திலீபனின் இறுதிநாள்! : கடைசி ஆசையாக கிட்டு அண்ணாவை பார்க்க விரும்பிய திலீபன்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -102) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

Read Time:21 Minute, 43 Second

timthumbதிலீபனின் இறுதிநாள்
•“பாரதம் மீது தர்ம யுத்தம்” பிரபா விடுத்த செய்தி

ஐந்தாம் நாள்

•திலீபனின் மரணத்துடன் வடக்கு-கிழக்கில் இந்தியப் படைக்கு எதிரான உணர்வுகள் தலைதூக்க ஆரம்பித்தன.

• இந்தியப் படையினர் தமிழ் மக்களை காக்க வந்த இரட்சகர்கள்’ என்று தமிழ் மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். இப்படியே போனால் போராட்டத்தை மறந்துவிடுவார்கள் என பயந்த பிரபாகரன்.

தொடர்ந்து…

திலீபனின் சொந்தப் பெயர் பார்த்திபன். திலீபன் பிறந்து பத்தாவது மாதத்திலேயே தாயார் இறந்துவிட்டார். தந்தையார் இராசையா ஒரு ஆசிரியர்.

யாழ்ப்பாணம் ஊரெழுதான் சொந்த ஊர். உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலை, உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை, யாழ் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவன்.

யாழ் வைத்திய பீட மாணவனாக கல்வி கற்கும் வாய்ப்பை உதறிவிட்டு, 1983ல் புலிகள் அமைப்பில் சேர்ந்து கொண்டார்.

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகி ஐந்து நாட்கள் சென்ற நிலையில் பத்திரிகை ஒன்று பின்வருமாறு தெரிவித்தது.

“திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வருகின்றது. அவர் கடைசியாக சிறுநீர் கழித்து 48 மணித்தியாலங்களுக்கு மேலாகி விட்டது. இதே நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறுநீர் கழிக்காவிட்டால், அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதிர்ச்சி ஏற்படும்”

ஐந்தாம் நாளன்று இந்தியப்படையின் யாழ் கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் பரார் திலீபனைப் பார்ப்பதற்காக வந்தார்.

அவரைக் கண்டதும் குழுமியிருந்த மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்து ஐந்து நாட்களாகியும் இந்தியா மௌனமாக இருந்தமை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

பராரை புலிகள் இயக்கத்தினர் சார்பில் யோகி வரவேற்றார். திலீபனின் உடல்நிலை தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்.

பரார் முகத்திலும் கவலைக் குறிகள்.”நான் சென்று இது தொடர்பாக மேலிடத்துக்குத் தெரிவிக்கிறேன், உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கிறேன்.” என்று சொல்லிவிட்டுச் சென்றார் பரார்.

ஆறாம் நாள்

கொழும்பில் இந்தியத் தூதரகத்திலிருந்து முக்கியமான ஒருவர் யாழ்ப்பாணம் வருகிறார். புலிகள் இயக்கத்தினருடன் பேச்சு நடத்தப் போகிறார் என்று செய்திகள் அடிபட்டன.

ஆறாம் நாளன்று யோகி, மாத்தையா, அன்ரன் பாலசிங்கம் ஆகியோருன் இந்திய அதிகாரிகள் பேச்சு நடத்தினார்கள். ஆனால் அப்பேச்சுவார்த்தையில் இந்திய தூதரக அதிகாரிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

இந்தியப் படையின் மூத்த தளபதி ஒருவரும், பிரிகேடியர் ராகவன், எயார் கொமாண்டர் ஜெயக்குமார், கடற்படைத்தளபதி ஆகியோருமே பேச்சில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் இந்திப்படை சார்பாக கலந்து கொண்டவர்களால் தீர்க்கமான முடிவு எதனையும் கூறமுடியவில்லை. இந்தியத் தூதர் தொடர்ந்தும் பிடிவாதமாகவே இருப்பதாகத் தெரிந்தது.

புலிகள் இயக்கத்தினர் வேண்டுமென்றே பிரச்சனைக்ளைக் கிளப்புகிறார்கள் என்ற நினைப்புடன் திக் ஷித் பிடிவாதமாக இருப்பதாகத் தெரிந்தது.

இந்திய அதிகாரிகளுடன் பேசியது தொடர்பாக திலீபனிடம் சென்று விளக்கினார் யோகி. “என்ன செய்யலாம்?” என்று கேட்டார் யோகி.

சரியாகப் பேசவே முடியாத நிலையில் துவண்டுபோயிருந்த திலீபன், யோகியிடம் சொன்னது இது:

“எந்த முடிவும் நல்ல முடிவாக இருக்க வேண்டும். ஐந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தரவேண்டும். இல்லையெனில் நான் உண்ணாவிரதத்தைக் கைவிடமாட்டேன்.”

