பிலவுக்குடியிருப்பு: கொதிக்கும் நிலம்..!! (கட்டுரை)

Read Time:26 Minute, 37 Second

downloadசொந்த வீட்டுக்குத் திரும்பும் வரைட, வீதியில்தான் எங்கள் வாழ்க்கை” என்று பத்து நாட்களாக வீதியிலேயே படுத்து எழும்பிப்போராடிக் கொண்டிருக்கிறார்கள், முல்லைத்தீவு – கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள். “வீடு திரும்பும் வரையில் வீதியை விட்டுச் செல்ல மாட்டோம்” என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் என கிராமத்திலுள்ள அனைவரும் வீதிக்கு வந்து விட்டனர். போராட்டக்களமாகியிருக்கிறது, வீதி.

“மைத்திரி – ரணில் நல்லாட்சியில், இப்படி ஒரு வார்த்தையா? இப்படியொரு போராட்டமா?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கண் முன்னால் மெய்யாகவே இப்படித்தான் அந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படித்தான் அந்த மக்கள் வீதியில் நிற்கிறார்கள். அருகே உள்ள மரங்களின் கீழே சமைக்கிறார்கள். வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக் கொட்டகையில் இருக்கிறார்கள்.

இரவில் கொடும்பனிக் குளிர், பகலில் அனலடிக்கும் வெயில். இருந்தாலும், காணிகளை விடுவிக்கும் வரையில் இந்த இடத்தை விட்டுப்போகப்போவதில்லை என்று, சத்தியாவேசத்துடன் இருக்கிறார்கள்.

போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பல இடங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் தினமும் வந்து கொண்டிருக்கிறார்கள். பல அமைப்புகள், தங்களுடைய ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன.
இன்னும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் அவ்வப்போது வந்து, தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துச் செல்கிறார்கள். ஊடகங்களும் ஓரளவுக்கு இங்கே ஒளியைப் பாய்ச்சுகின்றன.
தென்பகுதியிலிருந்தும் பொது அமைப்புகளும் இடதுசாரிச் செயற்பாட்டாளர்களும் சென்று தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலும் இந்த மக்களுக்கான ஆதரவுப் போராட்டங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து ஏனைய இடங்களுக்கும் இது விரிவடையலாம்.
இதெல்லாம் அந்த மக்களை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது. இப்பத்தியாளர் அங்கே சென்றபோது, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ரவிகரனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமூக நீதிக்கான சமத்துவ அமைப்பின் முக்கியஸ்தருமான முருகேசு சந்திரகுமாரும் ஒரு கிறிஸ்தவ மதகுருவும் அந்த மக்களோடு கூட இருந்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் செயற்பாட்டாளர்கள் சிலரும் வந்திருந்தனர். கவிஞரும் களச்செயற்பாட்டாளருமான கிரிஷாந்த், அவர்களை அழைத்து வந்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுண்ணாகம் குடிநீர்ப்பிரச்சினை தொடர்பான உண்ணாவிரதப்போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்திருந்த அணியில் முக்கியமானவர் கிரிஷாந்த். இந்தப் போராட்டம் உருவாக்கிய நெருக்கடியினால் வடமாகாண ஆளுநரும் வடமாகாண முதலமைச்சரும் திணறிப்போயிருந்தனர்.

உடனடியாக உண்ணாவிரதிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வாக்குறுதி அளிக்கும் நிலையை கிரிஷாந்தின் அணி உருவாக்கியிருந்தது. அதைத் தொடர்ந்து, ஏராளமான மக்கள் பிரச்சினைகளில், கட்சி அரசியல் சாராத போராட்டங்களைக் கிரிஷாந்த் முன்னெடுத்து வருகிறார்.

அண்மையில் வவுனியாவில் நடந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய போராட்டத்திலும் கிரிஷாந்தின் அணி பின்புலமாக இருந்தது. இங்கும் கிரிஷாந்த் ஊக்கியாக இருக்கிறார். இத்தகையவர்களின் ஆதரவும் வழிகாட்டலும் இருப்பது, போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு கூடுதல் வலு.

ஆனால், வடக்கின் முக்கிய அரசியல் தரப்புகளாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் நில மீட்புப் போன்றவற்றுக்காகக் குரல் எழுப்பும் தமிழ் மக்கள் பேரவை போன்றவை, இன்னும் நேரடியாகக் களத்தில் இறங்கவில்லை.

