வட்டத்துக்குள் சிக்கும் சிறகுகள்…!! கட்டுரை

Read Time:24 Minute, 3 Second

article_1478665495-depositphotos_21917003_original‘நீ களைத்திருக்கிறாய். இப்போது உன்னுடன் யுத்தம் செய்தல் ஆகாது. ஆகவே, நீ போய் ஓய்வெடுத்து, இன்று போய் நாளை வா’ எனக் கூறுகின்றான் தசரத மைந்தன், சீதாராமனாகிய காகுத்தன். இவ்வாறு தன்னை அனுப்பியதற்குப் பதில் தன்னைக் கொன்றே போட்டிருக்கலாமே என்று, மனம் நொந்த நிலையில் அரண்மனை திரும்புகிறான் தசகண்டன் இராவணன். அன்றிரவு அவன் இருந்த மனநிலையைத்தான் ‘கடன்பட்டார் நெஞ்சம் போல…’ என்று கம்பர் அவ்வளவு அழகாக வர்ணிக்கிறார்.

இராமனுடனான போரிலேயே மனம் நொந்தபோது இராவணன், எவ்வாறானதொரு நிலையில் இருந்தானோ, அதேபோன்றதொரு நிலைமையே வடக்கு, கிழக்கில் அதுவும் நுண்கடன் பட்டோர் நிலைமையும் இருக்கின்றது என்று விவரித்தால் அதில் தவறே இருக்காது.

யுத்தம் மற்றும் பாரிய இயற்கை அனர்த்தங்களில் சிக்கி, சிக்கி சின்னாப்பின்னமாகி, தங்களின் வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்ற நிலையில், உதவி எனும் பெயரில் படையெடுக்கும் சில நிதிநிறுவனங்கள், அம்மக்களில் பலரின் வாழ்க்கையை மண்ணோடு மண்ணாக்கி விடுகின்றன.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், குடும்பங்கள் பல, பெண் தலைமைத்துவத்தின் கீழே இயங்குகின்றன. அவர்கள், தங்களுடைய குடும்பத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஏதாவது ஒருவகையில் கடன்பெறவேண்டியவர்களாவே இருக்கின்றனர்.

தமது வாழ்வாதாரத்தை முன்னேற்றவேண்டுமாயின் விரலுக்கேற்ற வீக்கம் போல, கடன் பெறவேண்டும். கடன் பெறாமல் தொழிலை உடனடியாக ஆரம்பிக்க முடியாது. ஆனால், கடன்பெறும் விடயத்தில் மிகவும் கவனமாகவும் அவதானத்துடனும் இருக்கவேண்டும்.

பெற்றக்கடனை ஆடம்பரத் தேவைக்களுக்காகப் பயன்படுத்திவிட்டு, பிதற்றிக்கொண்டு இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இன்னும் சிலர், நண்பர்களிடமே கடன்களை வாங்கி, அவர்கள் மனதையே புண்படுத்தும் வகையில் நடந்துகொள்கின்றனர்.

வங்கியில் பெற்றாலும், நிதி நிறுவனங்களில் பெற்றாலும், ஏன் நண்பர்களிடம் கைமாற்றாக வாங்கினாலும் கடன், கடன்தான். அக்கடனைப் பெறுவதும், பெற்றகடனை அடைப்பதும் பெரும் தலையிடியாகவே இருக்கும். எனினும், பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிவருகின்ற நிதி நிறுவனங்களில் சில, அம்மக்களையே ஆதாளபாதாளத்துக்குள் தள்ளிவிடுகின்றன.

இவ்வாறான நிறுவனங்களின் வலைக்குள், வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்கள் சிக்கிக்கொள்கின்றனர். தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு, அந்நிறுவனங்களின் வட்டிவீதமும் கெடுபிடிகளும் அதிகரித்துள்ளதாக கடன்பட்டோர் கூறுகின்றனர்.

