முஸ்லிம் ஆயுதக்குழு கதைகளின் வரலாறு…!! கட்டுரை

Read Time:24 Minute, 28 Second

article_1479829797-aubeசில மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டு இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்றழைக்கப்படும் கொடூர பயங்கரவாத அமைப்புடன் சேர்வதற்காக இலங்கையிலிருந்து 36 பேர் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி கடந்த ஜனவரி மாதம் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

அவ்வியக்கத்தில் சேர்வதற்காக இலங்கையிலிருந்து நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகக் கடந்த வாரம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் கூறினார்.

முப்பத்து ஆறு ஒன்பது மாதங்களுக்குள் முப்பத்து இரண்டாகியது எவ்வாறு? அவர் எந்த அடிப்படையில் 36 என்றார்? இவர் எதனை ஆதாரமாக வைத்து 32 என்கிறார்? புலனாய்வுத் துறையினரின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அரசாங்க அதிகாரிகளும் அமைச்சர்களும் இது போன்றதோர் விடயத்தைப் பற்றிக் கருத்து வெளியிடுவார்கள். இருவரும் அவ்வாறு புலனாய்வுத் துறையினரின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கருத்து வெளியிட்டு இருந்தால், அவர்கள் தரும் தகவல்கள் வித்தியாசப்படுவது எவ்வாறு என்பது விளங்கவில்லை.

அமைச்சரின் உரையைப் பற்றிப் பொது பல சேனா மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறது. முஸ்லிம்கள் விடயத்தில் தாம் கூறிய பல கருத்துக்களையே அமைச்சரும் கூறுகிறார் என, அவ்வமைப்பின் முக்கியஸ்தரான டிலந்த வித்தானகே கூறியிருக்கிறார். பொது பல சேனா இலங்கையில் சமயப் பணிகளிலும் சமுகப் பணிகளிலும் ஈடுபடும் முஸ்லிம் அமைப்புக்களைப் பயங்கரவாத அமைப்புகளாகச் சித்தரிக்கிறது. அமைச்சரும் நான்கு முஸ்லிம் அமைப்புகளைத் தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்திக் கருத்து வெளியிட்டு இருக்கிறார்.

பொது பல சேனாவும் முஸ்லிம்களின் கல்வி நிலையங்களைத் தீவிரவாதிகளை உருவாக்கும் பாசறைகளாகச் சித்தரிக்கிறது. அமைச்சரும் சில முஸ்லிம் சர்வதேச பாடசாலைகளில் தீவிரவாதம் கற்பிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இதனைத்தான் டிலந்த வித்தானகே சுட்டிக் காட்டுகிறார் போலும்.

சில வாரங்களாகப் பொது பல சேனா உட்பட சில பெரும்பான்மையினத் தீவிரவாதக் குழுக்கள் மீண்டும் தலைதூக்கி வருகின்றன. மீண்டும் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமை கண்டியில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் வரப்போகும் மோசமான நிலைமையை கோடிட்டுக் காட்டுகிறது. திடீர் என அவர்கள் தலைதூக்குவதற்குக் காரணம் இன்னமும் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. எவ்வாறாயினும் இது போன்றதோர் நிலைமையில் அமைச்சரின் உரை நிகழ்த்தப்பட்டு இருந்தமை குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் கவலை தெரிவித்து இருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த அமைப்புகளுக்கு அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதாகத் தெரியவந்திருந்தது. பொதுபல சேனாவின் அலுவலகம் ஒன்று தென் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட போது, அதன் பிரதம அதிதியாக அப்போதைய பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷவே கலந்து கொண்டார். முஸ்லிம்களுக்கு எதிராகப் பகிரங்கமாக வன்முறையைத் தூண்டிய பெரும்பான்மை இனத்தவர்களுக்கு எதிராக அப்போது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அது போன்றதோர் நிலைமை தற்போதும் உருவாகி வருகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சில தனி நபர்களும் அமைப்புகளும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் சீண்டி வருகின்றனர். முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் அவ்வாறானதோர் நிலைமை வளர்ந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. சிலவேளை, இது அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள்ளாக்கும் திட்டமாகவும் இருக்கலாம். சிலவேளை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டமாகவும் இருக்கலாம்.

