17 வயதில் திருமணம்.. 18-ல் தாய்.. 20-ல் விதவை…!!

Read Time:15 Minute, 49 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1அவள் பள்ளி மாணவி. 14 வயது. அவளுக்கு திடீரென்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவசரமாக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. மாணவிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால் அவள், சக 9-ம் வகுப்பு மாணவிகளோடு தனது கவலையை பகிர்ந்துகொள்ள, அந்த மாணவிகளில் ஒருத்தி உடனே ராதாவுக்கு தகவல் தெரிவித்தாள்.

ராதா அந்த மாணவியின் தாயாரை சந்திக்க சென்றார். அந்த ஏழை பெண், தனது ஒரே மகளோடு வாடகை வீட்டில் குடியிருந்தார். வீடு வீடாக சென்று நேரங்காலம் பார்க்காமல் பணிபுரிவது அவர் வேலை. கணவர் உயிருடன் இல்லை.

‘இந்த இளம் வயதிலே உங்கள் மகளுக்கு ஏன் திருமணம் செய்துவைக்க முயற்சிக்கிறீர்கள்?’ என்று ராதா, அவரிடம் கேட்ட போது, ‘பள்ளியில் படிக்கிற வயதில் இவளுக்கு திருமணம் செய்துவைத்துவிடவேண்டும் என்பது என் ஆசை அல்ல. ஆனால் இவள் மாலையில் பள்ளி முடிந்து திரும்பி வரும்போது நான் ஏதாவது ஒரு வீட்டில் வேலை செய்துகொண்டிருப்பேன்.

வீட்டில் தனியாக இவள் இருப்பாள். பாதுகாப்பில்லை. இப்போ சின்ன பொண்ணுங்களே காதல் வசப்படுது. யாருடனாவது ஓடிப்போயிடுது. அந்த மாதிரி ஏதாவது நடந்திடக்கூடாதேன்னு பயந்துதான் என் பாரத்தை இறக்கிக்கொள்ள இவளை இப்பவே கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறேன்’ என்று, தாய் தன்னிலை விளக்கம் அளித்தார்.

‘உங்கள் மகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறேன். படிக்கவும் ஏற்பாடு செய்கிறேன். அவளால் உங்களுக்கு எந்த அவப்பெயரும் ஏற்படாது என்று நான் உறுதியளிக்கிறேன்.

நீங்கள் திருமணத்தை ரத்து செய்துவிடுவீர்களா?’ என்று ராதா கேட்டார். தாயார் மகிழ்ச்சியோடு திருமணத்தை ரத்து செய்ய முன்வந்தார். பின்பு வரன் வீட்டில் உண்மை நிலை எடுத்துரைக்கப்பட்டது. அவர்களும் ஏற்றுக்கொள்ள, திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படு கிறது. அதிகாரிகள் முன்னிலையில் இவை அனைத்தும் அரங்கேறியது.

இப்போது அந்த மாணவி, ராதாவின் ஏற்பாட்டில் விடுதி ஒன்றில் தங்கி, 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். நன்றாக படிக் கிறாள். ‘என் மகளுக்கு அப்போதே திருமணம் நடந்திருந்தால் அவள் இப்போது வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்க்கும் பரிதாப நிலைக்கு ஆளாகியிருப்பாள்.

அவளை படிக்கவைத்து அவளது எதிர்காலத்தை பிரகாசமாக்கிவிட்டீர்கள்’ என்று தாயார் இப்போது ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

இப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளின் திருமணங்களை அதிகாரிகள் துணையோடு அதிரடியாக தடுத்து நிறுத்தி, அவர்களை கல்லூரி மாணவிகளாகவும், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்பவர்களாகவும் உருவாக்கியிருக்கிறார், ராதா.

இவருக்கு 32 வயது. சமூகவியலில் எம்.ஏ. படித்திருக்கிறார். யுனிசெப் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தையும், தேடிப்போய் உதவியதில் மக்களிடம் இருந்து கிடைத்த வாழ்வியல் அனுபவங்களையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு ஓடியாடி மக் களுக்காக சேவைசெய்துகொண்டிருக்கிறார். இவர் திருமண மாகாதவர்.

“என்னைப் பற்றி பேசுவதைவிட சமூகத்தை பற்றி பேசத்தான் நிறைய விஷயங்கள் இருக்கின்றன” என்றபடி ராதா நம்மிடம் கலந்துரையாடத் தொடங்குகிறார்.

“இளந்திருமணங்களை தடுத்து நிறுத்தியதில் எனக்கு கிடைத்திருக்கும் அனுபவங்களின்படி பார்த்தால், எந்த தாயும் தனது மகளுக்கு சிறுவயதிலே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று விரும்புவ தில்லை.