இந்தப் போராட்டத்தை அரசியற் கட்சிகள் எவையும் முன்னெடுக்காமல், இது மக்களால் சுயாதீனமாகவே முன்னெடுக்கப்பட்டாலும் இதற்கான தார்மீக ஆதரவை ஏனைய தரப்புகள் கொடுத்திருக்க வேண்டும். இன்னும் காலம் செல்லவில்லை. இப்போதே தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்துவது அவசியம். அது அந்த மக்களுக்கும் அவர்கள் முன்னெடுக்கும் நியாயமான கோரிக்கைக்கும் கொடுக்கும் மரியாதையாக அமையும்.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள், மிக வறிய நிலையில் இருப்பவர்கள். பெரும்பாலான குடும்பங்கள் கூலித்தொழிலைச் செய்தே வாழ்கின்றன. இதனால், போராட்டக்களத்தில் அதிகமாகப் பெண்களும் சிறுவர்களும் முதியோருமே உள்ளனர். பகலில் ஆண்கள் வேலைக்குப் போய் விடுகிறார்கள்.
இரவுகளில் வந்து போராட்டக்களத்தில் சேருகிறார்கள். இந்தக் குடும்பங்களில் அதிகமானவை, ஏற்கெனவே வெவ்வேறு இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவை.

குறிப்பாக நெடுங்கேணி, டொலர்பாம், கென்பாம், ஒதியமலை, திருகோணமலை, மல்லாகம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி என இன்னும் ஆராய்ந்து தேடிக்கொண்டு போனால், இவர்களில் அநேகமானவர்கள் கண்டி, கம்பளை, பதுளை போன்ற மலையகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், 1977ஆம் 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வன்முறைகளால் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் டொலர்பாம், கென்பாம் போன்றவற்றில் இருந்திருக்கிறார்கள். பிறகு அங்கேயும் பிரச்சினை என்று இடம்பெயர்ந்து கிளிநொச்சிக்கும் முல்லைத்தீவுக்குமாகப் போயிருக்கிறார்கள்.

அங்கே காணியில்லாமல், வீடில்லாமல் எவ்வளவு காலத்துக்குத்தான் தாக்குப்பிடிக்க முடியும்? இந்த நிலையில்தான் காடாக இருந்த பிலவுக்குடியிருப்புப் பகுதிக்கு வந்து குடியேறியிருக்கிறார்கள்.
இந்தக் கதையைச் சொல்கிறார், முத்துச்சாமி அகிலாண்டேஸ்வரி (வயது 68). “கண்டியில இருந்து 1983ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து, கிளிநொச்சிக்கு வந்தோம்.

கிளிநொச்சியில், அங்க இங்க என்று ஐந்தாறு இடத்தில இருந்தோம். பிறகு அக்கராயனில் இருக்கிற மணியங்குளத்தில் ஒரு வீட்டைப் போட்டிட்டு இருந்தோம். ஆனால், அதுவும் சரிப்பட்டு வரேல்ல. அங்க குடிக்கிற தண்ணிக்கே பெரிய பிரச்சினை. இதனால, அங்க இருந்து இடம்பெயர்ந்து. முள்ளியவளை – நீராவிப்பிட்டிக்குப் போனோம்.

அங்க கொஞ்சக்காலம் இருந்தம். என்னுடைய ஆறு பிள்ளைகளில் நான்கு பிள்ளைகள் அங்கே இருந்தே படித்தார்கள். இரண்டு பிள்ளைகள் இங்கே என்னோடு இருக்கிறார்கள். ஒருவரை யுத்தத்தில் இழந்து விட்டேன்.
ஆனால், 2002க்குப் பிறகு ரணில் – பிரபாகரன் பேச்சுவார்த்தை நடக்கும்போது, நீராவிப்பிட்டிக்கு முஸ்லிம்கள் வந்திருந்தாங்கள். அது முஸ்லிம்களுடைய காணி. அதில இருக்க முடியாது என்று சொன்னாங்கள்.
அதோடதான் அங்கிருந்து இந்தப் பிலவுக்காட்டுக்கு வந்து, காடு வெட்டிக் குடியேறினோம். இங்கே எங்களுக்கு வீட்டுத்திட்டம் தந்தார்கள். இதுக்கு எங்களுக்கு 03.08.2005இல் காணிக்கான அனுமதிப்பத்திரமும் கிடைத்தது. இன்னும் அதை நாங்கள் வைத்திருக்கிறோம். யுத்தத்தின்போது, சில குடும்பங்களிடம் அனுமதிப்பத்திரம் தொலைந்துவிட்டது.

ஆனாலும், அதனுடைய பிரதிகளை இப்ப கூடப் பிரதேச செயலகத்தில் எடுக்கலாம். இந்தக் காணிகள் எங்களுக்கு உரியவை என்று எல்லாருக்குமே தெரியும். படைகளுக்கும் தெரியும்.

“கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்து எங்களுடைய காணிகளை மீளத்தருவார் என்றும் சொல்லப்பட்டது. அவருடைய வருகைக்காகக் காத்திருந்தோம். ஆனால், அவர் வரவில்லை.

அதற்குப் பிறகும் படையினர் அங்கிருந்து வெளியேறுவதாகத் தெரியவில்லை. என்றபடியால்தான், இப்ப நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய இருப்பிடத்தை விட்டிட்டு நாங்கள் எங்கபோயிருக்கிறது? என்னுடைய பிள்ளைகளும் இப்ப காணியில்லாமல் என்னோடு நடுவீதியிலதான் நிற்கினம். இது எவ்வளவு பெரிய கொடுமை?” என்று ஒரே மூச்சில் சொல்கிறார், முத்துச்சாமி அகிலாண்டேஸ்வரி.

இன்னொரு கதையைச் சொல்கிறார், காளிமுத்து செல்வி (வயது 34). செல்விக்கு மூன்று பிள்ளைகள். கணவர் கூலித்தொழிலுக்காகப் போய் விட்டார். கண்டியிலிருந்து வன்னி நோக்கி வந்த குடும்பத்தைச் சேர்ந்தவரே, செல்வி. எங்கெல்லாமோ அலைந்து பிலவுக்குடியிருப்பு வந்தார் செல்வி. 2002இல் பிலவுக்குடியிருப்பில் காணிகளை வழங்கி, ஒரு குடியிருப்பை அப்பொழுது அதிகாரத்தில் இருந்த சக்திகள் செய்திருக்கின்றன.

பிறகு வீட்டுத்திட்டத்தின் மூலமாகப் பிலவுக்குடியிருப்பில் உள்ள 84 குடும்பங்களுக்கும் வீட்டுத்திட்டத்தில் அத்திபாரம் போடப்பட்டது. இறுதி யுத்தத்தின் பிறகு செட்டிகுளம் முகாமிலிருந்து ஏற்றி வரப்பட்டு, மாதிரிக் கிராமத்தில் இறக்கி விட்டார்கள். சொந்த வீடிருந்த பகுதிக்குப் போகலாம் என்று வந்தவர்களுக்கு மாதிரிக் கிராமத்தில் இருக்கும்படி விதிக்கப்பட்டது பெரிய ஏமாற்றம். “நாங்கள் எங்களுடைய சொந்தக் காணிக்கே போகப்போகிறோம். அதற்கு அனுமதியுங்கள்” என்று கேட்டனர், எல்லோரும்.

“நிச்சயமாக நீங்கள் அங்கே போக முடியும். ஆனால், இப்ப அதற்கு இயலாது. கொஞ்சக்காலம் இங்கே இருங்கள். பிறகு உங்களுக்கு மாதிரிக் குடியிருப்புக் காணியும் கிடைக்கும். இந்தப் பிலவுக்குடியிருப்புக் காணியும் கிடைக்கும்” என்றனர்,

படையதிகாரிகள். 2012 நவம்பர் 28 தொடக்கம் இப்போது வரையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பிலவுக்குடியிருப்பை விடுவதாக இல்லை. பதிலாக இன்னும் அதைப் பலப்படுத்தும் முயற்சியில் இலங்கை விமானப்படை ஈடுபடுகிறது.

போதாக்குறைக்கு 2005இல் கட்டப்பட்ட பிலவுக்குடியிருப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தையும், படைத்தரப்பு தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

மாதிரிக்கிராமத்தில் சுமார் 350 குடும்பங்களுக்கும் அதிகமானவை உள்ளன. சூரிபுரம், கேப்பாப்புலவு, சீனியாமோட்டை மற்றும் பிலவுக்குடியிருப்பு ஆகிய நான்கு பகுதிகளைச் சேர்ந்தவை. எல்லோரும் கேப்பாப்புலவு கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இதில் சீனியாமோட்டையைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய சொந்த இடத்துக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கிராமங்கள் அத்தனையையும் படைகளே இன்னும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. யுத்தம் முடிந்த பிறகும் இந்த நிலைமை இங்கே மாறவில்லை.

இந்தப் பகுதிக்குக் கிழக்கே விரிந்திருக்கிறது, நந்திக்கடல். அதற்கு அப்பால்தான் உள்ளது, முள்ளிவாய்க்கால். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைப்படைகளுக்கும் இடையிலான இறுதி யுத்தம் நடந்த பகுதி; போர் முடிந்த பிரதேசம். இறுதி யுத்தத்தின் பிறகு படைத்தரப்பின் பாதுகாப்புப் பொறிமுறையும் தந்திரோயங்களும் மாறி விட்டன.
அதன்படி, முல்லைத்தீவு நகரையும் விட, அதற்கு அப்பாலான பகுதிகளையே பாதுகாப்பான இடங்களாக, கேந்திர நிலையங்களாகப் படைத்தரப்புக் கருதுகிறது. இது புலிகளுடனான யுத்த அனுபவத்தின் விளைவு.