அமைச்சரும் பாதுகாப்புச் செயலாளரும் சில இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ் அமைப்புடன் சேர்ந்திருப்பதாகக் கூறுவதும், அத்துடன் அமைச்சர் முஸ்லிம் சர்வதேசப் பாடசாலைகளில் வெளிநாட்டவர்களால் தீவிரவாதம் கற்பிக்கப்படுவதாகக் கூறியதும் சிங்கள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கும். விந்தை என்னவென்றால், “அவ்வாறு முஸ்லிம் சர்வதேச பாடசாலைகளில் தீவிரவாதம் கற்பிக்கப்படுவதாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களை நாடு கடத்துங்கள்” என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் போன்ற முஸ்லிம் அமைப்புகளே அரசாங்கத்திடம் கோருகின்றன. எந்தவொரு பெரும்பான்மைத் தீவிரவாத அமைப்பும் அவ்வாறு கோரவில்லை. சிலவேளை இது வழமையான பல்லவி தான் என்று அவர்களே முடிவு செய்து அவ்வாறு கோராமல் இருக்கிறார்கள் போலும்.

இலங்கையில கலேவேலையைச் சேர்ந்த
எம்.எம்.எஸ். நிலாம் என்பவர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து போரில் ஈடுபட்டு இருந்த வேளை, கடந்த வருடம் சிரியாவில் மேற்கத்திய கூட்டுப் படையினரின் விமானத் தாக்குதலில் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. எனவே, இலங்கை முஸ்லிம்கள் எவரும் ஐ.எஸ் அமைப்பில் சேரவில்லை எனக் கூற முடியாது.

ஆனால், பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஐ.எஸ் அமைப்பு வரவேற்பைப் பெற்ற அமைப்பொன்றல்ல. ஜம்இய்யதுல் உலமா போன்ற நாட்டின் பிரதான முஸ்லிம் அமைப்புக்கள், ஐ.எஸ் அமைப்பானது இஸ்லாத்துக்கு முரணாகச் செயற்படும் அமைப்பாகவே ஏற்றுக் கொண்டுள்ளன.

ஆனால், இலங்கை முஸ்லிம்களில் ஒருவராவது ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்தால் அதனைப் பாவித்து சில முஸ்லிம் விரோத சக்திகள் நாட்டில் முழு முஸ்லிம் சமூகத்தையே பயங்கரவாதிகளாகச் சித்தரிக்க முற்படுகின்றன; ஏற்கெனவே, முற்பட்டும் உள்ளன.

கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் அவ்வாறு உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எவ்வித ஆயுதக் குழுக்களுடனும் தொடர்பு வைத்திருக்காத நிலையிலும் அவர்கள் மீது பயங்கரவாதச் சாயத்தைப் பூச பல சக்திகள் முயன்றுள்ளன. இது 1980 களின் நடுப் பகுதியிலிருந்தே காணக்கூடிய நிலைமையாகும். அவ்வாறு இருக்க, இலங்கையில் ஒருவராவது ஐ.எஸ்ஸில் இணைந்தால் அது அந்தச் சக்திகளுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும் என்பது தெளிவான விடயமாகும்.

முஸ்லிம்கள் மத்தியில் ஆயுதம் தரித்த தீவிரவாத அமைப்புக்கள் இருக்கின்றன என்ற கருத்தை, 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இருந்தே ஒன்றில் தமிழ் அமைப்புக்கள் அல்லது சிங்கள அமைப்புக்கள் கூறி வந்துள்ளன. 1985 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் சில முஸ்லிம் பிரதேசங்கள் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகின. கல்முனைக்குடி, சாய்ந்தமருது மற்றும் மருதமுனை போன்ற பகுதிகளில் இரண்டு நாட்களில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 500க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

அதன் பின்னர், ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் அரசாங்கம், முஸ்லிம் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காகவென முஸ்லிம் இளைஞர்களை ஊர்காவல் படையில் சேர்த்தது. இதனை ரெலோ, ஈ.என்.டி.எல்.எப் போன்ற தமிழ் அமைப்புகள் எதிர்த்தன. அண்மைக் கால வரலாற்றில் முஸ்லிம்கள் தனிக் குழுவாக ஆயுதம் தரித்திருந்தால் அது இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமே. அதுவும் அந்தந்தப் பிரதேச பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் மட்டுமே.

ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் அரசாங்கத்தில் நிதி இராஜாங்க அமைச்சராகவிருந்த விமல் விக்கிரமசிங்க, பிற்கலத்தில் ‘ஜனஹண்ட’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். ஒரு முறை அந்தப் பத்திரிகையில் இலங்கையில் ‘தப்லீக்’ என்ற பெயரில் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பொன்று இயங்குவதாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இந்த இயக்கம் நாட்டில் பல இடங்களுக்குச் சென்று அங்கத்தினர்களைத் திரட்டுவதாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

‘தப்லீக்’ என்பது பல தசாப்தங்களாக நிரந்தர உறுப்பினர்கள் இல்லாது முடிந்தவர்கள் விரும்பினால் பங்களிப்புச் செய்யும் சமயப் பிரசார இயக்கம் ஒன்றே தவிரத் தீவிரவாத இயக்கம் ஒன்றல்ல என்பதால் முஸ்லிம் தலைவர்கள் அந்தப் பத்திரிகைக்கு இந்த விடயம் தொடர்பாக எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தப் பத்திரிகையும் தமது கட்டுரையின் உள்ளடக்கத்தை நிரூபிக்க முடியாததால் மௌனம் காத்தது. அத்தோடு அந்த விடயம் முடிவடைந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், அமைச்சர் ராஜபக்ஷவும் தீவிரவாத அமைப்பொன்றான தப்லீக் ஜமாஅத்தை குறிப்பிட்டுள்ளார். இடைப்பட்ட காலத்திலும் தப்லீக் இயக்கம் இயங்கியது, அக்காலகட்டத்தில் எவரும் அதனைத் தீவிரவாத அமைப்பாகக் காணவில்லை.

அதேகால கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் ‘ஜிஹாத்’ என்ற பெயரில் ஒரு முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு இயங்குவதாகவும் நாட்டைப் பிரித்துக் கிழக்கு மாகாணத்தில் தனி முஸ்லிம் நாடொன்றை உருவாக்கிக் கொள்வதே அவர்களது நோக்கம் எனவும் சிங்களப் பத்திரிகைகளில் செய்திகளும் கட்டுரைகளும் வெளியாகின. இந்த அமைப்புக்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நிதி உதவி கிடைப்பதாகச் சில பத்திரிகைகள் கூற, அவ்வமைப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வேறு சில பத்திரிகைகள் கூறின.

இவ்வாறு, ‘ஜிஹாத்’ அமைப்பொன்றைப் பற்றிச் செய்தி வெளியிட்டுக் கொண்டு இருந்த இந்தப் பத்திரிகைகள் சில வாரங்களில் அதனை மறந்து விட்டன. இயங்குவதாகக் கூறப்பட்ட இந்த இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்படவும் இல்லை; ‘ஜிஹாத்’ அமைப்பு ஏதாவது தாக்குதலை நடத்தியதாகவோ அல்லது வேறு ஏதாவது சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவோ செய்திகள் வெளியாகவும் இல்லை.

சில வருடங்கள் சென்ற பின், 1990 களின் இறுதிப் பகுதியில் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் ‘ஜிஹாத்’ என்ற பெயரில் ஒரு முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு இயங்குவதாகவும் நாட்டைப் பிரித்துக் கிழக்கு மாகாணத்தில் தனி முஸ்லிம் நாடொன்றை உருவாக்கிக் கொள்வதே அவர்களது நோக்கம் எனவும், ஏதோ புதிய கண்டுபிடிப்பைப் போல், சிங்களப் பத்திரிகைகளில் செய்திகளும் கட்டுரைகளும் வெளியாகின.

