தகவல் அறியும் உரிமைச்சட்டம் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்குமா?..!! (கட்டுரை)

Read Time:15 Minute, 30 Second

article_1486451234-miss-newசட்டம் அமுலுக்கு வந்திருக்கிறது. ஆனால் அது தொடர்பான அடிப்படையான விடயங்கள்கூட இதுவரையில் அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று மட்டக்களப்பில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த மூன்றாம் திகதி சட்டம் அமுலுக்கு வந்தவுடன் மட்டக்களப்பில் காணாமல் போனோர்களின் உறவினர்கள், கிழக்குப்பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காரியாலயம், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காரியாலயம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயம், சிறைச்சாலைகள், மாவட்டச் செலயகம் என்பவற்றுக்குச் சென்று, தங்களது விண்ணப்பங்களைக் கையளித்திருந்தனர். இந்த அனுபவம் அவர்களுக்கு முழுமையான திருப்தியைத் தந்திருக்கவில்லை.

பல்வேறு விமர்சனங்கள், எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2016 ஜுன் 24 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2015 இல் உருவான ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதொரு சட்டமாகும். மக்கள் நலன் சார்ந்த பல சட்டங்கள் நாடாளுமன்றத்துக்கூடாக உருவாக்கப்படுகின்ற போதும், அது பற்றிய சரியான விழிப்புணர்வு அற்ற தன்மை பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது.

அதேபோல், புதிதாகக் கொண்டு வரப்படுகின்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலும் மக்களிடம் தெளிவில்லாத நிலைப்பாடு காணப்படுகிறது. தகவல் உரிமைச் சட்டமானது ஊடகவியலாளருக்கு நன்மை பயக்கும் ஒரு சட்டம் என பலரும் கருதினாலும் உண்மையில் அது பொது மக்களுக்கே நன்மை தரக்கூடிய ஒரு சட்டமாகும்.

சிவில் உரிமையின் கீழ் ஒவ்வொருவரும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை இருக்கின்றது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்தச் சட்டமூலம் உள்ளது. மேலைத்தேச நாடுகள் பலவற்றில் இது நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் நடைமுறையில் உள்ளது.

இந்த நாட்டிலிருக்கின்ற 8,000 அரச அலுவலகங்களில் 8,000 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் எப்போது நியமிக்கப்பட்டு, எப்போது நாம் தகவல்களைப் பெறப்போகிறோம் என்ற கவலை மக்கள் மத்தியில் இப்போது இருக்கத்தான் செய்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையினால் மனிதவுரிமைகள் சரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதனின் அடிப்படை உரிமையான தகவல் அறியும் உரிமையை, இலங்கை கொண்டுவந்துள்ளமை பாராட்டத்தக்கது.

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தத் தகவல் அறியும் சட்டமானது உலகில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று உலகில் உள்ள அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடையாத சுமார் 112 நாடுகளில் அமுலில் இருக்கின்றது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக, இந்த உரிமையை பெற்றுக்கொடுக்க சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், மனிதவுரிமை அமைப்புக்கள் எனப் பலரும் பல்வேறு போராட்டங்களை நடாத்தியிருந்தனர்.

எமது நாட்டு மக்களுக்கு, தகவல் அறியும் உரிமையை வழங்குவதற்கான உரையாடல் 1993-1994 களில் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டிலேயே முதன் முதலில் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இருந்தும் அது நிறைவேற்றப்படவில்லை. சட்டமூலமாக அங்கிகரிக்க, தொடர்ந்து வந்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. சுய நலமிகளினதும் அறிவீனர்களினதும் கெடுபிடிகள் காரணமாகவும் நாடாளுமன்றம் கலைக்கப்படல் மற்றும் ஆட்சி மாற்றம் காரணமாகவும் இழுபறி நிலையிலேயே இருந்தது.