நுண் நிதிக் கடன் (Micro credit)

‘நுண் நிதிக் கடன்’ என்பது சிறிய தொகையைக் கடனாக வழங்குவதிலிருந்து உருவாகி வந்த ஒரு முறைமையாகும். முறையாக வேலையில்லாத அல்லது வருடத்தில் ஒரு சில காலங்களுக்கு மட்டும் வேலையுள்ள ஏழை மக்களைச் சுயதொழிலில் ஈடுபடுவோராக உருவாக்குவது இதன் நோக்கம்.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இம்மக்களுக்கு, வழமையான நிதி அமைப்புகளான தனியார் மற்றும் அரச வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதற்குப் போதுமான கல்வி அறிவோ, அடகு வைப்பதற்கான அசையும்/ அசையாச் சொத்துக்களோ இருக்காது. அவ்வாறான நிலையில் இருக்கும் இம்மக்களுக்கும் நிதிச்சேவையைக் கொண்டு சேர்க்கும் திட்டங்களில் ஒன்றே இந்த ‘நுண் நிதிக் கடன்’ திட்டமாகும்.

இதனை, பங்களாதேஷ் நாடே, முதன்முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. வறுமையை ஒழிக்கும் திட்டமாகவே இது வடிவமைக்கப்பட்டு, பின்னர் நாடுகளுக்கிடையில் விரிவுபடுத்தப்பட்டது.

பங்களாதேஷின் கிரமீன் வங்கியானது, நுண் கடன் வழங்குவதில் சிறப்பான வெற்றியைப் பெற்று, அந்நாட்டில் ஏழைகளைச் சுயதொழிலில் ஈடுபடச் செய்து, வருமானத்துக்கு வழி செய்தது மட்டுமல்லாமல், வறுமையை ஒழித்துச் செல்வத்தைப் பெருக்கியும் உள்ளது.

ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரையில் வறுமையிலிருக்கும் மக்களுடைய பணத்தைப் பெரிய, பெரிய முதலாளிகள் சுரண்டித் தாங்கள் அனுபவிக்கின்ற ஒரு திட்டமாக இது மாறிவருவதாகக் கருதத் தோன்றுகின்றது. காரணம் அண்மைக்காலங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் இவற்றைச் சான்றுப்படுத்துகின்றன.

நுண் நிதிக் கடன்களைப் பெறும் பொருட்டு, உயர்ந்தளவு வட்டியினை அறவிடும் தனியார் நிதி நிறுவனங்களை நாடிய, அல்லது அந்நிறுவனங்களைச் சேர்ந்த முகவர்களின் பசப்பு வார்த்தைகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ள மக்கள், பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கடன் பிரச்சினையால் நாட்டின் பொருளாதாரமே ஆட்டங்கண்டு கொண்டிருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் உழைக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் 80 சதத்தைக் கடனாகச் செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளதென, நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

பொருளாதாரம் தொடர்பில் எந்த அரசியல்வாதி கருத்துத் தெரிவித்தாலும், அடுத்த வருடத்தில் மாத்திரம், 4.4 பில்லியன் டொலர்களை, கடன் தவணையாகச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில், கடந்த 3ஆம் திகதி வியாழக்கிழமை (03) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலே அவர் இதனைத் தெரிவிக்க, அன்றைய தினம், காலைவேளையிலே, அந்தத் துயரமான சம்பவமும் வவுனியா – புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் நடந்து முடிந்திருந்தது.

அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதான நாகேந்திரன் சுகந்தினி என்ற இளம் தாய், அவரது இரண்டரை வயது ஆண் குழந்தையுடன் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

நுண் நிதிக்கடன் வழங்கும் நிறுவனமொன்றில் பெற்ற கடன் தொடர்பில் கணவன் – மனைவிக்கிடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தையடுத்து, அத்தாய், தன் குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அறியமுடிகின்றது.

கிராமங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் நுண்நிதிக் கடன் திட்டத்தின் மூலம் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாது, இவ்வாறான முடிவுகளுக்கு, அப்பாவிப் பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர்.

யுத்த காலத்துக்குப் பின்னர் அதிகளவில் கிளைகளை அமைத்துள்ள நிதி நிறுவனங்களின் நுண்நிதிக் கடன் வழங்கும் திட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினால் வவுனியாவில், கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி, கண்டனப் பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

2014ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உற்பத்தியில் 42 சதவீத பங்களிப்பினை வழங்கும் மேல் மாகாணத்துடன் ஒப்பிடும் போது, மிகக்குறைவான 4 சதவீத பங்களிப்பினை வழங்கும் வட மாகாணத்திலுள்ள நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளதாகத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், நிதி நிறுவனங்கள், வடக்கு மக்களைத் திட்டமிட்டு சுரண்டுவதற்கான ஏற்பாடுகள் என்றும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

வடக்கில் மாத்திரமல்ல, கிழக்கு மாகாணத்திலும் இப்பிரச்சினை பாரியளவில் தலைவிரித்தாடுகின்றது.