கிழக்கு மாகாணத்தில் சில அரசாங்க அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து ‘ஜிஹாத்’ அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டு, கையினால் எழுதப்பட்ட சில கடிதங்களின் படங்களும் அச்செய்திகளுடன் பிரசுரிக்கப்பட்டன. ஆனால், இந்தச் செய்திகளுக்கும் முன்னர் ‘ஜிஹாத்’ அமைப்பைப் பற்றி வெளியிடப்பட்ட செய்திகளுக்கும் இடையே தொடர்பு இருக்கவில்லை. அப்போதும் ‘ஜிஹாத்’ அமைப்பின் உறுப்பினர் எவரும் கைது செய்யப்படவோ அவ்வமைப்பு ஏதாவது தாக்குதலில் ஈடுபட்டதாகவோ செய்திகள் வெளியாகவில்லை.

ஒரு முறை ‘ஜிஹாத்’ அமைப்புக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் தொடர்பு இருப்பதாகத் ‘திவயின’ பத்திரிகை செய்தியொன்றை வெளியிட்டு இருந்தது. மு.கா தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அதனை மறுத்து அறிக்கை விட்டபோதிலும் ‘திவயின’ அதனை ஏற்கவில்லை. அஷ்ரப் அப்பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார். 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் விமான விபத்தொன்றில அஷ்ரப் உயிரிழக்கும் வரையும் அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு முடிந்திருக்கவில்லை. பின்னர் மீண்டும் சிங்கள அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ‘ஜிஹாத்’ அமைப்பை மறந்து விட்டனர்.

இவ்வாறு, சில வருடங்களுக்கு ஒருமுறை ‘ஜிஹாத்’ அமைப்பொன்றைப் பற்றிச் சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்ட போதிலும், அந்த ஒவ்வொரு முறையும் புதிய அமைப்பொன்றைப் பற்றிய செய்திகளைப் போல், அப்பத்திரிகைகள் அச்செய்திகளை வெளியிட்டனவே அல்லாது ‘ஜிஹாத்’ அமைப்பைப் பற்றித் தாமே, வெளியிட்ட பழைய செய்திகளின் தொடர்ச்சியாக அவை வெளியிடப்படவில்லை.

அதேபோல், சுமார் 20 ஆண்டுகளாக ‘ஜிஹாத்’ என்றும் வேறு பல பெயர்களிலும் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாகப் பொலிஸாரையும் படையினரையும் மேற்கொள் காட்டி, செய்திகள் வெளியிடப்பட்ட போதிலும் அக் கால கட்டத்தில் அவ்வியக்கத்தின் தலைவர் அல்லது தலைவர்கள் யார் என்பதை இந்தப் பத்திரிகைகள் கூறவில்லை. அவ்வியக்கம் செய்த ஒரு சட்ட விரோத நடவடிக்கையாவது அவ்வியக்கத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஓர் ஆயுதத்தைப் பற்றியாவது அவ்வியக்கத்தின் அலுவலகங்கள் அல்லது முகாம்கள் இருக்கும் இடங்களைப் பற்றியாவது அப்பத்திரிகைகள் இந்த 20 ஆண்டுகளில் எதையுமே வெளியிடவில்லை.

சிங்களப் பத்திரிகைகளைப் போலவே, சில தமிழ் ஊடகங்களும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஜிஹாத்’ அமைப்பொன்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால், சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், சிங்களப் பத்திரிகைகள் ‘ஜிஹாத்’ அமைப்பு புலிகளுடன் தொடர்புடையது என்றும் தனி முஸ்லிம் நாட்டை உருவாக்கிக் கொள்வதற்காகப் போராடப் போகிறது என்றும் அதற்குச் சவூதி அரேபியாவிலிருந்து பணம் வருகிறது என்றும் செய்தி வெளியிடும் போது, தமிழ் ஆயுதக் குழுக்களும் ஊடகங்களும் அதனை இராணுவப் புலனாய்வுப் பிரிவே உருவாக்கியது என்றன.