1993-1994 பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் ஊடக அடக்குமுறைக்கு எதிராக வெகுண்டெழுந்த ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடக இயக்கத்துக்குள் தகவல் அறியும் உரிமை தொடர்பான உரையாடலைத் தோற்றுவித்தார்கள்.

1995 அப்போதைய ஊடக அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கா, ஊடக சுதந்திரம், தகவல் சுதந்திரம் தொடர்பாக ஆராய நீதியரசர் ஆர்.கே.டபிள்யூ. குணசேகர தலைமையில் ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்தார். ஆர்.கே. டபிள்யூ. குணசேகர, ‘The R.K.W.Goonasekara Committee Report’ இறுதி அறிக்கையை 1996 மே 27 ஆம் திகதி ஊடக அமைச்சருக்கு வழங்கியது. இந்த அறிக்கையில், தகவல் அறியும் உரிமை (Freedom of Information Act.) சட்டமாக மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என முதன்முதலாகப் பிரேரிக்கப்பட்டிருந்தது.

1996 இலங்கையின் சட்ட ஆணைக்குழு, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்பட வேண்டும் என மாதிரி வரைவொன்றை வெளியிட்டது.

1998 ஏப்ரல் கொழும்பில் நடைபெற்ற வெகுஜன ஊடக மாநாட்டில் ஊடக சுதந்திரம் மற்றும் சமூகப்பொறுப்புணர்வு தொடர்பான கொழும்புப் பிரகடனத்தை வெளியிட்டது (Colombo Declaration on media freedom and social responsibility). இதில் தகவல் அறியும் உரிமையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க சட்டமூலம் கொண்டுவரப்பட வேண்டுமென பிரேரித்திருந்தது.

2000 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம், புதிய யாப்புச் சீர்திருத்த வரைவொன்றை முன்மொழிந்தது. அதில், அடிப்படை உரிமைகள் பகுதியில் தகவல் அறியும் உரிமையும் இணைக்கப்பட்டிருந்தது. 2003 சுதந்திர ஊடக இயக்கம், மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் மற்றும் பல அமைப்புகள் இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டமூல வரைவொன்றை முன்வைத்தது.

அது அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கையளிக்கப்பட்டது. 2004 பெப்ரவரி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களால் தகவல் அறியும் சட்டமூல வரைவு அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இருப்பினும், நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு முன் 2004 மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைந்தது.

2006 ஏப்ரல் இலங்கையின் சட்ட ஆணைக்குழு இரண்டாவது முறையாகவும் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூல வரைவை ‘Draft Freedom of information act -2006 Proposed by the Law Commission of Sri Lanka’ வெளியிட்டது. 2009 இல் அப்போதய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மிலிந்த மொரகொட, தகவல் அறியும் சட்டமூல வரைவொன்றை முன்வைத்தார்.

2010 ஜூலை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமது சுய முன்வரைவாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவர அதிகாரம் இல்லையென தடுக்கப்பட்டது.

2010 செப்டெம்பர் 23 ஆம் திகதி, ஐ.தே.க பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அப்போது ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளராக இருந்த தினேஷ் குணவர்தன தமது அரசாங்கம் ஆறு மாதத்தில் இப்படியான ஒரு சட்டமூலத்தைக் கொண்டுவர இருப்பதாகத் தெரிவித்தார்.

2011 ஜூன் 21 ஆம் திகதி மீண்டும் இதே சட்டமூலத்தை கரு ஜயசூரிய முன்வைத்தார். அதற்கு ஆளுங்கட்சி மறுத்ததோடு, சட்டமூலம் கொண்டுவருதல் தொடர்பாக வாக்கெடுப்பொன்றும் நடாத்தப்பட்டது. சார்பாக 32 வாக்குகள் கிடைத்தன. 99 வாக்குகள் எதிராக இருந்ததால் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது பகிஷ்கரிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மைத்ரிபால சிறிசேன வௌியிட்ட தனது கொள்கைப் பிரகடனத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்தார். 2015 ஏப்ரல் 23 அரசியல் யாப்பின் 122 ஆம் சரத்தின் கீழ் அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்க பிரதமர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்தது.

