சரணடைவும், சிறைச்சாலையும்: “கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி, மகா கொடுமையானது”.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33)

Read Time:22 Minute, 20 Second

timthumbசிறைச்சாலையில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளுக்காகவே அடைக்கப்பட்டிருந்தனர்.

கிலோ கணக்கில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெரு முதலாளிகள் தொடக்கம், கிராம் கணக்கில் விற்பனை செய்யும் சிறிய வியாபாரிகள், வெளிநாடுகளிலிருந்து போதை மருந்து கடத்தியவர்கள் என நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கிருந்தனர்.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்களப் பெண்களாக இருந்தபோதும், முஸ்லிம் மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த தமிழ்ப் பெண்களும் இருந்தனர்.

போதை மருந்தைத் தமிழில் ‘தூள்’ எனவும் சிங்களத்தில் ‘குடு’ எனவும் குறிப்பிட்டு அழைப்பார்கள். சிறைச்சாலையில் நான் நேரடியாகக் கண்ட அனுபவத்தின்படி இந்தத் தூள் வியாபாரம் செய்யும் முதலாளிகள் தூள் குடிப்பதில்லை.

அவர்களுக்குத் தினசரி கொண்டுவரப்படும் வீட்டுச் சாப்பாடு மிகச் சிறப்பானதாக இருக்கும்.

ஒருவரைப் பார்த்த உடனேயே இவர் தூள் முதலாளி என்று குறிப்பிடக்கூடிய விதத்தில் கொழுத்த தோற்றத்துடன், நேரத்திற்கொரு உடையை அணிந்துகொண்டு எந்த நேரமும் மினுமினுப்பமாக ஒருவிதமான தலைக்கனத்துடன் நடந்துகொள்வார்கள்.

இவர்களுக்குத்தான் சிறைச்சாலையில் அதிக செல்வாக்கு காணப்படும்.

சிறைக்காவலர்கள்கூட இப்படியான பெண் முதலாளிகளுடன் இணக்கமாகவே நடந்துகொள்வார்கள். ஒவ்வொருவரும் ஒன்றிற்கும் மேற்பட்ட வழக்குகளுடன் இருப்பார்கள்.

ஒரு வழக்கிற்காகப் பிணையில் சென்ற சில மாதங்களில் அடுத்த வழக்கிற்காக உள்ளே வந்துவிடுவார்கள். சிறைச்சாலைக்குள்ளேயும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பெண்கள் பலர் இருந்தனர்.

மிகவும் நுட்பமான முறைகளைப் பின்பற்றித் தமக்குத் தேவையான போதைப் பொருள், தொலைபேசி, அதற்குரிய பாகங்கள் என்பனவற்றைச் சிறைச்சாலைக்குள்ளே கொண்டுவந்து விடுவார்கள்.

ஒரு நாள் மாலை நாலு மணியளவில் நான் உடலைக் கழுவிக்கொள்வதற்காகக் குளிக்கும் இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். எனது தலைக்கு மேலாக என்னவோ பறந்து வந்து எனதருகில் தொப்பென விழுந்தது.

சட்டெனச் சுதாகரித்துக்கொண்டு சீக்கிரமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டேன்.

யுத்தகளத்தில்தான் இப்படியான திடீர் தாக்குதல்கள் நடப்பது வழக்கம். இதென்னவாக இருக்கும் என்ற உணர்வுடன் சற்று தொலைவில் நின்று பார்த்தேன்.

ஒரு பொலித்தீன் பையினுள் பொதி செய்யப்பட்ட ஒரு இறாத்தல் பாண் எனக்கு முன்பாக விழுந்து கிடந்தது; கண்மூடித் திறப்பதற்குள் அதனை ஒரு பெண் தூக்கிக்கொண்டோடிவிட்டாள்.

அவள் ஒரு முக்கியத் தூள் வியாபாரப் புள்ளியின் உதவியாள்.

அந்தப் பாணுக்குள்ளே பல பெறுமதியான பொருட்கள் வந்து சேர்ந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஏற்கனவே திட்டமிட்ட முறையில் அங்குப் பார்வையாளர்கள் வெளியிலிருந்து கொண்டுவரும் பொருட்களை உணவுப் பொருட்களுடன் சேர்த்து எடுத்து மிகவும் சாமர்த்தியமாகத் தமது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் மறைத்துக்கொள்வார்கள்.

வழக்குக்காக நீதிமன்றத்திற்குச் சென்று வருபவர்களில் இப்படியான பொருட்கள் கொண்டுவருவதற்கான திறமைசாலிகள் பலர் இருந்தனர்.

உடற் தோலையே உரித்தெடுப்பதுபோல மேற்கொள்ளப்படும் உடற் பரிசோதனைகளுக்கும் அகப்படாமல் மிகவும் சாதுரியமாகக் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள்.

எதிர்பாராத விதமாகப் பிடிபடும்

“சுனாமி வரப்போகுது” இருந்தாற்போல இப்படியான செய்தி காட்டுத் தீ போலச் சிறைக்குள்ளே பரவிவிடும்.

அந்த நேரத்தில் ஒவ்வொரு பெண்களின் கண்விழிகளும் வெளியே விழுந்துவிடுமளவுக்குப் பிதுங்கிக் கிடக்கும்.

சிறைச்சாலைக்குள் அடிக்கடி பாரிய சோதனைகள் நடத்தப்பட்டுச் சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்படும். சிறையில் அனுமதி மறுக்கப்பட்ட பொருட்களைப் பதுக்கி வைப்பதற்குப் பெண்கள் மிகவேகமாக ஓடித் திரிவார்கள்.

அந்தநேரத்தில் அனைவருமே ஒற்றுமையின் சிகரங்களாகிவிடுவார்கள். கைத்தொலைபேசி, தூள் என அனைத்துப் பொருட்களும் பதுக்கப்பட்டுவிடும்.

இருக்கிறவனுக்கு ஒரு பாடு இல்லாதவனுக்குப் பல பாடு என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல எங்களைப் போன்றவர்களுக்கும் பிரச்சனைதான்.

இரண்டு மாதத்துக்கு ஒரு தடவையோ அதற்கும் கூடுதலான இடைவெளிகளிலோ சிலபேருக்கு ஊரிலிருந்து தம்மைப் பார்வையிடவரும் உறவினர்கள் கொண்டுவந்து தரும் பொருட்களை அடுத்தமுறை அவர்கள் வரும்வரை கட்டிக் காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

தவறான பொருட்கள் இருக்கிறதோ இல்லையோ அனைவரது இடங்களும் ஒரே மாதிரிதான் சோதனையிடப்படும். மா, சீனி எல்லாம் கிண்டிக் கிளறப்பட்டு, தண்ணி வாளியின் அடிப்பகுதி தொடக்கம் தண்ணிப் போத்தில் மூடி வரை சுரண்டிப் பார்க்கப்படும்.

உடுப்புகளின் தையல் மடிப்புகளெல்லாம் தடவப்படும். சுருண்டு படுக்கவும் போதாத ஒன்றரை அடி இடத்தில், ஒரு தலையணி உறைக்குள்ளேயும், பொலித்தின் பையிலும் பொத்திப் பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்களைக் கவிழ்த்துக் கொட்டிவிடுவார்கள்.

ஒருநாள் இரவு ஏழு மணி கடந்துவிட்டிருந்தது. வழக்கம் போல நாம் எமது துணிமணிகளை விரித்துப் படுத்துவிட்டோம்.

இரவு நேரத்தில் இரகசியமாகப் போனுக்குச் ‘சார்ச்’ ஏற்றுபவர்களும் விடியவிடிய போன் கதைக்கும் பெண்களும் தவிர அனைவரும் உறக்கத்திற்கு ஆயத்தமாகிவிட்டனர்.

நானும் படுத்துக்கொண்டு தான் இருந்தேன். திடீரென எனது கால் சப்பாத்துக் கால்களால் மிதிக்கப்பட்டது. உடனடியாகத் துள்ளியெழுந்தேன்.

“பந்த பொலீஸ்” என அழைக்கப்படும் சிறைச்சாலை பொலிஸார் ஆண்களும் பெண்களுமாகக் கைதிகளின் தங்குமிடத்தைச் சுற்றிவளைத்து நின்றனர்.