உதாரணமாக, 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் திகதி ‘தமிழ் கார்டியன்’ வெளியிட்ட ஒரு கட்டுரையில், ‘ஜிஹாத்’ அமைப்பானது அரசாங்கத்தின் துணைப் படையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஜிஹாத்’ அமைப்புக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவினருடன் தொடர்பு இருப்பதாகப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம், அவுஸ்திரேலிய வானொலிக்குத் தெரிவித்தாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பாகிஸ்தானில் இயங்கும் ‘லஷ்கர் ஈ தொய்பா’ என்ற அமைப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்துக்கு அதன் ‘ஜிஹாத்’ போராட்டத்தை எடுத்துச் செல்ல ஆர்வம் காட்டுவதாக ‘ரோ’ உளவு அமைப்பின் பயங்கரவாத் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவராகவிருந்த பஹூகுடும்பி ராமன் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கிழக்கில் ‘ஒஸாமா’ என்ற பெயரில் முஸ்லிம் ஆயுதக் குழுவொன்று இயங்குவதாக 2002 ஆம் ஆண்டு புலிகள் அமைப்புக் கூறியது. அதனை இராணுவமே உருவாக்கியது என்றும் புலிகள் கூறினர். ஆனால், இராணுவம் அதனை மறுத்து இருந்தது.‘ ஜிஹாத்’ என்ற பெயரிலோ அல்லது ‘ஒஸாமா’ என்ற பெயரிலோ முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இருப்பதாக தமக்கு எந்த வித தகவலும் இல்லை என இராணுவப் பேச்சாளர் கூறியதாக மேற்படி ‘தமிழ் கார்டியன்’ செய்தியிலேயே குறிப்பிடப்பட்டு இருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடியில் 18 முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இயங்குவதாக 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி ‘தமிழ் நெற்’ ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது. இந்த இயக்கங்களிடம் இருந்து ஆயுதங்களைக் களைய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அமைப்புக்களின் பெயர்களையோ அவற்றின் தலைவர்களின் பெயர்களையோ அவை ஆயுதங்களால் என்ன செய்கின்றன என்றோ அந்தச் செய்தியில் குறிப்பிடப்படவில்லை.

சிங்களவர்கள் கூறுவதைப் போல், ‘ஜிஹாத்’ அமைப்பு புலிகளுடன் தொடர்புடைய நாட்டைப் பிரிக்க முற்படும் அமைப்பாக இருந்தால் புலிகள் ஏன் அது இராணுவத்தின் படைப்பு எனத் தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய வேண்டும்? தமது சகாவுக்குப் பாதகமான கருத்தைப் புலிகள் தமது மக்களிடம் ஏன் கூற வேண்டும்? மறுபுறத்தில் புலிகள் கூறியதைப் போல் ‘ஜிஹாத்’ அமைப்பு இராணுவத்தின் படைப்பாக இருந்தால்? சிங்கள அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஏன் அதனைப் புலிகளுடன் இணைந்த பிரிவினைவாத அமைப்பாகச் சித்தரிக்க வேண்டும?

உண்மையிலேயே ‘ஜிஹாத்’ என்றதோர் அரசியல் அமைப்பொன்று ஒரு போதும் இந்தநாட்டில் இருந்ததில்லை. ஆனால், போர் நடைபெறும் பகுதியில் போர்க் களத்திலிருந்து வெளியில் உள்ள பல நபர்களிடம் ஆயுதங்கள் கசிவது சகஜமாகும். அவ்வாறான சில ஆயுதங்கள் முஸ்லிம்களிடமும் சென்றடைந்திருக்கலாம். சிலர் அவற்றைத் தனிப்பட் முறையில் பல தேவைகளுக்காக பாவித்திருந்தால் அதைப் பற்றி ஆச்சரியப்படத் தேவையில்லை. அவர்கள், சில வேளை தம்மை ‘ஜிஹாத்’ செய்வோராக அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கலாம். ஆனால், போரியலில் தேர்ச்சி பெற்ற புலிகளுக்கு அவர்கள் சிறு பிள்ளைகளுக்குச் சமம்.

இந்த வரலாறு தான் இப்போது மீண்டுள்ளது. சிங்களத் தீவிரவாதிகளும் ஊடகங்களும் மீண்டும் முஸ்லிம்களைப் பயங்கரவாதத்துடன் அடையாளப்படுத்திச் சந்தோஷப்பட முயற்சிக்கிறார்கள். அமைச்சர் விஜயதாசவின் கருத்தையும் அவர்கள் தமக்குச் சாதகமாகப் பாவிக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னையில் இன்று திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்…!!
Next post குழந்தை மற்றும் பெண் உள்ளே இருந்த நிலையில் திடீர் என தீப்பிடித்த முச்சக்கரவண்டி…!!