கரையேற முடியாத துறைமுகம்..!! (கட்டுரை)

Read Time:21 Minute, 9 Second

article_1490529215-FH---12-newபொறுமையிழக்கும் நிலையில்தான் போராட்டங்கள் நிகழ்கின்றன. மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபோது, பொறுப்புத்தாரிகளுக்கு எதிராக அவர்கள் வெகுண்டெழுகின்றனர்.

அநேகமான போராட்டங்கள், நம்பிக்கையிழப்பின் கடைசிப் புள்ளியில்தான் தொடங்குகின்றன. அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, கடந்த 14ஆம் திகதியன்று வீதி மறியல் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தங்கள் தொழில் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தடையினை நீக்கித் தருமாறு, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை காது கொடுத்து யாரும் கேட்கவில்லை என்கிற கோபமும் ஏமாற்றமும் அவர்களை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளின.

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியினை மறித்து, ஒலுவில் துறைமுகப் பாதைக்கு முன்பாக, அம்பாறை மாவட்டக் கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, அந்த வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது படகுகளில் ஒன்றினைக் கொண்டு வந்து, வீதியினை மறித்துப் போட்டு, அதன் மேல் ஏறி நின்று, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால், வாகனப் போக்குவரத்துகள் தடைப்பட்டன.

வீதி மறியலில் ஈடுபடுவதைத் தவிர, அவர்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. அவர்களின் தொழில் நடவடிக்கைகள் பல மாதங்களாகத் தடைப்பட்டுப்போயுள்ளன.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத்தருமாறு, அதிகாரிகளிடமும் அவர்கள் சார்ந்த அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தும், எதுவும் நடக்கவில்லை என்பதனால்தான், அவர்கள் வீதிக்கு இறங்கினார்கள்.

மீன்பிடி துறைமுகம்

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில், தமது படகுகளை நிறுத்தி வைக்கும் கடற்றொழிலாளர்கள்தான் அந்த வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் 170 பெரிய படகுகளும் 200 சிறிய படகுகளும் தரித்து நின்று தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

உள்ளூர் கடற்றொழிலாளர்கள் மட்டுமன்றி, வெளி மாவட்டங்களிலிருந்து வருகின்ற படகுகளும் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நின்று, தொழிலுக்குச் செல்கின்றன.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் தரித்து நிற்பதற்காக, துறைமுக நிருவாகம் கட்டணம் வசூலிக்கின்றது. படகுகளின் பருமனுக்கேற்ப கட்டணம் பெறப்படுகிறது.

அந்தவகையில், படகு ஒன்றிடமிருந்து மாதமொன்றுக்கு 300 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர, படகில் தொழில் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் 150 ரூபாய் வீதம், மாதக் கட்டணம் அறவிடப்படுகிறது.

இந்தநிலையில், துறைமுகத்திலிருந்து படகுகள், சென்றுவரும் போக்குவரத்துப் பாதையில் அடிக்கடி மணல் வார்த்துப் போகும். அவ்வாறான வேளைகளில், படகுகளால் போக்குவரத்தில் ஈடுபட முடியாது. படகுப் பாதையானது, மணலினால் அடைபட்டுப் போகும் நிலை ஏற்படும்போது, அங்குள்ள கடற்றொழிலாளர்களின் தொழில் முற்றாகப் பாதிப்படைந்து விடும்.

மண்ணால் மூடப்படும் பாதை

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதை, கடந்த வருடம் இவ்வாறு மணலால் மூடப்பட்டது. இதன் காரணமாக, அங்குள்ள கடற்றொழிலாளர்கள் பல மாதங்களாகத் தமது தொழிலை இழந்தனர்.

