By 12 January 2017 0 Comments

கூட்டு உறவு; கூட்டுத் தீர்மானம்; கூட்டுப் பொறுப்பு; கூட்டு உழைப்பு..!! (கட்டுரை)

article_1484054932-mullivaikkal-newஇறைவனால் படைக்கப்பட்ட படைப்புக்களில் மனிதப் படைப்பு மகத்தானது. ஆனாலும் மனிதன் நற்பண்புகளை கொண்டிருப்பது போல, தீய பண்புகளையும் கொண்டிருப்பதால் அவனுக்குள் சண்டைகள், சச்சரவுகள் என ஏராளமான துன்பங்கள். நாடுகளுக்கிடையே பிணக்குகள்; ஒரு நாட்டு இனங்களுக்கிடையே பிணக்குகள். அவ்வகையிலேயே இலங்கைத் தீவில் அழுகிய பிணக்காக இனப்பிணக்கு பல தசாப்தங்களைக் கடந்து, நாறிக் கொண்டிருக்கின்றது.

இந்த நாடு, இந்நாட்டு அனைத்து இனங்களுக்கும் சொந்தமானது. ஆனால், ஓர் இனம் தனக்கு மட்டுமே நாடு உரித்தானது என உரிமை பாராட்டியதால் ஏற்பட்ட பிணக்கே இப்பிணக்கு.

அந்த வகையில், இலங்கை 1948 இல் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அன்றிலிருந்து, சிங்கள ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற, தமிழ் மக்கள் போராடுகின்றனர். இன்று வரை தமிழ் இனம், தாம் சுமக்கும் சிலுவையை இறக்கி வைக்கவில்லை.

1950 ஆம் ஆண்டு களிலிருந்து 1980கள் வரை அகிம்ஷை மற்றும் ஐனநாயக வழிகளிலும் 1980 களிலிருந்து 2009 மே 18 வரை ஆயுத வழியிலும் அது போராடியது.

வேலுப்பிள்ளை செல்வநாயகம் தொடக்கம் வேலுப்பிள்ளை பிரபாகரன் வரை தமிழ் இனத்தினது விடுதலைக்கு போராடிய பல தலைவர்களால் விடுதலையை விடுவிக்க முடியவில்லை. முன்னையவர் அகிம்ஷை வழியில் உச்சத்துக்குச் சென்றார்; ஈழத்துக்காந்தி எனப் போற்றப்பட்டார்; தந்தை என மதிக்கப்பட்டார்.

மற்றவர் ஆயுத வழியில் உச்சத்தை தொட்டார். இவரால், ஆயுத வழியில் பல வெற்றிகளை குவித்த படியால் மட்டுமே, பேச்சுவார்த்தைகளின் போது, சம அந்தஸ்து வழங்கப்பட்டது. இவ்விரண்டு மார்க்கத்திலும் வியத்தகு அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் சாதனைகளையும் நிகழ்தியது இலங்கைத் தமிழ் இனம்.

எனினும், அரசியல் தீர்வுக்கான மார்க்கத்தை அந்த இனத்தால் கண்டுபிடிக்க முடியாமல் போனமை துர்பாக்கிய நிலைமையாகும். ஆனாலும், இவ்வழிகளில் போராடித் தோல்வி அடைந்தனர் தமிழர் எனக் கூறமுடியாது. மறுவளமாக வெற்றி பெற முடியவில்லை.

2009 மே மாதத்திலிருந்து தமிழ் இனத்துக்கு தலைமை தாங்க வேண்டிய பெரும் பொறுப்பும் தார்மீக பணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது காலத்தின் கட்டளை.

ஆகவே அக்கட்டளையை சிரமேற்கொண்டு சிகரத்தை அடைய வேண்டிய நிகழ்ச்சி நிரல்களை அது வகுத்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் நடைபெற்ற இன வன்செயலில் மூன்று இனங்களும் பாதிக்கப்பட்டது எனப் பொதுவில் அனைவரும் கூறினாலும், தமிழ் இனம் கொடுத்த விலை மிகப்பெரியது; அளவிடமுடியாதது. கொடும் போர் தமிழ் இனத்தினது ஆணி வேரையே ஆட்டி விட்டுச் சென்று விட்டது. வார்த்தைகளில் வடிக்க முடியாத இழப்புக்களை சந்தித்துள்ளது. தனித்துவமான பண்பாட்டைப் பறிகொடுத்துள்ளது. கலாசாரத்தைப் புண்படுத்தி விட்டது.

ஆகவே, அப்பேற்பட்ட இனத்தினது அரசியல் பிரதிநிதிகள், வழமையான அரசியல் செய்யாது, ஓர் உன்னத இறை பணியாக, அரசியல் நடாத்த வேண்டும். என்னதான் நல்லாட்சி அரசாங்கம் என எவர் வர்ணித்தாலும் வடக்கு, கிழக்கில் தமிழ் இனத்தினது இருப்பை அழிப்பதற்கான நடவடிக்கைகள் திரை மறைவில் கனகச்சிதமாக நடைபெற்று வருகின்றன.

ஆகவே, அதற்கு ஏற்ப பதில் அரசியல் செய்யத்தவறின், ‘முன்னொரு காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் உள்ளன’ எனச் சிங்களப் பாடப் புத்தகங்களின் பாடப்பரப்புக்குள் விரைவில் அமையும்.

ஆகவே, தமிழ் மக்களுக்கு நிரந்தர நிலையான தீர்வு கிட்டும் வரை ஒரு குடையின் கீழ் அனைத்து, தமிழ்க் கட்சிகளும் அனைத்து அற்பத்தனமான வேறுபாடுகளையும் கருத்து முரண்பாடுகளையும் களைந்து, ஒன்று சேர வேண்டும். நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை வடக்கு, கிழக்கில் ஒரு தமிழ்க் கட்சியே நிலை கொள்ள வேண்டும். அக்கட்சியின் கீழ், அனைத்துத் தமிழ் மக்களும் வேறுபாடுகளைப் புறம் தள்ளி, அணி திரள வேண்டும்.

அக்கட்சி, தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகள் எவை எனத் தெளிவாக வரையறுக்க வேண்டும். அவை, யாழ்ப்பாணம், பொலிகண்டியில் வசிக்கும் ‘பொன்னம்மா அக்கா’ தொடக்கம் அம்பாறை, பொத்துவிலில் வசிக்கும் ‘பொன்னையா அண்ணர்’ வரை, அக்குவேறு ஆணி வேறாக, அறிந்திருக்க வேண்டும்.

அறுபதுக்கு மேற்பட்ட வருட காலமாக நாம் ஏன் போராடுகின்றோம் எனத் தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட தீர்வு வேண்டும் என யார் கேட்டாலும் விளக்கமான பதிலுரை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தச் செய்தியை அடுத்த தலைமுறையிடம் அப்படியே கொடுக்க வேண்டும்.

ஏனெனில், பல தசாப்தகாலமாக விடுதலைக்காக ஏங்கும் தமிழ் மக்கள் இன்னும் எத்தனை வருடங்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என, எவரும் எடை போட முடியாது; ஆருடம் கூற முடியாது. ஏனெனில், நாட்டின் ஆளும் வர்க்கம், தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகக் கருதி மதித்து அரசியல் விமோசனம் வழங்க இன்னும் தயாராகவில்லை.

மேலும், தெற்கு சிங்களத் தேசிய வாதக் கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தங்களது கட்சிகள் சார்பில் வடக்கு, கிழக்கு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, தமிழ் அரசியல் முகவர்கள் வருவதை காலங்காலமாக விரும்பி வருகின்றனர்.

அதில் வெற்றி பெற்றும் வருகின்றனர். அதன் கடைசி பிரமுகர்கள் திருமதி விஜயகலா மகேஸ்வரன்; மற்றையவர் அங்கஜன் இராமநாதன். அங்கஜன் இராமநாதன் கடந்த பொதுத்தேர்தலில் தோற்றாலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியல் மூலமான அவரின் நியமனம், அவர்களின் தேவையின் முக்கியத்துவத்தை தெற்கு நன்கு அறிந்து கொண்டதன் சாட்சி எனலாம்.

இவர்கள் மூலமான சலுகை அரசியலுக்குள் சிக்காமல் தமிழ் மக்களது சுதந்தர அரசியலுக்குள் மக்களை கொண்டு செல்வதற்கான, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள், தமது இனத்தின் விடுதலை, விமோசனம் என்ற வார்த்தைகளின் அடிப்படையில் ஒன்று சேரவேண்டும். அத்துடன், தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது கட்சிகளோ தாங்கள் விரும்பியவாறு தனித்து முடிவெடுக்கவும் நடந்து கொள்வதற்கும் இது ஒன்றும் அவர்கள் கொண்டு வந்த முதல் அல்ல. மாறாகப் பலரைக் கொன்ற பின்னர் (போரில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகள்) முதல் நிலைக்கு வருவதற்கான தர்ம யுத்தம். அநீதிக்கு எதிரான அகிம்ஷை ஆயுதம். ஆகவே, தயவு செய்து பணம், புகழ் பெறுவதற்காக ஈழத்தமிழர் அரசியலுக்குள், எவரும் வரவேண்டாம்.

