By 11 January 2017 0 Comments

 விலகுமா கூட்டமைப்பு? (கட்டுரை)

tna-4மிகவும் பரபரப்புமிக்க ஒரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் புகைச்சல்களும் குழப்பங்களும் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறானதொரு நிலை இல்லாத சூழல் இருந்தால்தான், அது ஆச்சரியப்பட வேண்டிய விடயம். அத்தகைய குழப்பங்களையும் தாண்டி, சில ஆக்கபூர்வமான விடயங்களில் முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு தருணத்தில்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

குறிப்பாக, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தெளிவானதும் தீர்க்கமானதுமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் ஒன்று கூட்டமைப்புக்கு உருவாகி வருகிறது. ஆனால், அத்தகைய இறுதியான முடிவை எடுப்பதற்கான தருணம் இதுவே என்று, இந்தப் பத்தி இணங்கவில்லை. அதற்கான காலம் இன்னமும் கனியவில்லை என்றே தெரிகிறது. புதிய அரசியலமைப்புத் தொடர்பாக, தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடம் இருந்து வெளியாகும் கருத்துகள், ஆக்கபூர்வமானவையாக இல்லை. அத்துடன், அவை தமிழ் மக்களுக்கு அதிருப்தியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துபவையாகவும் இருக்கின்றன.

குறிப்பாக, வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி ஆட்சி முறை போன்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முரணான நிலைப்பாடுகளிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை போன்ற தமிழ் மக்களுக்கு எரிச்சலூட்டும் நிலைப்பாடுகளிலும் சிங்கள அரசியல் தரப்புகள், தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன. புதிய அரசியலமைப்புத் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள வழிகாட்டல் குழுவில், இந்த விடயங்கள் ஆராயப்பட்டனவா, முடிவுகள் எடுக்கப்பட்டனவா என்ற அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. ஆனாலும், மேற்படி விடயங்களில் விட்டுக்கொடுப்புக்கு தாம் தயாராக இல்லை என்பதை, ஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய, கூட்டு எதிரணி போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் தீர்க்கமான நிலைப்பாட்டில் இருக்கின்றனர். அதனை அவர்கள் வெளியில் உறுதியுடன் எடுத்துக் கூறியும் வருகின்றனர்.

இந்தக் கட்டத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது கடுமையான இறுக்கநிலை ஒன்றை நோக்கியே நகரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. அரசாங்கத்தை இந்த ஆண்டில் கவிழ்ப்பேன் என்று சூளுரைத்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியலமைப்பு விடயத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருக்கிறார். அவரது அடிப்படை நோக்கம், அரசியலமைப்பு யோசனையைத் தோற்கடிப்பது தான். அதற்காக அரசாங்கத்துக்குள் இருந்தே ஆட்களைத் திரட்டும் முயற்சிகளிலும் கூட்டு எதிரணி ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே, இராஜாங்க அமைச்சர் பதவியை விட்டு ஒருவர் விலகியிருக்கிறார். இன்னும் சிலர் விலகவுள்ளதாகவும் பேசப்படுகிறது.

புதிய அரசியலமைப்புக்கு எதிராக ஐ.தே.க உறுப்பினர்கள் 20 பேர் வாக்களிப்பார்கள் என்று உதய கம்மன்பில கூறியிருக்கிறார். ஆக, தென்னிலங்கையின் எல்லா அரசியல் கட்சிகளிலும், புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு ஒன்று காணப்படுவது போலத் தெரிகிறது. தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் தென்னிலங்கை அரசியல் சக்திகளிடம் உடன்பாடு இல்லை என்பதே இதற்குக் காரணம். இதனால் தான், சமஷ்டிக்கு எதிரான, வடக்கு- கிழக்கு இணைப்புக்கு எதிரான, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை விடயத்தில் கடுமையான நிலைப்பாடுகளை இந்த அரசியல் சக்திகள் எடுத்திருக்கின்றன. புதிய அரசியலமைப்புக்கு மக்களின் அங்கிகாரம் பெறப்படும் என்ற கருத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது.

இந்தநிலையில், புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம் நிறையவே உள்ளது. ஒரு பக்கத்தில் புதிய அரசியலமைப்புக்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம்; இன்னொரு பக்கத்தில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற்றும் அரசியலமைப்பு யோசனை முன்வைக்கப்படுமா என்ற சந்தேகம் – உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஒரு தருணத்தில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய அரசியலமைப்புத் தொடர்பாகவே கலந்துரையாடப்படவுள்ளது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஏற்கெனவே கூறியிருக்கிறார்.

