ஆவா குழுவின் தேவை யாருக்கானது? கட்டுரை

Read Time:15 Minute, 39 Second

article_1478751017-prujothஆவா குழுவோடு தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸாரினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில், தமிழ் அரசியல் கட்சியொன்றின் முன்னணி செயற்பாட்டாளர் ஒருவரும் அடக்கம்.

கடந்த மாதம் 20 ஆம் திகதி நள்ளிரவு யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டார்கள்.அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு முழுவதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த போது, கடந்த 23 ஆம் திகதி சுன்னாகம் பகுதியில் சிவில் உடையிலிருந்த பொலிஸார் இருவர் கும்பலொன்றின் வாள்வெட்டுக்கு இலக்கானார்கள். அந்த வாள்வெட்டுக்கு ‘அசுத்தங்கள் அகற்றப்படும்’ என்கிற தலைப்பில் ‘ஆவா குழு’ என்கிற பெயரோடு உரிமை கோரும் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதில், பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

‘ஆவா குழு’வின் பெயரோடு துண்டுப்பிரசுரம் வெளியாகிய சில நாட்களுக்குள்ளேயே ‘பிரபாகரன் படை’ என்கிற பெயரிலும் துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியிருந்தன. அந்தத் துண்டுப் பிரசுரங்களில், ‘வடக்கில் கடமையாற்றும் தமிழ்ப் பொலிஸார் அனைவரும் பதவி விலக வேண்டும் அல்லது இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும்’ என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

வடக்கு, கிழக்கில் இவ்வாறான துண்டுப் பிரசுரங்கள் வெளியாவது ஒன்றும் புதிதில்லை. கடந்த காலங்களிலும் பல்வேறு பெயர்களில் துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து சில கைதுகளும் இடம்பெற்றிருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் இறுதிக் காலங்களிலேயே ‘ஆவா குழு’ என்கிற பெயர் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடிதடி, கொள்ளை, கப்பம் கோருதல் உள்ளிட்ட குற்றச்செயல்களோடு ‘ஆவா குழு’ என்கிற அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு, அப்போதும் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னரான நாட்களில் ‘‘ஆவா குழு’ பற்றிய பேச்சுக்கள் அவ்வளவாக எழுந்திருக்கவில்லை. ‘ஆவாகுழு’வின் மீள் அறிமுகம், பொலிஸாரினால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே நிகழ்ந்திருக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபய ராஜபக்ஷவினாலேயே இராணுவப் புலனாய்வுத் தேவைகளுக்காக ‘ஆவா’ போன்று பல குழுக்கள் உருவாக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜிதசேனாரத்ன தெரிவித்திருக்கின்றார். ஆனால், ‘ஆவா’ குழுவின் பின்னணியில் இராணுவமோ, புலிகளோ, அரசியல் கட்சிகளோ இல்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மறுத்திருக்கின்றார். தேசிய சகவாழ்வு அமைச்சரான மனோ கணேசனோ, “கொழும்பில் பல குழுக்களை தங்கள் அரசியல்- இராணுவ தேவைகளுக்காக அமைத்துக் கொண்டு நடத்தியவர்கள் பற்றி எனக்கு தெரியாதா? வெள்ளை வான்களைக் கொண்டுஆட்கடத்தியதை கடத்தியவன் மறந்தாலும், கடத்தப்பட்டவன் மறந்தாலும், நான் மறக்கவில்லை. அந்தக் குழுக்கள்தான் பிற்காலத்தில் பாதாளக் கோஷ்டிகளாக ஆதிக்கம் செலுத்துகின்றன” என்று கோத்தபாய ராஜபக்ஷ பற்றியதன்னுடைய நிலைப்பாட்டினை வெளியிட்டிருக்கின்றார்.

‘ஆவா’ குழுவின் மீள் அறிமுகத்தின் பின்னால் சில விடயங்கள் திட்டமிடப்படுகின்றன; அல்லது, எதிர்பார்க்கப்படுகின்றன என்று கொள்ள வேண்டியிருக்கின்றது. 1. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை அடுத்து அரசாங்கக் கட்டமைப்பான பொலிஸார் மீது விழுந்திருக்கின்ற கறை மற்றும் அழுத்தத்தினை நீக்குதல். அதற்கு அந்தப் படுகொலைகளிலிருந்து ‘ஆவா’ குழுவின் பக்கம் மக்களை திசை திருப்புதல்.