பொருட்களைப் பதுக்குவதற்கு அவகாசம் கிடைக்காத காரணத்தால் அடுத்த மூன்று நான்கு மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கணக்கான தொலைபேசிகளும் போதைப்பொருள் பக்கற்றுகளும் பணமும் கைப்பற்றப்பட்டது.

இரவு நேரத்தில் ஆண்கள் சோதனைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது, பெண்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.

அடுத்த நாள் இரவு மீண்டும் அதே நேரத்தில் பரிசோதனை செய்வதற்காக வந்த பொலிஸாரை எதிர்த்துப் பெண் கைதிகள் கலகம் செய்யத் தொடங்கினார்கள்.

உள்ளே வந்தவர்களை வெளியே செல்லவிடாமல் கதவைச் சாத்திவிட்டு, கையில் கிடைத்த தும்புத் தடி, போத்தில் என்பனவற்றால் சரமாரியாகத் தாக்கினார்கள்.

சோதனை செய்வதற்காக வந்தவர்களான சிறை போலிஸார் வெளியே ஓடிப்போக முடியாத நிலையில் மலசல கூடங்களுக்குள் புகுந்து ஒளிந்துக்கொண்டார்கள்.

சற்று நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அடுத்த இரண்டு நாட்களும் பெரும் பதற்றமாகவேயிருந்தது. ஆனால் அதன்பின் இரவு நேரத்தில் சோதனை செய்வதற்கு ஆண் பொலிஸார் வருவது இல்லை.

சிறைச்சாலையின் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாகத் தொடங்கின. எனது மன அழுத்தங்களும் சிறைவாழ்வின் கொடுமையும் அடுத்தக் கட்டம் என்னவென்பது தெரியாத நிலைமையும் ஒரு நடைப்பிணம் போல என்னை மாற்றியது.

எல்லாவற்றையும் விட எனக்கு மனஅமைதியைப் பெறுவது பெரிய விஷயமாகப் பட்டது. ஏதாவது ஒரு விஷயத்திற்குள் மனதைச் செலுத்துவதுதான் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி என்பதைப் புரிந்துகொண்டேன்.

சிறையுள்ளேயிருந்த கோயிலுக்குச் செல்லத் தொடங்கினேன். விரதம் பிடிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் ஒரு உண்மையை ஆழமாகப் புரிந்துகொண்டேன்.

சாதாரணமாகவே பசியிருப்பது எனக்கு மிகவும் கடினமான காரியம். போராட்டக் காலங்களில் உணவு கிடைக்காத சந்தர்ப்பங்களிலும், உணவிருந்தும் உண்பதற்கு நேரம் கிடைக்காத காரணத்தாலும் பசி கிடந்திருக்கிறேனே தவிர, சாதாரணமாகச் சிறுவயதிலிருந்தே எனக்குப் பசியிருப்பது முடியாத காரியமாகும்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் எனச் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள். வெலிக்கடைச் சிறையில் நாள் முழுவதும் உண்ணாமல் இருப்பதிலே சுகம் காணத் தொடங்கினேன்.

வயிறு எரிய எரிய பசியிருக்கும்போது மனதின் இறுக்கங்கள் சுகப்படுவது போல ஒரு உணர்வேற்படத் தொடங்கியது. எவருடனும் பேசாமல், சாப்பிடாமல், வெறித்த மனத்தோடு ஒரு மூலையில் சுருண்டுகொள்ளும்போது மனம் அளவற்ற நிம்மதியடைவது போலிருந்தது.

எத்தனையோ நாட்கள், என்னுடன் அன்பாகப் பழகும் தாய்மார், சகோதரிகள் எனக்குரிய இடத்தில் என்னைக் காணக் கிடைக்காமல் சிறையின் வளாகம் முழுவதும் தேடியலைந்த பின்னர் கோவிலின் பின்புறத்தில் அல்லது தனிமையானவொரு இடத்தில் என்னைக் கண்டுபிடித்துள்ளனர்.

மனித முகங்களைப் பார்ப்பதும் மனிதர்களோடு பேசுவதும் கொஞ்சமேனும் பிடிப்பில்லாத விடயமாகச் சிறிது காலம் இருந்தது.

