வங்காள விரிகுடா: ஆசியாவின் அரசியல் ஆடுகளம்..!! (கட்டுரை)

Read Time:21 Minute, 10 Second

article_1487834311-Bay-of-Bengal-02-newஅரசியலில் ஆடுகளங்கள் அவசியமானவை மட்டுமல்ல; அதிகாரத்துக்கான அளவுகோல்களுமாகும். பொதுவில் அரசியல் ஆடுகளங்கள் இயல்பாகத் தோற்றம் பெறுபவை. சில தவிர்க்கவியலாமல் தோற்றுவிக்கப்படுபவை. ஆடுகளங்கள் வெற்றி, தோல்வியை மட்டும் தீர்மானிப்பவையல்ல; மாறாகப் பிராந்திய மற்றும் பூகோள அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க வல்லன. இவ்வாறான ஆடுகளங்களில் நடைபெறும் ஆட்டங்கள் கிரிக்கெட் விளையாட்டுப் போல பலவகைப்பட்டன.

சில டெஸ்ட் கிரிக்கெட் போல ஆறுதலாக, நிதானமாக, மூலோபாய ரீதியில் காய்நகர்த்தல்களின் ஊடு நடைபெறும். சில இருபதுக்கு இருபது போல, சில மணித்துளிகளில் நிகழ்ந்து முடிந்துவிடுபவை. இவ்வாறான களங்களில் நடப்பவை ஓரிரவில் மொத்த ஆதிக்கத்தையும் கைமாற்றும் தன்மையுள்ளவை. அதேவேளை, இவ்வாறான களங்கள் மிகவும் ஆபத்தானவை. ஆதிக்கத்துக்கான போட்டி அளவுகணக்கின்றி உயிர்ச்சேதங்களையும் பொருட்சேதங்களையும் அமைதியாகக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. மொத்தத்தில் ஆடுகளங்களின் ஆழத்தை அளவிடவியலாது.

ஆசியாவின் மீதான ஆதிக்கத்துக்கான ஆவல் கடந்த இரண்டு தசாப்தங்களாக அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாகப் பொருளாதார ரீதியில் வலிமையானதும் இளமையான துடிப்புள்ள வேலைச்சக்தியைக் கொண்டதுமான ஒரு பிராந்தியத்தின் வளர்ச்சி இயல்பானது. வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளுக்கு இணையாகப் பொருளாதார ரீதியிலும் அரசியல் அரங்கிலும் ஆசிய நாடுகளின் முன்னோக்கிய நகர்வு, ஆசியாவின் மீதான கவனக்குவிப்புக்குக் காரணமானது. இப்போது ஆசியாவின் முக்கியமான கேந்திரமாக வங்காள விரிகுடா மாறி வருகிறது.

உலகின் மிகப் பெரிய வளைகுடாவான வங்காள விரிகுடா இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளின் கரையோரங்களை உள்ளடக்கியதாகவும் தாய்லாந்து, இந்தோனேசியா ஆகியவற்றுடன் கடல்மார்க்கத் தொடர்புடையதாகவும் உள்ளது. ஆசியாவின் முக்கியமான வர்த்தக மற்றும் கேந்திரமுக்கியத்துவமுடைய பல துறைமுகங்களையும் இவ்வளைகுடா உள்ளடக்கியுள்ளது. இவ்வகையில் ஆசியாவின் முக்கியமான கடல்மார்க்கத்தை மையமாகக் கொண்ட புதியதொரு கூட்டிணைவுக்கும் அதேவேளை, இவ்வளைகுடாவுக்கான ஆதிக்கத்துக்கான போட்டிக்கும் வித்திட்டிருக்கிறது.

பொருளாதார ரீதியில் வளம்மிக்க சனத்தொகையைக் கொண்ட நாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைக்கும் ஒருபகுதி, இன்று எல்லோரது கண்களையும் உறுத்துகிறது. இன்று இப்பகுதியில் செல்வாக்குச் செலுத்த ஜப்பான், அமெரிக்கா, சீனா ஆகியன விளைகின்றன. ஆசியாவில் முன்னெடுக்கப்படுகின்ற சில முயற்சிகளின் பின்னணியில் வங்காள விரிகுடா என்ற ஆடுகளத்தை நோக்க முடியும். 2013 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அமெரிக்கா, ஆசியாவுக்கான தனது புதிய திட்டத்தை முன்வைத்தது.

