செல்வி ஜெயலலிதாவுக்கு.. ‘நீங்கள் எங்களுக்கு விரோதியல்ல” என கடிதம் எழுதி வைத்துவிட்டு, இறந்த போன புலிகள்..!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –22)

Read Time:14 Minute, 17 Second

timthumbசிவராசனைத் தேடும் பணிகளுக்கு இடையில் அவ்வப்போது கைதாகிக்கொண்டிருந்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ராஜிவ் கொலையில் சம்பந்தப்பட்ட வேறு பலபேரைப் பற்றிய விவரங்கள் எங்களுக்கு இன்னொரு பக்கம் கிடைத்துக்கொண்டிருந்தன.

முருகன், ஜெயக்குமார், விஜயன் போன்றவர்களை விசாரித்து ராபர்ட் பயஸைப் பிடித்திருந்தோம்.

ராபர்ட் பயஸ் அளித்த தகவலின் அடிப்படையில் கிண்டி ஐ.டி.ஐயில் படிப்பதற்காகச் சேர்ந்த காந்தனின் புகைப்படத்தை, அவனது அப்ளிகேஷன் ஃபாரத்திலிருந்து பெற்றோம்.

காந்தன், டிக்சனுடன் 1990 செப்டம்பரில் இந்தியாவுக்கு வந்தவன். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் வயர்லெஸ் ஆப்பரேட்டராகப் பணியாற்றியவன்.

காந்தனும் டிக்சனும் ஒன்றாக இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்தது. திருச்சி சாந்தனுக்கு நெருக்கமானவனான டிக்சனைப் பிடித்தால் சிவராசனின் இருப்பிடம் தெரிந்துவிடும்.

ஆனால் டிக்சனை எப்படிப் பிடிப்பது? யோசித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக ஐ.பியிலிருந்து எங்களுக்கு டிக்சனின் படம் என்று ஒரு புகைப்படம் அனுப்பிவைக்கப்பட்டது.

அதையும் காந்தனின் புகைப்படத்தையும் சேர்த்துப் பத்திரிகைகளில் பிரசுரிக்கக் கொடுத்து, யாருக்கு என்ன தகவல் கிடைத்தாலும் சொல்லுங்கள் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டோம்.

முதல் முதலாக, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினை சேர்ந்த இருவரின் படங்களை நாங்கள் அப்போதுதான் வெளியிடுகிறோம். இது, எங்களுக்கு நல்ல பலனைக் கொடுத்தது. கோயமுத்தூரில் இருந்து ஒருவர் போன் செய்தார்.

‘சார், நான் இவரைப் பார்த்திருக்கிறேன். சாய்பாபா காலனியில் உள்ள ஒரு டெலி போன் பூத்துக்கு அடிக்கடி வருவார்’ என்று சொன்னார். உடனே உஷாரானோம்.

சேலத்திலிருந்து ஒரு குழுவை கோவைக்கு அனுப்பினோம். சென்னையிலிருந்தும் சிலர் புறப்பட்டுச் சென்றோம்.

முன்னதாக, கோயமுத்தூரில்தான் டிக்சன் இருக்கிறான் என்பது நிச்சயமானால், கண்டிப்பாக வயர்லெஸ் கருவியை இயக்க முயற்சி செய்வான், அதன்மூலம் தொலைக்காட்சி சிக்னலில் இடைஞ்சல் ஏற்படும் என்பதை யூகித்து, கோவை மக்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்க ஏற்பாடு செய்தோம்.

டிவி பார்க்கும்போது ஏதாவது இடைஞ்சல் ஏற்பட்டால் உடனே தகவல் சொல்லவும். அதே சமயம் கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு சம்பவம் நடந்தது.

போக்குவரத்துப் போலீசார் தமது வழக்கமான பரிசோதனையில் ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி விசாரிக்க, அதில் பயணம் செய்த இருவரின் பெயர்கள் விக்கி மற்றும் ரகு என்று தெரிந்தது. ஈழத் தமிழர்கள். புலிகள்.

துடியலூர் அருகே முனுசாமி நகரில் வசிப்பவர்கள். மேற்கொண்டு விசாரித்துக்கொண்டிருக்கும்போதே துடியலூர் காவல் நிலையத்துக்கு ஒருவர் வந்து டிவி பார்க்கும்போது படம் ஆடுகிறது, கரபுரவென்று அலையடிக்கிறது என்று சொன்னார்.

அந்த விக்கி, ரகு இருவரையும் விசாரித்ததில் அவர்கள் டிக்சனுடன் இருந்தவர்கள் என்பது தெரிந்துவிட்டது. உடனே உஷாரானோம். அனைத்து இடங்களுக்கும் தகவல் கொடுத்து, மறுநாள் காலை முனுசாமி நகர் வீட்டை முற்றுகையிட ஆவன செய்தோம்.