இந்த நேரத்தில்தான் தமிழ்க் கைதிகள் அதிகமாயிருந்த 29ஆவது கொட்டுவைக்கு மாற்றப்பட்டேன். அங்கேயிருந்த இரண்டு கைதிகள் கரும்புலி அணியிலிருந்து தாக்குதலுக்காக அனுப்பப்பட்டிருந்தபோது, 2007இல் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

அவர்களில் ஒருவரான பவளம் என்கிற பெண் போராளி யாழ்ப்பாணத்தில் தாக்குதலுக்காகச் சென்றுகொண்டிருந்தபோது இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் சயனைட் அருந்திய நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவ சிகிச்சையளித்த பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் மூலமாக அவர் வெலிக்கடைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

இன்னொரு கடற்கரும்புலிப் போராளியான அன்புவதனி திருகோணமலையில் தாக்குதல் நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்.

இதன்பின் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, புசா தடுப்பு முகாமில் நடைபெற்ற தீவிர விசாரணைகளின்பின் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

இந்தப் பிள்ளைகளுடன் நானும் கிறிஸ்தவ வழிபாடுகளுக்கும் பைபிள் வார்த்தைகளைப் படிப்பதற்கும் சென்றேன். உண்மையில் எனது மனக் காயத்திற்கு அந்த இடம் மருந்து போடுவதாக இருந்தது.

தொலைபேசி வைத்திருந்த ஒரு தமிழ்ப் பிள்ளையின் உதவியுடன் எனது சகோதரியிடம் பேசி அவர்மூலம் அம்மாவின் தொடர்பை எடுத்தேன்.

ஓமந்தையில் வைத்து அம்மாவைப் பிரிந்துசென்ற எனக்கு என்ன நடந்தது, எங்கே வைக்கப்பட்டிருந்தேன் என எனது குடும்பத்தவர்கள் எவருக்கும் தெரியாத நிலைமையில் ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களினால் அவர்கள் மிகவும் மனம் தளர்ந்துபோயிருந்தார்கள்.

2009, 10ஆம் மாத அளவில் எனது தாயார் என்னைப் பார்ப்பதற்காக வெலிக்கடைச் சிறைக்கு வந்திருந்தார். சிறைச்சாலையில் உறவினர்களைச் சந்திப்பது மிகக் கடினமான காரியம்.

மிகவும் தூரத்திலிருந்து ஒரு முழுநாள் பயணம் செய்து, கொழும்பில் வந்திறங்கி எமக்குத் தேவையான பொருட்களையும் சுமந்துகொண்டு மத்தியான நேரத்தின் கடுமையான வெயிலில் காய்ந்தபடி வெலிக்கடை உள் தார்வீதியில் நடந்துவந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து கொண்டு வந்த எல்லாப் பொருட்களையும், (சாப்பாட்டுப் பார்சல் உட்பட) அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப் பிடுங்கிப் பரிசோதனை செய்தபின், உள்ளே அழைக்கப்படுவார்கள்.

அந்தச் சிறிய அறையில் அரைச்சுவருக்கும் மேலாக ஒரு சிறிய விரல்கூட நுழையமுடியாதபடி இறுக்கமாக அடிக்கப்பட்டிருக்கும் கம்பிவலைக்கூடாகத்தான் பார்க்க முடியும். வெளிச்சமேயில்லாத அந்த இருண்ட அறையில் எந்த நேரமும் சனக் கூட்டமாகவே இருக்கும்.

ஐந்து நிமிடங்கள்தான் அதிகமான நேரம். பார்வையாளர்களின் தொகையைப் பொறுத்து இந்த நேரம் இன்னும் குறைக்கப்படும்.

இப்படிக் கிடைக்கிற அவகாசத்திற்குள் எமக்குத் தரப்படும் பொருட்களை மீண்டும் கிண்டிக் கிளறிப் பரிசோதித்த பின்பே தருவார்கள். சில சந்தர்ப்பங்களில் நீண்ட தூரத்திலிருந்து செய்து கொண்டுவரப்படும் பலகாரங்களைக்கூட உள்ளே கொடுக்க முடியாதெனத் திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

ஒருவர் கதைப்பது இன்னொருவருக்குக் கேட்காத அளவு மிகவும் இரைச்சலாக இருக்கும். அதையும் மீறி உரத்துக் கத்திக் கதைக்க வேண்டும். கம்பி வலைக்கூடாக இருண்ட அறைக்குள் உற்று உற்றுப் பார்த்தால்தான் கொஞ்சமென்றாலும் முகங்களைக் காண முடியும்.