2015 மே 15 இல் கொண்டுவரப்பட்ட, 19ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் 14 அ (1) சரத்தில் தகவல் அறியும் உரிமை தொடர்பான யாப்புரீதியான அங்கிகாரம் வழங்கப்பட்டது. 2015 டிசெம்பர் 21 தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் அரசாங்க வர்த்தமானி யில் வெளியிடப்பட்டது.

2016 மார்ச் 24 நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் தகவல் அறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

2016 மே மூன்றாம் திகதி தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 2016 ஜூன் 23 நாடாளுமன்றத்தில் சட்டமூலம் தொடர்பான விவதாம் நடைபெற்று, 2016 ஜூன் 24 ஆம் திகதி, வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் சபையின் அங்கிகாரத்துடன் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிரகாரம், குறித்த சட்டமூலத்தின் அடிப்படையில், தகவலைப் பெற இருக்கும் உரிமைக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவும் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவினை ஸ்தாபிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தத் தகவல் அறியும் உரிமையானது அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதும், நாடாளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமைக்கான சட்டமொன்றை நிறைவேற்றி, அது நடைமுறைக்கு வந்த பின்னரே அந்த உரிமை பொதுமக்களுக்கு கிடைக்க கூடியதாக இருக்கும்.

நாட்டிலே அரசாங்கமும் ஏனைய பொது அமைப்புகளும் மக்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவது சம்பந்தமாக அறிவூட்ட வேண்டும். ஊடக தகவல் அமைச்சு, ஆங்காங்கே சில கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.

இருந்தாலும், இதுவரை சரியாக, பரந்தளவில் முனைப்புடன் செய்யப்படவில்லை என்றே கூற வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இது தொடர்பாக அறிவூட்டி, குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு இது தொடர்பான விடயங்களில் கூடுதலான விமோசனம் பெற்றுக்கொடுக்க வழிவகைகள் செய்யப்படவேண்டும். சில வேளைகளில் எங்களுக்கு ஏற்படுகின்ற அநீதி, அசாதாரணங்களை பகிரங்கப்படுத்த அல்லது அவற்றை தெரிந்து கொள்ள இது போன்ற விடயங்கள் துணை செய்யும் என்பது உறுதி.

தன்னுடைய கிராமத்தினுடைய வீதியை அமைப்பதற்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது? அது எப்படிச் செயற்படுத்தப்படுகிறது? இத்தகைய தகவல்களைக் கேட்டு அறியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் எங்களுடைய பிள்ளையை ஏன் பாடசாலைக்கு அனுமதிக்கவில்லை என்று முன்பெல்லாம் அதற்கான காரணத்தை பாடசாலை நிர்வாகம் கூற வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், இப்போது தெளிவாக, பிள்ளை ஏன் இந்தக் கல்லூரிக்கு அனுமதிமதிக்கப்படவில்லை. பிள்ளை இந்தப் பரீட்சையில், நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்படவில்லை. அவற்றை தெளிவாக சொல்லுவதற்கு இந்தச் சட்டமூலத்தில் ஏற்பாடுகள் இருக்கின்றன. அரசாங்கத்தினுடைய தகவல்களை மக்கள் தௌிவாக அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தக்கூடியதாகவுள்ளது என்றெல்லாம் நாம் கூறிக்கொண்டாலும், வடக்கு கிழக்கு மக்களைப் பொறுத்தவரையில் எப்போது காணாமல் போனோர் தொடர்பான முழுமையான தகவல்கள், அவர்களது நிலை குறித்து விளக்கம் வழங்கப்படுறதோ அப்போதுதான் இந்தத் தகவல் அறியும் உரிமைச்சட்டம் முழுமையானது என்று அர்த்தப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உருகுலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!!
Next post சசிகலா தரப்பு நெருக்கடி காரணமாகவே ராஜினாமா: ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்..!! (வீடியோ)