சுமந்திரனைக் கொல்ல முயற்சி: என்ன தான் நடக்கும்?..!! (கட்டுரை)

Read Time:15 Minute, 3 Second

sumandran (3)தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனைக் கொல்வதற்கு முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி, அண்மையில் வெளியானது.

பல்வேறு மட்டங்களிலும் இது, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் செய்தியின்படி, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவர் செல்லும் வழியில், அவரைக் கொல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், எனினும் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளிலிருந்து அவர், அதிர்ஷ்டவசமாகத் தப்பிக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்த விடயத்தை, இரண்டு பக்கங்களால் ஆராய வேண்டியிருக்கிறது. முதலாவது: அச்செய்தியின் உண்மைத்தன்மை அல்லது நம்பகத்தன்மை தொடர்பானது. இரண்டாவது: செய்தியில் கூறப்படுவது போல, உண்மையிலேயே அவ்வாறான அச்சுறுத்தல் காணப்படுகிறதா என்பதுவும் அதன் பின்விளைவுகள் தொடர்பானதும். முதலில், இந்தச் செய்தி வெளியான விதம் தொடர்பாகக் கவனஞ்செலுத்த வேண்டியிருக்கிறது.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகவும் தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதிகளாகவும் இருக்கின்ற கட்சியின் பேச்சாளருக்கு, அவரது இனத்தைச் சேர்ந்தவர்களாலேயே உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்பது, சாதாரண செய்தி கிடையாது. ஆனால் இந்தச் செய்தி, பொலிஸாராலோ அல்லது சட்ட அமுலாக்கல் பிரிவுகளாலோ வெளியிடப்படவில்லை. மாறாக, தற்போது கனடாவில் வசித்துவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரின், பத்தியொன்றின் மூலமே இச்செய்தி வெளியிடப்பட்டது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவருக்குக் காணப்படும் புலனாய்வுத் தொடர்புகளை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால், சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பான செய்தி, வெளிநாட்டிலுள்ள ஊடகவியலாளர் ஒருவருக்குச் சென்று, அவர் மூலமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கான அவசியப்பாடு என்னவெனக் கேள்வியெழுப்ப வைக்கிறது. முன்னாள் போராளிகள் அல்லது தமிழ்த் தரப்பில் தீவிரமானவர்கள் தொடர்பில் எந்தவோர் அக்கறையையும் வெளிப்படுத்தாத பொலிஸார், இந்த விடயத்தை மாத்திரம் ஏன் மூடிமறைத்தனர் என்ற கேள்வி எழுகிறது.

கடந்தாண்டு மார்ச் மாதத்தில், சாவகச்சேரியில் வைத்துத் தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி, சில நிமிடங்களில் உலகமெங்கும் பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து சில வாரங்களாக, முன்னாள் புலிகள் பலர் வேட்டையாடப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். தற்கொலை அங்கிக்கே அவ்வளவு நடவடிக்கை என்றால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொல்வதற்கான முயற்சி மாத்திரம், காதும் காதும் வைத்தாற்போல் செய்யப்பட்டமைக்கான காரணம் என்னவாக அமையும்? அதுவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கவிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், மனித உரிமைகள் விடயத்தில் சில முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், சர்வதேச நாடுகளுடன் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தின் முக்கியமான விடயங்களை, இன்னமும் நிறைவேற்றியிருக்கவில்லை. நீதிப்பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு போன்ற விடயங்களை, அரசாங்கம் நிராகரித்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் போராளிகள் சிலர், இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் எனவும் அதன்காரணமாகச் சில விடயங்களைச் செய்ய முடியாமல் உள்ளது எனவும் காட்டிக்கொள்ளவே அரசாங்கம் விரும்பும்.

எனவே, இச்செய்திக்கான பிரபலத்தன்மை, அதிகமாகக் கிடைக்கவே அது எதிர்பார்க்கும். அவ்வாறான நிலையில், இவ்விடயத்தை ஆரம்பத்தில் பெரிதாக்காமல் ஏன் விட்டது என்ற கேள்வி எழுகிறது. அடுத்ததாக, விடுதலைப் புலிகள் மீது பல்வேறான குற்றச்சாட்டுகள் இருந்தாலும், போதைப்பொருட்களைக் கடத்துதல் என்பது, அவர்கள் மீது காணப்படாத குற்றச்சாட்டாகவே இருந்தது. அவ்வமைப்பின் முன்னாள் உறுப்பினர்களும் கூட, இதையே கடைப்பிடித்தனர் என்ற பொதுவான பார்வை உண்டு. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளிடமிருந்து, போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது, சிறிது முரணானதாகவே காணப்படுகிறது.

தங்களது அமைப்பில் இருந்ததைவிட அவர்கள் தற்போது மாறியிருக்கலாம் என்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவர்களில் அநேகமானோர், சமூகத்தை ஆழமாக நேசிப்பவர்கள் என்ற அடிப்படையில், போதைப்பொருள் விற்பனை என்பது, அவர்களால் செய்யப்படக்கூடிய ஒன்று என்பதை ஏற்பது கடினமாக உள்ளது. கைப்பற்றப்பட்ட இந்தப் பொருட்கள், தங்களுடையன அன்று என்று, அவர்களும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள் என்பது, சுட்டிக்காட்டப்படக்கூடிய ஒன்று. இவை இவ்வாறிருக்க, முன்னாள் புலிகளை இதில் சம்பந்தப்படுத்தியிருக்கும் விதம், அவர்களது எதிர்காலத்துக்கு ஆபத்தானது.

புனர்வாழ்வு செய்யப்பட்ட பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்ட “நல்லவன்” என்ற குறித்த முன்னாள் போராளிக்குப் பணத்தட்டுப்பாடு இல்லாமையால், மாவீரர் தினத்தன்று புலிக்கொடி ஏற்றுமாறு கூறப்பட்டதாகவும் அதற்காக 5,000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அந்தப் பத்தியில் தெரிவிக்கப்பட்டதோடு, ஒருவரைக் கொலை செய்வதற்காக 15 இலட்சம் ரூபாயும் ஐரோப்பிய நாடொன்றுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்துதரப்படும் என்று கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு “நல்லவன்” ஓரளவு ஏற்புடன் இருந்தாலும், இலக்குவைக்கப்படவுள்ள “முக்கியமான தமிழ் அரசியல்வாதி” யாரென்று தெரிந்தால் மாத்திரமே, சம்மதம் தெரிவிக்கவுள்ளதாகத் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் பலர், புனர்வாழ்வு செய்யப்பட்ட பின்னரும் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையானது. போதிய வசதிகளின்றி அவர்கள், தங்கள் வாழ்க்கையைக் கொண்டுசெல்லக் கஷ்டப்படுகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால், பணமில்லாத நிலையில், அவர்கள் தான் புலிக்கொடி ஏற்றுகிறார்கள், ஆட்களைக் கொலைசெய்யத் திட்டமிடுகிறார்கள், அதற்குச் சம்மதம் தெரிவிக்கிறார்கள் போன்றதொரு பார்வையை, இந்தச் செய்தி, ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களுக்காகச் செய்யப்பட்ட முக்கியமானதும் அரிதானதுமான ஒரு பணி தான், புனர்வாழ்வு செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், சமூகத்துடன் இணைக்கப்பட்டமை. 12,000க்கும் மேற்பட்டோர், அவ்வாறு இங்கு இணைக்கப்பட்டனர். தற்போது, அவர்களின் இருப்பையே இவ்வாறான செய்தி கேள்விக்குள்ளாக்குகிறது என்பது தான் கவலைக்குரியது. இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தெற்கிலுள்ள கடும்போக்குவாதிகள், முன்னாள் புலிகளுக்கு எதிரான தங்களது வெறுப்பைக் கக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது, ஆரோக்கியமானதொரு நிலைமை கிடையாது. இவையெல்லாம் ஒருபக்கமாகவிருக்க, சுமந்திரன் மீதான இந்தக் கொலைமுயற்சி, உண்மையிலேயே நடந்திருந்ததா என்பதையும் அதன் விளைவுகள் தொடர்பாகவும் ஆராயும் கடமையும் உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உருவாக்கம் முதல், மாற்றுக் கருத்தாளர்கள் கொல்லப்பட்ட வரலாறு காணப்படுகிறது. அதில் தமிழர்களும் உள்ளடங்கியிருக்கிறார்கள் என்பது தான் கவலையானது. அல்பிரட் துரையப்பா, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், அருணாசம் தங்கதுரை, நீலன் திருச்செல்வம், சரோஜினி யோகேஸ்வரன், உமா மகேஸ்வரன், ரஜினி திரணகமக, லக்‌ஷ்மன் கதிர்காமர் என்று, அந்தப் பட்டியல் நீள்கிறது.