ஆனால் இன்று மாணவிகளுக்கு காதலுக்கும்- இனக்கவர்ச்சிக்கும் உள்ள வேறுபாடு தெரிய வில்லை. அவர்கள் கையில் இருக்கும் ‘செல்போன்’ மூலம் எந்த நேரத்தில் எந்த விபரீதமும் ஏற்படலாம். ஓடிப்போய்விடலாம். வேறு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம் தாய்மார்களை ஆட்டிப்படைக்கிறது.

ஓடிப்போகும் முன்பே யார் கையிலாவது அவர்களை பிடித்து ஒப்படைத்துவிடலாம் என்ற எண்ணத்திலே சிறுவயதில் திருமணம் செய்துவைக்க விரும்புகிறார்கள். பெற்றோர்கள், தங்கள் மகள்கள் மீது அவநம்பிக்கைகொள்ளக்கூடாது. மகள்களும் தங்கள் நடத்தை மூலம் பெற்றோருக்கு

தேவையற்ற எதிலும் கவனத்தை செலுத்தமாட்டோம் என்பதை உணர்த்தவேண்டும்” என்ற வேண்டுகோளை ராதா முன்வைக்கிறார். இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி- கல்லூரி- சமூக அமைப்புகளில் செய்துகொண்டிருக்கிறார்.

பெண்களை விழிப்புணர்வுமிக்கவர்களாகவும், சமூகசேவகர்களாகவும் ஆக்கும் ராதாவின் அனுபவங்கள் வித்தியாசமானவை!

“நான் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பாதர்புரா என்ற கிராமத்தில் பிறந்தேன். அது கர்நாடக மாநில எல்லை. எனது தந்தை ஈரப்பா, விவசாயி. தாய் லட்சுமம்மா. என்னுடன் பிறந்தவர்களுக்கு திருமணமாகிவிட்டது. முதலில் கர்நாடகாவில் வசித்த நாங்கள் பின்பு, ஓசூர் வந்து விட்டோம்.

நாங்கள் வாழ்ந்த பகுதியில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டார்கள். 10-ம் வகுப்பு படிப்பையே பெரிய படிப்பாக பேசுவார்கள். 16 வயதிலேயே மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடக்கும். 17 வயதில் திருமணம். 18 வயதில் ஒரு குழந்தைக்கு தாயாகிவிடுவாள்.

இப்படி பெண்களுக்கும், பெண்மைக்கும் எதிரான போக்குகள் அங்கு அதிகம். அதனால் பல பெண்கள் 20 வயதிலேயே விதவைகளாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதை பார்த்து எனக்குள் மிகப்பெரிய மனமாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையை மாற்றவேண்டும் என்றும், பெண்கள் தொடர்ந்து படிக்க உதவவேண்டும் என்றும் விரும்பினேன்.

இந்த நிலையில் நான் பத்தாம் வகுப்பை முடித்தேன். உடனே ‘படித்ததுபோதும். திருமணம் செய்து கொடுத்துவிடப்போகிறோம்’ என்று என் பெற்றோர் சொன்னார்கள். நான் எதிர்த்தேன். எனது பிடிவாதத்தால் என்னை தொடர்ந்து படிக்க அனுமதித்தார்கள். முதுகலை பட்டப்படிப்பு வரை படித்து முடித்தேன். அதற்குள் எனக்கு எவ்வளவோ அனுபவங்கள் கிடைத்தன.

2006-ம் ஆண்டு முதல் என்னை முழுமையாக இந்த சமூக சேவைப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டேன். இளம்வயது திரு மணங்களை தடுத்தல், பள்ளியில் இடைநின்ற மாணவிகளை மீண்டும் படிப்பை தொடர வைத்தல், ஆதரவற்ற முதியவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தல்- பின்னர் அவர்களின் உறவினர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைத்தல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளித்தல், பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களை மீட்டு மறுவாழ்வு அளித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறேன்.

இதுவரை 20 இளவயது திருமணங்களை தடுத்து நிறுத்தி உள்ளேன். அன்று சிறுமிகளாக இருந்த அவர்கள், இன்று கல்லூரிகளில் படித்து பெங்களூரு போன்ற பெருநகரங்களில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து, அவர்களது குடும்பத்தையே காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக குடும்ப சூழலால் படிக்காமல் இருந்த 46 குழந்தைகளை மீட்டு, சமூக ஆர்வலர்கள், சேவை மனப்பான்மை கொண்டவர்களின் உதவியுடன் படிக்க வைத்து வருகிறேன். ஆதரவற்ற 70 முதியவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று தங்களின் மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ் கிறார்கள்.

