கிழக்கு பல்கலைக்கழக முற்றுகைப் போராட்டம் பட்டக் கல்விப் பாரம்பரியத்துக்கு கறுப்புப்புள்ளி..!! (கட்டுரை)

Read Time:15 Minute, 14 Second

article_1485848372-eastren-2எதனையும் கொடுத்துத்தான் வாங்கியாக வேண்டும் என்பது காலம் காலமாக இருக்கின்ற பாரம்பரியமும் அனுபவமுமாகும். கல்விக் கூடங்கள் என்றால் அங்கு பணிவும் கௌரவமும் மரியாதையும் என்றுதான் மறுபெயர். ஆனால் இன்றைய காலகட்டம் அதற்கு நேர் எதிர் என்றே பதிய வேண்டியிருக்கிறது.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், 18ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடமான ‘செனற் கட்டத் தொகுதி’யை உபவேந்தர் நாட்டிலில்லாத வேளையில், மாணவர்கள் முற்றுகையிட்டதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் வழமையாக உள்ள நடைமுறைகள் போன்றே, முதலாம் மற்றும் இறுதி வருட மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படமாட்டது என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டாலும், தமக்கு விடுதி வசதிகள் வழங்கப்பட்டே ஆகவேண்டும் என்று, ஜனவரி 16 ஆம் திகதி, வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதனையடுத்து, கிழக்குப் பல்கலைக்கழக இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களைப் பல்கலைக்கழக விடுதியை விட்டு வெளியேறுமாறு புதன்கிழமை மாலை (18) பல்கலைக்கழக நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவித்தலை பொருட்படுத்தாமல் நிர்வாகக் கட்டடத்தை அன்றைய தினம் இரவு முதல் மாணவர்கள் முற்றுகையிட்டனர். பிரதான கட்டடத்தின் உப வேந்தரின் அலுவலகம் வரையில், அனைத்துப் பகுதிகளையும் மாணவர்கள் தமது தங்குமிடங்கள் போன்று மாற்றியிருந்தனர். இவர்கள் அங்கு, உணவுகளைத் தயாரித்ததுடன், தங்கள் உடைகளையும் நிர்வாக கட்டடம் எங்கும் தொங்க விட்டனர்.

மாணவர்கள், தங்களுக்கு வெளியில் தங்குமிடங்களுக்குச் செல்ல முடியாது; உடனடியாக விடுதி வசதி ஏற்படுத்தித்தரப்பட வேண்டும்; அத்துடன் கல்வி நடவடிக்கையை உடன் ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இறுதியாண்டு மாணவர்கள், தமக்கு இறுதிப் பரீட்சைகள் நடைபெற 22 நாட்கள் மாத்திரம் இருக்கின்ற நிலையில், நிர்வாகத்தின் செயற்பாடுகள், தங்களின் அனைத்துக் கனவுகளையும் மண்ணோடு தோண்டிப் புதைப்பதாகவே உள்ளதாகவும் மாணவர்களுக்கான அபிவிருத்திகளை மேன்படுத்தத் தற்போதைய நிர்வாகம் தவறி விட்டதாகவும் மாணவர்களின் கோரிக்கைகளையும் கருத்துகளையும் பல்கலைக்கழக நிர்வாகம் பொருட்படுத்தத் தவறுகிறது என்றும் தெரிவித்தனர்.

