளினியின் சகோதரர் பாக்கியநாதன் இருந்தார்.

அவரிடம் முழு விவரத்தையும் சொன்னார். பாக்கியநாதனுக்கு அது தெரியாதிருக்க நியாயமில்லை. ஆனாலும் அவரிடம் தான் சென்று சொன்னதாகத்தான் நளினி தமது வாக்குமூலத்தில் சொன்னார்.

ஒன்பதாம் தேதி சிவராசன், அவர்கள் வீட்டுக்கு வந்து ஒரு விஷயத்தைச் சொன்னார். முருகன் இலங்கை திரும்புகிறார். நளினிக்கு இது பெரிய அதிர்ச்சி. எதிர்பார்க்கவில்லை.

ஏன்? என்ன ஆயிற்று? தெரியவில்லை. பொட்டு அம்மான் உத்தரவு. பதினொன்றாம் தேதி முருகன் புறப்பட வேண்டும் என்று சிவராசன் சொன்னார்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். நளினிக்கும் முருகனுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த காதல், தொடக்கத்திலிருந்தே சிவராசனுக்கு உறுத்திக்கொண்டிருந்திருக்கிறது.

அவர் முருகனிடம் இது பற்றி எச்சரித்திருக்கக் கூடும்.

ஆனாலும் அவர்களுடைய காதல் எவ்விதத் தொய்வும் இல்லாமல் இடைப்பட்ட நாள்களில் நன்றாக வளர்ந்து, இருவர் மனத்திலும் ஆழமாக வேரூன்றிவிட்டிருந்தது.

தாம் செய்ய உத்தேசித்திருக்கும் காரியத்துக்கு இந்தக் காதல் மிகப்பெரிய இடைஞ்சலாக இருக்கும் என்று சிவராசன் கருதினார்.

அது பற்றிய தனது விமரிசனங்களையும் கருத்துகளையும் கண்டனத்தையும் பொட்டு அம்மானுக்கு அனுப்பிவைத்தார்.

முருகனால் பிரச்னையில்லை. அவரது காதல்தான் பிரச்னை.

அதனடிப்படையில்தான் பொட்டு அம்மான் முருகனை உடனே ஈழத்துக்குத் திரும்பி வரச் சொல்லி உத்தரவிட்டிருந்தார்.

யாரும் மறுத்தோ, எதிர்த்தோ ஏதும் பேசிவிட முடியாத உத்தரவு.

சுபாவும் தணுவும் இயக்கத்துக்கும் ஈடுபட்டிருக்கும் மாபெரும் பணிக்கும் தங்கள் அர்ப்பணிப்பையும் உறுதிப்பாட்டையும் விவரித்து தனித்தனியே கடிதங்கள் எழுதி முருகனிடம் கொடுத்தார்கள்.

பாக்கியநாதனும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தன்னுடைய விசுவாசத்தைக் குறிப்பிட்டு பேபி சுப்பிரமணியத்துக்குத் தனியே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார்.

நளினி அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

முருகனுக்காகத்தான் அந்தப் பணியில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். இப்போது முருகன் இல்லை. இலங்கைக்குத் திரும்பிவிடுகிறார்.

என்றால், இனி நான் செய்தே தீரவேண்டிய பணி என்று என்ன இருக்கிறது? யாருக்காகச் செய்யவேண்டும்?

பொட்டு அம்மானுக்குக் கடிதம் எழுதினாரே தவிர சிவராசனுக்கு அந்தக் காதல் எத்தனை வீரியமானது, ஆழமானது என்பது தெரிந்திருக்கவில்லை.

திட்டத்தைச் செயல்படுத்தவேண்டிய நாள் நெருங்க நெருங்க, நளினியின் ஒத்துழைப்பு படிப்படியாகக் குறைந்துகொண்டே போனதைக் கண்டு அஞ்சி, அவரே திரும்ப பொட்டு அம்மானுக்குத் தகவல் சொல்லி, முருகனைத் திரும்ப வரவழைக்க வேண்டியதானது.

நான் முன்பே சொன்னது போல ராஜிவ் காந்தியின் படுகொலை என்பது நளினி முருகனின் காதலினால் சாத்தியமான விஷயம்.

