ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து 3 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கல்லூரி மாணவன் கைது..!!
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கடையம் பகுதியை சேர்ந்தவர் படையப்பா(வயது 19). திருக்கோவிலூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி.முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரும் இவரது நண்பர்கள் 2 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடையம் பகுதியில் உள்ள பள்ளி அருகே சென்றனர். அங்கு அந்த பள்ளியில் படிக்கும் 3-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அந்த மாணவிகளிடம் படையப்பா சிரித்து பேசினார். அவர்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தார். பின்னர் அவர்களை ஏமாற்றி பள்ளி வளாகத்தில் உள்ள மறைவான இடத்துக்கு தனது நண்பர்களுடன் அழைத்து சென்றார்.
அங்கு படையப்பா தனது நண்பர்களுடன் சேர்ந்து 3 மாணவிகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். வீட்டுக்கு வந்த 3 மாணவிகளும் தங்களிடம் 3 பேர் தவறாக நடந்து கொண்டதாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் கண்டாச்சிபுரம் போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு போலீசார் தெரிவித்தனர்.
எனவே திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் செய்தனர். இதையொட்டி குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதன் அடிப்படையில் கல்லூரி மாணவர் படையப்பாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது நண்பர்கள் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
பாலியல் தொந்தரவுக்குள்ளான மாணவிகள் 3 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து ஏமாற்றி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating