By 2 February 2017 0 Comments

சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல்..!! (கட்டுரை)

article_1485936523-article_1479829865-prujothதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான தகவல்கள், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் இரண்டாவது தடவையாக வெளியாகியிருக்கின்றன.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் ஆறாம் திகதி, தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகம் சாவகச்சேரியில் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் நன்றியுரை ஆற்றிய, வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், சுமந்திரன் மீதான கொலை முயற்சி தொடர்பில் முதன்முறையாகத் தகவல் வெளியிட்டார். கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் தென்மராட்சிப் பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, சுமந்திரனைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாக அவர் பேசினார்.

ஆனால், அதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதும், அந்த விடயத்தை இடைநடுவில் கைவிட்டு, நன்றிகூறி தன்னுரையை முடித்துக் கொண்டார். சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பில், இரண்டாவது தடவையாகக் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 28), தென்இலங்கை ஊடகமொன்றிலும் இந்திய ஊடகமொன்றிலும் செய்திக்கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அவற்றில், யாழ்ப்பாணத்தின் வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் வைத்து, சுமந்திரனைக் கொலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனாலும் அவர் அதிர்ஷ்டவசமாகத் தப்பிக் கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கொலை முயற்சிகளோடு சம்பந்தப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசிய அரசியலில் சுமந்திரன் தவிர்க்க முடியாதவர். அவரின் இருப்பும் நீக்கமும் பலருக்கும் பல காரணங்களுக்காகவும் அவசியமாக இருக்கலாம். அதுவும் படுகொலைக் கலாசாரத்தினை அரசியலின் ஒரு பாகமாக ஏற்றுக்கொண்டுவிட்ட இலங்கையில், ஒருவர் படுகொலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை முற்றாக நிராகரித்துவிட முடியாது. அந்த வகையில் சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான தகவல்கள் கவனம் பெறுகின்றன. சுமந்திரன் மீதான கொலை முயற்சி தொடர்பில், கேசவன் சயந்தன் தகவல் வெளியிட்ட தருணம், அதனைத் தமிழ் ஊடகப் பரப்பு ஒருவகையில் எள்ளல் தொனியில் கையாண்டது. அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அதன்பின்னர், சயந்தன் எந்த இடத்திலும் அது பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை. அப்போது சுமந்திரனும் எதுவும் பேசியிருக்கவில்லை. ஆனால், தற்போது வெளியாகியிருக்கின்ற கொலை முயற்சிகள் தொடர்பிலான செய்திகளை சுமந்திரனும் ஒரு வகையில் உறுதிப்படுத்துகின்றார். அதாவது, தன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பில் பிரதமர் அலுவலகம் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்திருக்கின்றார். இது சற்றுப் பாரதூரமானதுதான். அதுபோல, கொலை முயற்சிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்று வெளியிடப்பட்டிருக்கின்ற தகவல்களும் அது தொடர்பிலான கதைகளும் கவனம் பெறுகின்றன.

அந்தத் தகவல்களும் கதைகளும் சுமந்திரனைக் குறிவைத்தது மட்டுமானவை அல்ல. முன்னாள் போராளிகள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தேசியப் பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல தரப்புகள் சார்ந்தவை. தன்னுடைய உயிருக்கான அச்சுறுத்தல் காணப்படுகின்ற போது, அது தொடர்பில் வெளிப்படுத்துகின்ற உரிமை அனைவருக்கும் உண்டு. அது, மக்கள் பிரதிநிதியாகவும் தனிமனிதனாகவும் சுமந்திரனுக்கும் உண்டு. அதில் யாரும் குற்றம் சொல்ல முடியாது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கூட, தன்மீதான கொலை முயற்சிகள் தொடர்பில் கடந்த ஆண்டு, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தகவலொன்றை வெளியிட்டிருந்தார். அதாவது, தன்னைப் படுகொலை செய்துவிட்டு, அதனைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கு தென்இலங்கைத் தரப்புகள் திட்டமிடுகின்றன என்று தனக்கு மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதுதொடர்பில் கவனம் செலுத்தி, முதலமைச்சருக்குப் பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என்று கோரி, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை எழுதியிருந்தார். இறுதி மோதல்களுக்குப் பின்னர், அரசாங்கத்தின் புனர்வாழ்வு பெற்று, சுமார் 12,000 முன்னாள் போராளிகள் ‘சமூகத்தில்’ இணைப்பட்டிருக்கின்றார்கள். ஆம், அப்படித்தான் சொல்லப்படுகின்றது.

எனினும், முன்னாள் போராளிகளைப் பூரண மனதோடு தமிழ் மக்கள் உள்வாங்குவதைப் பல தரப்புகளும் விரும்பவில்லை. அதனால், அவர்கள் குறித்த அச்சங்களை வெளியிட்டு வந்திருக்கிறார்கள். அல்லது சந்தேகப் பார்வையை உருவாக்கி வந்திருக்கிறார்கள். குறிப்பாக, தேசிய பாதுகாப்புத் தரப்பு, முன்னாள் போராளிகளைத் தொடர் கண்காணிப்புக்குள் வைத்திருப்பது அதில் முக்கியமானது. அதுபோல, முன்னாள் போராளிகளின் அரசியல் முனைப்பும் எந்தவொரு தரப்பினாலும் இரசிக்கப்படவில்லை.

அப்படியான நிலையில், கல்வியை இடைநடுவில் கைவிட்டுப் போராடுவதற்குச் சென்று, இன்று எல்லாவற்றையும் இழந்து, நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு முன்னாள் போராளிகள் வந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் ஒரே கோரிக்கை வேலை மட்டுமே. அதனை, ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏதுகைகளில் எந்தத் தரப்பும் வெற்றிகரமாக ஈடுபடவில்லை. அது, அரசாங்கமாக இருந்தாலும் சரி, தமிழ்த் தரப்புகளாக இருந்தாலும் சரி. அவர்களை ஒரு வகையில் விலக்கி வைத்துக் கொண்டு கருமங்களை ஆற்றுவதில் குறியாக இருக்கின்றன.

அதன்போக்கில், யாரோ ஒரு சிலர் செய்கின்ற தவறுகளை, ஒட்டுமொத்தமாக ‘முன்னாள் போராளிகள்’ என்கிற அடையாளத்துக்குள் சேர்த்து 12,000 பேரினையும் அச்சுறுத்தலுக்குள் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுமந்திரனின் கொலை முயற்சிகளோடு சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வேறு வேறு காரணங்களுக்காக ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனினும், அவர்கள் மீது பாரிய வெடிபொருட்கள் வைத்திருந்ததாகவும் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், சந்தேக நபர்களோ வெடிபொருட்கள் வைத்திருந்ததான குற்றச்சாட்டினை மறுத்திருக்கிறார்கள்.

சுமந்திரன் மீதான கொலை முயற்சிகளுக்குப் புலம்பெயர் நாடுகளிலுள்ள சிலரினால் திட்டம் தீட்டப்பட்டதாகத் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்கவும் சுமந்திரன் மீதான கொலை முயற்சிகளுக்கான திட்டம் நோர்வேயிலிருந்து தீட்டப்பட்டதாகக் கூறியிருக்கிறார். அவருக்கு அந்தத் தகவல் எப்படிக் கிடைத்தது என்று அவர் கூறவில்லை. ஆனால், புலம்பெயர் தரப்புகளை நோக்கி, மிக மூர்க்கத்தனமாக கைககள் நீட்டப்படுகின்றன.