திலீபன் எதிர்பார்த்த முடிவு கிட்டுவதாகத் தெரியவில்லை. ஏழாம்நாள், எட்டாம் நாள், என்று கடந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டன,

ஒன்பதாவது நாள் தான் இந்தியத் தூதர் திக் ஷித் யாழ்ப்பாணம் வந்தார். பிரபாகரனைச் சந்தித்தார். அச்சந்திப்புலும் திட்டவட்டமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

மினி பஸ்களிலும், கால் நடையாகவும் நல்லூர் கந்த சுவாமி கோவில் வீதிக்கு வந்து சேர்ந்த மக்கள் வெள்ளம் அலை மோதியது. படுக்கையில் சுருண்டு கிடந்தார் திலீபன். அவரது நாடித்துடிப்பை பரிசோதித்தவர்கள் திகைத்து நின்றனர்.

ஒரு விளக்கு அணையப் போகிறது. எந்த நேரத்திலும் சாவு திலீபனை அணைக்கலாம் என்பது தெரிந்துவிட்டது.

பத்தாம் நாள் அன்று, தன் அருகே இருந்த வாஞ்சிநாதனிடம் தனது ஆசையைக் கூறுகிறார்:

“கிட்டண்ணாவைப் பார்க்க வேண்டும் போலக் கிடக்கு.”

கிட்டுதான் திலீபனை யாழ் மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக பிரபாகரனிடம் சிபாரிசு செய்தவர்.

கிட்டு அப்போது தமிழ் நாட்டில் இருந்தார். அது திலீபனுக்கும் தெரியும். ஆயினும் தனது முடிவை ஊகித்துக் கொண்ட நிலையில் தனது ஆசையைத் தெரிவித்தார்.

யாழ் குடாநாடெங்கும் அடையாள உண்ணாவிரதங்கள் நடந்து கொண்டிருக்க, மாணவர்கள் நீண்ட தூரங்களில் இருந்து ஊர்வலமாக வந்து திலீபனுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் உண்ணாவிரதப் போராட்டங்களும், மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

திடீர் சுற்றிவளைப்பு

திலீபன் யாழ்ப்பாணத்தில் நவாலிப்பகுதிக்குப் பொறுப்பாக இருந்தபோது நடைபெற்ற ஒரு சம்பவத்தை இடையில் குறிப்பிட வேண்டும்.

நவாலிக் கத்தோலிக்க தேவாலயம் அருகில் நின்ற பொதுமக்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார் திலீபன்.

திடீரென்று இரண்டு ஜீப் வண்டிகள் வந்து நின்றன. ஜீப் வண்டிககளில் இருந்து இரணுவத்தினர் கீழே குதித்தனர். திலீபனின் கையிலே ஒரு சூட்கேஸ் இருந்தது. உள்ளே இயக்க ஆவணங்களும், கைத்துப்பாக்கியும் இருந்தன.

ஓடுவதற்கும் முடியாது, கைத்துப்பாக்கியை வெளியே எடுப்பதற்கும் அவகாசமில்லை.

அப்படியே அசையாமல் நின்றார் திலீபன். சூட்கேசுடன் நின்ற திலீபனை நோக்கி வந்த இராணுவத்தினர், அவரது அருகே நெருங்கியதும் துரிதமாகச் செயற்பட்டார் திலீபன்.

அருகில் வந்த இராணுவத்தினரை சூட்கேசால் தாக்கிவிட்டு, அருகிலுள்ள பனந்தோப்பு வழியாக ஓடத் தொடங்கினார்.

இராணுவத்தினர் சுடத் தொடங்கினார்கள். திலிபனின் கையில் வெடிபட்டது.

வெடிபட்டபோதும் ஓடித்தப்பிவிட்டார் திலீபன்.

1986ம் ஆண்டில் வல்வெட்டித்துறையில் இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதல் ஒன்றில் திலீபன் படுகாயமடைந்தார்.

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் திலிபனின் குடல் சிதைந்து போனது.

தீவிர சிகிச்சையால் உயிர் தப்பினார் திலீபன். அதே திலீபனின் உயிர்தான் உண்ணாவிரத மேடையில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

பதினோராம் நாள்

25.09.1987 திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பித்து பதினோராம் நாள். திலீபனின் உண்ணாவிரதத்தை நியாயப்படுத்துவதாக ஒரு சம்பவம் அமைந்தது.

24.09.87 அன்று திருக்கோணமலையில் விறகு வெட்டச் சென்ற எட்டுத் தமிழர்கள் குடியேற்றவாசிகளால் வெட்டிக்கொல்லப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

இதேவேளை இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியில் வட பிராந்தியக் குழுவும் இந்தியாவைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

26ம் திகதி முதல் யாழ் மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும், போக்குவரத்து ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்வதற்கு புலிகள் இயக்கத்தினர் ஏற்பாடுகளைச் செய்தனர்.