விக்கியும் ரகுவும் பிடிபட்டது முந்தைய தினத்து இரவு. அவர்கள் மீது சந்தேகம் வந்து, விசாரித்து, அவர்கள் விடுதலைப் புலிகள்தாம் என்பது உறுதியாகி, மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு முழு இரவு தேவைப்பட்டது.

அந்த இடைவெளியில், வெளியேபோன விக்கியும் ரகுவும் என்ன ஆனார்கள் என்று தெரியாத டிக்சன், சந்தேகப்பட்டு உஷாராகத் தொடங்கியிருந்தான்.

மறுநாள் காலை அந்த முனுசாமி நகர் வீட்டை முற்றுகையிட்ட கோவை போலீசார் உள்ளே இருக்கும் டிக்சனுடன் வெளியில் இருந்தபடியே பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார்கள்.

அவர்களை உயிருடன் பிடிப்பதுதான் நோக்கம். பேசிப்பேசி காலதாமதம் செய்வதன்மூலம், சடாரென்று உள்ளே பாய்ந்து அவர்கள் சயனைட் அருந்திவிடாமல் பிடிப்பதற்கான முயற்சி.

வேறு வழியில்லை.

எங்களுக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல் டிக்சன் வேண்டியிருந்தான். அவனைக்கொண்டுதான் திருச்சி சாந்தன் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.

திருச்சி சாந்தன் கிடைத்தால்தான் சிவராசன் அகப்படுவார்.

ஆனால் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு உயிர் ஒரு பொருட்டாக எப்போதும் இருந்ததில்லை என்று கேள்விப்பட்டிருந்ததை அப்போது நேரில் கண்டோம்.

வீட்டுக்குள் டிக்சன் மட்டுமன்றி, குணா என்ற இன்னொரு விடுதலைப்புலியும் இருந்தான். இருவரும் போலீசாருடன் பேச்சுக்கொடுத்தபடியே (போலீஸ் கடைப்பிடித்த அதே உத்தி!) தங்கள் ஆதாரங்களை எரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சக்தி மிக்க வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர்கள், பணம், பிலிம் ரோல்கள் என்று பலதையும் எரித்து முடித்துவிட்டு, இனி பிரச்னையில்லை என்றானதும் சயனைட் சாப்பிட்டுவிட்டார்கள்.

எங்கே அதை முறியடித்துவிடுவோமோ என்று அஞ்சி, ஒரு கைத்துப்பாக்கியால் தங்களைச் சுட்டுக்கொண்டு, போதாக்குறைக்கு வெடிகுண்டு ஒன்றையும் வெடிக்கச் செய்து இல்லாமல் போனார்கள்.

சி.பி.ஐக்கு இது மிகப்பெரிய அடி. நாங்கள் எதிர்பார்த்திராத விஷயம். சயனைட் முறியடிப்பு மருந்து எங்கள் கைவசம் இருந்தது. ஒருவேளை அசம்பாவிதம் நேர்ந்தாலும் காப்பாற்றிவிட ஒரு டாக்டரும் உடன் இருந்தார்.

ஆனாலும் மிகச் சில நிமிடங்களுக்குள் நடந்துவிட்ட இந்தச் சம்பவத்தில் இடிந்து போனோம்.

இறந்து போன டிக்சன் இரண்டு கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு இறந்திருந்தான். ஒன்றில் ‘திரு. கார்த்திகேயன் அவர்களே, தங்கள் திறமைக்கு என் பாராட்டுக்கள்’ என்று சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு எழுதப்பட்ட துண்டுக் கடிதம்.

இன்னொன்று, அ.தி.மு.க. தலைவர் செல்வி ஜெயலலிதாவுக்கு. ‘நீங்கள் எங்களுக்கு விரோதியல்ல’ என்று அதில் குறிப்பிட்டிருந்தான்.

விடுதலைப் புலிகளால் ஜெயலலிதா உயிருக்கு ஆபத்து என்று தமிழகத்தில் தொடர்ந்து சொல்லப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது.

புலிகளுக்கு எதிரான அவரது பேச்சுகளால் அவர்கள் கோபமடைந்திருக்கக்கூடும்.

அவர்களுடைய ஹிட் லிஸ்டில் ஜெயலலிதா உள்ளார் என்று தினசரி பத்திரிகைகளில் செய்திகள் வந்துகொண்டிருந்த தருணம்.

டிக்சன், ஜெயலலிதாவின்மீது தங்களுக்கு விரோதமில்லை என்று தெளிவாக எழுதிவைத்துவிட்டு இறந்திருந்தான்!

ராஜிவ் காந்தி படுகொலை சம்பவத்துக்குப் பிறகு ஆரம்பித்த புலனாய்வுப் பணியில் நாங்கள் எதிர்கொண்ட முதல் சயனைட் மரணம் டிக்சனுடையதுதான்.