துறைமுகத்தின் படகுப் பாதையினை அடைத்துள்ள மணலை அகற்றித்தருமாறு, துறைமுக நிருவாகத்தினரிடம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதேவேளை, அப்பிராந்தியத்திலுள்ள அரசியல்வாதிகளிடமும் உதவி கோரினர். ஆனால், எந்தவிதத் தீர்வும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, படகுப் பாதையினை மூடியுள்ள மணலை, தாங்களே அகற்றுவதற்கு, அங்குள்ள கடற்றொழிலாளர்கள் தீர்மானித்தனர்.

இதற்கிணங்க, கடந்த வருடம் நவம்பர் மாதம் 23ஆம் திகதியன்று மணல் தோண்டும் இயந்திரமொன்றினைப் படகு உரிமையாளர்கள் வாடகை செலுத்திக் கொண்டுவந்தனர்.

துறைமுக படகுப் பாதையினை அடைத்துள்ள மணலை அந்த இயந்திரத்தின் மூலம் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் மணல் அடைத்துக் கொண்டது.

ஆயினும், படகு உரிமையாளர்கள் தமது முயற்சியினைக் கைவிடவில்லை. இரண்டு நாட்களுக்குப் பின்னர், நவம்பர் 25ஆம் திகதியன்றும் மணல் தோண்டும் இயந்திரத்தினைக் கொண்டு வந்து, படகுப் பாதையிலுள்ள மண்ணை அகற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டார்கள்.

ஓரளவு தோண்டப்பட்ட வழி ஊடாக, சில படகுகளைக் கட்டியிழுத்து வெளியேற்றினார்கள். இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளுக்காக 65 ஆயிரம் ரூபாயினை படகு உரிமையாளர்கள் செலவிட்டனர். ஆனாலும், பின்னர் மீண்டும் துறைமுகத்தின் படகுப் பாதையை மணல் அடைத்துக் கொண்டது.

உதவி

இதனையடுத்து, தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரி, மீண்டும் அரசியல்வாதிகளை கடற்றொழிலாளர்கள் நாடினர். பிரதியமைச்சர் ஹரீஸின் உதவியுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்த கடற்றொழிலாளர்கள், தமது தொழில் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்துப் பேசினர்.

இதனையடுத்து, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றித்தருமாறு, கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரிடம், ரவூப் ஹக்கீம் கோரிக்கையொன்றினை முன்வைத்தார். இந்தக் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட, கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர், அதற்காக நான்கு கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்ததாக, அரச ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

கப்பல் வந்த கதை

இதனைத் தொடர்ந்து, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை அடைத்துள்ள மணலை அகற்றுவதற்காக, ‘சயுறு’ எனும் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான அந்தக் கப்பல், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியிருந்த மணலை அள்ளிச் சென்று கடலில் கொட்டியது. இந்த நடவடிக்கை சில நாட்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், மணலை அகற்றும் வேலையினை ‘சயுறு’ நிறுத்திக்கொண்டது. பின்னர், வேலைகள் எதிலும் ஈடுபடாமல், அந்தக் கப்பல் பல நாட்களாக ஒலுவில் துறைமுகத்தில் தரித்து நின்றது.

‘சயுறு’வில் 20 பேர் பணியாற்றினார்கள். அவர்களின் பாவனைக்காக மூன்று நாட்களுக்கு ஒரு தடவை 7,000 லீற்றர் நீர் தேவைப்பட்டது. அதனை அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கம் வழங்கியது.

அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் தமது படகுகளை நிறுத்தி வைத்து, கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘சயுறு’ கப்பலுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கு, தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் சாய்ந்தமருது அலுவலகத்துக்கு ஓர் இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தினைத் தாம் செலுத்தியதாக, அந்தச் சங்கத்தின் தலைவர் எம்.எஸ். நசீர் தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுகத்தில் ‘சயுறு’ கப்பல் கிட்டத்தட்ட 85 நாட்கள் தரித்து நின்றது. இதில் மிகக் குறைந்த நாட்கள் மட்டுமே, படகுப் பாதையை மூடியிருந்த மணலை அகற்றும் பணியில் அந்தக் கப்பல் ஈடுபட்டது.

ஒலுவில் துறைமுகத்தில் ‘சயுறு’ தரித்து நின்ற நாட்களில், அதற்குத் தேவையான மின்சாரம், ஒலுவில் துறைமுகத்திலிருந்து வழங்கப்பட்டது. அவ்வாறு கப்பலுக்கு வழங்கப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் சுமார் இரண்டு இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் ஆகும்.

அந்தத் தொகையினைச் செலுத்துமாறு, ஒலுவில் துறைமுக முகாமையாளர், தம்மை எழுத்து மூலம் கோரியுள்ளதாக, அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் நசீர் நம்மிடம் கூறினார்.

அரசாங்கத்தின் சிறுமை

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் அரசுக்குச் சொந்தமானது. அந்தத் துறைமுகத்தின் படகுப் பாதையினை மூடியுள்ள மணலை அகற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட கப்பலும் அரசாங்கத்துக்குரியது.

இந்தநிலையில், துறைமுகத்தினைத் தோண்டுவதற்கு வந்திருந்த கப்பலுக்குரிய நீர் மற்றும் மின்சாரச் செலவுகளை அங்கு தொழில்புரியும் ஏழைத் தொழிலாளர்களிடமிருந்து அரசாங்கம் பெற்றுக்கொள்வது அநியாயமான செயற்பாடாகும்.

இத்தனை நடந்த பிறகும், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணல் முழுவதுமாக அகற்றப்படவில்லை. இவ்வளவு செலவுகளுக்குப் பின்னரும் மீனவர்களின் தொழிலில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்குத் தீர்வு கிட்டவில்லை.

இதனையடுத்து, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடத்தில் தமது தொழில் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தடையினை நீக்கித் தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தீர்வுகள் கிடைக்கவேயில்லை.

இதன் பிறகுதான், தமது பிரச்சினை தொடர்பில் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றினை மேற்கொள்வதெனவும் அதன் பொருட்டு, வீதிக்கு இறங்கி மறியல் போராட்டமொன்றில் ஈடுபடுவதெனவும் கடற்றொழிலாளர்கள் தீர்மானித்தனர்.

நிரந்தரத் தீர்வு

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை, இவ்வாறு மணல் மூடுகின்றமையானது தவிர்க்க முடியாத, இயற்கை நிகழ்வாகும். இதனைத் தடுக்க முடியாது எனக் கூறப்படுகிறது.

அதேவேளை, இவ்வாறு படகுப் பாதையினை மூடுகின்ற மணலை ஒவ்வொரு தடவையும் இயந்திரங்களைக் கொண்டும், கப்பலைக் கொண்டும் அகற்றுவதென்பதும் அதிக செலவுடைய கடின காரியங்களாகும். எனவே, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வினைக் காண வேண்டும் என்பதுதான் இங்குள்ள கடற்றொழிலாளர்களின் கோரிக்கையாகும்.

“இவ்வாறான மணலை, குழாய்கள் மூலம் அகற்றும் இயந்திரங்கள், கிருந்த மற்றும் ஹிக்கடுவ ஆகிய பிரதேசங்களில் உள்ளன. குழாய் மூலம் மணலை அகற்றும் அவ்வாறான இயந்திரமொன்றினை ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் நிரந்தரமாக நிறுவ வேண்டும். அதுதான், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய நிரந்தர வழியாக அமையும்” என்று, அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் நசீர் நம்மிடம் விவரித்தார்.

நிராகரிக்கப்பட்ட கோரிக்கை

மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு கடற்றொழிலாளர் அழைப்பு விடுத்திருந்த வேளையில், குறித்த ஆர்ப்பாட்டத்தினை கைவிடுமாறு, கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர், ஆரிப் சம்சுதீன் கோரிக்கையொன்றினை விடுத்தார்.

