By 31 December 2016 0 Comments

மாவட்ட அபிவிருத்தி சபைகளும் அரசியல் தீர்வும்…!! கட்டுரை

article_1482212918-jr-gamiநல்லெண்ணமா, சாணக்கியமா?

1980 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டத்தின் மூலம், இலங்கை முழுவதுக்கும் மாவட்ட சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இலங்கையில் நிலவிய இனப்பிரச்சினைக்கு, அரசியல் தீர்வொன்றைக் கோரிநின்ற தமிழ் மக்களுக்கு, தீர்வு வழங்கும் பொருட்டே ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பெரும்பாலும் பொருளாதார அபிவிருத்தி மைய நோக்குடையதான உள்ளூராட்சி மன்றுகளின் வடிவிலேதான் இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் காணப்பட்டன. ஆனால், டொனமூர் ஆணைக்குழுவின் காலத்திலிருந்து அதிகாரப் பகிர்வுக்கான குரல் சிறுபான்மை இனங்களிடையே இருந்து ஒலித்துக் கொண்டிருந்தாலும், அதனால் விளைந்த பயன் ஏதுமிருக்கவில்லை. மாவட்ட சபைகள் என்ற திட்டத்தைப்பற்றி டட்லி சேனநாயக்க அரசாங்கம் பேசியிருந்தாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆகவே, இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பில், குறைந்தளவிலேனுமொரு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் விடயம் இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளாகும். இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளினால் தமிழ் மக்கள் வேண்டிய சுயநிர்ணயமும் அதிகாரப் பகிர்வும் கிடைத்துவிட்டதா என்று கேட்டால், அதற்கான பதில் எதிர்மறையானதுதான். ஏனெனில், 1980 ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் தனிநாடு பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டிருந்தார்கள்.

இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை 1956 இல் அல்லது குறைந்தபட்சம் 1965 இல் ஆயினும் அறிமுகப்படுத்தியிருந்தால் அது தமிழ் மக்களைத் திருப்தி செய்திருக்கக்கூடும். ஆனால், சுமுகமான, குறைந்தபட்சத் தீர்வுகளில் தமிழ் மக்கள் மட்டுமல்ல, அஹிம்சை வழியில் இணக்க அரசியலை விரும்பிய தமிழ்த் தலைமைகளே நம்பிக்கையிழந்து, தனிநாடுதான் தீர்வு என்று தீர்மானித்துவிட்ட பின்னர், அதை முன்னிறுத்தித் தமிழ் இளைஞர்கள் சிலர் ஆயுதங்கள் ஏந்திவிட்ட பின்னர், இத்தகைய குறைந்த பட்சத் தீர்வொன்றை முன்வைத்தமையானது, ஜே.ஆரின் சாணக்கிய சூதாட்டமேயன்றி, நல்லெண்ணம் என்று எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியும்?

அதேவேளை, மறுபுறத்தில் தமிழ் மக்களுக்கு எந்தவொரு குறைந்த பட்சத் தீர்வையும் கூட, இதுவரை வந்த எந்த அரசாங்கமும் அரசியல் தலைமையும் தந்திராத பட்சத்தில், குறைந்த பட்சம் மாவட்ட அபிவிருத்திச் சபைகளையேனும் வழங்க முன்வந்த ஜே.ஆர் பாராட்டுக்குரியவர் அல்லவா என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கலாம்.

இங்கு ஜே.ஆர் தீர்வு தந்தார்; யாரும் இதுவரை தர முன்வராத தீர்வைத் தர முன்வந்தார் என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், தமிழ் மக்கள் வேண்டியது இதனை அல்ல என்பதனையும் நாம் மறுக்க முடியாது. புற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் துடித்துக்கொண்டிருப்பவனுக்கு ‘பரசிட்டமோல்’ கொடுத்துவிட்டு, இதுவும் வலி நிவாரணி என்று சொல்வதைப் போலதான் ஜே.ஆர் தந்த தீர்வும்.