பொட்டு அம்மானின் திட்டம், சிவராசனின் செயல் திட்டங்கள், எத்தனையோ விடுதலைப் புலி உறுப்பினர்களின் உழைப்பு, ஈடுபாடு அனைத்தும் இருந்தாலும், அவர்கள் நினைத்தது, நினைத்தபடி நடப்பதற்கு உதவி செய்தது இந்தக் காதல்தான். இது மட்டும்தான்!

வாசமிகு மாலை…

பதினோராம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முருகன், கோடியக்கரையில் படகுக்காகக் காத்திருந்த நாள்களுக்குள்ளாகவே அவரைச் சென்னை திரும்பச் சொல்லி உத்தரவு வந்துவிட்டது.

அது மிஞ்சிப் போனால் இரண்டு மூன்று நாள்கள் இருக்கும். அதற்குள் சிவராசனுக்குப் புரிந்து விட்டது.

முருகன் இல்லாது போனால் நளினியால் எந்தப் பயனும் இல்லை. முருகன் திரும்பி வந்து விட்டார் என்பது தெரிந்ததும் நளினி சகஜ நிலைமைக்குத் திரும்பி விட்டார்.

பழையபடி சுறுசுறுப்பாகத் திட்டத்தில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார். தணுவையும் சுபாவையும் புரசைவாக்கத்தில் ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் துணிகள் எடுத்தார்கள்.

பச்சை, ஆரஞ்சு நிற சல்வார் கம்மீஸ் அங்கே வாங்கப்பட்டது.

இன்னொரு கடையில் வேறொரு சுடிதார் துணி வாங்கப்பட்டு, ராயப்பேட்டையில் அதனைத் தைக்கக் கொடுத்தார்கள். தணு அளவு கொடுக்கவில்லை.

தணுவின் சார்பில் சுபாவே அளவு கொடுத்தார். மிகவும் லூசாகத் தைக்கும்படி டெய்லருக்குச் சொன்னார்கள். சுபாவுக்கு ஒரு புடைவையும் வாங்கினார்கள்.

புரசைவாக்கத்திலிருந்து பாண்டிபஜாருக்குச் சென்று ஒரு செருப்புக் கடையில் மீண்டும் ஒரு ஜோடி செருப்பு வாங்கினார்கள். வெளியே வந்து ஒரு பிளாட்பார செருப்புக் கடையில் மீண்டும் ஒரு ஜோடி செருப்பு வாங்கினார்கள்.

ஷாப்பிங் எல்லாம் முடித்து, அன்றிரவு நாதமுனி தியேட்டருக்குச் சென்று மூவரும் படம் பார்த்தார்கள்.

மறுநாள் மூவரும் கோல்டன் பீச் சென்று உல்லாசமாகக் கழித்தார்கள். அன்றிரவு நளினி வீட்டிலேயே தங்கிவிட்டு அதற்கடுத்த நாள் (19 மே) மூவரும் மகாபலிபுரம் போனார்கள்.

திட்டம் தயார். என்ன செய்ய வேண்டும், யார் செய்யவேண்டும், மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று எல்லாம் ஏற்கெனவே பேசி முடிக்கப்பட்டிருந்தது.

எனவே தங்களைப் பதற்றமில்லாமல் வைத்துக்கொள்வதற்காக அவர்கள் இம்மாதிரி உல்லாசப் பயணங்களை மேற்கொண்டார்கள். ஆனால் இடையில் ஒரு சம்பவம் நடந்தது.

ஷாப்பிங் போன சமயம் தி. நகரில் சுபாவின் கண்ணில் ஒரு சர்தார்ஜி பட்டார். அதுவரை சகஜமாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று முகம் மாறினார்.

அவரது உடம்பு உதறத் தொடங்கியது. நளினியின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தவர், மேலும் அழுத்தமாகப் பற்றிக்கொண்டார். வியர்த்துவிட்டது.

நளினிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன, என்ன என்று பதற, ‘எனக்கு அவனை ஓங்கி அறையவேண்டும் போலிருக்கிறது. சர்தார்ஜியைப் பார்த்தாலே வயிறு எரிகிறது’ என்று சுபா சொன்னார்.

இலங்கை சென்ற இந்திய அமைதிபடையில் இருந்தவர்களுக்குள் பெரும்பாலானவர்கள் சிக்கியர்கள் என்பதை தணு விளக்கினார்.

பத்தொன்பதாம் தேதி மாலை மகாபலிபுரத்திலிருந்து மூவரும் வீடு திரும்பியபோது, வாசலில் சிவராசன் காத்திருந்தார்.

நளினி, பக்கத்து வீட்டில் சாவி கொடுத்துவிட்டுத்தான் வெளியே போவார் என்கிற விஷயம் அவருக்குத் தெரியாது.

எனவே, வெளியே வெகுநேரம் காத்திருந்திருக்கிறார்.

உள்ளே சென்றதும் சிவராசன் அவசரமாக ஒரு செய்தித்தாளை நளினியிடம் காட்டினார்.

ராஜிவ் காந்தி தமிழகம் வருவதை உறுதி செய்து, அவரது பயணத் திட்ட விவரங்களை அளித்திருந்தார்கள்.

‘நாம் இந்தத் தருணத்துக்காகத்தான் தயாராகிக் காத்திருக்கிறோம்!’ என்று சிவராசன் சொன்னார். அவரது கண்ணில் மின்னல் மாதிரி ஓர் ஒளி தென்பட்டது.

மூவரும் அமைதியாக அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ‘21ம் தேதி மாலை வருகிறார். இங்கிருக்கப் போவது 22ம் தேதி ஒருநாள் மட்டும். நாம் வேலையை எங்கே முடிக்கப்போகிறோம் என்று விரைவில் சொல்கிறேன்.

பாண்டிச்சேரியோ, மயிலாடுதுறையோ, ஸ்ரீபெரும்புதூராகவோ இருக்கலாம்.

நளினி நீங்கள் எதற்கும் இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொண்டு விடுங்கள்.’ திடீரென்று இரண்டு நாள் விடுமுறை எடுப்பதெல்லாம் கஷ்டம்.

சரியான நேரம் சொன்னால் உரிய சமயத்தில் வந்துவிடுவதாக நளினி சொன்னார்.

அன்றைக்குத்தான் சிவராசனோ, சின்ன சாந்தனோ டரியல் பீட்டர்ஸ் மூலம் லலித் சந்திரசேகரை அணுகி ஸ்ரீபெரும்புதூரில் காரியத்தை முடிப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளைச் செய்திருந்தார்கள்.

மறுபுறம் தோப்புத்துறை ஜகதீசன் மூலம் மயிலாடுதுறை நிகழ்ச்சியில் மாலை அணிவிக்க முடியுமா என்றும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பிறகு திருமதி மரகதம் சந்திரசேகரிடம் தேர்தல் நிதி அளித்து, லதா கண்ணன் மூலம் அவர்கள் மாலையிடுவதற்கு வாய்ப்பு கிடைப்பது உறுதி என்பது தெரிந்ததும்தான் ஸ்ரீபெரும்புதூர் என்று திட்டம் இறுதியானது.

மாலை நளினியை ராயப்பேட்டை வீட்டுக்கு வந்துவிடச் சொல்லிவிட்டு தணுவையும் சுபாவையும் சிவராசன் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

அன்றைக்கு தணுவுக்கு வலது தோள்பட்டையில் வலி இருந்தது.

அவரை கல்யாணி நர்சிங் ஹோமுக்கு அழைத்துச் செல்லும்படி நளினி சொல்லியிருக்கிறார். ‘அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.

நீங்கள் நமது விஷயம் வெளியே யாருக்கும் தெரியாதபடி நடந்துகொள்ளவேண்டும். அலுவலகத்தில் லீவு சொல்லும்போதுகூட வேறு ஏதாவது காரணத்தைச் சொல்லுங்கள்.