தினசரி வீட்டுச் சாப்பாடு எடுக்கும் கைதிகளுக்கும் இதே நடைமுறைதான். மாதத்தில், வருடத்தில் ஒருதடவை உறவுகளைச் சந்திக்கும் கைதிகளுக்கும் இதே நிலைமைதான்.

எந்த உறவுகளும் சந்திக்கவே வராத நிலையில், ஒரு பிடி வீட்டு உணவுக்காக ஏங்கும் மனித மனங்கள் சிறைச்சாலையில் ஏராளமாக உண்டு.

தன்னைப் பார்ப்பதற்காக எவருமே வரப்போவதில்லை என்பது தெரிந்திருந்தும், காலை முதல் மாலை பார்வையாளர் நேரம் முடியும் வரைக்கும், தினமும் பார்வையாளர் சந்திப்பு இடத்தையே ஏக்கத்துடன் பார்த்தபடியிருக்கும் மனிதர்களின் எதிர்பார்ப்புக்களை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனப்பெண்களுடன் நெருக்கமாக வாழும் அனுபவம் எனக்கு வித்தியாசமான அனுபவங்களைத் தந்தது. என் சிறிய வயதில் வேறு இன மக்களுடன் சேர்ந்து பழகும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கவில்லை.

சமாதான காலத்தில் ஒருதடவை காணாமல்போன இராணுவத்தினரின் பெற்றோர்களும் உறவினர்களும் கிளிநொச்சிக்கு வந்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தனர்.

அவர்களுடன் வந்திருந்த வயதான சிங்களத் தாய்மார் வடித்த கண்ணீர் எனது மனதை உருக்கியது. எனது கண்ணிலிருந்தும் கண்ணீர் கொட்டியது. அதற்காக நான் வெட்கப்படவில்லை.

தமது பிள்ளைகளைப் போரில் இழந்த தமிழ்த் தாய்மார்களின் கண்ணீரும் கதறல்களும் எனது நினைவுக்கு வந்தன.

மனிதர்கள் இனம், மொழி, மதம், அரசியல் என வேறுபட்டு நிற்கலாம், ஆனால் உலகெங்கணும் தாய்மையின் பொதுமையான இயல்புகள் வேறுபடுவதில்லையே.

என்னோடு பழகிய பல சிங்களத் தாய்மார்களின் அன்பை என் வாழ்நாள் உள்ளவரை மறந்துபோக முடியாது. இப்படியான உறவுகளின் நெருக்கத்தினால்தான் சிங்கள மொழியை நான் பேசப் பழகினேன்.

தமது துக்கங்களையும் சந்தோசங்களையும் உணர்வோடு பகிர்ந்துகொள்வார்கள். தமிழ் மக்களைப் பற்றி அவர்களிடம் மிக நல்ல அபிப்பிராயங்கள் இருந்தன.

ஆனால் புலிகள் சிங்கள மக்களைக் கொலை செய்பவர்கள் என்ற கருத்து சாதாரண பெண்களிடையே பரவலாக இருந்தது. அவர்கள் அன்புடன் பழகத் தொடங்கிவிட்டால் எந்த நெருக்கடியிலும் தமது நலன்களையும் பாராது உதவி செய்வதற்கு முன் நிற்பார்கள்.

மனதிற்குள் வஞ்சனைகளைச் சேர்த்து வைக்கும் பண்பு அந்த மக்களிடம் மிகவும் குறைவாகவே இருந்தது. தமக்காகச் சேர்த்துவைப்பதைவிட இன்னொருவரின் பசி தீர்ப்பதே அதிக புண்ணியம் எனக் கருதும் அவர்களின் பல நல்ல குணங்களை அருகிலிருந்து அனுபவத்தில் உணர்ந்து கொள்ள முடிந்தது.

தொடரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேவை கொஞ்சம் சொரணை…!! கட்டுரை
Next post ‘எங்கிட்ட மோதாதே’ ரஜினி-கமல் ரசிகர்கள் கதை -நட்டி…!!