மைத்திரிக்கு ஸ்ரீ ல.சு.கட்சியை வெற்றி பெறச்செய்ய முடியுமா? கட்டுரை

Read Time:22 Minute, 6 Second

article_1480573544-article_1479829797-aubeமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை காட்சிப் பொருளாகப் பாவித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (பொதுசன முன்னணி) என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்ததை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

கடந்த சனிக்கிழமை அவர் அதற்காக இரண்டு கட்சி அபிவிருத்திக் கூட்டங்களில் கலந்து கொண்டார். இரண்டும் கட்சிக்கு மேலும் அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொள்வதை நோக்கமாகவே நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலையில் அவர் காலியில் நடைபெற்ற கட்சிக்கு ஆதரவு திரட்டும் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, கட்சியை வெற்றிப் பாதையில் செலுத்த தாம் தயாராக இருப்பதாக கூறினார்.

இதுசற்று வித்தியாசமான கருத்தாவே தென்பட்டது. ஏனெனில், கட்சித் தலைவர் ஒருவர் கட்சியை வெற்றியை நோக்கிச் செலுத்துவது என்பது புதிதாகக் கூற வேண்டிய விடயம் அல்ல. இது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடியைத் துல்லியமாகச் சுட்டிக் காட்டுவது போல் இருக்கிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமது ‘கை’ சின்னத்திலேயே போட்டியிடும் என்றும், உறுப்பினர்கள் தயாராக இருந்தால் கட்சியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லத் தாம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இது ஒரு தலைவர் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் உரையா என்ற சந்தேகம் எழுகிறது. இதில் கட்சித் தலைவர் உறுப்பினர்கள் மீது சந்தேகம் கொண்டிருப்பதைப் போன்றதோர் தோற்றம் காணக்கூடியதாக இருக்கிறது. உறுப்பினர்களைத் தட்டிக் கொடுப்பதைப் போல் அது அமையவில்லை.

கடந்த வருடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு பிரதான தேர்தல்களிலும் தோல்லியடைந்ததாகவும் அந்தத் தோல்விக்கான காரணங்கள் நாட்டிலேயே இருந்ததனால் கட்சி அவ்வாறு தோல்வியடைந்ததாகவும் அவர் மேலும் கூறினார். அன்றே, அவர் பாணந்துறையில் நடைபெற்ற கட்சிக்கு அங்கத்தினர்களைச் சேர்க்கும் மற்றொரு கூட்டத்திலும் உரையாற்றினார்.

வரப் போகும் தேர்தல்களின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பிரதானமாக எந்தக் கட்சிக்கு எதிராகப் போட்டியிடப் போகிறது என்பது இன்னமும் தெளிவாகாத விடயமாகும். 1952 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க ஸ்ரீ ல.சு.கவை ஆரம்பித்ததன் பின்னர் சகல தேர்தல்களிலும் வழமையாக அக்கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே தான் பிரதானமாகப் போட்டி நடைபெற்றுள்ளது. அவ்விரு கட்சிகளும் தான் அதன் பின்னர் மாறி மாறி நாட்டை ஆட்சி செய்தும் வந்துள்ளன.

ஆனால், தற்போது அவ்விரு கட்சிகளுக்கிடையே தேசிய அரசாங்கம் ஒன்றை நடத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு இருக்கிறது. அதன்படி இரு கட்சிகளும் கூட்டரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றன. ஸ்ரீ ல.சு.க என்ற கட்சிப் பெயரில் எந்தவோரு கட்சியும் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையிலும் ஸ்ரீ .ல.சு.கவின் பெரும்பாலான சாதாரண உறுப்பினர்களின் ஆதரவு மஹிந்தவுக்கா, மைத்திரிக்கா? என்ற நிலை தோன்றியிருக்கும் நிலையிலும் இது உண்மையிலேயே தேசிய அரசாங்கமா என்ற கேள்வியை ஒருவர் எழுப்பலாம். ஆனால், சட்டப்படி இது ஒரு தேசிய அரசாங்கம் என அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