எனவே, முன்னர் முல்லைத்தீவு நகரத்தைப் பிரதான தளமாகக் கொண்டிருந்த படையினர், தற்போது அதை விட்டு விட்டு, பின்தளமாக இருந்த கேப்பாப்பிலவையும் அதன் சுற்றயலையும் எடுத்துக் கொண்டனர்.

இப்படிச் செய்யும்போதே பொதுமக்களின் காணிகளையும், படைத்தரப்பு ஆக்கிரமிக்க வேண்டியிருக்கிறது. மக்களின் காணியை விட, மிக மிக அதிகமான காணிகளை படைத்தரப்பு வைத்திருக்கிறது. அது அரச காணி, காடு.
“படைத்தரப்பின் நியாயமும் நிலைப்பாடும் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், எங்கள் நிலம் எங்களுக்கே வேண்டும்” என்கிறார், காளிமுத்து செல்வி.

“அதை விட்டு விட்டு அவர்களால் வாழவே முடியாது. மாதிரிக் கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கால் ஏக்கர் வீதமாகவே காணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் எனத் தற்காலிக வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. வேறு அடிப்படை வசதிகள் கிடையாது. அது என்ன தண்டனையா, இந்தத் தண்டனை எங்களுக்கு எதற்காக?” என்று, ஆவேசப்படுகிறார் செல்வி.

செல்வியோடு சேர்ந்து கொண்டு தங்களுடைய கோபத்தை அங்கே கூடியிருக்கின்ற ஏனையவர்கள் வெளிப்படுத்துகின்றனர். இதையெல்லாம் அங்கே நிற்கின்ற படையினர், பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
மாதிரிக் கிராமத்தில் இரண்டு பெரிய பிரிவுகள் உள்ளன. ஒன்று ஏ பிரிவு. மற்றது பி பிரிவு. ஏ பிரிவில் முகாமிலிருந்து ஏற்றி வரப்பட்டவர்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

பி பிரிவில் உறவின் நண்பர்கள் வீடுகளில் என வெளியிடங்களில் இருந்தவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். “எப்படித்தான் இருந்தாலும், நாங்கள் எங்கள் சொந்த இடத்துக்கே போக விரும்புகிறோம். அதற்கான வழி கிடைக்கும் வரை இந்த வழியில்தான்” என்று, உறுதியாகச் சொல்கிறார், ஜெகன் றீற்றா.

பிலவுக்குடியிருப்பு மக்கள்தான் இப்போது போராடி வருகிறார்கள். அங்கேதான் போராட்டமும் நடந்து கொண்டிருக்கிறது. கேப்பாப்புலவு மக்கள், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கேப்பாப்புலவு மக்களுடைய காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றாலும் அவர்கள் இந்தப் போராட்டத்தில் முழுமையான ஆர்வத்தோடு கலந்துகொண்டிருப்பதாகத் தெரியவில்லை. கேப்பாப்பிலவைச் சேர்ந்த ஒரு சில முகங்கள் மட்டும் அவ்வப்போது தெரிகின்றன. இதற்கான காரணத்தை விசாரித்தோம்.

கேப்பாப்புலவு மக்களில் ஒரு தொகுதி புதுக்குடியிருப்பு, வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு, கிளிநொச்சி எனப்போய் விட்டனர். தவிர, அவர்கள் அந்தப் பிரதேசத்தின் நிரந்தரவாசிகள், பூர்வீகக்குடிகள். ஆகவே, அவர்களால் இந்தப் போராட்டத்தில் ஒன்றித்து, முழுமையாகத் தங்களை அர்ப்பணித்து நிற்க முடியவில்லை. ஆகவேதான், இடையிடையே தலையைக் காட்டுகிறார்கள்.

பிலவுக்குடியிருப்பு மக்கள், வேறு இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள். அவர்களுக்கு இந்த நிலமே சொந்தம். அதுவே அவர்களுடைய வாழ்க்கை. ஆகவேதான் அதற்காக அவர்கள் தொடர்ந்தும் போராடுகிறார்கள். ஆனால், “இந்தக் காணிகள் அரச நிலம். இது வனத்துறைக்குரியது” என்கிறார், இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன.

மேலும், “வனத்துறையின் காணியைத்தான் அதனுடைய அனுமதியோடு வைத்திருக்கிறோம்” என்கிறார், பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன.

“மக்கள், உரிய ஆவணங்களைக் காட்டினால், தாம் அந்தக் காணிகளை” விட்டுக்கொடுப்போம் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தைகள் எல்லாம் தேவையற்றவை.

இந்தக்காணிகள் யாருக்கு, அவை எப்போது சனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என அறிவதற்கு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் விவரம் கேட்டால், அவர்கள் உரிய சான்றுகளோடு தருவார்கள். பேசாமல், படையினர் பெட்டி, படுக்கையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டியதுதான்.
ஆனால், இதைச் செய்வதற்கு இன்னும் அரசாங்கம் தயாரில்லை. படைத்தரப்பு, இந்த மக்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. தமிழ் அரசியல் தலைவர்களும் அப்படித்தான், பேசாமலேயே இருக்கிறார்கள். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பிரதாயமாக இந்த விவகாரத்தைப பற்றிப் பேசியிருந்தார்கள்.

அவர்கள் தங்கள் கட்சியில் குறைந்த பட்சம் ஒரு தீர்மானத்தை எடுத்து, இது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச முன்வரவில்லை.

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் கூட இந்தப் பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தைப் பற்றி அதிகமாகக் கண்டு கொள்ளாத மாதிரியே உள்ளனர். இதை ஒரு மையப்போராட்டமாக வளர்த்தெடுக்கவில்லை.அப்படி வளர்த்தெடுக்கப்படுமாக இருந்தால், படையினர் ஆங்கங்கே வைத்திருக்கும் எனைய இடங்களையும் விட்டுக் கொடுத்தே ஆகவேண்டும்.

ஆசைப்பிள்ளை ஏற்றம், இயக்கச்சி, மண்டலாய், கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான், மலையாளபுரம், வவுனிக்குளம், மிருசுவில், பலாலி எனப் பல இடங்களில் இந்த மாதிரியான அத்துமீறல்களை அவர்கள் கைவிட வேண்டியிருக்கும்.
யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களைக் கடந்த போதும், தங்களின் சொந்த நிலங்கள் இல்லாது இருப்பது கொடுமையன்றி வேறென்ன? நிலம் இல்லை என்றால், வாழ்வில்லை. நிலமில்லாத நிலை அவர்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, தங்களின் சொந்த நிலங்களைத் தவிர தங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை என்பதில் கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்பு மக்கள் மிகவும் உறுதியாக உள்ளனர். சொந்த நிலம் இல்லாத காரணத்தினால் மீள்குடியேற்றத்துக்குப் பின்னரான அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவித் திட்டங்களையும் இந்த மக்கள் இழந்து நிற்கின்றனர்.

என்றபடியால்தான் பொறுத்தது போதும் என்று, உறுதியாக தங்களின் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நந்திக்கடலில் ஒரு போராட்டம் முடிய, இன்னொரு போராட்டம் ஆரம்பித்துள்ளது.
“சொல்லாத சேதிகள்” என்றொரு கவிதைத் தொகுதி, 1980களில் வெளிவந்திருந்தது. அதுவரையிலும் பொதுவெளியில் பெண்கள் பேசியிராத, பெண்கள் சொல்லியிருக்காத, பெண்களின் குரலாக அடையாளம் காட்டியிருக்காத செய்திகளை, அந்தக் கவிதைகள் பேசின.

அந்தச் செய்திகள், பெண்களுடைய உள்ளக் குமுறலின் வெளிப்பாடு. அவர்களுடைய நூறாயிரம் ஆண்டுகாலக் கொதிப்பின் உடைப்பு. அவற்றில் இருந்தது கவனிக்கப்படாதிருந்த உண்மைகளும் வழங்கப்படாதிருந்த உரிமைக் குரலுமாகும்.

அதைப்போலவே “கேப்பாப்புலவு மக்களின் காணிகள் விடுவிப்புக்கான போராட்டம்” என்ற பெயரில் இப்போது நடந்துகொண்டிருக்கும் “பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டமும்” ஏராளமான உண்மைகளைத் தன்னுடைய உள்ளடக்குகளில் வைத்திருக்கிறது. தெரியாத உண்மைகளைத் தெரியப்படுத்துவதே போராட்டங்களின் முதலாவது பணியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் நாடு முழுவதும் காதலர் தினம் கொண்டாட நீதிமன்றம் தடை..!!
Next post அமெரிக்காவில் உடையும் நிலையில் அணை: பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்..!! (வீடியோ)