2. ‘ஆவா’ போன்ற குற்றச்செயல்களோடும் வன்முறையோடும் சம்பந்தப்பட்ட குழுக்கள் வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் இயங்குகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு நிகரான சட்டமொன்றின் தேவையை சர்வதேசத்துக்கு தெரிவிப்பது. 3.‘ஆவா’ போன்ற குழுக்களின் உருவாக்கத்தின் பின்னணியின் முன்னாள் ஆட்சியாளர்களான மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷ போன்றோரே இருக்கின்றார்கள். மாறாக, இராணுவமோ, புலனாய்வுக் கட்டமைப்போ இல்லை என்று நிறுவுதல்.

இப்போது இன்னொரு விடயத்தினையும் பார்க்கலாம். ஆட்சி மாற்றத்தின் அவசியம் தென்னிலங்கைக்கு மாத்திரமில்லை, வடக்கு, கிழக்குக்கும் தேவைப்பட்டது. அதுதான், தமிழ், முஸ்லிம் மக்களைக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு, பெருமளவுக்கு வாக்களிக்கவும் வைத்தது. ஆனால், ஆட்சி மாற்றத்தின் தேவைக்கான காரணங்கள் தெற்குக்கும் வடக்குக்கும் கிழக்குக்கும் பெருமளவு ஒன்றாக இருந்தன என்று சொல்ல முடியாது. ஆனால், ஜனநாயக இடைவெளி பற்றிய அவசியம் இரு இடங்களிலும் ஒன்றாகவே இருந்தது. வடக்கு, கிழக்கில் குறிப்பாக தமிழ் அரசியல் சூழலில் ஆட்சி மாற்றம் சில நல்ல சமிஞ்ஞைகளைக் காட்டியிருகின்றது. அரசியல் போராட்டங்களை நோக்கி மக்களையும் மாணவர்களையும் குறிப்பிட்டளவில் மீண்டும் வரவைக்க முடிந்திருக்கின்றது. இன்னொரு பக்கம் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை வடக்கு, கிழக்குக்கு வரவழைத்து களத்தினை உணர்ந்து கொள்ளவும் அதன் போக்கில் போராடவும் வைக்கவும் உதவியிருக்கின்றது. அதுபோல, இன்னும் சில சிறிய விடயங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அவை பற்றி இன்னொரு தருணம் பார்க்கலாம்.

ஆனால், ஆட்சி மாற்றம் என்பது அரசாங்கத்தின் மாற்றம் என்பதே அடிப்படையான ஒன்று. அது, அரசாங்கக் கட்டமைப்பில் ஒட்டு மொத்தமாக மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமையை பெற்றிருக்கின்றது என்று கொள்ள வேண்டியதில்லை.தசாப்த காலமாக நீண்ட அரசாங்கமொன்று, அரச கட்டடைப்புக்குள் ஏற்படுத்திவிட்டிருக்கின்ற மாற்றங்களைப் புதிய அரசாங்கம் சடுதியாக மாற்றும் என்று எதிர்பார்க்க முடியாது; அப்படி மாற்றவும் முடியாது. அப்படிப்பட்ட நிலையில்,அரசாங்கக் கட்டமைப்புக்களில் குறிப்பாக, தேசிய பாதுகாப்பு என்கிற விடயத்தோடு சம்பந்தப்பட்ட இராணுவம் உள்ளிட்ட படைத்தரப்பினைக் கனதியான அழுத்தத்தோடு புதிய அரசாங்கம் கையாளும் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படிக் கையாள்வதற்கு அது அனுமதிக்கவும் செய்யாது. அது, பெரியளவில் முரண்டு பிடிக்கும். வடக்கில் காணி விடுவிப்பு விடயங்களில் அரசாங்கத்தின் வாக்குறுதிகள் காலம் தாழ்த்தப்படுவதற்கும், மீறப்படுவதற்கும் படைத்தரப்பின் பெரும் அழுத்தங்களும் முரண்டுபிடிக்கும் நிலைமையும் ‘ஒரு’ காரணம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

அதுபோல, பாதுகாப்புத் தரப்பு தன்னுடைய கைகளை சில இடங்களில் தற்போது கட்டிக் கொண்டிருக்கலாம். மாறாக, அது தன்னை ஒட்டுமொத்தமாக அடக்கி வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. அது, புலனாய்வுப்பணிகளையோ, மக்களிடம் ஆழ ஊடுருவி ஆற்றுகின்ற அதிர்வுகளையோ நிறுத்தும் என்று கொள்ள முடியாது.

இலங்கையின் தேசியப் பாதுகாப்புத் தரப்பு தன்னுடைய புலனாய்வுக் கட்டமைப்பினை 1990 களின் நடுப்படுதியில் புதிதாகக் கட்டியெழுப்பியது. இன்றைக்கு தெற்காசியாவில் மிகவும் முன்னணியில் இருக்கின்ற புலனாய்வுப் பிரிவுகளில்ஒன்றை இலங்கை கொண்டிருக்கின்றது. அது, தமிழீழ விடுதலைப் புலிகளை, புலிகள் எதிர்பார்த்த அளவிலும் பார்க்க அதிகமாக ஆழ ஊடுருவியிருந்தது. அதனை, இறுதிக் கட்டத்தில் புலிகளின் முக்கியஸ்தர்களே ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட புலனாய்வுக் கட்டமைப்பொன்று ஆட்சி மாற்றமொன்று நிகழ்த்துவிட்டது என்பதற்காக தன்னுடைய இருப்பினைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் என்று கொள்ள வேண்டியதில்லை. ஒருவகையில்அரசாங்கத்துக்கும் அந்தக் கட்டமைப்பினைச் சிறந்த முறையில் பேணுவதும் அவசியமானது. அப்படியான நிலையில், அந்தக் கட்டமைப்புக்கான ஒத்தாசைகளைப் புதிய அரசாங்கமும் வழங்கும். புலனாய்வுக் கட்டமைப்பொன்று தன்னுடைய நிகழ்ச்சி நிரலின் போக்கில் துணை ஆயுதக் குழுக்களையும் வன்முறையை ஏற்படுத்தும் தரப்புக்களையும் கட்டி வளர்த்து வருவது என்பது சர்வதேச ரீதியில் நிகழும் ஒன்றுதான். அதற்கு இலங்கை விதிவிலக்காக இருக்கும் என்று கொள்ள வேண்டியதில்லை. அப்படியான நிலையில், அவற்றைப் புரிந்து கொண்டு மிகவும் சீரியமான பார்வையோடு விடயங்களைக் கையாள வேண்டிய தேவையொன்றும் தமிழ்த் தரப்புக்கு இருக்கின்றது.

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்ததும் வடக்கில் வேறுவிதமாக வன்முறை, கொந்தளிப்புச் சூழல் கட்டம் கட்டமாக வளர்க்கப்பட்டது. வாள் வெட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. போதைப் பொருட்களின் கடத்தலும் பாவனையும் என்றைக்கும் இல்லாத அளவுக்கு ஊக்கப்படுத்தப்படுகின்றன. இப்படியான சூழ்நிலையில், இவற்றுக்குள் எந்தவித அடிப்படை அறிவற்ற இளைஞர்கள் சிலரும் சிக்கி சீரழிகின்றார்கள். அவர்கள், தாங்கள் மாத்திரமின்றி தங்களது சமூகத்தையும் ஒட்டுமொத்தமாகத் தோல்வியின் பக்கம் இழுத்துச் செல்கின்றார்கள். இவ்வாறான நிலை, தமிழ்த் தரப்பு சற்றுத் சுதாகரித்துக் கொண்டு மெல்ல மெல்ல மேல் எழ எத்தணிக்கின்ற எல்லாத் தருணங்களிலும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இலங்கை போன்றதொரு நாட்டில், ஒருவர் கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். காரணங்கள் இன்றி அல்லது கூறப்படாது கைது செய்யப்பட்டு காலங்காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள பலரையும் வரலாறு பதிந்து வருகின்றது. ‘ஆவா குழு’ என்று சந்தேகத்தில் கைதானாவர்களில் எத்தனை பேர் உண்மையில் குற்றவாளிகள் என்பதும் தெரியாது.

தமிழ்த் தேசியப் போராட்டத்தின் போக்கில் தொடர்ச்சியாக சதிவலைகளையும், தடைக்கற்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒட்டுமொத்தமாக உணர்ச்சிவசப்பட்டு சிக்கிக் கொள்ளாமல்,உணர்ச்சிவசப்படுகின்ற நிலைகளைக் கடந்தும் நிதானமாகவும் புத்திசாதுரியமாகவும் பயணிப்பதற்கான அடிப்படைகளைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும். அதுதான், தமிழ் மக்களை அவர்களின் உண்மையான அடைவுகளை நோக்கிமெல்ல நகர்த்திச் செல்லும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சபர்ணாவை தொடர்ந்து மேலும் ஒரு டிவி நடிகை பிணமாக மீட்பு…!!
Next post இருமலை போக்கும் பாட்டி வைத்தியம்…!!