ஸ்ரீபெரும்புதூர் என்னும் பேச்சே வரக்கூடாது’ என்று எச்சரித்துவிட்டுச் சிவராசன் புறப்பட்டுப் போனார். திட்டமிட்டபடி இருபதாம் தேதி அன்று மாலை ஆறு மணிக்கு ராயப்பேட்டை வீட்டில் அனைவரும் சந்தித்தார்கள்.

சிவராசன் மூன்றே விஷயங்கள் சொன்னார்.

முதலாவது, இடம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஸ்ரீபெரும்புதூர்தான்.

அடுத்தது, நளினி அரை நாள் விடுப்பு எடுத்தால் போதும். மூன்றாவது, மதியம் மூன்று மணிக்கு அவர் தயாராக இருக்கவேண்டும். அன்றைய சந்திப்புக்கு ஹரி பாபுவும் வந்தார்.

முருகன் அங்கே இருந்தார். அனைவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, இரவு உணவை அங்கேயே முடித்துக்கொண்டார்கள். பிறகு ஹரி பாபு, முருகன், நளினி மூவரும் அங்கிருந்து புறப்பட்டு பேருந்து நிறுத்தம் வரை சென்றார்கள்.

‘நாளை சந்திப்போம்’ என்று சொல்லி விடைபெற்றுப் பிரிந்து

அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்றார்கள். முருகன் அன்றிரவு நளினியுடன் அவரது வில்லிவாக்கம் வீட்டுக்குச் சென்றார்.

இரவு அங்கேதான் தங்கினார். இரவு முழுவதும் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். 21ம் தேதி. காலை எட்டு மணிக்குக் கிளம்பி, நளினி அவரது அலுவலகம் செல்ல, முருகன் ராயப்பேட்டை வீட்டுக்குச் சென்றார்.

நளினி அலுவலகம் சென்றதும் தனது நிர்வாக இயக்குநரிடம் மதியம் அரைநாள் விடுப்பு வேண்டும் என்று கேட்டார்.

அவர் பெயர் முத்துசாமி. விடுமுறைக்கான காரணம் எதையும் கேட்காத அவர், ‘எதற்கு அரைநாள் விடுப்பு? உன் வேலையை முடித்துவிட்டால் எப்போது வேண்டுமானாலும் கிளம்பலாம்’ என்று சொல்லிவிட்டார்.

நளினி, பகல் இரண்டு மணி வரை அன்று அலுவலகத்தில் இருந்தார். அதன்பின் புறப்பட்டு ராயப்பேட்டைக்குச் சென்று வீட்டில் சாப்பிட்டுவிட்டு, அன்றைக்கு உடுத்திக்கொள்ளவிருந்த புடைவையை அயர்ன் செய்யக் கொடுத்துவிட்டு வந்தார்.

முருகனைத் தவிர வீட்டில் வேறு யாருமில்லை. (திட்டத்தில் நேரடியாகத் தொடர்பில்லாத மற்ற அனைவரையும் சிவராசன் எங்காவது சுற்றுலா போய்விடச் சொல்லி உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கும்!)

வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்து வைத்துவிட்டு அவர்கள் இருவரும் தயாராகக் காத்திருக்க, தணுவையும் சுபாவையும் அழைத்துக்கொண்டு சரியாக 3.45க்கு சிவராசன் வந்து சேர்ந்தார்.

வெள்ளை பைஜாமா குர்தாவும் கையில் ஒரு சிறு ஸ்கிரிப்ளிங் பேடும் வைத்திருந்தார். வி.பி.சிங் நிகழ்ச்சியில் படமெடுக்க முருகன் நளினியிடம் அளித்த யாஷிகா கேமரா, இப்போது சிவராசன் கையில் இருந்தது.

(பின்னால் இது சி.பி.ஐயால் கைப்பற்றப்பட்டது.) சுபா பச்சை நிறப் புடைவை அணிந்திருந்தார். மூவருமாகப் புரசைவாக்கத்தில் வாங்கிய புடைவை.

தணு அணிந்திருந்தது அந்த லூசான ஆரஞ்சு சுடிதாரும் பச்சை துப்பட்டாவும். நளினி, தணுவைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

சுபா, ‘தணு இன்று சரித்திரம் படைக்கப் போகிறார்!’ என்று சொல்லிவிட்டுப் பெருமிதமுடன் பார்த்தார்.

