கூட்டமைப்பை நோக்கி கூச்சல் எழுப்ப வேண்டிய தருணம் இதுவல்ல…!! கட்டுரை

Read Time:13 Minute, 2 Second

article_1479269787-prujothதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் மீண்டும் ஏமாற்றத்தைச் சந்தித்து நிற்கின்றன. கானல் வெளியை பெரும் நம்பிக்கையாகக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க நடந்தவர்கள் கொள்ளும் எரிச்சலுக்கு ஒப்பானது அந்த ஏமாற்றம். விளைவு, காட்டுக் கூச்சல்கள் எழுப்பப்படுகின்றன. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு மிகவும் அவசியமானதும் ஆரோக்கியமானதுமான கருத்துகளையும் விமர்சனங்களையும் வேண்டி நிற்கின்ற தருணத்திலேயே, இந்தக் கூச்சல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.

தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்நோக்கி வரும் அரசியல் பிரச்சினைகளுக்குப் பெறுமதியான (கனதியான) தீர்வினைப் புதிய அரசியலமைப்பின் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரும்பத் திரும்ப கூறி வருகின்றது. அது தொடர்பில் கருத்தியல் மற்றும் விமர்சன ரீதியாகத் தீர்க்கமாக ஆராய வேண்டிய தருணம் இது. ஆனால், அதற்கான ஆரம்ப உரையாடல்களையே காண முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பத்திரிகைகளில் பத்திகள் மாத்திரம் எழுதப்படுகின்றன. ஆரோக்கியமான குரல்கள் சில எழ எத்தனித்தாலும் தற்போது கோலொச்சும் கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் அந்தக் குரல்கள் கேட்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் கோரி நிற்பது போல மாற்றுத் தலைமையொன்றின் அவசியம் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் இருக்கின்றது என்பதை யாருமே மறுக்கவில்லை. ஆனால், அந்தத் தலைமையின் வருகை எவ்வாறு இருக்க வேண்டும்? அது, மக்களிடம் தீர்க்கமான நம்பிக்கைகளை முதலில் விதைக்க வேண்டும் இல்லையா? நடைமுறை சார் அரசியல் உலகில் அதன் போக்கில் சென்று விடயங்களைக் கையாளும் உத்தியைப் பெற்றிருக்க வேண்டும் இல்லையா? மாறாக, அரசியல் யதார்த்தத்தையும் அடிப்படைகளையும் மறந்து நீரில் மிதக்கும் எண்ணெய்ப் படலத்துக்கு ஒப்பான நிலையைக் கொண்டிருந்தால் மாத்திரம் போதுமானதா? எண்ணெய் படலங்களை ஒத்தவர்களை மாற்றுத் தலைமைகளாகக் கொள்வது யாரின் பின்னடைவு? அது, ஒட்டுமொத்தமாகத் தமிழ்த் தேசிய அரசியலை ஆரோக்கியமான பக்கத்துக்கு நகர்த்துவதிலிருந்து தடுக்கும் இல்லையா? இந்தக் கேள்விகளை எழுப்பாமல் அல்லது இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடாமல் மாற்றுத் தலைமை என்கிற வாதங்களை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. அல்லது, அந்தக் கேள்விகளுக்கு விடையாக வருகின்றவர் யாரோ, அவரையே மாற்றுத் தலைமையாகக் கொள்ள முடியும். ஆனால், அப்படியான ஒருவரை தமிழ்த் தேசியப் பரப்பினாலோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகளினாலோ இதுவரை அடையாளம் காண முடியவில்லை என்பதுதான் உண்மை. விரும்பியோ விரும்பாமலோ அதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் கோரிய மாற்றுத் தலைமை என்பது ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் ஈடு செய்யப்படும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டது. அது, பொய்த்துப் போன நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாற்றுத் தலைமையை ஏற்பார் என்கிற நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கையும் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் தன்னையொரு புரட்சிக்காரனாக முன்மொழிந்து கொண்டிருந்த தருணத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைக் கைவிட்டு, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புக்கள் அவரை மாற்றுத்தலைமையாக தூக்கிப் பிடிக்க ஆரம்பித்தன. அதற்கு, தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும் மெல்ல வலுச்சேர்த்ததாகக் கருதின. ஆனால், தமிழ் மக்கள் பேரவைக்கு மாற்றுத்தலைமையாக முன்வரும் தைரியமும் ஆளுமையும் கிடையாது என்று அரசியல் யதார்த்தம் உணர்ந்தவர்கள் கூறிக்கொண்டிருந்த போது மேற்கண்ட தரப்புக்கள் கேட்கவில்லை. மாறாக, புதிய நம்பிக்கைகளோடு தம்முடைய பயணத்தை கானல் வெளி என்று தெரியாமலேயே அதனை நோக்கி ஆரம்பித்தன. அதுவும், பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வில் குறிப்பிட்டளவான மக்கள் கலந்து கொண்டதும் கூட்டமைப்பின் தோல்வியாகவும் கருதிக் கொண்டன. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பின் ஆரோக்கியமான பக்கத்தினைத் திறப்பது தொடர்பிலான போக்கில் எழுக தமிழ் பேரணியைக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்ட போது, மேற்கண்ட தரப்புக்களும் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்தவர்களும் தங்களுடைய தனிப்பட்ட சாதனையாக எழுக தமிழ் எழுச்சியைக் காட்டிக் கொண்டார்கள்.