திலீபன் சுயநினைவை இழந்து கொண்டிருந்தார். திலீபனின் இருகே இருந்த மேடையில் இருந்து ஒலிபரப்பான பாடல் ஒன்று கூடியிருந்த மக்களை நெசிழச் செய்தது. பலர் கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

அந்தப்பாடல் இதுதான்.

“ஓ மரணித்த வீரனே!-உன்
ஆயுதங்களை எனக்குத்தா-உன்
சீருடைகளை எனக்குத்தா-உன்
பாதணிகளை எனக்குத் தா”

இறுதி நாள்

29.06.1987 அன்றுதான் திலீபனின் இறுதிநாள்.

நேரம் அதிகாலை ஐந்துமணி. திடீரென்று மின்சாம் தடைப்பட்டது. (அப்போது யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இருந்தது.)

திலீபன் படுத்திருந்த மேடையில் இருள் சூழ்ந்தது.

மெழுகுவர்த்தியொன்றை மேடையில் எரிய வைத்தனர். பலமாக வீசிய காற்று அதனை அணைத்து விட்டது.

ஐந்து நிமிடங்களுக்குள் மின்சாரம் மீண்டும் உயிர்த்தது.

ஆனால் திலீபன்?

மெல்ல மெல்ல உயிர் பிரிந்து கொண்டிருந்தது.

டாக்டர் சிவகுமார் திலீபனின் அருகே சென்றார். அவரைப் பரிசோதிதுப் பார்த்தார். டாக்டர் சிவகுமாரையே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“திலீபன் நம்மைவிட்டுப் போய்விட்டார்” என்று சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கினார் டாக்டர் சிவகுமார்.

அப்போது நேரம் காலை 10.48

எங்கும் அழுகை ஒலி. திலீபனின் உடல் மேடையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

பிற்பகல் 4.15 மணிக்கு புலிகள் இயக்க இராணுவச் சீருடையுடனும், தொப்பியுடனும் திலீபனின் உடல் அதே மேடைக்குக் கொண்டு வரப்பட்டது.

‘லெப்டினன்ட் கேணல்’ என்ற பட்டம் வழங்கப்பட்டு, மக்களின்; அஞ்சலிக்காக திலீபனின் உடல் வைக்கப்பட்டது.

பிரபாவின் செய்தி

“திலீபனின் உடலைக்காணவந்த அவரது தந்தையார் இராசையா ‘ஓ’வென்று கலங்கி அழுதுவிட்டார்.

பிரபாகரன், மாத்தையா உட்பட புலிகள் இயக்கத் தலைவர்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

திலீபனின் மரணத்தை அடுத்த பிரபாகரன் ஒரு செய்தி விடுத்தார். இந்தியா மீதும் பிரபாகரன் கண்டனம் தெரிவித்திருந்தார். அச்செய்தி இதுதான்.

“எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைச் செய்திருக்கிறது. வீரகாவியங்களை படைத்திருக்கிறது. இவையெல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள்.

ஆனால், எனது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது, வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது.

சாத்வீகப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற தியாகத்தை திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி.

தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டியெழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலைகுனிய வைத்த நிகழ்ச்சி.

உலகத்தின் மனசாட்சியைத் தீண்டிவிட்ட நிகழ்ச்சி. திலீபன் உங்களுக்காக இறந்தான். உங்கள் உரிமைக்காக இறந்தான். உங்கள் மண்ணுக்காக இறந்தான். உங்கள் பாதுகாப்புக்காக இறந்தான். உங்கள் சுதந்திரத்திற்காக, கௌரவத்திற்காக இற்நதான்.

ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது உரிமை. எமது சுதந்திரம். எமது கௌரவம்!.

நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்நத ஒரு இலட்சியப் போராளி என்ற வகையில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு…

இந்தியா கவலை

திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கிறது. இது அர்த்தமற்ற சாவு என்று இந்தியத் தூதர் கூறியிருக்கிறார்.

தமது உறுதிமொழிகளை நம்பியிருந்தால் திலீபன் உயிர் தப்பியிருப்பான் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன? என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எமது உரிமைகள் வழங்கப்படும். எமதுத மக்களுக்கு, எமது மண்ணுக்கு பாதுகாப்பபு அளிக்கப்படும். தமிழ்மக்கள் தமது பாரம்பரிய பூமியில் தம்மைத் தாமே ஆளும் வாய்ப்பு அளிக்கப்படும்-இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி, நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம்.

எமது மக்களினதும், மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம். இதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எனது மக்களாகிய உங்களுக்குத் தெரியும்.

தமிழ் அகதிகள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்க, சிங்களக் குடியேற்றம் துரித கதியில் தமிழ் மண்ணை விழுங்கியது.