தமிழ்த் தலைமை எதிர்கொண்ட அழுத்தம்

ஆனால், தமிழ் அரசியல் தலைமைகள் மிகுந்த பொறுப்புணர்வோடு இதனைக் கையாண்டிருந்தன என்று குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், இத்தகைய குறைந்தபட்சத் தீர்வை இலகுவில் புறக்கணித்துவிட்டு, பிரிவினை கோரிச் சென்றிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் தமிழ் மக்களை அரசாங்கம் இன்னும் அடக்கியொடுக்க ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும்.

தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியிலான தீர்வை மறுக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, இதனை அரசாங்கம் இலகுவில் கடந்துபோக ஒரு வாய்ப்பாக அது அமைந்திருக்கும். ஆகவேதான், ஜனநாயக ரீதியிலான தீர்வொன்றின் மீது தமிழ் மக்களுக்கிருக்கும் நம்பிக்கையைப் பறைசாற்றும் வகையில் தமிழ்த் தலைமைகள் இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தீர்வையும் ஏற்றுக்கொண்டன.

இந்த முடிவினால் தமிழ் ஐக்கிய கூட்டணியும் அதன் தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் கடும் எதிர்ப்பையும் அழுத்தத்தையும் சந்திக்க வேண்டியேற்பட்டது. குறிப்பாக, தமிழ் இளைஞர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்பு 1980 ஏப்ரல் மாதத்திலேயே வலுவடையத் தொடங்கியிருந்தது.

தமிழ் இளைஞர் முன்னணி, 1980 ஏப்ரலில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 1980 மே மாதத்துக்குள் ஒரு விடுதலை இயக்கமாக மாற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்தது. இது நடக்காவிட்டால் தமிழ் இளைஞர் முன்னணி, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் என்று அறிவித்தது.

அன்று அவசர காலச் சட்டத்தின் கீழ் சிறைசென்று மீண்டிருந்த தமிழ் இளைஞர் முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான மாவை சேனாதிராஜா, தான் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகுவேன் என்றும் அறிவித்திருந்தார். இந்த அழுத்தத்தைத் தமிழரசுக் கட்சியின் பத்திரிகையாகவும் பின்னர் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பத்திரிகையாகவும் அறியப்பட்ட ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் கோவை மகேசனும் ‘சுதந்திரன்’ பத்திரிகையூடாக வழங்கினார்.

‘சுதந்திரன்’ பத்திரிகைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி’ நடந்துகொள்ள வேண்டும் என்று முழங்கியது. இதன் எதிரொலியாகச் ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் பதவியிலிருந்து கோவை மகேசன் நீக்கப்பட்டார். இளைஞர்களின் ஆக்ரோஷம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மேதின நிகழ்விலும் எதிரொலித்தது.

‘தனிநாட்டுக்கான அரசியலமைப்பை வரையும் அரசியலமைப்புச் சபை எங்கே?’, ‘பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு விடுதலைப் போருக்கு வாருங்கள்’ என்ற கோசத்தை இளைஞர்கள் முன்வைத்தார்கள். அவர்களது கோபம் அமிர்தலிங்கத்தின் மீது அதிகமாகவிருந்தது. அவர்களது நோக்கம், தனிநாடு என்பதை நோக்கி அமைந்தது. அவர்களையும் பிழை சொல்ல முடியாது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை’ முன்னிறுத்தித்தான் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தேர்தலில் களமிறங்கியது.

தனிநாடு என்ற கோசத்தையும் நம்பிக்கையையும் தமிழ் மக்களிடையே விதைத்தது தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி. அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றி என்பது தனிநாட்டுக் கோரிக்கைக்கான மக்களாணை. ஆகவே, அதை நடைமுறைப்படுத்தச் சொல்லும் தமிழ் இளைஞர்களின் கோரிக்கை பிழை என முற்றாக நிராகரித்து விடவும் முடியாது. ஒரு சிக்கலான சூழலைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எதிர்கொண்டிருந்தது.

அர்த்தமற்ற தீர்வுத்திட்டங்கள்

மறுபுறத்தில் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலை முன்வைத்து சில விடயங்களைச் சாதிக்க ஜே.ஆர் தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தயாரானது. ஜே.ஆரைப் பொறுத்தவரையில், இராணுவ ரீதியில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை அடக்க வேண்டும்; மறுபுறத்தில் அரசியல்த் தீர்வொன்றை முன்வைத்து தமிழ் ஜனநாயக சக்திகளை அதற்குள் மடக்கிவிட வேண்டும் என்ற இரட்டைத் திட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தார்.

ஆனால், அதேவேளை தன்னுடைய பெரும்பான்மைச் சிங்கள வாக்குவங்கியையும் திருப்திப்படுத்த வேண்டிய சூழல் அவருக்கிருந்தது. அரசியல்த் தீர்வு வேண்டியவர்கள் தமிழ் மக்கள். குறிப்பாக வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள். ஆனால், அவர்களுக்கு மட்டுமான தீர்வொன்றை வழங்கினால் அது தன்னுடைய வாக்கு வங்கியைப் பாதிக்கும் என ஜே.ஆர் எண்ணியிருக்கலாம்.

அதனால்தான், நாடுமுழுவதற்கும் பொதுவான தீர்வாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை முன்வைத்தார். அதாவது, இது எல்லா மாவட்டங்களுக்கும் பொதுவானது. ஜனாதிபதி, குறித்த மாவட்டங்களில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஸ்தாபிக்க முடியும் என்றுதான் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டமும் கூறியது. தீர்வு வேண்டியது வடக்கு-கிழக்குக்கு மட்டுமே.

ஆனால், நாடு முழுவதற்கும் அந்தத் தீர்வு வழங்கப்பட்டது. கையில் காயம்; கட்டுப்போட வேண்டுமென்றால், உடம்பு முழுக்க கட்டுப்போடுவதைப் போன்றதொரு விடயம். இதே விடயத்தைத்தான் ஜே.ஆர் 1987 இலும் 13 ஆம் சீர்திருத்தத்திலும் செய்தார்.தீர்வு வேண்டியது வடக்கும்-கிழக்கும்; ஆனால், மாகாண சபைகள் நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டன.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்று நாம் பேசும்போது, ஐக்கிய இராச்சியத்தை நாம் ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகளைக் கொண்டதுதான் ஐக்கிய இராச்சியம். இங்கு ஸ்கொட்லாந்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் வேல்ஸுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரப்பகிர்வுக்கும் வட-அயர்லாந்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரப்பகிர்வுக்கும் வேறுபாடுண்டு. அந்தந்த மக்கள் எதனை வேண்டினார்களோ, அதற்கேற்றவாறு அதிகாரப்பகிர்வு அமைந்தது.

ஆனால், தமிழ் மக்களுக்கென விசேடமாக ஒரு தீர்வை வழங்கினால் அது தன்னுடைய பெரும்பான்மை வாக்கு வங்கியைப் பாதிக்கலாம் என ஜே.ஆர் எண்ணியதாலோ என்னவோ, அவர் நாடு முழுவதுக்கும் பொதுவான தீர்வுகளை முன்வைத்தார். அவை கூட அரசியல் தந்திரோபாய நகர்வுகளாக இருந்தனவேயன்றி, நல்லெண்ணங்கொண்ட தீர்வுத்திட்டங்களாக இல்லை என்பதுதான் யதார்த்தமாக இருந்தது.

தமிழர்களைப் பிரித்தாளுதல்

மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களைப் பொறுத்தவரையில் தமிழர் பிரதேசங்களில் ஒரு மாவட்ட அபிவிருத்திச் சபையையேனும் கைப்பற்ற வேண்டும். அத்தோடு யாழ். மாவட்ட அபிவிருத்திச் சபையில் ஓர் ஆசனத்தையேனும் கைப்பற்ற வேண்டுமென ஜே.ஆர் எண்ணங்கொண்டிருந்ததாகவும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் அதேவேளை, தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை ஆதரிக்கவில்லை என்று சிங்கள மக்களுக்குக் காட்டுவதற்கு இது அவசியம் என்று ஜே.ஆர் கருதியதாகவும் தன்னுடைய ‘இலங்கை: தேசிய இனப்பிரச்சினையும் விடுதலைப் போராட்டமும் (ஆங்கிலம்)’ என்ற நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகிறார்.