கடந்த மாதம் பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த சி.வி.விக்னேஸ்வரனிடம் கீழ் கண்டவாறு கேள்வியொன்று எழுப்பப்பட்டது. “இயக்கம் (விடுதலைப் புலிகள்) இருந்த காலத்தில் சமஷ்டியைத் தருவதாகக் கூறிய ரணில், இன்றைக்கு அதைத்தர முடியாது என்கிறார். தமிழ் மக்களுக்கு தனிநாட்டினைக் (பிரிவினையைக்) கோருவதற்கு எல்லா உரித்தும் இருக்கின்றது. அதனை நாங்கள் வெளிப்படையாகக் கூற வேண்டும். பிரிவினையைக் கோருவது தவறு என்று நாங்களே மக்களிடம் கூறக்கூடாது. அதுவும், புதிய அரசியலமைப்பு நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிந்து செல்வதற்கான ஏதுகைகள் பற்றிப் பலமாகக் கூற வேண்டும். ஏன் நாங்கள் அதனைச் செய்யாமல் இருக்கிறோம்?”

அதற்கு சற்று எரிச்சலான தொனியில், “2013, வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் விஞ்ஞாபனமொன்று மக்களிடம் முன்வைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே எங்களுடைய விடயங்களை முன்னெடுத்துச் செல்கின்றோம். பிரிவினைக்கு எங்களுக்கு உரித்திருக்கின்றது; பிரிவினை வேண்டும் என்கிற கருத்து அதிலே சொல்லப்படவில்லை. தாயகம், சுயநிர்ணய உரிமை இவற்றுக்கான உரித்து எங்களுக்கு இருக்கின்றது என்பதையும் அதன் காரணத்தினால் ஒரு சமஷ்டித் தீர்வை நாங்கள் வேண்டுகிறோம் என்பதையுமே அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்திருக்கின்றோம்.

அதனை முன்னெடுத்துச் செல்வதே எங்களுடைய கடமை. ஆகவே, இதற்கு அப்பால் சென்று நீங்கள் சில விடயங்களைக் கூறுவதானால், தயவு செய்து நீங்களே எங்களுடைய நாட்டுக்கு வந்து ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்து உங்களுடைய கருத்துக்களை மக்களிடம் கூறி, அவர்களிடமிருந்து உரிமையைப் பெற்றுக் கொண்டு எங்களுக்கு நாடு பிரிவுபட வேண்டும் என்று கேளுங்கள்” என்று சி.வி. விக்னேஸ்வரன் பதிலளித்தார். கிட்டத்தட்ட அவர், கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளையே தன்னுடைய மொழியில் கூறியிருந்தார். அவற்றை அவரின் உரை, கேள்வி பதில் பகுதி மற்றும் தொலைக்காட்சி நேர்காணல் ஆகியவற்றில் காண முடிந்தது. இதனையடுத்து, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.

அதுபோல, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகை அறிமுக விழாவில் இரா.சம்பந்தன் முன்னிலையில் உரையாற்றிய சி.வி.விக்னேஸ்வரன், தனக்கு எந்தவொரு தருணத்திலும் கூட்டமைப்பினைப் பிளவுபடுத்தும் எண்ணம் இருக்கவில்லை என்றார். கிட்டத்தட்ட அவர் மீண்டும் மீண்டும் இரா.சம்பந்தனின் தலைமையை தான் ஏற்றது தொடர்பில் மதிப்படைவது மாதிரியாகக் கூறிக்கொண்டிருந்தார். அது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் நடந்து கொண்டமைக்கான மன்னிப்புக் கோரல் போன்றும் இருந்தது. அதனை, இரா.சம்பந்தன் மிகவும் இயல்பாக ஏற்றுக் கடந்து சென்றார்.

இவ்வாறான நிலையில், தங்களில் எரிச்சலை எவ்வாறு காட்டுவது என்று தெரியாமல் தவிக்கும் மேற்கண்ட தரப்புக்கள், மிக முக்கியமான கட்டத்தில் அவை பற்றிப் பேசுவதைத் தவிர்த்து, எது நடந்தாலும் அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கை காட்டி கூச்சல் இடுவதே அரசியல் என்று நம்பிக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. மட்டக்களப்பில் பௌத்த பிக்கு காட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் அடிதடி குற்றச்சாட்டில் யாரையாவது கைது செய்தாலும் அதற்கும் கூட்டமைப்புத்தான் காரணம் என்பது போலவும் கூச்சலிடுகின்றன.

எந்தவித வரைமுறையும் இன்றிக் கூட்டமைப்பு பதவி விலக வேண்டும் என்கிற கோசமும் துரோகிகள் கோசமும் முன்வைக்கப்படுகின்றன. அவற்றினால் என்ன பயன் என்று தெரியவில்லை? தற்போது, கூச்சல்களை எழுப்பிக் குழப்புவதை விடுத்து, அரசியல்த் தீர்வு பற்றிக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள நம்பிக்கை மற்றும் அது சார்பிலான இடைக்கால அறிக்கையை எதிர்கொள்வதுதான் தமிழ்த் தேசிய அரசியலின் தேவை. முதலில் அதற்குத் தயாராக வேண்டும். மாறாக, அவை கடந்து சென்றபின் அழுது புலம்பிப் பயனில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் அழகு ரகசியம் நல்ல உணவு – உடற்பயிற்சிகள்: அனுஷ்கா…!!
Next post கள்ளக்காதலனுடன் சுற்றும் மனைவியை பிடிக்க ஆளில்லா விமானம்: கணவர் நூதன ஏற்பாடு…!! வீடியோ