இது எங்களுக்குப் பெரிய எச்சரிக்கையாக அமைந்தது. விடுதலைப் புலிகளை அடையாளம் காண்பதோ, தேடி நெருங்குவதோ, சுற்றி வளைப்பதோ பெரிய விஷயமல்ல.

அவர்களை உயிருடன் பிடிப்பதில்தான் எங்களுடைய சவால் அடங்கியிருக்கிறது என்பது புரிந்துவிட்டது.

முன்னதாக, பிடிபட்ட விக்கி, ரகு இருவரையும் விசாரித்ததில், கோயமுத்தூரில் விடுதலைப் புலிகளுக்கு வெடிகுண்டுகள் தயாரித்து அளிக்கும் ஒரு தொழிற்சாலை குறித்த விவரங்கள் எங்களுக்குக் கிடைத்தன.

பல உள்ளூர் மெக்கானிக்குகளின் உதவியுடன் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு பெட்டி பெட்டியாக வேதாரண்யம் வழியே இலங்கைக்குக் கடத்தப்பட்டுக்கொண்டிருந்ததை அறிந்தோம்.

தமிழகம் அமைதிப்பூங்காதான். அனைத்து சமூக விரோதப் பணிகளும் இங்கே அமைதியாகவே பலகாலமாக நடந்துவந்திருக்கிறது! இறந்தவர்களை எண்ணிப் பலனில்லை.

பிடிபட்ட விக்கியை மேலும் துருவித் துருவி விசாரிக்கத் தொடங்கினோம். ஒரு வழியாக திருச்சி சாந்தன், திருச்சியில் ராமலிங்க நகர் என்னும் பகுதியில் வசிக்கும் விவரம் தெரிந்தது.

ஆனால் அவர் ஓரிடத்தில் தங்கியிருக்கும் நபரல்லர். திருச்சி, சேலம், சென்னை, பெங்களூர் என்று சுற்றிக்கொண்டே இருப்பவர். சாந்தனின் முதன்மை உதவியாளராக சுரேஷ் மாஸ்டர் என்பவர் இருந்தார்.

அவர் காயமுற்ற, மருத்துவ உதவி தேவைப்படும் விடுதலைப் புலிகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்தவர். சென்னையில்தான் அவரது தங்குமிடம் என்பதும் தெரிந்தது.

ஆனால் அந்தச் சமயம் திருச்சி சாந்தன் எங்கே இருக்கிறார்? அவர் பெங்களூரில் இருக்கக்கூடும் என்று விக்கி சொன்னான்.

சில நாள்கள் முன்னதாக ஒரு லட்ச ரூபாய் பணத்துடன் தான் பெங்களூர் சென்று சாந்தனைச் சந்தித்துக் கொடுத்துவிட்டு வந்ததையும் தெரிவித்தான்.

எனவே நாங்கள் பெங்களூருக்கு விரைந்தோம். இந்திரா நகரில் இருந்தது அந்தக் குறிப்பிட்ட வீடு. அமைதியான, தனியான, சிறு வீடு. சுற்றி வளைத்துத் தயாராக நின்றுகொண்டு ஒருவரை மட்டும் உள்ளே அனுப்பி அழைப்பு மணியை அழுத்தச் சொன்னோம்.

ஒரு கணம் ஜன்னல் திறந்து ஒரு உருவம் எட்டிப் பார்த்தது. அவ்வளவுதான். தாமதமின்றி கறுப்புப் பூனைப் படையினர்

கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. அரசன், குளத்தான் என்று உள்ளே இருந்த இரண்டு இளைஞர்களும் சயனைட் சாப்பிட்டுவிட்டார்கள்.

அவர்களுக்கு அளிக்கப்பட்ட விஷ முறிவு மருந்தினால் பயனில்லாமல் போய்விட்டது. ஒருவன் உடனேயும் இன்னொருவன் மூன்று நாள் மயங்கிய நிலையில் இருந்த பிறகும் இறந்து போனார்கள்.

ஆனால் நாங்கள் தேடிச்சென்ற திருச்சி சாந்தன் அங்கே இல்லை. காயமடைந்த விடுதலைப் புலிகள் அந்த வீட்டில்தான் தங்கியிருப்பதாக விக்கி சொல்லியிருந்தான்.

அப்படி யாரும் அங்கே இல்லை. எனவே அந்த வீட்டின் உரிமையாளரை விசாரித்து, அவர் மூலம் ஜகன்னாதன் என்ற தமிழ்த் தீவிரவாதி ஒருவர் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதைக் கேள்விப்பட்டு அவரைப் பிடித்தோம்.

தொடரும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறப்பில் ஏற்படும் தழும்புகள் மறைய சூப்பரான டிப்ஸ்…!!
Next post மனிதர்களை தின்னும் கொடூர மிருகம்: ஏலியனா இது? அச்சத்தில் மக்கள்…!! வீடியோ