இந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற குரலை எழுப்பியது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ் தான். மாதம் ஒரு தடவை கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், பல மாதங்களாகக் கூட்டப்படவில்லை என்று நினைவுபடுத்தியும், தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கவும் ஒருங்கிணைப்புக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனே, சம்பந்தனுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் தான், இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கான நாள் குறிக்கப்படுவதற்கு முன்னதாகவே, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தயாரில்லாத, அரசியலமைப்பைத் தயாரிக்கும் வழிநடத்தல் குழுவில் இருந்து இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் விலக வேண்டும் என்று கோரிக்கையை சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்திருந்தார். இந்த விவகாரம் இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தீவிரமாக விவாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமா -இல்லையா என்ற சந்தேகங்கள் இருந்தாலும், இப்போதுள்ள கட்டத்தில் வழிநடத்தல் குழுவில் இருந்து கூட்டமைப்பு விலகிக் கொள்வது எந்தளவுக்கு உசிதமானது என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன. ஏனென்றால், புதிய அரசியலமைப்புத் தொடர்பாக வழிநடத்தல் குழுவில் ஆராயப்பட்ட அல்லது முடிவெடுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் அபிலாஷைகள் நிராகரிக்கப்படும் என்பதற்கான உறுதியான – ஆவண ரீதியான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

இப்படியான நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் வழிநடத்தல் குழுவில் இருந்து விலகிவிடும் சூழல் ஒன்று ஏற்பட்டால், அது தமிழர் தரப்புக்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாகக் கூறிய அரசாங்கம், இப்போது அதனை எப்படிச் செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளது. இந்த முயற்சிகளை எப்படிக் கைகழுவி விடலாம் என்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், அதற்கான வாய்ப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உருவாக்கிக் கொடுக்கப்போகிறதா என்ற கேள்வி தான் எழுகிறது. சம்பந்தனும் சுமந்திரனும், வழிநடத்தல் குழுவில் இருந்து விலகினால், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை அரசாங்கம் பெரும்பாலும் கைவிட்டு விடக்கூடும்.

நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்காது என்பதால் அதனைக் கைவிட்டு விட்டோம் என்று கூறுகின்ற நிலை ஏற்படும். அவ்வாறான நிலையானது, சிங்கள அரசியல் தலைமைகள் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவே உதவும். அதேவேளை, இலங்கையில் அரசியலமைப்பு மாற்றம், இனப்பிரச்சினைத் தீர்வு என்பன குறித்து சர்வதேச அளவில் கரிசனை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த விடயத்தில் முன்னேற்றங்களை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனிக்கிறது; ஐ.நாவும் கண்காணிக்கிறது. இந்த முயற்சிகளுக்கான தொழில்நுட்ப உதவிகளையும் பல்வேறு நாடுகள் வழங்குகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில், அரசியலமைப்பு மாற்றத்துக்கு ஒத்துழைக்கும் முடிவை கூட்டமைப்பு விலக்கிக் கொண்டால், அது சர்வதேச ரீதியில் தமிழர்கள் மீதான அதிருப்தியையே உருவாக்கும்.

கடந்த காலங்களில், சமாதான முயற்சிகளையும் பேச்சுவார்த்தைகளையும் தமிழர் தரப்பே குழப்பியது என்ற வலுவான கருத்து, சர்வதேச மட்டத்தில் இருக்கிறது. அத்தகைய கருத்து மீண்டும் புதுப்பிக்கப்படுவது தமிழர்களின் எதிர்காலத்துக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அத்தகையதொரு முடிவை அவசரப்பட்டு எடுக்காது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. அவ்வாறாயின், தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யாத ஓர் அரசியலமைப்பைத் தயாரிக்கும் வரை, கூட்டமைப்பு பொறுமை காக்கப் போகிறதா என்ற கேள்வி எழுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர், ஒரு சந்தர்ப்பத்தில், கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளைப் புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்ற முடியாத சூழல் ஒன்று ஏற்பட்டால், உடனடியாக வழிநடத்தல் குழுவில் இருந்து விலகிக் கொள்வோம் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. புதிய அரசியலமைப்புத் தொடர்பான யோசனைகள் இன்னமும் இறுதிப்படுத்தப்படவில்லை. அவ்வாறு இறுதிப்படுத்தப்படுகின்ற ஒரு நிலை உருவாகும் வரையில், சம்பந்தனும் சுமந்திரனும் வழிநடத்தல் குழுவில் தொடர்ந்திருப்பதா – விலகிக் கொள்வதா என்று முடிவெடுக்கப் போவதில்லை. இப்போதுள்ள நிலையில், இவர்கள் வழிநடத்தல் குழுவில் இருந்து விலகிக் கொள்ளும் நிலை ஏற்பட்டால், அது தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தரப்புகளுக்கே வாய்ப்பாக அமையும்.

புதிய அரசியலமைப்பு, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக அமைய வேண்டும். அது சாத்தியமாகாது போனால், தமிழர்களுக்கான தீர்வு சிங்களத் தலைமைகளால் ஒருபோதும் வழங்கப்படாது என்ற உண்மையையாவது, மீண்டும் சர்வதேச ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும். அதனை விடுத்து, சம்பந்தன், சுமந்திரன் மீதான தனிப்பட்ட வன்மத்தை தீர்ப்பதற்கு இத்தகைய சந்தர்ப்பத்தைக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முயன்றால், அது தமிழர் தரப்புக்கு மீண்டும் ஓர் அரசியல் தோல்வியைத் தான் பெற்றுக் கொடுக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam