தமிழகத்தில் பலப்படுமா திராவிட இயக்கம்? (கட்டுரை)

Read Time:14 Minute, 5 Second

article_1483450379-article_1480303869-kasinathதமிழகத்தில் இரு பெரும் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அ.தி.மு.கவுக்கு புதிய பொதுச் செயலாளர் தெரிவு செய்யப்படுகிறார். தி.மு.கவுக்கு செயல்தலைவர் நியமனம் செய்யப்படுகிறார். இரு கட்சிகளுக்கும் புதிய தலைமை வழி நடத்திச் செல்லும் சூழல் மீண்டும் திராவிட இயக்கங்களுக்குள் நிகழ்ந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து 1949 இல் பிரிந்தது. பேரறிஞர் அண்ணாவின் கீழ் திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது.

அதேபோல் 1972 இல் தி.மு.கவிலிருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் மறைந்த எம்.ஜி.ஆர். மறைந்த தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, ஜெயலலிதா அ.தி.மு.கவையும் பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி தி.மு.கவையும் நடத்தி வந்தார்கள். இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதாவின் மறைவு புதிய தலைமைக்கு வித்திட்டுள்ளது. ஆனால், தி.மு.கவில் கலைஞர் கருணாநிதியின் உடல்நலக்குறைவு, வயது முதிர்வு ஒரு செயல் தலைவர் கட்சிக்குத் தேவை என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.கவில் சசிகலா நடராஜன் என்றால், தி.மு.கவில் மு.க.ஸ்டாலின். ஆனால், ஸ்டாலின் அரசியல் களத்தில் நேரடியாகவே இருக்கிறார். ஆனால், சசிகலாவோ மறைவு ஸ்தானத்தில் இருந்து இப்போது நேரடி அரசியலுக்கு வருகிறார். முதன் முறையாக மீண்டும் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு இயக்கங்களும் திராவிடக் கொள்கைகளை மனதில் வைத்துச் செயல்படும் தலைவர்கள் கையில் வந்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ “சசிகலா நடராஜன் அ.தி.மு.க பொதுச் செயலாளராக வேண்டும்” என்று இந்த இரு இயக்கங்களின் தாய் கழகமான திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி அறிவித்திருக்கிறார்.

தி.மு.கவைப் பொறுத்தமட்டில், ஸ்டாலின் நீண்ட காலமாகவே கட்சி நடவடிக்கைகளில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். 2009 இல் தொடங்கி, இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் முக்கிய பிரசார நாயகனாக தி.மு.கவுக்கு இருந்து வருகிறார். ஆகவே “செயல் தலைவர்” என்ற பொறுப்புத்தான் புதிதாக வருகிறதே தவிர, அவர் ஏற்கெனவே தி.மு.கவின் செயல்தலைவராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஜனவரி நான்காம் திகதி நடைபெறும் தி.மு.க பொதுக்குழுவில் “செயல்தலைவருக்கு தலைவருக்குள்ள கட்சி அதிகாரங்கள் கிடைக்கப் போகிறது” என்பது மட்டுமே மாற்றம்.

ஆனால், அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில் சசிகலா நடராஜனே பொதுச் செயலாளராக ஆகிறார். தி.மு.கவில் அக்கட்சி விதிப்படி தலைவரிடம் கட்சி அதிகாரங்கள் இருக்கிறன என்றால், அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில் கட்சி விவகாரங்கள் பொதுச் செயலாளரிடம் இருக்கிறன. ஆகவே, இரு இயக்கங்களும் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா நடைபெறுகின்ற வேளையில் மறு பிறவி எடுக்கின்றன. இப்படி மறு பிறவி எடுக்கின்ற நேரத்தில், அந்த இயக்கங்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்ற முடியுமா என்ற எண்ணம் தேசிய கட்சிகளான காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் ரெய்டு, அமைச்சர்களாக இருந்தவர்கள் சிலர் வீடுகளில் ரெய்டு என்ற அதிரடி மாற்றங்கள் எல்லாம் மத்திய அரசின் நடவடிக்கையில் தெரிகிறது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