முன்பெல்லாம் ஐம்பது ஆண்டுகளை கடந்தும், பல தம்பதிகள் மனதொத்து ஒன்றாக வாழ்ந்தார்கள். இன்றோ திருமணமான சில நாட்களிலேயே பிரிந்து விடுகிறார்கள். அவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு வந்து ஒருவரை இன்னொருவர் குற்றஞ்சாட்டுகிறார்கள். அப்படிப்பட்ட தம்பதிகள் பிரச்சினைகளோடு வரும்போது போலீஸ் நிலையங்களில் இருந்து எனக்கு தகவல் கொடுப்பார்கள்.

அந்த இளந்தம்பதிகளை சந்தித்து, கவுன்சலிங் கொடுத்து அவர்களை சேர்த்துவைக்கிறேன். ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்துகூட பல பெண்கள், கணவரை பிரிந்து தமிழகம் வந்து விடுகிறார்கள். அவர்களுக்கு யதார்த்த வாழ்க்கையை புரியவைத்து, அவரவர் குடும்பங் களில் கொண்டு போய் சேர்க்கிறேன். எனக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் தெரியும். அதனால் சாதாரண பெண்களிடமும் எளிதாக தொடர்புகொள்ள முடிகிறது.

எனது சமூக பணியில், மனநலம் பாதிக்கப்பட்ட 8 பெண்கள் பெற்றெடுத்த குழந்தைகளை தமிழக அரசின் சிறப்பு மிகுந்த தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்த்து இருக்கிறேன். கூட்டு குடும்பமாக வாழ வலியுறுத்தும் நான் பிறருக்கு முன் உதாரணமாக இருந்திட வேண்டும் என்பதற்காக எனது தாய், தந்தை, தாத்தா- பாட்டிகளுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறேன்” என்று கூறும் சமூக சேவகி ராதா, ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சென்று விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். அதில் கிடைக்கும் பணத்தையும் தமது சேவை பணிகளுக்கு செலவிடுகிறார்.

“இப்போது மக்களிடம் சமூக அக்கறை அதிகரித்து வருகிறது. அதனால் ஆதரவற்றோருக்கு உதவுவதை தங்கள் கடமையாக நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உதவி செய்ய முன்வரும்போது அவர்களிடம் நான் பணத்தை வாங்குவதில்லை. தேவைப்படுகிறவர்களுக்கு அவர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கச்செய்துவிடுவேன். ‘ஆராதனா சோஷியல் சர்வீஸ் அண்ட் ஸ்கில் டெவலப்மெண்ட் டிரஸ்ட்’ என்ற அமைப்பை நிறுவி ஆதரவற்ற பெண்களுக்கு தொழில் பயிற்சியும் கொடுத்துவருகிறேன். எனது பணிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும், காவல்துறையும், அதி காரிகளும் உதவிவருகிறார்கள்” என்கிறார். இவரது சேவையை பல்வேறு சமூக அமைப்புகள் பாராட்டி கவுரவித்துள்ளன.

ராதா இளம் பெண்களுக்கு வைக்கும் வேண்டுகோள் வித்தியாசமானதாக இருக்கிறது.

“நான் சிறுவயதில் இருந்தே எதற்கும் பயப்படமாட்டேன். என் முன்னால் யாருக்கு என்ன அநீதி ஏற்பட்டாலும் உடனே தட்டிக்கேட்பேன். அந்த குணம்தான் என்னை சமூகசேவகியாக்கி யிருக்கிறது. இளம் பெண்களும் அதுபோல் தட்டிக்கேட்கும் தன்னம்பிக்கையோடு வாழவேண்டும்.

ஒவ்வொருவரும் சொந்த காலில் நிற்கும் அளவுக்கு கல்வி அறிவை பெறவேண்டும். ஒழுக்கமான, தைரியமான வாழ்க்கை வாழவேண்டும். எதிர்மறையான எண்ணங்களை களைந்து, நேர்மறையான சக்தியை மேம்படுத்தி விழிப்புடன் செயல்படவேண்டும். நிறைய பெண்கள் சமூக சேவையில் ஈடுபடவேண்டும். ஒவ்வொரு தெருவிலும் இப்படி சமூக சேவகிகள் உருவானால் நாட்டில் பிரச்சினைகள் குறைந்துவிடும். அனைவரும் சமத்துவத்துடன் வாழலாம்” என்கிறார்.

இவரைப் போல் நிறைய சமூகசேவகிகள் உருவாகட்டும்!

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியின் ‘2.ஓ’ பர்ஸ்ட் லுக் வெளியானது : 3டியில் தீபாவளிக்கு படம் வெளியாகிறது…!!
Next post ஆண்களின் இன்பம் குறித்து சில தகவல்கள்….!!