பகுதி நேர வேலையாக மேற்கொள்ள வர வேண்டாம்; ஓய்வு பெற்ற பின்னர் வேறு வேலை இல்லையே என வர வேண்டாம்; ஆர்பரிப்பு இல்லாமல் அர்பணிப்புடன் பணியாற்றுவோருக்கான கதவுகள் மட்டுமே திறந்துள்ளன.
1980 களில் தமிழர் உரிமைக்காக ஆயுதம் தூக்கிய தமிழ் அமைப்புக்கள், ஒற்றுமை இன்மை காரணமாகப் பாதை மாறித் தங்களுக்குள் முட்டுப்பட்டதையும் அதன் பாதக விளைவுகளையும் நன்கு அறிவோம். பின்னர், 2004 ஆம் ஆண்டில் விநாயகமூர்த்தி முரளிதரன், விடுதலைப் புலிகளுக்குள் பிளவை உண்டாக்கியதால், அது உண்டாக்கிய, 2009 ஆம் ஆண்டு வரையான சேதங்களையும் பரிபூரணமாக அறிவோம். ஆனாலும், இவ்வாறான பல பட்டறிவுகளைப் பெற்றும் வடக்கு, கிழக்கில் தமிழர் சார்பிலான அரசியல்வாதிகள் ஒரு மையப் புள்ளியில் ஒன்று கூடி நிற்கின்றார்களா என வினாவினால், விடை வினோதமானதாக நிச்சயம் அமையும்.

இவ்வளவு படுமோசமான அழிவுக்குப் பின்னரும், தற்போதும் கட்சிகளை முன்னிலைப்படுத்திய அரசியல்; ஒழிவு மறைவு; ஒரு சிலரை மையப்படுத்திய நகர்வுகள்; கட்சிக்குள் பாரபட்சம்; தூர நோக்கு, வினைத்திறன் அற்ற செயற்பாடு என பட்டியல் நீள்கின்றது.

தற்போது வரவிருக்கும் அரசியல் யாப்பு தொடர்பில் சொற்களில் அதிக கரிசனை காட்டவில்லை; மாறாக, பொருள் கோடலை கூர்ந்து அவதானிப்போம் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

1995 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சந்திரிகா தலைமையிலான பொது ஜன ஐக்கிய முன்னணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வேளையில், யுத்த நிறுத்தம் மற்றும் மோதல் தவிர்ப்பு ஆகிய இரு சொற்களும் பெற்றிருந்த முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் இல்லை எனலாம்.
இவ்வாறான நிலையில், சொற்கள் பொருட்டில்லை; பொருள் கோடல் பற்றிப் பொறுத்திருந்து பார்ப்போம் என்பது பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையீனம் காணப்படுவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆறாத துயரம். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்பும் இவர்கள் ஓரணியில் திரள முடியாமை தமிழ் இனத்தின் பெரும் சாபக்கேடு. வடக்கு, கிழக்கில் எம்மண் பறி போகின்றது. சிங்களக் குடியேற்றங்கள் நாளாந்தம் முளைக்கின்றன. வரலாறு வழிகாட்டி என்பார்கள். வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்பார்கள். ஆனால், எம்தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோர், எதனைக் கற்றுக் கொண்டார்கள். இவர்கள் பாடம் கற்க மறுக்கின்ற வரலாறு கண்டிக்கும்; தண்டிக்கும்.

தமிழரது அரசியல் அவா, எக்காலத்துக்கும் பொருத்தமான, எக்காலத்திலும் மாற்ற முடியாத வலுவான ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுதான் எனத் தெளிவாக வரையறை செய்ய வேண்டும்; கூட்டுத் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகள் கூடி எடுக்கும் தீர்மானம் வலுவானது. மேலும் அத்தீர்மானத்தை மேற்கொண்டவர்கள் அதற்குப் பொறுப்பு கூற கடமைப்பட்டவர்கள். அதனை எவ்வாறு அடைவது என இராஜதந்திர ரீதியான காய் நகர்த்தலை மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே, இதுவே இராஜதந்திர நகர்வுகள். நீ பெரிதா? நான் பெரிதா? நீ சொல்வது சரியா? நான் சொல்வது சரியா? எனக் குதர்க்கம் புரியாமல், விதண்டா வாதத்தில் வாதிடாமல், தமிழ் மண், தமிழ் மொழி மட்டுமே எம் இரு கண்கள் போல, அதற்கு தலை வணங்கி, அவையே பெரியது என நடப்பின், வெற்றி நிச்சயம்.Post a Comment

Protected by WP Anti Spam