அடுத்து வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போதும் மாகாண சபைத் தேர்தல்களின் போதும் ஐக்கிய தேசிய கட்சி நிச்சயமாக போட்டியிடும். அவ்வாறாயின் ஜனாதிபதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றி பெறச் செய்வதாக இருந்தால் தம்மோடு கூட்டாட்சி நடத்தும் தமது சகாவான ஐ.தே.கவுக்கு எதிராகப் போட்டியிட நேரிடும். ஒரே அரசாங்கத்தில் உள்ள இரு கட்சித் தலைவர்களும் அந்த அரசாங்கத்தின் பணிகள் தொடர்பாக ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ள நேரிடும்.
அதேவேளை மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் ஸ்ரீ ல.சு.கவைவிட்டு பிரிந்து போட்டியிடும் சாத்திக்கூறுகளே அதிகமாக தென்படுகிறது. ஏனெனில், ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவாளர்கள் பெரும்பாலானவர்கள் இன்னமும் ஸ்ரீ ல.சு.கவில் இருந்த போதிலும் அவர்கள் இனி ஸ்ரீ ல.சு.கவுக்குள் இருந்து கொண்டும் வெளியேறியும் ஜீ.எல். பீரிஸின் தலைமையிலான புதிய கட்சி,அதாவது ஸ்ரீ லங்கா பொதுசன முன்னணிக்கே ஆதரவளிப்பார்கள். மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளும் போட்டியிடும். ஆனால், தற்போதைய நிலையில் பிரதானமாக ஸ்ரீ ல.சு.க, ஐ.தே.க மற்றும் பொதுசன முன்னணி ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே தான் போட்டி நடைபெறும் என ஊகிக்கலாம். அதாவது வரப் போகும் தேர்தல்கள் மும்முனைப் போட்டிகளாகவே நடைபெறும்.

அப்போது ஸ்ரீ ல.சு.கவுக்கும் ஐ.தே.கவுக்கும் இடையிலான போட்டியும் வாதப் பிரதிவாதங்களும் நடைபெறும். ஒரே அரசாங்கத்தை நடத்திக் கொண்டு அவ்விரு சாராரும் நடத்தும் வாதப் பிரதிவாதங்கள் சுவாரஸ்யமாகவே இருக்கும். அதேபோல் ஸ்ரீ ல.சு.கவுக்கும் பொதுசன முன்னணிக்கும் இடையிலான போட்டியும் வாதப் பிரதிவாதங்களும் விசித்திரமானதாகவே அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், ஸ்ரீ ல.சு.கவும் பொதுசன முன்னணியும் தாமே காலஞ்சென்ற எஸ்.டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்க மற்றும் சிறிமா பண்டாரநாயக்க ஆகியோரின் அரசியல் வாரிசுகள் எனக் கூறிக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ ல.சு.கவின் தலைமை பதவியை ஏற்றதன் காரணமாகவே இந்த விபரீத அரசியல் நிலைமை உருவாகியிருக்கிறது. அதுவும் நாட்டில் நிலவும் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் நேரடி விளைவேயாகும். கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட முன்வந்தார். அப்போது அவரை சதிகாரர் என்றும் துரோகியென்றும் மஹிந்தவின் தலைமையிலான ஸ்ரீ ல.சு.க தலைவர்கள் கூறினர். ஆனால் அவர் ஜனாதிபதியாகப் பதவியை ஏற்று 10 நாட்களுக்குள் அத்தலைவர்கள் எவ்வித வெட்கமும் இன்றி, அவரை ஸ்ரீ ல.சு.க தலைவராக நியமித்து, ஏற்றுக் கொண்டார்கள். இது அரசியல் சந்தரப்பவாதம் இல்லையென்றால் வேறென்ன?