குறிப்பாக, அ.தி.மு.கவே “அம்மா இல்லாத நேரத்தில் எங்களுக்கு தொல்லை கொடுக்கிறது. வருமான வரித்துறை ரெய்டில்- குறிப்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ரெய்டில் உள்நோக்கம் இருக்கிறது” என்றே அ.தி.மு.க குற்றம் சாட்டியிருக்கிறது. அ.தி.மு.கவுக்கு ஏற்பட்டுள்ள தொய்வை பயன்படுத்தி பா.ஜ.க அரசியல் காய் நகர்த்துகிறது என்று மற்ற கட்சிகளும் கூட குற்றம் சாட்டுகின்றன. ஆனால், தி.மு.க அப்படியொரு குற்றச்சாட்டு எதையும் சாட்டாமல் அ.தி.மு.கவினர் மீது நடத்தப்படும் ரெய்டு, தலைமைச் செயலாளரின் மீது நடத்தப்பட்ட ரெய்டு எல்லாவற்றையும் வரவேற்று அறிக்கை விட்டுள்ளது. ஏனென்றால் அ.தி.மு.கவின் இமேஜ் சரிவு தி.மு.கவுக்குத்தான் இலாபம் என்று அக்கட்சி நினைப்பதே காரணம்.

குறிப்பாக பா.ஜ.க.வைப் பொறுத்தமட்டில் “ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க”வில் உள்ள தேசிய சிந்தனை கொண்ட வாக்காளர்களை இழுக்க முயற்சிக்கிறது என்று சொல்லலாம். ஆனால், அப்படி இழுக்க அக்கட்சிக்கு தமிழகத்தில் வசீகரமான மாநில தலைமை இல்லை என்பதால் தடுமாற்றம் ஏற்படுகிறது. இரண்டு சதவீத வாக்கு ஆட்சியைப் பிடிக்கும் 30 சதவீத வாக்காக மாற்றுவது எப்படி என்பதில் பா.ஜ.கவுக்கு இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. ஏனென்றால், ரெய்டு செய்யப்பட்ட அ.தி.மு.க இனிமேல் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க முன் வராது. அதேநேரத்தில், ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் மத்திய அரசாங்கம் நடந்து கொண்டு விதம் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பா.ஜ.கவுக்கு ஒரு வரவேற்பை கொடுத்திருந்தது.

ஆனால், இப்போது நடக்கும் ரெய்டுகள் “பா.ஜ.க, அ.தி.மு.கவை அழிக்கப் பார்க்கிறது” என்ற சிந்தனை அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இந்த ரெய்டுகளால் பா.ஜ.கவுக்கு பெரிதும் இலாபம் கிடைப்பது அரிது. ஆனால், அ.தி.மு.கவின் பெயர் கெடலாம் என்பது மட்டும்தான் இப்போதைக்கு இருக்கின்ற சூழ்நிலை. ஆகவே, குழம்பிய அ.தி.மு.க குட்டையில் பா.ஜ.க மீன் பிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு தீர்மானமான பதில் இன்னும் கிடைக்கவில்லை. முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் பா.ஜ.கவுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்ற தோற்றம் வந்திருந்தாலும், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவர் பக்கம் நிற்பார்களா என்பது இன்னமும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஆகவே, “பன்னீரை” வைத்து “பா.ஜ.க” அரசியல் செய்கிறது என்று காங்கிரஸ் காரர்களே குற்றம் சாட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது ஓடோடி வந்து ராகுல் காந்தி பார்த்தது, “அ.தி.மு.கவுக்கு உதவியாக இருப்போம்” என்று பேட்டி அளித்தது எல்லாம் காங்கிரஸ் அ.தி.மு.கவை நோக்கி நகர்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, இடுகாடு வரை ராகுல் காந்தி வந்தது, அ.தி.மு.க தொண்டர்கள் மனதில் காங்கிரஸ் மீதான பாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர், ஏற்கெனவே அ.தி.மு.கவில் இருந்தவர் என்பதும், சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நெருங்கிய நண்பர் என்பதும் “அ.தி.மு.க – காங்கிரஸ்” இணக்கத்துக்கு கை கொடுத்து வருகிறது.

ஏற்கெனவே, எம்.ஜி.ஆர் மறைந்த போதும் காங்கிரஸுக்கும், அ.தி.மு.கவுக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டு, அதனால் காங்கிரஸ் – அ.தி.மு.க கூட்டணியே உருவானது. அதுபோன்றதொரு நிலை தமிழகத்தில் காங்கிரஸுக்கும் அ.தி.மு.கவுக்கும் உருவாகுமா என்பதுதான் இன்றைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆகவே, அ.தி.மு.கவை நோக்கி பா.ஜ.க எடுக்கும் நடவடிக்கைகள் தி.மு.கவுக்கும் காங்கிரஸுக்கும் லாபகரமாக முடியுமே தவிர, பா,ஜ.கவுக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யாது. இந்த நோக்கில் தமிழக அரசியலில் உள்ள முக்கிய கட்சிகளான தி.மு.கவும், அ.தி.மு.கவும் தலைமை மாற்றத்தை நோக்கி நடந்தாலும், அந்த கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு எந்த விதத்திலும் தேசிய கட்சிகளை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

1980 களில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 50 சதவீத தொகுதிகளை பெற்று தி.மு.கவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று வலிமை மிக்க இந்திரா காந்தி தலைமை முயற்சி செய்தது. ஆனால், அந்த கூட்டணி தோல்விடைந்ததே தவிர, காங்கிரஸாலும் ஆட்சிக்கு வர முடியவில்லை. தி.மு.கவாலும் ஆட்சிக்கு வர முடியவில்லை. எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு, 1989 இல் “காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தி விட வேண்டும்” என்று ராஜீவ் காந்தி 13 முறை தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். ஆனால் அந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.

1996 இல் அடுத்தடுத்த ரெய்டுகள் செய்து அ.தி.மு.கவிடம் மூன்றில் ஒரு பங்கு சட்டமன்ற தொகுதிகளைப் பெற்று, தேர்தலில் கூட்டணி வைத்து, ஆட்சிக்கு வர நினைத்தார் பிரதமராக இருந்த நரசிம்மராவ். அதுவும் முடியவில்லை. அந்த வகையில் இப்போது பா.ஜ.க தமிழகத்தில் அ.தி.மு.கவைப் பலவீனப்படுத்தி பா.ஜ.கவை பலப்படுத்த எடுக்கும் முயற்சிகள் அக்கட்சிக்கு பலனளிக்காது என்பது தமிழக அரசியல் தெரிந்தவர்களின் கூற்றாக இருக்கிறது. தேசியக் கட்சிகள் என்ன முயற்சி செய்தாலும் தமிழக வாக்காளர்கள் திராவிட இயக்கத்தின் பிடியிலிருந்து விலகிச் செல்லுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

அதனால்தான் அ.தி.மு.கவும், தி.மு.கவும் மாறி மாறி சோதனைகளை சந்தித்தாலும் இன்றைக்கும் தமிழகத்தில் இந்த இரு கட்சிகள் மட்டுமே தமிழக மக்கள் மனதில் குடி கொண்டிருக்கின்றன. சமூக நீதிக்காக போராடிய பெரியாரும், தமிழர்களின் சுய மரியாதைக்காக போராடிய பேரறிஞர் அண்ணாவும் தமிழகத்தை திராவிட பூமியாக மாற்றிக்க காட்டினார்கள். அது திராவிட இயக்கத்தின் நூற்றாண்டிலும் தொடருகிறது. பா.ஜ.க, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளோ அல்லது மூன்றாவது கட்சியோ இந்த இரு திராவிட இயக்கங்களுக்கும் சவாலாக வருவது மிக மிகக் கடினம் என்பதே தமிழகத்தின் தற்போதையை அரசியல் சூழ்நிலை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச படத்தில் நடிக்க தயார் : கங்கனா ரனாவத்..!!
Next post 3 மொழிகளில் படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு..!!