அது, அரசியல் சார்ந்த முனைப்புகள் கொண்டவை. அதன்பின்னால், தாயகத்திலுள்ள தமிழ் மக்களையும் புலம்பெயர் தமிழ் மக்களையும் விலத்தி வைக்கும் ஏற்பாடுகளும் கொண்டவை. ஏனெனில், இதுவும் ஒரு சிலர் விடும் தவறுகளுக்காக முன்னாள் போராளிகள் என்கிற ஒட்டுமொத்த அடையாளம் கையிலெடுக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவது போல, யாரோ ஒரு சிலர் தவறு விட்டிருந்தால், அதனை ஒட்டுமொத்தமாகப் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் குற்றமாக அல்லது தவறாக சித்திரிக்க முயல்வதன் போக்கிலானது. இது, பிரிவினைகளுக்கான பெரும் சதியாகும்.

கொலை முயற்சிகள் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும். அதனையே தமிழ் மக்களும் விரும்புகின்றார்கள். மாறாக, ஒரு விடயத்தை வைத்துக் கொண்டு சதிவலையின் தீவிரம் உணராமல் யாரும் சிக்கிக் கொள்ளக் கூடாது. சுமந்திரன், தன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான அ‌றிவுறுத்தலை, தன் மீதான அச்சுறுத்தலாக மாத்திரம் பார்க்கவில்லை என்றும், அதனை முன்னாள் போராளிகள் மீதான அச்சுறுத்தலாகப் பார்ப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

எனினும், ஊடகங்களில் வெளியாகியிருக்கின்ற செய்திக் கட்டுரைகளிலும் கதைகளிலும் கூறப்பட்டுள்ள விடயங்கள் சார்ந்து, அவர் அறிந்து வைத்திருக்கின்ற அனைத்து விடயங்களையும் வெளியிட வேண்டிய தேவை எழுகின்றது. அது, அவர் சார்ந்த ஒரு பொறுப்பாகவும் இருக்கின்றது. அதனை, அவர் செய்யத் தவறும் பட்சத்தில் எழுதப்பட்ட கதைகளில் அவருக்கும் பங்கிருப்பதாகக் கருத்துருவாக்கம் பெற்று நீளும். அது அவருக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் நல்லதல்ல.

ஏனெனில், கேசவன் சயந்தன் கடந்த ஆண்டு வெளியிட்ட கொலை முயற்சி தொடர்பிலான கருத்து தொடர்பில், இப்போது மீள ஆலோசிக்க வேண்டிய தேவையொன்று எழுகின்றது. அதுபோல, தமிழ்த் தேசிய அரசியல் சூழலுக்கும் இந்தக் கொலை முயற்சிகள் தொடர்பிலான தகவல்களைப் பொறுப்போடும் நிதானத்தோடும் கையாள வேண்டிய தேவையொன்று இருக்கின்றது. மாறாக, அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து, முத்திரைகளைக் குத்திவிட்டுக் கடந்து செல்வது, பெரும் அச்சுறுத்தல்களை வழங்கக் கூடியது. சுமந்திரனின் அரசியலோடும் கருத்துகளோடும் உடன்படுவதும் முரண்படுவதும் வேறு; ஆனால், அவரின் இருப்பினைக் கேள்விக்குள்ளாக்குவது வேறு.

தமிழ்த் தேசிய அரசியலும் அது சார்ந்தவர்களும் படுகொலைகள் மீதான காதலைக் கொண்டவர்கள் என்கிற விடயம் தொடர்ந்தும் பல தரப்புக்களினால் பரப்பப்பட்டு வருகின்றது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் ஆயுதங்களின் மீதான ஈடுபாட்டினைத் தமிழர்கள் இன்னமும் விடவில்லை என்று சில தரப்புக்கள் நிரூபிக்க நினைக்கின்றன. அப்படியான நிலையில், சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான விடயத்தை அக்கறையோடு, நிதானமாகக் கையாள வேண்டும். அதன் உண்மைத் தன்மையை முன்முடிவுகள் இன்றி, மிகக் கவனமாக, அதன் அடிவரை சென்று, அணுகி அறிய வேண்டும். அதுதான், தேவையற்ற பதற்றங்களையும் சதி முயற்சிகளையும் தடுக்க உதவும்.Post a Comment

Protected by WP Anti Spam