முன்னெப்போதுமில்லாத அளவுக்குப் பொருளாதார, இராணுவ ரீதியில் ஆசியாவின் மீது அமெரிக்காவின் கவனம் செல்லும் வகையில் ஒபாமாவின் புதிய ‘ஆசியாவுக்கான திட்டம்’ அமைந்திருந்தது. குறிப்பாக ஆசிய நாடுகளுடனான உறவுகளைப் புதுப்பித்தல், பழைய உறவுகளை வலுப்படுத்தல், புதிய உறவுகளை ஏற்படுத்தல் என்பவற்றை அவற்றின் முக்கிய அம்சங்களாகக் கொண்ட இத்திட்டமானது ‘ஆசியாவுடனான உறவை மீள்சமநிலைப்படுத்தல்’ என அழைக்கப்பட்டது. அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆசிய நாடுகள், குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகள், மிக முக்கியமானவை.

பொருளாதாரத்தில் விரைவாக முன்னேறி வரும் நாடுகளாகவும் பெரிய எதிர்காலச் சந்தை வாய்ப்புகளையும் இயற்கை வளங்களையும் கொண்டவையாகவும் அவை விளங்குகின்றன. இப்பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்துக்குத் தடையாகவும் இராணுவரீதியில் அமெரிக்க நலன்களுக்குச் சாதகமாகவும் செயற்படக்கூடிய நாடுகளாகத் தென்கிழக்காசிய நாடுகளை அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்க அயலுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, ஆசியாவுடனான உறவை மீள்சமநிலைப்படுத்துவது என்பது, அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, இராணுவ, இராஜதந்திர நிலைகளில்த் தனது கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் பேணுவதற்கான வழிவகையாகும்.

அவ்வகையில், இந்த மீளச்சமநிலைப் படுத்தல், தம்மிடையே உறவுடைய இரண்டு விடயங்களை இணைக்கிறது. முதலாவது, புவியியல்சார் மீளச்சமநிலைப்படுத்தல்; இரண்டாவது, ஆற்றல்சார் மீளச்சமநிலைப்படுத்தல். முதலாவதின் அடிப்படையில் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்னாம் ஆகிய நாடுகளில் கட்டுப்பாடற்ற அமெரிக்க இராணுவப் பிரசன்னத்துக்கும் இராணுவத் தளங்களை அமைப்பதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆற்றல்சார் மீளச்சமநிலைப்படுத்தலைப் பொறுத்தவரை, இப்போது அதிகளவிலான அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளன. அங்கிருந்து வெளியேறும் படைகள், குறிப்பாக கடற்படையின் 60 சதவீதமானவை, ஏனைய தென்கிழக்காசிய நாடுகளின் தளங்களில் தங்களை மீளநிறுவிக்கொள்ளும்.

அதற்கும் மேலாக, சீனாவின் மிரட்டலுக்கு உள்ளாகும் நாடுகளின் பாதுகாவலனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள அமெரிக்க முனைகிறது. உண்மையில், ஆசியப் பிராந்தியத்தில் தனது இருப்புக்கு ஒரு சாட்டாகச் சீன மிரட்டலைப் பயன்படுத்துகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக, அமைதியானதும் மோதல்களற்றதுமான பிராந்தியமாக இருந்துவந்த தென்கிழக்காசியா இன்று, நாடுகளுக்கு இடையிலான நிலம், கடல் எல்லைத் தகராறுகள் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஆயுதக் கொள்வனவுக்கு போட்டி போடுகின்ற பிராந்தியமாக மாறியிருக்கின்றது. அமெரிக்காவின் புதிய ஆசியாவுக்கான திட்டம் செலவு மிக்கது. இன்று, அமெரிக்கா எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடருமிடத்து, இவ்வாறான திட்டமொன்றைத் தக்கவைப்பது கடினம்.

எனவேதான், தென்கிழக்காசியாவின் பொருளாதாரத்தில் அமெரிக்கா கண்வைக்கிறது. அது போதுமானதல்ல; இதற்குப் புதிய சந்தைகள் தேவை. அவ்வகையில் வங்காள விரிகுடா மிகவும் முக்கியமானது. ஒருபுறம் சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தை எதிர்க்கவும் மறுபுறம் தென்னாசியாவில் வலுவாகக் கால்களை ஊன்றிக் கொள்ளவும் எனப் பலவழிகளில் வங்காள விரிகுடா, அமெரிக்காவுக்குப் பயனுள்ள களமாகிறது.

மேற்குலகச் சந்தையை மையமாகக் கொண்ட ஜப்பானின் பொருளாதாரம், இன்று மேற்குலகப் பொருளாதாரத்தின் தேக்கநிலையால் புதிய சந்தைகளைத் தேடவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளது. அவ்வகையில் ஜப்பானின் கவனம் வங்காள விரிகுடாவை நோக்கித் திரும்பியுள்ளது. அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய கையாளாக ஆசியாவில் செயற்படக்கூடியது என்ற வகையிலும் சீனாவை வெளிப்படையாக எதிர்க்கக்கூடியதொரு சக்தி என்ற வகையிலும் ஆசியாவின் ஓரேயொரு அபிவிருத்தியடைந்த நாடு என்ற வகையிலும் ஜப்பான் பிராந்திய சக்தியாகத் தன்னை நிலைநிறுத்த முனைப்புக் காட்டுகிறது.

2008 ஆம் ஆண்டு முதல் 2016 வரையான காலப்பகுதியில் கொழும்புத் துறைமுகத்துக்கு அதிகளவில் வருகைதந்த யுத்தக் கப்பல்கள் ஜப்பானினுடையது. இது இப்பிராந்தியத்தின் ஆதிக்கத்துக்கான போட்டியில் இராணுவரீதியில் முன்னிலையில் இருக்க ஜப்பான் விரும்புகிறது என்பதை எடுத்துக்காட்டும் ஓர் உதாரணம் மட்டுமே. 2013 இல் சீனாவால் முன்மொழியப்பட்ட ‘பட்டுப் பாதைக்கான பொருளாதாரப் பட்டி’ மற்றும் ‘21 ம் நூற்றாண்டுக்கான கடல்வழிப் பட்டுப்பாதை’ ஆகிய இரண்டு திட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு பாதை ஒரு பட்டி (One Road One Belt) திட்டமானது, ஆசியாவுக்கான சீனாவின் திட்டமாகக் கொள்ளப்படுகிறது.

பண்டைய பட்டுவழிப்பாதையைக் கொண்டுள்ள நாடுகளையும் ஏனைய ஆசிய நாடுகளையும் ஐரோப்பா, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவற்றுடன் நிலத்தின் வழியாகவும் கடல்மார்க்கமாகவும் ஒன்றிணைக்கும் திட்டத்தைக் கொண்டது. ஆபிரிக்கக் கரையோரம் முதலாக மியான்மார் வரையிலான பகுதிகளில் உள்ள நாடுகளில் சீனா, துறைமுகங்களின் அபிவிருத்திக்கு உதவி வந்துள்ளது. அதற்கு நோக்கங்கள் உள்ளன. சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதார வளர்ச்சியால் எண்ணெய் முதலாகப் பல்வேறு மூல வளங்களை இறக்குமதி செய்கிற தேவை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் சீனாவைச் சூழப் பல இடங்களிலும் வலுப்பட்டு வருகின்றன. இதுவரை, சீனா தனது பொருளாதாரச் செல்வாக்கை வலுப்படுத்துவதிலேயே முக்கிய கவனம்காட்டி வந்துள்ளது. அத்துடன் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்கா, கடல்வழிப் பாதை எதையும் மறிக்க முற்பட்டால் தனது கப்பல்களுக்குத் துறைமுகங்களும் மற்றும் கடல்வழிகளும் பண்டங்களைக் கொண்டு செல்லத் தரை வழிகளும் தேவை என்கிற அடிப்படையிலேயே சீனா, இப் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளில் துறைமுகங்களை விருத்தி செய்ய உதவுவதன் மூலம் தனது கப்பல்களுக்கான துறைமுக வசதிகளுக்கு ஓர் உத்தரவாதத்தைப் பெற முயலுகிறது.

இவற்றில் எந்தத் துறைமுகம் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட நாட்டை வற்புறுத்துகின்ற எந்த விதமான உடன்படிக்கையும் இல்லாததோடு, சீனக் கடற்படைத் தளமாகப் பயன்படுத்தப் படுவதற்கான எந்தவிதமான சாடையுமே இல்லை. மறுபுறம், இந்திய, அமெரிக்க மேலாதிக்கங்கள் தமது இராணுவச் செயற்பாடுகள் மூலமும் பிற குறுக்கீடுகளின் மூலமும் சீனாவுடன் உறவுடைய நாடுகளைத் தமது ஆதிக்க மண்டலங்களுக்குள் கொண்டு வர முற்படுகின்றபோது சீனாவும் தனது தேசிய நலன்களின் பேரில் அங்கு இழுபடுகின்றது. இந்நிலையில் சீனாவின் 21 ஆம் நூற்றாண்டின் கடல்வழிப் பட்டுப்பாதைக்குள் உள்வருகின்ற பகுதியாகவும் சீனாவின் கவனிப்புக்கு உள்ளாகின்ற துறைமுகங்களைக் கொண்டதாகவும் உள்ள வங்காள விரிகுடா, சீனாவின் பாதைகளின் ஊடு, பொருளாதாரத்தை இணைக்கும் 21 ஆம் நூற்றாண்டுக்கான பட்டுப்பாதைக்கான கனவுத் திட்டத்தின் பகுதியாகவுள்ளது.

வல்லரசுக்கனவை நீண்டகாலமாக தன்னுள் உட்பொதித்துள்ள இந்தியா, தனது ஆதிக்கத்தில் உள்ள கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பகுதியாக வங்காள விரிகுடாவைக் கருதுகிறது. அவ்வகையில் புதியதொரு கூட்டணிக்கான தொடக்கப்புள்ளியாக வங்காள விரிகுடா நாடுகளைப் பயன்படுத்த முனைகிறது. கடந்தாண்டு நடைபெறாமல்ப் போன சார்க் மாநாடு, சார்க் என்கிற அமைப்பு அதன் மரணப்படுக்கையில் இருப்பதை உறுதிப்படுத்திய நிலையில் பாகிஸ்தானை புறந்தள்ளிய ஒரு கூட்டமைப்பை வலுப்படுத்தி, அதன்மூலம் தனது பிராந்திய முதன்மை நிலையை நிறுவ இந்தியா விரும்புகிறது.

இதைக் கருத்தில் கொண்டு 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘பிம்ஸ்டெக்’ (BIMSTEC – Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) அமைப்புக்குப் புத்துயிரளிக்க இந்தியா முனைகிறது. 1997 ஆம் ஆண்டு தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் வங்காள விரிகுடா நாடுகளான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், தாய்லாந்து மற்றும் நிலத்தால் சூழப்பட்ட நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து பொருளாதார மற்றும் தொழிநுட்ப ரீதியில் பல்வேறுபட்ட துறைகளில் ஒத்துழைப்பதற்கான முயற்சியாக ‘பிம்ஸ்டெக்’ உருவாக்கப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளாகச் செயற்படாமல் இருந்த இவ்வமைப்பை, இந்தியா கடந்தாண்டு உயிர்ப்பித்தது.

கடந்தாண்டு இந்தியாவில் இடம்பெற்ற ‘பிரிக்ஸ்’ மாநாட்டோடு சேர்த்து ‘பிரிக்ஸ்-பிம்ஸ்டெக்’ கூட்டமும் சேர்த்து நடைபெற்றது. இது இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்துக்கான முனைப்பாக வெளிப்படையாக இந்தியப் பிரதமரால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான இலங்கையின் ஆதரவு மற்றும் இதில் ஜப்பான், அமெரிக்கா ஆகியன கொண்டுள்ள ஆவல், ‘பிம்ஸ்டெக்கை’ இன்னொரு வகையில் சார்க்குக்கு மாற்றான அமைப்பாக நிலைமாற்றியுள்ளன. மேற்சொன்னவை, வங்காள விரிகுடா எவ்வாறு ஆசியாவின் ஆடுகளமாகிறது என்பதை எடுத்துக் காட்டப் போதுமானவை.

இன்று, ஆசியாவின் பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தும் நாடுகளான இந்தியா மற்றும் மியன்மாரையும் உழைப்புச்சக்தியின் சராசரி வயதாக 23 யை உடைய பிரகாசமான பொருளாதாரத்தை உடைய பங்களாதேஷ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியமாகவும் கிழக்கு ஆசியாவின் பொருளாதாரச் சக்திகளை மத்தியகிழக்கு, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகியவற்றுடன் தொடர்பாடல் ரீதியாகவும் வர்த்தகப் போக்குவரத்தின் மையமாகவும் உள்ள வங்காள விரிகுடாவின் முக்கியத்துவம் மறுக்கவியலாதது. இந்து சமுத்திரத்தில் அதிகரித்து வரும் இந்தியா-சீனா ஆதிக்கப்போட்டியில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பாகிஸ்தானின் கௌடார் துறைமுகத்தின் பங்கும் உள்ளது.

இவ்வகையில் சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றைத் தவிர்த்து ஒரு பொருளாதார மையக் கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், தனது ஆதிக்கத்தைத் தக்க வைக்க இந்தியா விரும்புகிறது. அதன் ஒரு வழியாக ‘பிம்ஸ்டெக்கை’ இந்தியா பயன்படுத்துகின்றது. இதில் இடம்பெற விரும்பும் இலங்கை, திருகோணமலைத் துறைமுகத்தை இன்னொருமுறை பூகோள ஆதிக்கத்துக்கான போட்டியின் சதுரங்கமேடையாகத் தரமுயர்த்துகிறது. இவையனைத்தும் ஆசியாவின் புதிய ஆடுகளமாக வங்காள விரிகுடா உள்ளதை எடுத்தியம்புகின்றன. ஆட்டம் தொடங்கிவிட்டது. கிரிக்கெட் என்றால் இரண்டு அணிகள் ஒரு வெற்றியாளர்.

இந்த ஆட்டத்தில் அரங்காடிகள் பலர். ஒவ்வொருவரதும் நோக்கங்கள் வேறானவை. பொதுவான விதிகள் எதுவுமில்லை. இருக்கின்ற விதிகளை மதிக்க வேண்டிய தேவையும் இல்லை. எனவே, அராஜகம் கோலோட்சும் அரசியல் களத்தின் வெற்றி என்பது தோற்கடிப்பதில் அன்றி தோற்றகடிக்கப்படாமல் இருப்பதில் தங்கியுள்ளது. இந்த ஆடுகளம் ஆசியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.

ஆனால் திமிங்கிலங்களுடன் சிக்கிச் சின்னாபின்னமாகும் நெத்தலிகள் போல், இதில் தொடர்புள்ள சிறிய நாடுகளைச் சிதைக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லவியலும். இவ்வாட்டத்தில் இச்சிறிய நாடுகள் புரிந்துகொள்ள வேண்டிய செய்தியொன்று உண்டு. நண்பர்கள் யாருமில்லை, எதிரிகளும் யாருமில்லை, தம்மைப் பாதுகாக்கும் உபாயங்களைத் தேடுவது உசிதமானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிர் பிழைக்க தப்பியோடிய காளை; இரண்டு மணிநேரப் போராட்டத்தின் பின் பொலிஸாரிடம் சிக்கியது..!! (வீடியோ)
Next post சிவராத்திரி தினத்தில் ரசிகர்களுக்கு விருந்தளித்த `பாகுபலி-2′ படக்குழு..!!