மீனவர்களை ஒலுவிலில் சந்தித்த ஆரிப் சம்சுதீன், பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் பெற்றுத் தருவதாகக் கூறினார். ஆயினும், ஆரிப் சம்சுதீனின் கோரிக்கையினை கடற்றொழிலாளர்கள் நிராகரித்தனர். திட்டமிட்டவாறு 14 ஆம் திகதியன்று பாரிய வீதி மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டார்கள்.

மாற்று நடவடிக்கை

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து படகுகள் மூலம் கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்களை நம்பி சுமார் ஐயாயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்கள் தமக்குரிய வாழ்வாதாரத்தினை கடற்றொழிலில் இருந்து கிடைக்கும் வருமானம் மூலமாகவே பெறுகின்றனர்.

இந்தநிலையில், பல மாதங்களாக இங்குள்ள மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை. அதனால், அவர்கள் பெரும் நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளனர். ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை மணல் மூடியுள்ளமையினால், தற்போது அங்கு தரித்து வந்த படகுகளைத் தற்காலிகமாக அருகிலுள்ள கப்பல் துறைமுகத்தில் தரிக்கச் செய்துள்ளனர்.

ஒலுவிலிலுள்ள கப்பல் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட காலத்திலிருந்து, எந்தவொரு கப்பலும் அங்கு வந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஒலுவில் கப்பல் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வைப்பதற்கான வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. அதனால், அங்கு நிறுத்தி வைக்கப்படும் மீன்பிடிப் படகுகள் அடிக்கடி சேதமடைவதாக கடற்றொழிலாளர்கள் முறையிடுகின்றனர். எனவே, மீன்பிடித் துறைமுகத்தில் தமது படகுகளை நிறுத்தி வைப்பதுதான் பாதுகாப்பானதானதாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இழுத்தடிப்பு

இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் கீழ் ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்தநிலையில், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் கீழ், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினைக் கொண்டு வருமாறு மிக நீண்ட காலமாக அங்குள்ள கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான அங்கிகாரத்தினைக் கடந்த வருடம் அமைச்சரவை வழங்கியது. இருந்தபோதும், குறித்த துறைமுகம், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சிடம் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பில் கடந்த டிசெம்பர் மாதம், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி டபிள்யூ.எம்.எம்.ஆர். அதிகாரியுடன் பேசியபோது, “ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை கடற்றொழில் அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளபோதும், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சிடமிருந்து இன்னும் உத்தியோகபூர்வமாக, தமது அமைச்சுக்கு ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் கையளிக்கப்படவில்லை” என்று அவர் கூறியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

காலக்கெடு

இந்தப் பிரச்சினை குறித்து, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ, இப்பிராந்தியத்திலுள்ள ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளோ இதுவரையில் தீர்க்கமான நடவடிக்கைகள் எவற்றினையும் மேற்கொள்ளவில்லை என்பது விசனத்துக்குரியதாகும்.

எவ்வாறாயினும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று அவசரமாகப் பெற்றுக் கொடுக்கப்படுதல் வேண்டும். ஆனாலும், அதிகாரிகளும் மக்களின் பிரதிநிதிகளும் இந்த விடயத்தில் அலட்சியமாக உள்ளனர் என்பது வேதனையானது.

கடலின் அலைகளை எதிர்த்துப் போராடுவதையே தினமும் தொழிலாகக் கொண்ட மீனவர்களுக்கு, தமது விடயத்தில் அலட்சியமாக நடந்துகொள்வோரை எதிர்த்து நிற்பதென்பது கடினமானதொரு காரியமல்ல.

“ஒலுலில் மீன்பிடித் துறைமுகத்தில் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு இன்னும் 10 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கவில்லையாயின், மீண்டும் போராட்டத்தில் குதிப்போம்” என்கிற கெடுவொன்றினை வைத்து விட்டுத்தான், வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றார்கள்.

கெடு இன்றுடன் முடிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாட்டு இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: மசாஜ் பார்லர் உரிமையாளர் கைது..!!
Next post புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் நீதிகோரி ஐ.நா வில்..!! (வீடியோ)