அவர் பதவிக்கு வந்ததன் பின்னர் ஸ்ரீ ல.சு.க தலைவர்கள் பலருக்கு எதிராக பல்வேறுபட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. பலர் இரகசியப் பொலிஸாரினாலும் நிதிக் குற்றப் பிரிவினராலும் விசாரிக்கப்பட்டனர். ஆனால் அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்ள அவ்வாறு விசாரிக்கப்பட்டவர்கள் சிலருக்கும் அமைச்சர் பதவி வழங்கி அவர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ள ஜனாதிபதி நிர்ப்பந்திக்கப்பட்டார்.இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான விசாரணைகளும் கிடப்பில் போடப்பட்டதாகவே தெரிகிறது.

அதேவேளை மைத்திரிபால ஜனாதிபதியாக பதவியேற்ற ஆரம்ப காலத்தில் பயந்து பதுங்கியிருந்த ஸ்ரீ ல.சு.கவினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் பலர் பின்னர் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள எடுக்காது என்பது தெரிந்ததன் பின்னர் துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். இந்த நிலையில் ஜனாதிபதி ஸ்ரீ ல.சு.கவின் தமது தலைமைப் பதவியை பாதுகாகத்துக் கொள்ள பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.

இதனைக் கண்ட மைத்திரி பால சிறிசேனவுக்கு ஜனாதிபதியாவதற்கு பெருமளவில் உதவி செய்த சிவில் சமூக அமைப்புக்கள் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ ல.சு.க தலைமைப் பொறுப்பை ஏற்றது பிழையானது எனக் கூறினர்.கடந்த அரசாங்கத்தில் இருந்த ஊழல்பேர்வழிகள் சகலருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள். ஆனால்அவ்வாறு நடவடிக்கை எடுக்கவோ அதற்காக ஸ்ரீ ல.சு.கவின் தலைமை பதவியை ஏற்காமல் இருக்கவோ பொருத்தமான சூழல் நாட்டில் இருக்கவில்லை என்பதே உண்மை.

ஏனெனில் மைத்திரிபால கடந்த வருடம் ஜனவரி மாதம் ஸ்ரீ ல.சு.க தலைமை பதவியை ஏற்காமல் இருந்தால் அக்கட்சி மொத்தமாவே மஹிந்தவின் பின்னால் அணி திரண்டு இருக்கும். கடந்த வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது அவ்வாறு ஸ்ரீ ல.சு.க முழுமையாக மஹிந்தவின் பின்னால் அணி திரண்டு இருந்தால் சிலவேளை அக்கட்சி அத் தேர்தலின் போது வெற்றி பெற்று இருக்கவும் கூடும். அதனால் மஹிந்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டு இருக்கவும் கூடும்.
மைத்திரி கட்சித் தலைமையை ஏற்றதன் பின்னர் ஸ்ரீ ல.சு.க ஓரளவுக்கு பிளவுபட்டே அத் தேர்தலின் போது போட்டியிட்டது. அக்கட்சியை சேர்ந்த ஹிருனிக்கா போன்ற ஜனரஞ்சகமான சிலர் ஐ.தே.கவுடன் இணைந்தனர். கொலன்னாவை அரசியல்வாதியான பிரசன்ன சோலங்கஆரச்சி போன்றவர்கள் ஸ்ரீ ல.சு.க சார்பில் போட்டியிட்டும் மைத்திரியின் ஆதரவாளர்கள் என்ற காரணத்தினால் கட்சியின் சிலரது சதியின் காரணமாகவே தோற்கடிக்கப்பட்டனர். ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களையும் அது வரை நாட்டை ஆட்சி செய்து பலமான நிலையில் இருந்த ஸ்ரீ ல.சு.க வெறும் 95 ஆசனங்களையும் பெறுவதற்கான காரணம் அதுவேயாகும்.ஸ்ரீ ல.சு.க பிளவுபடாமல் தேர்தலை எதிர்நோக்கியிருந்தால் அக்கட்சி கடந்த வருடம் பெற்றதை விடக்கூடுதலான ஆசனங்களை பெற்றிருக்கும். சிலவேளை வெற்றியடைந்தும் இருக்கும் என்று அதனாலேயே கூறுகிறோம்.

அவ்வாறு ஸ்ரீ ல.சு.க வெற்றி பெற்றிருந்தால் மஹிந்தவை பிரதமராக நியமிக்க மைத்திரி நிர்ப்பந்திக்கப்படுவார். வெற்றி பெற்ற கட்சியைச் சேர்ந்த மற்றொருவரை மைத்திரிபால பிரதமராக நியமித்தாலும் அதனை ஏற்காதிருக்க ஸ்ரீ ல.சு.கவுக்கு முடியும். எனவே, இறுதியில் மஹிந்தவையே பிரதமராக நியமிக்க மைத்திரி நிர்ப்பந்திக்கப்படுவார். மைத்திரிபால ஜனாதிபதியாக இருக்க மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டு இருந்தால் ஜனாதிபதியாக இருந்தாலும் மைத்திரிபால நிம்மதியாக வாழ முடியாது.

மஹிந்த பிரதமராக இருந்தால் அவர் முன்னர் செய்ததைப் போலவே மீண்டும் பணம் கொடுத்து எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை திரட்டிக் கொண்டு சிலவேளை கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் ரத்துச் செய்திருக்கலாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தால் குற்றப் பிரேரணையொன்றின் மூலம் மைத்திரியையும் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கவும் முடியும்.

ஆனால் மைத்திரி ஸ்ரீ ல.சு.க தலைமைப் பதவியை ஏற்றதன் காரணமாக இவ்வனைத்தும் தடுக்கப்பட்டது. எனவே மைத்திரி புத்திசாலித் தனமாக நடந்து கொண்டிருக்கிறார் என்று கூற முடியும். ஆனால் அது பிரச்சினையின் ஒரு புறம் மட்டுமே. அவர் கட்சித் தலைமையை ஏற்றதன் விளைவாகத் தான் முன்னர் நாம் கூறியதைப் போல் தற்போதைய சிக்கலான அரசியல் நிலைமை உருவாகியிருக்கிறது. அது பிரச்சினையின் மறுபக்கம் எனலாம்.

தற்போதைய நிலையில் மைத்திரிபால உண்மையிலேயே அடுத்து வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது ஸ்ரீ ல.சு.கவை வெற்றிபெறச் செய்ய முயற்சித்தால் நிச்சயமாக தற்போதைய கூட்டரசாங்கம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கும். ஏனெனில், அது தற்போதைய கூட்டரசாங்கத்துக்குள் மோதல்களை தோற்றுவிக்கும். பெரும்பான்மையான ஸ்ரீ ல.சு.கவின் அடி மட்டத் தொண்டர்கள் இன்னமும் மஹிந்தவை விரும்பும் நிலையில் இந்த மோதல் மைத்திரியை தனிமைப்படுத்தும்.

எனவேதான் கடந்த வருடம் பொதுத் தேர்தலின் போது மைத்திரிபால தாம் தலைமை தாங்கிய கட்சி தோல்வியடையும் வகையில் நடந்து கொண்டார். அது ஒரு விசித்திரமான அரசியல் நிலைமையாகும். மஹிந்தவை பிரதமராக்க வேண்டும் என்ற கோஷத்துடனேயே பெரும்பாலான ஸ்ரீ ல.சு.ககாரர்கள் தேர்தல் களத்தில் இறங்கினர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராகவும் மைத்திரிபால இருந்த போதிலும் அக்கட்சி கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் மஹிந்தவே பிரதமராக நியமிக்கப்படுவார். அது மஹிந்தவின் தலைமையில் ஐ.ம.சு.மு போட்டியிட்டதற்கு சமமாகும். மஹிந்த பிரதமரானால் என்ன நடக்கும் என்பதை மைத்திரி நன்கு உணர்ந்திருந்தார்.

எனவேதான் அவர் தாம் தலைமை தாங்கிய கட்சியையே தோற்கடிக்கும் வகையில் செயற்பட்டார்.ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததைப் போலவே மஹிந்த பொதுத் தேர்தலின் போதும் தோல்வியை தழுவிக் கொள்வார் என மைத்திரி அறிக்கைவிட்டு ஸ்ரீ ல.சு.க வாக்காளர்களை குழப்பினார். பின்னர் மற்றொரு அறிக்கையின் மூலம் ஐ.ம.சு.மு வெற்றிபெற்றாலும் மஹிந்தவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை எனக் கூறினார். இதனால் அடிமட்ட ஸ்ரீ ல.சு.ககாரர்கள் மனமுடைந்து போனார்கள்; விரக்தியடைந்தார்கள். இது பொதுத் தேர்தலின் போது ஐ.ம.சு.மு தோல்வியடையவும் ஐ.தே.க வெற்றியடையவும் பெரிதும் காரணமாகியது.

எனவே கட்சிக் கூட்டங்களில் மைத்திரிபால எதைத் தான் கூறினாலும் தாம் தலைமை தாங்கும்கட்சி தோல்வியடைவதே இன்னமும் அவருக்கு சாதகமான நிலைமையாகும். ஆனால் அதேவேளை ஜ.ல.சு.கவிலிருந்து பிரிந்து சென்று தற்போது தனிக் கட்சியாக வரப்போகும் மஹிந்த அணி வெற்றி பெறுவதையும் மைத்திரி விரும்ப மாட்டார். சுருக்கமாக ஐ.தே.க வெற்றி பெறுவதையே மைத்திரி விரும்புவார்.

ஆனால் ஸ்ரீ ல.சு.கவின் பெரும்பான்மை பலம் தமக்குக் கிடைக்கும் நிலை உருவாகினால் மைத்திரி பயமின்றி ஸ்ரீ ல.சு.க வெற்றி பெறும் வகையில் நடந்து கொள்வார். அவ்வாறானதோர் நிலைமை நாட்டில் இல்லை. இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது 162 வாக்குகளைப் பெற்று அத்திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஸ்ரீ ல.சு.க சாதாரண வாக்காளர்களும் மைத்திரியின் தலைமைமையை அவ்வாறே ஆதரிக்கிறார்கள் என்று கூற முடியாது.

நாட்டில் சிறுபான்மை மக்கள் மஹிந்தவை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வெறுத்ததைப் போலவே இன்னமும் வெறுக்கிறார்கள் போல் தான் தெரிகிறது. ஆனால் சிறுபான்மை மக்களின் ஆதரவை மைத்திரியும் எவ்வளவு காலம் தக்கவைத்துக் கொள்வார் என்ற சந்தேகம் தற்போது உருவாகி வருகிறது. ஏனெனில் அவரது காலத்திலும் சிறுபான்மை மக்களை இம்சிக்கும் பெரும்பான்மையினர் தண்டிக்கப்படுவதில்லை. அவரது காலத்திலும் வெறுப்புப் பேச்சு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே மைத்திரி தொடர்ந்தும் ஐ.தே.கவின் பாதுகாப்பில் இருக்கவே விரும்புவார். வெறுமனே மஹிந்தவின் மீள்வருகையை தடுக்கும் வகையில் மட்டுமே அவர் ஸ்ரீ.ல.சு.கவை வழிநடத்துவார் என ஊகிக்க முடிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நண்பனுக்கும் நெருங்கிய நண்பனுக்கும் வித்தியாசம் இருக்கிறதா…? நீங்களே பாருங்கள்…!! வீடியோ
Next post சபர்ணாவை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகை மரணம்…!!