இதில் நிறைய உண்மை இருக்கிறது. சிறிமாவோ காலத்திலிருந்து தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைச் சிதறுறச் செய்வதிலும், தமது கட்சி உறுப்பினர் ஒருவரை தமிழர் பிரதேசத்திலிருந்து தேர்தலில் வெற்றிபெறச் செய்வதிலும் பெரும்பான்மைத் தேசியக் கட்சிகள் அதீத ஆர்வங்கொண்டிருந்தன.

இந்த நிலை மஹிந்த ராஜபக்ஷ காலத்தைத் தாண்டி, இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தொடர்ந்து வந்த சகல அரசாங்கங்களும் தமிழ் மக்களின் ஒற்றுமையைத் தமக்கெதிரான சவாலாகவே கருதின. அதனால் தமிழர்களைப் பிரித்தாள்வதற்கான சகல முயற்சிகளையும் அவை முன்னெடுத்தன.

சிறிமாவோ தமிழ் அமைச்சர் ஒருவரை நியமித்து வடக்கு-கிழக்கில் அபிவிருத்தியை முன்னெடுத்தது முதல், இதே வேலையை மஹிந்த ராஜபக்ஷ செய்ததும், இன்று ரணில் விக்ரமசிங்க-மைத்திரிபால சிறிசேன ஆகியோர் செய்வதும் ஒரே தந்திரோபாயத்தின் அடிப்படையில் அமைந்ததுதான்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புறக்கணிப்பு

1981 மார்ச் 19 இல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 1981 ஜூன் நான்காம் திகதி மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டது. ஏற்கெனவே மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மசோதாவின் விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபோது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெளிநடப்புச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதும் தாம் அதைப் புறக்கணிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது. 1980 ஒக்டோபர் 16 ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டம் மற்றும் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம் என்பவற்றின் மூலம் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்ட நபரொருவர் தேர்தல்களில் எவ்வகையிலும் பங்கெடுப்பது தடுக்கப்பட்டது.

இதன் மூலம் சிறிமாவோவை முழுமையான அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் ஜே.ஆர் தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தள்ளியது. தன்னுடைய பிரதான போட்டியாளரை ஓரங்கட்டிவிட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மிகப்பெரும் சவாலாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி காணப்பட்டது.

ஐ.தே.கவின் தேர்தல் வியூகம்

1981 ஜனவரியில் பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். குறித்த விஜயம் வெற்றிகரமாக அமைந்தமையானது ஜே.ஆருக்கு தமிழர் பிரதேசங்களில் தாம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியிருந்ததாக கே.எம். டி சில்வாவும் ஹொவாட் றிக்கிங்ஸூம் தமது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசியல் சரிதையில் குறிப்பிடுகிறார்கள்.

ஜே.ஆர் தமிழர் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்று நினைத்ததில் தவறில்லை. ஆனால், அதற்காக அவர் களமிறக்கிய ஆட்கள்தான் தவறானது என்பதுடன், ஜே.ஆரின் நல்லெண்ணம் பற்றிய சந்தேகத்தையும் உருவாக்குவதாக அமைகிறது. மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல்களில் தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பை அன்று ‘சிங்கள பேரினவாதத்தைக்’ கக்கிக்கொண்டிருந்த அமைச்சரான சிறில் மத்யுவிடமும் அவருடைய தளபதியான காமினி திசாநாயக்கவிடமும் ஜே.ஆர் ஒப்படைத்திருந்தார்.

இந்தச் சூழலில் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களில் களமிறங்க ஒரு பலமான வேட்பாளர் தேவைப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சி அ.தியாகராஜாவை தமது வேட்பாளராகத் தெரிவுசெய்தது. 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்று, பின்னர் அன்று ஆளும் கட்சியாகவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குத் தாவிய அ.தியாகராஜாவை, இன்று ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் முதன்மை வேட்பாளராகக் களமிறக்கியது. ஏற்கெனவே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் துரோகி என முத்திரை குத்தப்பட்டிருந்த தியாகராஜா, மீண்டும் ஒரு சவாலான சூழலை எதிர்கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தமிழரெவரும் களமிறங்கக் கூடாது என்று மீண்டும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் எச்சரித்திருந்த சூழலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அ.தியாகராஜா களமிறக்கப்பட்டார்.Post a Comment

Protected by WP Anti Spam