மாணவர்களின் முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து நீடித்ததையடுத்து, தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்றை கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் வியாழனன்று (19) ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது கருத்துத் தெரிவித்த பதில் உபவேந்தர் கலாநிதி கே.ஈ.கருணாகரன், கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து விடுதி வசதி தொடர்பாக மாணவர்களுக்கான அறிவுறுத்தல் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் போதுமானளவு இடவசதி என்பது இல்லை. நிர்வாகத்தினால் உத்தியோக பூர்வமாக மாணவர்களை வெளியேற அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையில், அதிகளவான மாணவர்கள் வெளியேறியுள்ளனர். குறைந்தளவான மாணவர்களே குறித்த முற்றுகை எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பல்கலைகழக நிர்வாகத்தினரால் வியாழக்கிழமை (19) மாலை அரசடியிலுள்ள செளக்கிய பராமரிப்பு பீடத்தில் விசேட கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. இதில், கட்டட வசதிகள் போதாத காரணத்தினால் தனியாரின் வீடுகளை வாடகைக்குப் பெற்று, ஒன்றரை மாதங்களுக்குள் விடுதி வசதியினை ஏற்படுத்த ஆவன செய்வதாகவும் அதுவரையில் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை வழங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவு எழுத்து மூலம், வியாழக்கிழமை மாலை மாணவர்களிடம் வழங்கப்பட்டது. இருப்பினும், பதில் உபவேந்தரின் அலுவலக முத்திரை இல்லாத காரணத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தங்களுக்கு திங்கட்கிழமை (23ஆம் திகதி) முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டு, முற்றுகையும் தொடர்ந்தது.

மாணவர்களது இந்தக் கோரிக்கைகளை ஆராய்வதற்காக, மீண்டும் வெள்ளிக்கிழமை (20) கூடிய பல்கலைக்கழகப் பேரவை, ஐந்து முடிவுகளை நிறைவேற்றியிருந்தது. அந்த முடிவுகளின் படி, எல்லா மாணவர்களுக்கும் விடுதி வசதி வழங்கப்பட வேண்டும்; இரண்டாம் வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்குத் தங்குமிட வசதி கிழக்குப்பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள இடங்களில் ஏற்படுத்தித் தரப்படும்; எல்லா வருடத்தைச் சேர்ந்த அனைத்து பீட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் 20.01.2017 இலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன; கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வந்தாறுமூலை வளாகம் மற்றும் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட வளாகம் ஆகியன 21.01.2017 காலை 8.00 மணியிலிருந்து மாணவர்களுக்கு உட்புக விலக்களிக்கப்பட்ட இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிடப்பட்ட பல்கலைக்கழக வளாகங்களில் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்குகின்ற மாணவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மாணவர்கள் தங்களது முடிவிலிருந்து மாறாதவர்களாக இருந்தனர். நாடு திரும்பிய (23)கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் தன்னுடைய அலுவலகத்துக்குச் சென்றபோது, “உங்களது காலணியைக் கழற்றிவிட்டு உள்ளே வாருங்கள்” என்று மாணவர்கள் கூற, அவர் தன்னுடைய வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

பின்னர் 25 ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அடங்கிய குழுவினர் வருகைதந்து, மாணவர்கள் சார்பான முடிவினைத் தெரிவித்ததையடுத்து, 27ஆம் திகதி ஒன்றுமில்லை என்றானது. பல்கலைக்கழகப் பாரம்பரியம் என்பது மிகவும் கௌரவம் மிக்கதாகப் பார்க்கப்படுகிறது. நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளே, கிழக்குப் பல்கலைக்கழத்திலும் கடைப்பிடிக்கப்படுகின்ற போது, இங்கு மாத்திரம் ஏன் பிரச்சினைகள் உருவாகின்றன என்று ஆராய்வது முக்கியமானதாகும்.

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பிரதான நிர்வாகக் கட்டடத் தொகுதியில் ஆக்கிரமிப்பு ரீதியில் அமர்ந்திருந்த மாணவர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாகப் பார்க்கின்றபோது, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கம் நாட்டில் இல்லாத வேளை, பல்கலைக்கழகமே சீர்குலைந்து, நடவடிக்கைகளை நடத்த முடியாது சிரமப்படுகின்ற வேளையில் பதில் உபவேந்தர் எந்தளவுக்கு பேரவையினது ஆதரவு, ஆலோசனைகளுடன் சீரான நிலையை ஏற்படுத்துவார் என்பதே கேள்வியாக இருந்தது. “கிழக்கு பல்கலைகழகத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்கிய பீடங்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகளை சரியான முறையில் பெற்றுக் கொடுக்காத பல்கலைகழக உபவேந்தர் உட்பட பல்கலைக்கழக நிர்வாகம் போன்றவற்றின் அசண்டையீனமும் ஒழுக்கவீனமுமே இன்றைய கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் அவமானத்துக்குக் காரணம் எனக் கருதவேண்டியுள்ளது” என மட்டக்களப்பு புத்திஜீவிகள் விமர்சனம் தெரிவிக்கின்றனர்.

எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் செயற்பாடுகள் குறித்து, தீர்க்கமானதும் கடுமையானதுமான முடிவுகளை எடுக்கும் வகையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு ஆகியன கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்குச் சாதகமாக இருக்கவில்லை என்பது இந்த இடத்தில் கவனிக்க வேண்டியதாகும். பல்கலைக்கழகங்களின் நடைமுறைகளையும் வளங்களையும் சரியாகப் பயன்படுத்துவதற்கு மாணவர்கள் உடன்படாத நிலை நாட்டில் எவ்வாறானதொரு கல்விச் சமூகத்தினை எதிர்காலத்தில் தரப் போகிறது என்பது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

பல்கலைக்கழகத்துக்குள் நிர்வாகத்தின் முடிவினை மீறி, உள்ளே சென்ற மாணவர்களை வெளியேற்றுவதற்குச் செனற் கட்டடத்தில் செயற்படுகின்ற கல்வி சாரா ஊழியர்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டபோதும், அதிகாரபூர்வமான முடிவினைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏன் எடுக்கவில்லை? பல்கலைக்கழகங்களில் உள்ளேயும் வெளியேயும் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் தண்டனைகள் வழங்குவதற்கும் விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததற்கு வேறு விதமான அச்சமும், அழுத்தமும் காரணமாக இருக்கலாமோ என்ற கேள்வியும் எல்லோரிடமும் இருந்தது.

ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் அறவிடப்படும் வரிப்பணத்தில் இலவசமாக வழங்கப்படும் கல்வியைக் கற்பதற்காக பல்கலைக்கழகங்களுக்கு வரும் மாணவர்கள் பகடிவதைகளில் ஈடுபடுவதும் அடாவடியான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடுவதும் அவர்களது கல்வியையே பெரிதும் பாதிக்கின்றது. இருந்தாலும் இதில் நூறு சதவீத மாணவர்களையும் உள்ளடக்கிவிட முடியாது. தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற வாக்கு இருந்தாலும் மாணவர்கள் என்பவர்கள் குருவுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது? இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடைக்க வேண்டுமாக இருந்தால் மாணவர்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட்ட வேண்டும்.

அரசாங்கம் எல்லாவற்றையும் கொடுத்தாகவேண்டும் என்பதற்கப்பால் தென்பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலுள்ள நிர்வாகங்களுடன் ஒத்துழைத்து நடப்பது போன்றதொரு நிலைவரம் இங்கும் உருவாக வேண்டும். அதற்கு கிழக்குப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக் கழகங்களுக்குப் பக்கபலமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அரசாங்கம், உயர்கல்வி அமைச்சு இருக்க வேண்டுமே தவிர மாணவர்களின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் ஏனைய பல்கலைக்கழக நடைமுறைகளையும் இல்லாமல் செய்யும் செயற்பாடுகளுக்குத் துணைபோதல் சிறப்பல்ல.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கடந்த நாட்களின் அனுபவங்கள் உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள் இன்னும் இறுக்கமாகவும் கட்டுப்பாடானதாகவும் மாற்றம் பெறவேண்டும் என்பதையே கற்றுத்தருகின்றது. அந்த மாற்றம் தனித்துவமாகவும் துணிச்சலாகவும் முடிவுகளை எடுப்பதற்கும் அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்குமான அங்கிகாரமுடையதாக இருக்க வேண்டும். எது எவ்வாறானாலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினருக்குக் கட்டுப்படாத மாணவர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு எதிர்காலக் கல்வி நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது? அதனை எவ்வாறு நிர்வாகம் எதிர் கொள்ளப் போகிறது? என்பதுதான் உயர்கல்வி நலன் சார்ந்தோரின் முன் உள்ள கேள்வியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேர்களை வலுவாக்குங்க கூந்தல் உதிராது..!!
Next post 8 லட்சம் பேரை கவர்ந்த கண்காட்சி..!!