இந்தக் கொலைகள் ஒருபக்கமாய் இருக்க, இக்கொலைகளை நியாயப்படுத்துகின்ற பழக்கமும், கணிசமானளவு தமிழர்களிடத்தில் காணப்படுகிறது. இந்தப் பின்னணியில் தான், சுமந்திரன் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கொலை முயற்சியையும் பார்க்க வேண்டியிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களிடத்தில் பெருமளவில் பிரபலமில்லாதவராகவே சுமந்திரன் காணப்படுகிறார். அவர்கள் எதிர்பார்க்கும் கடும்போக்குத் தமிழ்த் தேசியத்தை அவர் பின்பற்றுவதில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டு.

எனவே தான், அவரைத் துரோகி என்றெல்லாம் அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இலங்கையில் வசிக்கும் தமிழர்களிலும் ஒரு பகுதியினர், இதே கருத்தைத் தான் கொண்டிருக்கிறார்கள். சுமந்திரனின் அரசியல் கொள்கைகள் சரியானவையா, இல்லையா என்பதை ஆராய்வது தேவையற்றது. சுமந்திரன் ஒன்றும், தமிழ் மக்களை விற்று, பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் பணம் பெறுவதில்லை (ஆகக்குறைந்தது, அவ்வாறு நடக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை).

ஆனால் அப்படி அவர் செய்தாலும் கூட, அவரைக் கொல்வது எப்படி நியாயமாகும்? சுமந்திரன் செய்வது தவறு என்றால், ஜனநாயக ரீதியாக அவருக்கெதிரான பிரசாரத்தை மேற்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் வழங்கலாம். அடுத்த தேர்தலில் அவரைத் தோற்கடிப்பதற்கு முயற்சி எடுக்கலாம். அதைவிடுத்து, அவரைக் கொன்று தான் அதற்கான தீர்வைக் கண்டுபிடிப்போம் என்பது, ஜனநாயகத்துக்குப் புறம்பானது என்பதோடு மாபெரும் குற்றமாகவும் அமையும். அத்தோடு, முன்னாள் புலிகள் இதில் சம்பந்தப்பட்டிருந்தால், அது அந்த நால்வரை மாத்திரமன்றி, 12,000க்கும் மேற்பட்ட முன்னாள் புலிகளையும் பாதிக்குமென்பதை, அவர்களும் அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

முன்னாள் புலிகளில் கணிசமானோர், கட்டாயப்படுத்தி, அவ்வமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள். இன்னும் குறிப்பிட்ட ஒரு பகுதியினர், சமூக/குடும்ப அழுத்தங்களால் அவ்வமைப்பில் இணைந்தவர்கள். போர் முடிந்ததை எண்ணி, இவர்கள் அனைவரும் மகிழ்வாகவே இருப்பதோடு, சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்குக் கிடைத்த வாய்ப்பை, அவர்கள் மெச்சுகிறார்கள். அந்த நிலைமையை, பேராசை பிடித்த ஒரு சிலர், முழுவதுமாகக் கெடுத்துவிடக்கூடாது என்பது தான், அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரும வறட்சி ஏன் ஏற்படுகிறது?..!!
Next post 195 மில்லியன் வருடங்களுக்கு முன்னரான வினோத பொருள் கண்டுபிடிப்பு..!!