சுயதொழிலுக்காகக் கடன்பெறுவதில் தப்பில்லை. அவ்வாறு பெற்றகடனை, எவ்விதமான வருமானமும் இன்றி ஆடம்பரமாகச் செலவுசெய்தால் அதில் எவ்விதமான பிரயோசனமும் இருக்காது.

கடன் பெறுவதற்கு முன்னர் திட்டமிட வேண்டும். வாழ்க்கையில் மேடு – பள்ளங்கள், இன்ப – துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றில் சிக்கிக்கொண்டு விழிபிதுங்கி நிற்பதைவிடவும், அல்லது உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு முடிவெடுப்பதை விடவும், ஆழம்பார்த்து காலை விடுவதே உகந்ததாகும்.

அது என்ன கடன்பட்டார் நெஞ்சம்? அதற்கு கம்பரின் கால கட்டத்தைப் பார்க்க வேண்டும். அப்போதெல்லாம் சோழ நாட்டில் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது, வாங்கிய கடனைக் கட்ட முடியாதவர்களைச் சுற்றி கடனளித்தவர் பொதுவிடத்தில் ஒரு வட்டம் வரைந்து விட்டுச் சென்றுவிடுவார். கடனைத் தரும்வரை அவர் அக்கட்டத்தை விட்டு வெளிவர இயலாது. அரசனாயிருந்தாலும் அதே கதிதான். ஆனால் ஒன்று, இது கடனைத் திருப்பிப் பெற எல்லா முயற்சிகளும் தோற்றபிறகே கடனளித்தவர் செய்யும் காரியமாகும்.

இந்த நிதி நிறுவனங்களும் இவ்வாறு மக்களை ஒரு வட்டத்துக்குள் சிக்கவைத்துக்கொண்டு, அவர்களை வாழ்க்கையில் எழும்பவிடாமல் கூடியவட்டி வீதத்தில் அடித்துக்கொண்டே இருக்கின்றன. அவைகுறித்து மக்கள் விழிப்பாக இருந்தால் நன்மைபயக்கும்.

கே. அமிர்தலிங்கம் (படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி)

‘மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்’

எல்லாப் பிரச்சினைகளுக்கும் வங்கிகளையும் கடன் வழங்கும் நிறுவனங்களையும், ஏனைய நுண் கடன் நிறுவனங்களையும் குற்றஞ்சாட்டுவதை விடவும், எதற்காகக் கடன்பெறுகின்றோம், அதனை திருப்பிச் செலுத்தமுடியுமா என்பது தொடர்பில் மக்கள் தெளிவாக இருந்தால் கடன்பெறுவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என்று கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் கே. அமிர்தலிங்கம் (Ph.D) தெரிவித்தார்.

நிதிநிறுவனங்கள், நுண் கடன் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களிடம் கடன்பெறும்போது, எவ்வாறான விடயங்களில் கவனஞ்செலுத்தவேண்டும் என்பது தொடர்பில் வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டும் கிட்டத்தட்ட 30 வருடகாலமாக யுத்தப்பிடிக்குள் இருந்தமையால், அங்குள்ள மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. கல்விநிலை பாதிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறான நடவடிக்கைகள் இவ்விரண்டு மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றன.

அவர்களின் தேவைகள் அதிகரித்துள்ளமையால் கேள்விகள் கூடுகின்றன. பிரச்சினைகளும் இருக்கின்றன. வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன, கொழும்பிலிருந்து பல்வேறான நிறுவனங்கள் படையெடுக்கின்றன.

ஏனைய மாகாணங்களைப் போல, இவ்விரு மாகாணங்களும் மேற்குறிப்பிட்ட 30 வருடகாலத்தில் வளர்ச்சியடைவில்லை. நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சியில் 42 சதவீதமான பங்களிப்பை மேல்மாகாணம் வழங்குகின்றது. வடமாகாணம் 4 சதவீதமான பங்களிப்பையும் கிழக்கு மாகாணம் 6 சதவீதமான பங்களிப்பையும் தேசிய பொருளாதாரத்துக்கு வழங்குகின்றன.

மேல்மாகாணத்தைப் பொறுத்தவரையில், ஒரு இலட்சம் பேருக்கு 24.4 சதவீத வங்கிக்கிளைகள் இருக்கின்றன. வடமாகாணத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 24.7 வங்கிக்கிளைகள் இருக்கின்றன. வடமாகாணத்தில் தேவைக்கு அதிகமான வங்கிகள் இருக்கின்றன.

இவ்விரு மாகாணங்களிலும் தேவைகள் அதிகரித்துள்ளன. ஆகையால், மக்கள் கடன்பெறும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில்தான், கடன் பெறுவதற்காக மக்கள், வங்கிகளையும் நுண்நிதி நிறுவனங்களையும் நாடுகின்றனர். வங்கிகளில் கெடுபிடிகள் அதிகம் என்பதனால், அவற்றிலிருந்து கடனைப் பெறுவது இலகுவானது அல்ல.

எனினும், நுண்நிதி நிறுவனங்கள் சிற்சில நிபந்தனைகளைத் தளர்த்தி, கடனை வழங்குகின்றன. என்றாலும், கடனைச் செலுத்தாதுவிடின் இறுக்கிப்பிடித்துக்கொள்கின்றன. இதனால், கடன்பெற்றோர் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர்.

பெற்றகடனை நுகர்வுக்குப் பயன்படுத்தினால், இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டும். எதற்காகக் கடன்பெறுகிறேன்? எதற்கு முதலிடப்போகிறேன்? திருப்பிச் செலுத்தும் ஆற்றல் இருக்கின்றதா என்பதனைப் பார்க்க வேண்டும். அப்படி இல்லாது பேராசையால் கடன்பெற்றால். கட்டாயமாக மக்கள் பாதிக்கப்படுவர்.

உதாரணமாக, பக்கத்து வீட்டுகாரர், தான் சேமித்த பணத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தால், அடுத்த வீட்டைச் சேர்ந்தவர் பாரிய தொகையைக் கடனாகப் பெற்று மோட்டார் சைக்கிளை வாங்குவார். இதனூடாக எவ்விதமான வருமானமும் இல்லை. செலவுகள் தான் அதிகமாகும். இறுதியில் கடனைப் பெற்றவர் சிக்கிக்கொள்வார்.

எல்லா விடயங்களிலும் நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்துவதை விடவும், கடன் பெறும் போது, மக்கள் தெளிவாக இருக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் தான் பெற்ற கடனை, உற்பத்திசார் மற்றும் வருமானத்தை ஈட்டக்கூடிய விதங்களில் முதலிட்டால் பிரச்சினை ஏற்படாது.

சிலநேரங்களில் விவசாயத்துக்காகக் கடனைப் பெற்று, இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுவிட்டுக்கூடும். எனினும், காப்புறுதி செய்திருந்தால் இவ்வாறான பிரச்சினைக்கு முகங்கொடுக்கவேண்டிய தேவையிருக்காது.

கடனைப் பெறுவதற்கு முன்னர், பல நிறுவனங்கள் தொடர்பில் தேடியறிந்து பார்த்தால், இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு குழுவாகச் சேர்ந்து இயங்கி, குழுவாகச் செயற்பட்டு கலந்தாலோசித்தால் பிரச்சினை ஏற்படாது என்றார்.

ச.சிவயோகநாதன் (படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ்)

‘வேலைவாய்ப்பை வழங்குங்கள்’

நிதி நிறுவனங்கள் பற்றி, மட்டக்களப்பு மாவட்ட அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வட்டிக்கு நுண் கடனை, மக்கள் பெறுவதை ஒரு பாரிய பிரச்சினையாக இனங்கண்டுள்ள, சிவில் சமூகப் பிரதிநிதிகள் அதிலிருந்து மக்களை மீட்பதற்காக ஒரு சில வேலைத்திட்டங்களைச் செய்துகொண்டிருக்கின்றனர்.

நுண் கடன் திட்டத்தின் ஊடாக நிறையப் பேர் அதிகமான வட்டிக்குக் அதிகமான பணத்தைப் பெற்றுக்கொண்டமையினால், அவற்றைத் திருப்பிக் கட்ட முடியாமையால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்கள் செல்வதும், அதிலிருந்து வரும் ஒரு முற்பணத்தைப் பெற்ற கடனுக்குத் திருப்பிக் கொடுத்ததும், அதன் பின்னர் குடும்பத்துக்குள் பிரச்சினைககள் ஏற்படுகின்றன. சமூகச் சீரழிவுகள் ஏற்படுகின்றன.

அத்துடன், ‘நுண்கடன் திட்டம் தொடர்பாக, எமது மாவட்டத்தில் ‘Micro credit concimeted protection forum’ என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கின்றோம். அரசாங்க அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டது. அந்த அடிப்படையில் நாங்கள் இதில் முதலில் அடக்கியது சமுர்த்தித் திட்டத்தை. சமுர்த்தித் திட்டம் பேணப்பட்டது, எவ்வளவு சேமிப்பு இருக்கின்றதோ, அந்தளவுக்கு வறுமை ஒழிக்கப்படுமென்று. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,500 மில்லியன் ரூபாய் சமுர்த்திப் பணம் சேமிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், ஒவ்வொரு தனிநபர் குடும்பங்களும் குறைந்தது, 3 நபர்களிடமாவது நுண் கடன்பட்டவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

சமுர்த்தி சேமிப்பும் அதிகரித்திருக்கின்றது. வறுமையும் அதிகரித்திருக்கின்றது. அப்ப இந்தத் திட்டத்தினால் என்ன பயன்?

நுண் கடன் வழங்கும் ஏனைய தனியார் நிறுவனங்கள், அதிக வட்டிக்குத் தென் பகுதியில் இருக்கும் சில அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் மூலமாகத்தான், அந்த வங்கிகள் இங்கே நடத்தப்படுகின்றன. இலகுவான முறையில் அதிக வட்டிகளான 25, 26 மற்றும் 29 சதவீதங்களுக்கு, இந்த நுண்கடன் திட்டம் வழங்கப்படுகின்றது.

நாங்கள் ஆரம்பித்துள்ள போரத்தில், நாங்கள் எடுத்த ஓர் இணக்கமான முடிவு, 15 – 16 சதவீத வட்டியைக் கொடுப்பதற்கு அநேகமான நிறுவனங்கள் இணக்கப்பாட்டுக்கு வந்தன. சிலர், அந்த அமர்வுக்குச் சமுகமளிக்கவுமில்லை. சமுர்த்திப் பணத்தை மிக எளிமையாகப் பெறுவது என்பது முடியாத காரியம். சமுர்த்தி 4 சதவீத வட்டிக்குக் கொடுக்கப்படுகின்ற பணம். ஆனால், அந்தப் பணத்தை மக்கள் பெற்றுக்கொள்வதென்பது மிகச் சிரமமான காரியமாக இருப்பதனால், அதை இலகுவான முறையில் மக்களுக்குக் கொண்டு செல்வதற்காகச் சிவில் அமைப்புக்கள் முயற்சிக்கின்றன.

மக்களுடைய இந்தச் சேமிப்புப் பணமான 2,500 மில்லியன் ரூபாயையும் பெரிய, பெரிய வங்கிகள்தான் தங்களுடைய தொழிலைச் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாங்கள் கூறுகின்றோம், தனியார் வங்கிக்கு இணையான வங்கியொன்றை ஆரம்பித்தால், அந்தச் சேமிப்பை மக்களூடாகப் பெற்று, அதிலிருந்து வரும் ஓரளவு நிதியைக்கொண்டு, ஏதாவதொரு தொழிற்சாலையைத் தொடங்கி, சமுர்த்திப் பயனாளர்களுக்கு வேலை வாய்ப்பினைக் கொடுத்தால் அந்த நிதி, மீள் சுழற்சியில் பயனுடையதாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீன்குழம்பும் மண்பானையும்…!!
Next post தாம்பத்திய உறவின்போது இந்த உணர்வு அதிகமாக ஏற்படுகிறதா? தீர்வு என்ன?