விவரிக்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பு அனைவருக்குமே இருப்பினும் கட்டுப்படுத்திக்கொண்டு, கிளம்புவதில் மும்முரமானார்கள்.

டைரி, பேப்பர், பென்சில் என்று எதையும் எடுத்துவர வேண்டாம் என்று நளினியிடம் சுபா சொன்னார். எனவே நளினி ஒரு பாதுகாப்புக்கு ஐநூறு ரூபாய் பணம் மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

‘ஒரு நிமிடம். எனக்கு ஏதாவது ஒரு கோயிலுக்குப் போகவேண்டும்’ என்று தணு கேட்டார்.

வெளியே வந்தவர்கள் ஓர் ஆட்டோவைப் பிடித்து, நாதமுனி தியேட்டருக்கு அருகே உள்ள பிள்ளையார் கோயிலுக்குப் போனார்கள். மாலை நான்கு மணி வேலை என்பதால் கோயில் மூடியிருந்தது.

வெளியில் நின்றபடியே தணு பிரார்த்தனை செய்தார்.

அங்கிருந்து புறப்பட்டு அவர்கள் பாரீஸ் கார்னருக்கு வந்து சேர்ந்து, திருவள்ளுவர் பேருந்து நிறுத்தத்தை அடையும்போது மணி சரியாக ஐந்து.

மறுபுறம், அதே பாரீஸ் கார்னருக்கு முன்னதாகவே வந்து சேர்ந்திருந்த ஹரி பாபு, கையில் ஒரு சந்தன மாலை வைத்திருந்தார்.

பூம்புகார் எம்போரியத்தில் அன்று காலை வாங்கிய மாலை அது.

எங்கே நல்ல மாலை கிடைக்கும் என்று முன்னதாக சுபா சுந்தரத்தின் ஸ்டூடியோவில் அவர்கள் விவாதித்திருக்கிறார்கள். சுபா சுந்தரம் விலை மலிவாக, சந்தன மாலைகள் எங்கெங்கே கிடைக்கும் என்று சொன்னபோது, ‘மாலை பிரமாதமாக இருக்கவேண்டும்.

கமகமவென்று மணக்கவேண்டும்!’ என்று சிவராசன் கூறியிருக்கிறார்.

ஏதோ ஒரு சாதாரண கடையில் வாங்கியிருக்க வேண்டிய மாலைதான் அது. ஆனால் சிவராசன் அது மிகத் தரமான மாலையாக இருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொன்னபடியால் பூம்புகாரில் வாங்கச் சொல்லி சுந்தரம் அனுப்பிவைத்திருக்கிறார்.

பிரவுன் கவர் ஒன்றில் போட்டு ஹரி பாபு எடுத்து வந்திருந்த மாலையை சிவராசன் பார்த்தார்.

சிறிது நேரம் அவர்கள் பாரிமுனையில் வெறுமனே சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

ஓரிடத்தில் நின்று ஐஸ் க்ரீம் சாப்பிட்டார்கள். ஐந்தரை மணிக்கு மேல் திரும்பவும் பெரியார் பேருந்து நிலையத்துக்கு வந்து, ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பஸ் ஒன்றில் ஏறி

அமர்ந்தார்கள். ஐந்து பேருக்குமாகச் சேர்த்து சிவராசன் டிக்கெட் வாங்கினார். அண்ணா சாலை, போரூர், பூந்தமல்லி வழியே பஸ் சென்று, சரியாக இரவு ஏழரை மணிக்கு ஸ்ரீபெரும்புதூரை அடைந்தது.

அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் இறங்கியபோது ராஜிவ் காந்தி விமானத்தில் வந்துகொண்டிருந்தார் இரண்டு மணி நேரம் தாமதமாக.

தொடரும்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிசய அவதார் குழந்தைகள்… பிரம்மிப்பில் உலகம்…!! வீடியோ
Next post கழுத்து கருப்பாக இருக்கிறதா? இதோ டிப்ஸ்…!!