By 28 November 2016 0 Comments

முஸ்லிம்களுடன் கைகோர்க்க வேண்டிய தருணம்….!! கட்டுரை

article_1480006185-ddசிறு வயதுப் பாடப்புத்தகங்களில் “இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இனப் பிரிவினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்” என்று, இலங்கையிலுள்ள அனைவரும் படித்திருக்கிறோம். ஆனால், எம்மில் எத்தனை பேர் அதை உண்மையில் அனுபவித்திருக்கிறோம் என்றால், ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்க்க வேண்டிய நிலைமையே இருக்கிறது.

சுதந்திரத்துக்கு முன்னைய இலங்கையில், நாட்டைக் கைப்பற்றி, காலனித்துவ ஆட்சி புரிந்த வெளிநாட்டவர்களுக்கெதிரான போராட்டத்தால் அமைதிக் குலைவு காணப்பட்டது. சுதந்திரம் கிடைத்த பின்னர், இங்குள்ள இன, மதப் பிரிவினருக்கிடையில் முறுகல்கள் நிலவி வந்தன. அதில், தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையீனங்களின் விளைவாக ஏற்பட்ட ஆயுதப் போராட்டம், 2009ஆம் ஆண்டில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும், புதிது புதிதாகக் காரணங்கள் ஏற்பட்டு, இனங்களுக்கிடையிலான நம்பிக்கையீனங்கள் தொடர்ந்தே வந்தன. இதில், அண்மைய நூற்றாண்டுகளில் இல்லாததைப் போன்று, சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையீனங்கள் அதிகரித்தன. அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது பதவிக் காலத்தின் இறுதிப் பகுதியில் இந்த முரண்பாடுகள் உச்ச நிலையை அடைந்து, பேருவளையிலும் அளுத்கமயிலும் கலவரங்கள் உருவாகியிருந்தன.

தமிழ் மக்களதும் முஸ்லிம் மக்களதும் ஆதரவுடன் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, அவரது அரசாங்கம் ஆகியோர், சிறுபான்மையினருக்கு ஆதரவாகச் செயற்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆரம்பச் சமிக்ஞைகளும் அவ்வாறே காணப்பட்டன. ஆனால், போகப்போக, நிலைமை மோசமடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, முஸ்லிம்கள் மீதான வெறுப்பு, பரவலாக அதிகரித்திருக்கிறது என்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

2014இல் ஏற்பட்ட கலவரங்களுக்குப் பின்புலமாக இருந்தவர் எனக் குற்றஞ்சாட்டப்படும் ஞானசார தேரர் தொடக்கம் புதிதாக உருவாகியுள்ள சிறு சிறு அமைப்புகள் வரை, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழ்கின்றன.

இதில் ஒன்றைக் குறிப்பிடுவது அவசியமானது. இலங்கையில் முஸ்லிம்கள் மீது அதிகரித்திருக்கின்ற வெறுப்பு, இலங்கைக்கு மாத்திரமே தனித்த ஒன்று கிடையாது. ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த முடிவு, ஐரோப்பா முழுவதிலும் கடும்போக்கு வலதுசாரிகளின் ஆதரவுத்தளம் அதிகரிப்பு ஆகியன, உலகம் முழுவதிலுமே முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையொன்று உருவாகுவதைக் காட்டி நிற்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை, முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றுவதில் ஆரம்பித்த சர்ச்சைகள், இப்போது தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளரின் கைது, முஸ்லிம் வியாபார நிறுவனங்களைப் புறக்கணிக்குமாறு கோருதல், பாரிய ஆர்ப்பாட்டம், முஸ்லிம்களால் உரிமைப்படுத்தப்பட்ட ஆடைக் கடையொன்று தீமூட்டப்படுதல் வரை நீண்டு கொண்டிருக்கின்றன.

இவற்றுக்கு மத்தியில் குறிப்பிடத்தக்கதாக, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவுக்கும் ஞானசார தேரருக்கும் இடையிலான சந்திப்பொன்று, நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான சட்டங்களை உருவாக்கும் சட்டவாக்க நிலையமான நாடாளுமன்றத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் நோக்கங்கள், அங்கு கலந்துரையாடப்பட்டவை எல்லாம் ஒருபுறமிருக்க, நாட்டின் உயரிய சபையில், நாட்டின் நீதிக்குப் பொறுப்பான ஒருவர், எதற்காக இந்த ஞானசார தேரரைச் சந்திக்க வேண்டும்? இது, அவரையும் மக்கள் பிரதிநிதி அல்லது செயற்பாட்டாளர் போன்று ஆக்காதா? அவரது கருத்துகளை மதித்துச் செவிமடுக்க, அரசாங்கம் தயாராக இருக்கிறது என்ற கருத்தை வழங்காதா? ஞானசார தேரர் பங்குகொண்ட நிகழ்வொன்றில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கலந்து கொண்டதைத் தொடர்ந்து, ஞானசார தேரருக்கும் கோட்டாபயவுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என்று பிரசாரம் செய்த கட்சியைச் சேர்ந்தவரே, இதைச் செய்ய முடியுமா?

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, முஸ்லிம் பிரதிநிதிகளை, அமைச்சர் நேற்றுச் சந்தித்தார். அதில் ஜமயத்துல் உலமாக் கட்சி, முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முஸ்லிம்களின் பிரதிநிதிகள் இவர்களெனில், பௌத்தர்களின் பிரதிநிதியாக ஞானசார தேரரை அமைச்சர் கருதுகிறாரா என்பது அடுத்த கேள்வி.

இந்த ஞானசார தேரர் என்பவர், சாதாரணமானவர் கிடையாது. முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் எதிரான கருத்துகளைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவரும் ஒருவர். இதுவரை, அதற்காக அவர் கைது செய்யப்பட்டதில்லை. அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதெல்லாம், “நீதிமன்ற அவமதிப்பு”, “ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியமை” ஆகியன தான். முன்னைய அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும், ஞானசேர தேரர் உட்பட அடிப்படைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. வாக்கு வங்கி மீது கைவைப்பதற்கு, இந்த அரசாங்கமும் தயங்குவதில் வியப்பேதுமில்லை. ஆனால், வாக்கு வங்கியை மாத்திரம் நினைத்துக் கொண்டு அரசியல் செய்வதால், நாட்டுக்கு எவ்வளவு தூரத்துக்கு, நாட்களுக்குத் தான் நன்மை?

பொது பல சேனா அமைப்புக்கு, சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியினருக்குக் காணப்படும் ஆதரவு, இதில் முக்கியமாகக் கருத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும். பொது பல சேனாவுக்கான அந்த ஆதரவு, வெற்றிடத்தில் உருவாகிய ஒன்று கிடையாது. மாறாக, உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள அச்சத்தின் விளைவாக ஏற்பட்ட ஒன்றாகும். அந்த அச்சத்துக்கு, கடும்போக்குவாதிகளிடமிருந்து மிதவாத முஸ்லிம்கள், பிரித்துக் காட்டப்படாமை முக்கியமான காரணமாகும்.

உதாரணமாக, இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்களில் சிலர், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணைந்துள்ளார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவும் அக்கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால், அது அரசாங்கத்தின் கருத்தன்று என, நேற்றைய தினம், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இவ்வாண்டு பெப்ரவரியில் கருத்தொன்றை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கையர்கள் 36 பேர் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகவும் அவர்களில் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் இணைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தினார். ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் பிரசாரச் சஞ்சிகையான “தாபிக்” வெளியிட்ட தகவலின்படி, இலங்கையைச் சேர்ந்த ஷப்ராஸ் நிலாம் எனப்படுபவர், தங்களது குழுவில் இணைந்து உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தியது. தனது பெற்றோர், மனைவி, பிள்ளைகள் உட்பட 16 பேருடன் அவர் சிரியாவுக்குச் சென்றதாக, அந்தச் சஞ்சிகை உறுதிப்படுத்தியது. ஆகவே, முஸ்லிம்களில் சிலர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளனர் என்பது, ஓரளவுக்கு உறுதியானது.

ஆகவே தான், இலங்கை முஸ்லிம் எவருமே, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணையவில்லை என்ற விவாதம், ஒருபோதும் நன்மை தராது. “தவறாக வழிநடத்தப்பட்ட முஸ்லிம்கள் சிலர், அக்குழுவில் இணைந்துள்ளார்கள். எதிர்காலத்தில் இவ்வாறாகத் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுக்க, அரசாங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம்” என்பது தானே, முஸ்லிம் தலைமைகளின் பதிலாக அமைய வேண்டியது? சுமார் 2 மில்லியன் முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில், வெகு சிலர் செய்த தவறுக்காக, மிகுதி அத்தனை பேரும் எவ்வாறு பொறுப்பாக முடியும்?

இலங்கையிலுள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற மிலேச்சத்தனமான ஆயுதக்குழுவுக்கு ஆதரவு வழங்கவில்லை என்பது வெளிப்படையானது. அவர்கள் அவ்வாறு ஆதரவு வழங்கியிருந்தால், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, இலங்கைக்குள் இலகுவாக வந்திருக்க முடியும். ஆகவே, இலங்கை முஸ்லிம்களை ஏதோ கடும்போக்குவாதிகள் போன்று சித்திரிப்பது, நியாயமற்றது, ஆபத்தானது. அவ்வாறு அவர்களை முத்திரை குத்துவது, அவர்களை ஒதுக்கவைத்து, கடும்போக்குவாதிகள் பக்கமேஅவர்கள் செல்ல வழிவகுக்கும்.

ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான நிலைப்பாடு எவ்வாறு காணப்படுகிறதோ, அவ்வாறான நிலைப்பாடுகள், தீவிரக் கொள்கைகளையுடைய அமைப்புகள் மீதும் காணப்படுகின்றதா என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவில் காணப்படும் கடும்போக்கு இந்து அமைப்பான சிவசேனாவைப் பின்பற்றி, இலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட போது, இலங்கையிலுள்ள இந்துக்களில் கணிசமானோர், அதற்கெதிரான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். அந்த எதிர்ப்புக்குப் பின்னால், பூகோள அரசியல் சார்ந்த சிந்தனைகளும் (இலங்கைக்குள் மேலும் கால்பதிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சி என்ற எண்ணம்) காணப்பட்டன என்ற போதிலும், அதையும் தாண்டி, கடும்போக்கு இந்து அமைப்பொன்று இலங்கையில் தேவையில்லை என்பது, அந்த எதிர்ப்புக்கான பிரதான காரணமாகும். இவ்வாறான எதிர்ப்பு, முஸ்லிம் மக்களிடத்தேயும் காணப்பட வேண்டுமென்பது தான் இங்குள்ள எதிர்பார்ப்பு.

இவையெல்லாவற்றையும் தாண்டி, முஸ்லிம் மக்களுக்கான ஆதரவு வழங்கப்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. சுயநலமாகச் சிந்திப்பதானால், முஸ்லிம் மக்கள் மேலும் ஒதுக்கப்பட்டு, கடும்போக்குப் பிரிவினரின் பக்கம் செல்வதை அது தடுக்கும். ஆனால் அதை விட முக்கியமாக, சக பிரஜைகள் என்பதன் அடிப்படையில், அவர்களுடன் கைகோர்க்க வேண்டிய தேவை இருக்கிறது; சிறுபான்மையினர் என்ற அடிப்படையில், தமிழர்களுக்கு அந்தப் பொறுப்பு, இன்னமும் அதிகமாக இருக்கிறது. அளவில் சிறிய நாடான இலங்கையில், சில கிலோமீற்றர்கள் தாண்டிப் போனால், இன்னோர் இனம் அல்லது இன்னொரு மதப் பிரிவினர் செறிந்து வாழும் இடங்களைக் காணலாம். அப்படிப்பட்ட நாட்டில், வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு, மனித உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு வாழும் வாழ்வு தான், அனைவருக்கும் நன்மை பயக்கத்தக்கதாக அமையுமென்பது கண்கூடு.Post a Comment

Protected by WP Anti Spam