மகிந்தவின் திட்டமிட்ட சூழ்ச்சிகள்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-22) – வி. சிவலிங்கம்

Read Time:12 Minute, 32 Second

timthumbமகிந்தவின் திட்டமிட்ட சூழ்ச்சிகள்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 22) – வி. சிவலிங்கம்

சுனாமி அனர்த்த நிவாரணத்திற்காக “பி ரொம்” (Tsunami Operational Management Structure) என்ற பெயரில் அமைக்கப்பட்ட நிர்வாகம் பற்றிய யோசனைகள் பாரிய இழுபறிகளுக்குப் பின் 2005ம் ஆண்டு யூலையில் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இக் கட்டமைப்பில் சர்வதேச அம்சமும் இணைக்கப்பட்டிருந்தது.

இதனை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது. ஏனெனில் சர்வதேச முக்கியஸ்தர்கள் வடக்கு, கிழக்கிற்கு விஜயம் செய்யும்போது புலிகளுடன் தொடர்பு கொள்வதால் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உண்டு எனக் கருதியதால் அரச நிறுவனங்களுக்கூடாகவே அதனை நிறைவேற்ற எண்ணினர்.

இதற்காக பல கலந்துரையாடல்கள் சந்திரிகா, கதிர்காமர் மற்றும் சர்வதேச சமூகத்தினர் மத்தியில் இடம்பெற்றிருந்தது.

சர்வதேச தரப்பினரை இதில் அதிகளவு இணைந்து செயற்படுமாறு நோர்வே கோரியதோடு புலிகளையும் சந்திப்பது நல்லது என வற்புறுத்தி வந்தனர்.

இந்த வாய்ப்பும் இறுதியில் இழந்த ஒன்றாகப்போனது. சுனாமி அழிவால் கலங்கியிருந்த பிரபாகரன் சர்வதேச சமூகமும் தமிழ் மக்களைக் கைவிட்டுள்ளதாக உணரத் தொடங்கினார்.

மனிதாபிமான உதவிகள் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டுமென்ற அடிப்படை விதி இலங்கை அரசால் மீறப்பட்டது. சர்வதேச சமூகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் செல்வதற்கு முயற்சித்தது. புலிகளைச் சந்திக்க விரும்பியது.

ஆனால் அரசாங்கம் முழமையாக நிராகரித்தது. இலங்கையின் இறைமையை மதித்தல் அவசியம் என்ற நிலைப்பாடே இதற்கான காரணமாக அமைந்தது.

இருப்பினும் புலிகளுடன் தொடர்புகொண்டு அவர்கள் மேல் அழுத்தங்களைப் போடுவதற்கோ அல்லது புலிகளைச் சந்திப்பதற்கு தமக்கு அனுமதி தரவேண்டும் என அரசை வற்புறுத்தவோ அவர்கள் உற்சாகம் காட்டவில்லை.

பரவாயில்லை முயற்சிக்கலாம் என சொல்லும் ஆற்றல் கூட சந்திரிகாவிடம் காணப்படவில்லை. அவர் மிகவும் அதிகார ஆற்றல் உள்ளவராக இருந்தார்.

ஆனால் ஊடகங்கள் மிகவும் எதிராக செயற்பட்டன. கொழும்பிலுள்ள அரசியல் போக்கு குறித்து அவரது கவனம் குவிந்திருந்தது. சகல தரப்பினருடனும் பேசி முடிவு செய்யவேண்டும் என்ற பரந்த அரசியல் நோக்கு அவரது பிரமிக்கத்தக்க அரசியல் போக்காக காணப்பட்டது.

அதன் காரணமாக பல வாய்ப்பான தருணங்களை அவர் இழந்தது மட்டுமல்ல பி ரொம் இற்கு எதிரான சக்திகள் பலமடையவும் வாய்ப்பாக அமைந்தது.

ஜனாதிபதி பதவியில் கண்ணாக உள்ள மகிந்த எதனையும் தடுப்பதில் கரிசனையாக இருந்தார்.

கதிர்காமர் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்தியதால் சர்வதேச சமூக பிரதிநிதிகள் வடக்கு, கிழக்கிற்குச் செல்வதை அவரும் விரும்பவில்லை.

பி ரொம் (Tsunami Operational Management Structure) தொடர்பாகவும் அவர் சந்திரிகாவின் நிலைப்பாட்டையே ஆதரித்தார். அப்போது சமாதான செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த தனபால அவர்கள் சந்திரிகா தரப்பினர் இச் சந்தர்ப்பத்தினை இழந்தது மிக மோசமானது என்றார்.

இவை தொடர்பாக எரிக் சோல்கெய்ம் தெரிவிக்கையில் தமிழர், சிங்களவர் என்ற பிரச்சனையில் ஒரு பக்கம் சார்ந்து நிற்க சர்வதேச சமூகம் விரும்பவில்லை பதிலாக உதவிகள் மக்களைச் சென்றடையவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது என்கிறார்.

சந்திரிகாவின் அபிப்பிராயப்படி ஓட்டு மொத்தத்தில் பிரதம நீதியரசருடன் இணைந்து மகிந்த சகல முயற்சிகளையும் தடுத்தார்.

பி ரொம் (Tsunami Operational Management Structure) சாத்தியப்பட்டால் சந்திரிகா நீண்ட காலம் பதவியில் இருக்க வாய்ப்பு ஏற்படலாம் என எண்ணினார்.

ஜே வி பி இனர் சகலதையும் எதிர்த்தனர். இந்திய உயர் ஸ்தானிகரையும் அவர்கள் மனம் மாறச் செய்தார்கள். அதாவது பி ரொம் செயற்பாட்டிற்கு வந்தால் சந்திரிகா தோல்வி அடைவார் எனவும், அதன் பின்னர் பாரதிய ஜனதாக் கட்சியுடன் நெருங்கிய தொடர்புள்ள ரணில் பிரதமராக வரலாம் எனவும் அவருக்கு கூறியிருந்தனர்.

இதன் காரணமாக சந்திரிகா டெல்கி சென்றார். பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் மிக முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து நிலமைகளை விளக்கிய பின் இந்தியா அதனை ஆதரிப்பதாக அறிக்கை விடுத்தது.

ஆரம்பத்தில் பி ரொம் இற்கு அதிக ஆதரவாக இல்லாதிருந்த கதிர்காமர், மங்கள சமரவீர ஆகியோர் இந்திய அறிக்கையை அறிந்து ஆச்சரியமடைந்தனர்.

பி ரொம் குறித்து சந்திரிகா அவர்கள் மேலும் தொடர்கையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில் நினைத்த வேகத்தில் அவற்றைச் செயற்படுத்த முடியாமல் போகலாம் என பலர் அவரை எச்சரித்தனர்.

தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.

ஆனால் மக்கள் தன்னை ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்ற ஒருவர் என எண்ணக்கூடும் என்ற குழப்ப நிலையில் தாம் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

காரியம் நிறைவேறும் வரையாவது ஒரு தற்காலிக சர்வாதிகாரியாக சிறிது காலம் செயற்பட்டால் என்ன? என தாம் எண்ணியபோதும் ஒரு சக்திமிக்க ஜனநாயகவாதியாக செயற்பட எண்ணி கலந்துரையாடல், விட்டுக்கொடுப்பு எனற ஜனநாயக வழிகள் மூலம் அதனை நிறைவேற்ற முடிந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

வேறொருவர் ஆதரவு இல்லாமல் தாமே அதனை நிறைவேற்றுவதாயின் நோர்வேயின் உதவி அதிகம் தேவைப்பட்டிருக்காது.

ஏனெனில் பிரபாகரன் பி ரொம் இற்குப் பதிலாக இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை மொன்மொழிவுகளை ஏற்றதற்குக் காரணம் அதிக அதிகாரங்களை அது அவருக்கு வழங்குகிறது. அதன் மூலம் தமிழீழத்தை அடையலாம் என அவர் எண்ணியிருப்பார்.

சுனாமி நிவாரணம், அபிவிருத்தி தொடர்பாக காணப்பட்ட இழுபறி நிலமைகளை அவதானித்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவிக்கையில் இயற்கைப் பேரழிவில் மக்கள் காட்டிய ஐக்கியம் அரசியல் பொதியாக மாற்றம் பெறாதது கவலைக்குரியது என்கிறார்.

போர்நிறுத்த ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டது. சந்திரிகா பேய்கள் போன்று செயற்படும் ஜே வி பி இனரை தனது அரசாங்கத்தில் இணைத்தார்.

அவர்கள் பி ரொம் இனைச் சிதைப்பதையே நோக்கமாக கொண்டிருந்தார்கள். அவர்கள் சுனாமி நிவாரணங்கள் மூலம் புலிகளை இணைத்தால் காலப்போக்கில் அவர்கள் அரசியல் முக்கியத்தவம் பெற்றவர்களாக மாறிவிடுவர் என ஜே வி பி இனர் எண்ணியதாக கூறினார்.

அரசியல் தீர்வுக்கான இன்னொரு சந்தர்ப்பமும் நீதிமன்றத் தலையீட்டால் இழக்கப்பட்டது என்றார். பி ரொம் திட்டம் நிறைவேற்றப்படாவிடில் தாம் பதவியிலிருந்து விலகுவதாக சந்திரிகா கூறியிருந்தார். இறுதியில் அதனை நிறைவேற்றுவதற்கு ஜே வி பி இனரை அரசிலிருந்து விலக்கவேண்டி ஏற்பட்டது.

நீதிமன்ற தலையீட்டினால் பி ரொம் முயற்சி தோல்வி அடைந்த பின்னணியில் சோல்கெய்ம் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்தார்.

ராணுவத்திற்கும், புலிகளுக்குமிடையே முறுகல் நிலை தீவிரமடைந்த நிலையில் புலிகளுடன் நேருக்கு நேர் பேச விரும்புவதாக அரசு நோர்வேயிடம் கோரியிருந்தது.

சந்திக்க மறுத்த தமிழ்ச்செல்வன் அரசு முதலில் துணைப்படைகளுக்கு உதவுவதை நிறுத்தவேண்டுமென நிபந்தனை விதித்தார். எவ்வாறாகிலும் புலிகளை அரசுடன் பேசும்படி வற்புறுத்துமாறு சோல்கெய்ம் பாலசிங்கத்தை வற்புறுத்தினார்.

இல்லையேல் சர்வதேச சமூகம் வேறு முடிவுகளை நோக்கிச் செல்லக்கூடும் என எச்சரித்தார்.

அரசாங்கம் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து மறுபரிசீலனை செய்ய வருமாறு புலிகளை அழைத்த நிலையில் அவ் ஒப்பந்தத்தில் தவறு எதுவும் இல்லை. அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாத காரணத்தால் எழுந்துள்ள பிரச்சனை என பாலசிங்கம் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய காரணத்தால் சந்திரிகா அரசாங்கம் நிலமைகளைச் சீரடையச் செய்ய முயற்சித்தது. யூலை மாதத்தில் இடம்பெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் மகிந்த ஜனாதிபதி அபேட்சகராக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தேசிய இனப் பிரச்சனையில் மிதவாத போக்குடையவராக மகிந்த காணப்பட்ட போதிலும் அவருக்கும், ஜே வி பி இற்கும் இடையேயான உறவு பல சந்தேகங்களை எழுப்பியிருந்தது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படாத நிலையில் 2004ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேர்தல் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்த மீளாய்வு, பி ரொம், ஜனாதிபதி தேர்தல் என என நிலமைகள் மாற்றமடைந்து செல்கையில் அரசாங்கத்தின் மிக முக்கியமான அமைச்சர் ஒருவர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியை உலகளவில் ஏற்படுத்தியது.

( அடுத்த வாரம் தொடரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அச்சம் என்பது மடமையடா வசூலை அள்ளியதா? முழுவிவரம்…!!
Next post தொப்புள் பகுதியில் ஆயில் மசாஜ் செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…!!