சிங்கள் அரசின் பொலிஸ் நிர்வாகம் தமிழ் பகுதிகளில் விஸ்தரிக்கப்பட்டது.

அவசர, அவசரமாக சிங்கள இனவாத அரசயந்திரம் தமிழ்ப்பகுதிகளில் ஊடுருவியது. சமாதான ஒப்பந்தம் என்ற போர்வையில் சமாதானப் படையின் அனுசரணையுடன் சிங்கள் அரச ஆதிக்கம் தமிழீழத்தில் நிலை கொள்ள முயன்றது.

இந்தப் பேராபத்தை உணர்ந்துகொண்ட திலீபன் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி காணத் திடசங்கற்பம் கொண்டான்.

தர்மயுத்தம்
சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் அர்த்தமில்லை. பாரதம் தான் எமது பிரச்சனையில் தலையிட்டது. பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம் தான் எமது ஆயுதப் போராட்டத்தை நிறுத்திவைத்தது.

ஆகவே பாரத அரசிடம்தான் நாம் உரிமைக் கோரிப்; போராட வேண்டும். எனவே தான் பாரதத்துடன் தர்மயுத்தம் ஒன்றை ஆரம்பித்தான் திலீபன். அத்தோடு பாரதத்தின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அகிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக் கொண்டான்.

நீராகாரம் கூட அருந்தாது மரண நோன்பைத் திலீபன் தழுவிக் கொள்வதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னரே, இந்தியத் தூதர் திக் ஷித்துக்கு நாம் முன்னறிவித்தல் கொடுத்தோம்.

உண்ணாவிரதம் ஆரம்பமாகி எட்டு நாட்கள் வரை எதுவுமே நடைபெறவில்லை. பதிலுக்கு இந்திய அரசின் கீழுள்ள தொடர்புச் சாதனங்கள் எம்மீது விஷமத்தனமான பொய்ப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டன. திலீபனின் உண்ணாவிரத்தைக் கொச்சைப்படுத்தின.

ஒன்பதாவது நாள் இந்தியத் தூதர் வந்தார். உருப்படியில்லாத உறுதிமொழிகளைத் தந்தார்.

வெறும் உநுதிமொழிகளை நம்பி எமது இனம் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகிறது.

உருப்படியான திட்டங்களை முன்வையுங்கள். எமது கோரிக்கைகளை நிறைவேற்றி வையுங்கள். அதுவரை உண்ணாவிரதம் கைவிடப்படமாட்டாது என்றேன்.

உங்களுக்கு திலீபனின் உயிர்மீது அக்கறை இருந்தால், நீங்கள் அவனை வந்து பாருங்கள். எமது மக்களுக்கு முன்பாக அவனிடம்

உறுதிமொழிகளைக் கூறுங்கள். நாம் உண்ணாவிரத்தை வாபஸ் பெறுகிறோம் என்றேன். அதற்கு இந்தியத் தூதர் மறுத்துவிட்டார்”

அதுதான் பிரபாகரன் விடுத்த செய்தி”.

எதிர்ப்பு
திலீபனின் மரணத்துடன் வடக்கு-கிழக்கில் இந்தியப் படைக்கு எதிரான உணர்வுகள் தலைதூக்க ஆரம்பித்தன.

இதற்கிடையே இடைக்கால நிர்வாக சபை ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சுக்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இடைக்கால நிர்வாக சபையை ஏற்றுக் கொண்டு மேலும் சில காலத்திற்கு பொறுத்திருப்பதா?

அல்லது திலீபனின் மரணத்தால் ஏற்பட்டுள்ள எழுச்சயை வைத்து மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்பதா? என்பதைத் தான் பிரபாகரன் தீர்மானிக்க வேண்டியிருந்தது.

‘இந்தியப் படையினர் தமிழ் மக்களை காக்க வந்த இரட்சகர்கள்’ என்று தமிழ் மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இப்படியே போனால் போராட்டத்தை மறந்துவிடுவார்கள் என்பதுதான் புலிகள் இயக்கத்தினரின் கவலையாக இருந்தது.

திலீபனின் மரணமும் , அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அனுதாபமும் புலிகள் இயக்கத்தினருக்கு ஓரளவு ஆறுதலாகவே அமைந்தன.

இடைக்கால நிர்வாக சபைக்கு பெயர்களைத் தருமாறு புலிகள் அமைப்பிடம் கேட்கப்பட்டது.

இந்தியாவுக்கும், புலிகளுக்கும் இடையிலான உறவின் கடைசி எல்லை நெருங்கிக் கொண்டிருந்தது.

(தொடர்ந்து வரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாலையின் நடுவில் நின்று முத்தம் கொடுத்த காதலர்கள்: நிகழ்ந்த விபரீதம்…!!
Next post காலையில் சாப்பிடலனா இந்த பிரச்சனை வருமாம்: உஷார்…!!