By 31 March 2017 0 Comments

ரஜினி வருகை எனும் கூத்து..!!! (கட்டுரை)

rajini-new-600-25-1490437469இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், இலங்கைக்கு வரவிருக்கிறார் எனவும், அறக்கட்டளையொன்றால் அமைக்கப்பட்ட வீடுகளை, பயனாளிகளுக்கு வழங்கிவைக்கவுள்ளார் எனவும், சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் சில நாட்களிலேயே, அவர் வரமாட்டார் என்ற செய்தி, அதைவிடப் பெரியளவில் வெளியாகியது.

ரஜினிகாந்த் வரமாட்டார் என்ற செய்தியும், அதன் பின்னரான சில சம்பவங்களும் ஏற்படுத்தியுள்ள கருத்துப் பரிமாற்றங்கள், இலங்கை, இந்தியத் தமிழ்ச் சூழலில், மிகப்பெரியளவு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இவ்விடயத்தைப் பற்றி ஆராய்வது, பொருத்தமானது.

ரஜினிகாந்த், இலங்கைக்கு வருகிறார் என்ற செய்தி வெளியானதும் கூட, இலங்கையில் முழுமையான வரவேற்புக் காணப்பட்டிருக்கவில்லை. அவரைக் காண்பதற்கு, அவரது இரசிகர்கள் ஆர்வமாக இருந்த போதிலும், யாரோ ஒருவர் கட்டிய வீடுகளை வழங்குவதற்காகத் தான் வருகிறார், அதுவும், அவரது திரைப்படத்துக்கான விளம்பரத்தைத் தேடவே அவர் வருகிறார் என்ற விமர்சனமும் காணப்பட்டது.

இந்திய சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, இலங்கைத் தமிழ்ப் பிரச்சினையை வைத்துப் பிழைத்துக் கொள்வோர் ஏராளம். எனவே, ரஜினிகாந்த்தின் யாழ்ப்பாண விஜயத்தை வைத்துக் கொண்டு, அவரது திரைப்படத்துக்கான விளம்பரம் தேடப்படும் என்ற சிந்தனை, தவறானதல்ல. வியாபாரம் என்ற வகையில், அதைத் தடுக்க முடியாது என்ற போதிலும், “எங்களது வலிகளை வைத்து வியாபாரம் செய்யாதீர்கள்” என்று சொல்வதற்கான உரிமை, மக்களுக்கு நிச்சயமாகவே உண்டு.

மறுபக்கமாக, அவரது வருகையின் உட்காரணம் என்னவென அறியாத நிலையில், அவரது வருகையை எதிர்ப்பதும், ஒருவகையில் தவறானது தான். அவரது வருகை தொடர்பான சந்தேகங்கள் காணப்பட்டால், அவருடன் அல்லது அவரது பிரதிநிதிகளுடன் பேசி, தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். அவ்வாறானதொரு முயற்சி இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

இவையெல்லாம் பழைய கதைகள். ஏனென்றால், இலங்கைக்கு ரஜினிகாந்த் செல்லக்கூடாது எனத் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, தனது பயணத்தை, ரஜினிகாந்த் இரத்துச் செய்துள்ளார். இலங்கைத் தமிழர் விடயங்களைக் குத்தகைக்கு எடுத்து, அதன் மூலம் அரசியல் செய்துகொண்டிருக்கும் தொல். திருமாளளவன் போன்றோரே, இந்தப் பயணத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

எதற்காக ரஜினிகாந்த், இலங்கைக்கு வரக்கூடாது என்று தடுத்தார்கள் என, திருமாவளவன் தரப்பினர், நேற்று முன்தினம் விளக்கமளித்தனர். இதில், காணாமல் போனோர் தொடர்பான போராட்டங்கள் திசைதிருப்பப்படக்கூடாது என்பதைத் தெரிவித்ததோடு, ஒரு கட்டத்தில் “ரஜினிகாந்த் அமரும் மேடையில், சிங்கள எம்.பிக்கள் அமரவிருந்தார்கள்” என்று தெரிவித்தனர்.

காணாமல் போனோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம், நடிகரொருவரின் வருகையால் திசைதிருப்பப்படுமென்பது, அவர்களது போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். ஏனென்றால், தமது உறவுகள் குறித்து விடையளிக்கப்படும் வரை, தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என, அம்மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

அதேபோன்று. சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில், இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதையும், திருமாவளவன் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களுடைய எதிர்ப்பு, அரசாங்கம் மீது இருக்கிறதே தவிர, பெரும்பான்மையினர் மீது கிடையாது.

இலங்கை விடயத்தில், இந்தியத் தலையீடு என்பது, காலங்காலமாகவே இருந்து வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயிற்றுவித்தமை, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம், இந்திய அமைதிகாக்கும் படைகள், இறுதி யுத்தம் என, இந்தியாவின் பங்களிப்பு, நீண்டு செல்கிறது. அதேபோன்று தான், தமிழகத்தின் பங்கேற்பும்.

“தொப்புள்கொடி உறவு”களுக்கான போராட்டம் என்று, தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள்,சில உயிர்களையும் இழக்கச் செய்திருந்தன. அவ்வாறு, இலங்கைத் தமிழ் மக்களுக்காக உயிரை விடுமளவுக்குக் காணப்பட்ட உணர்வுகளை, மதிக்க வேண்டிய தேவையிருக்கிறது.

ஆனால் அதையும் தாண்டி, யதார்த்தமென்ற ஒன்று உள்ளது. தமிழகத்தின் போராட்டங்கள், யதார்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமையால் மேற்கொள்ளப்படுகின்றன என்ற வாதம், நீண்டகாலமாகவே உண்டு.

குறிப்பாக, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமென்பது, ஒரு தரப்பினரின் வாதமாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம், பாரிய தவறுகளைச் செய்துள்ளது என்றே வைத்துக் கொண்டாலும், முழு நாட்டின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால், அனைவரும்தானே பாதிக்கப்படுவர்? இந்தப் போரை எதிர்த்த பெரும்பான்மையின மக்கள், இந்தப் போரில் நேரடியாகப் பங்குபெறாத முஸ்லிம் மக்கள், இந்தப் போரால் அதிகளவு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆகியோர், பொருளாதாரத் தடையின் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தமிழக அரசியல்வாதிகள்தான், இலங்கை மீது தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை விடுக்கின்றனர்.

அதேபோல்தான், இலங்கைக்கு ரஜினிகாந்த் வருவதால், இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பாதிப்பா, நன்மையா என்பதை, அம்மக்கள் தான் முடிவுசெய்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து, தமிழகத்தில் இருந்துகொண்டு, “இதனால் உங்களுக்குப் பாதிப்பு” என்று முடிவுசெய்வது, இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், ஆரோக்கியமான சூழல் கிடையாது. “தொப்புள்கொடிகள்”, கழுத்தைச் சுற்ற ஆரம்பித்துள்ளன என்பதையே, இது காட்டுகி‌றது.

இதில், ரஜினிகாந்தின் மேல், பிழைகளைக் கூற முடியாது. தனது திரைப்படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் கிளை அறக்கட்டளை, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செய்யும் சேவைகளில் பங்கெடுக்குமாறு கோரப்பட, அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். திரைப்படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் என்ற அடிப்படையில், இதற்கான தேவை, அவருக்கு இருந்தது. அதேபோல், நற்பணியொன்றில் தனது பங்களிப்பும் காணப்படலாம் என அவர் நினைத்ததிலும் தவறு கிடையாது.

எனவே, இவ்விடயத்தில் ரஜினிகாந்த் மீதான விமர்சனங்கள், தனிப்பட்ட ரீதியிலான விமர்சனங்களே தவிர, இவ்விடயம் தொடர்பான எதிர்ப்புகள் கிடையாது.

அதேபோல், குறித்த அறக்கட்ளை நிறுவனத்தின் மீதும், முழுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது. அவ்வறக்கட்டளை, இலங்கையில் பல முக்கியமான சேவைகளைச் செய்துவருகிறது.

இம்முறை வழங்கப்படவுள்ள 100 வீடுகள் தான், அந்நிறுவனம் வழங்கும் முதல் தொகுதி வீடுகளும் கிடையாது. ஏற்கெனவே பல தொகுதி வீடுகளை, அவ்வறக்கட்டளை வழங்கியுள்ளது. எனவே, அந்தப் பணிகளுக்குத் தலைசாய்க்க வேண்டிய கடப்பாடு உள்ளது. போருக்குப் பின்னரான ஒவ்வோர் அபிவிருத்திச் செயற்பாட்டையும் மெச்ச வேண்டிய தேவை இருக்கிறது.

அதேபோல், தனது பணிக்கான விளம்பரத்தைத் தேடிக்கொள்ள அந்நிறுவனம் விரும்பியமையையும், முற்றாகத் தவறு என்று கூறிவிட முடியாது. ஏற்கெனவே பல சேவைகளைச் செய்துள்ள அவ்வறக்கட்டளை, தனது இந்தப் பணிக்கு, மக்கள் கவனம் திரும்ப வேண்டுமென எண்ணியிருக்கலாம். கோவிலுக்கு வழங்கும் எவர்சில்வர் தட்டில், பெயர்பொறித்துக் கொடுக்கும் வழக்கத்தைக் கொண்ட நாம், பல மில்லியன் ரூபாய் செலவில் அறக்கட்டளைப் பணிகளை மேற்கொள்பவர்கள், அதற்கான பெயரைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று எண்ணுவது, நியாயமற்றது.

ஆனால், ரஜினிகாந்த்தின் வருகை, இரத்துச் செய்யப்பட்ட பின்னர், அவ்வறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடயங்கள், முகஞ்சுழிக்க வைக்கின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். “ஈழத்துக் கலைஞர்கள்” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட, “ரஜினிகாந்தின் வருகையை இடைநிறுத்தியமைக்கு எதிரான” ஆர்ப்பாட்டத்தில், அந்நிறுவனத்தின் வீட்டுத் திட்டம் மூலம் வீடுகளைப் பெறும் பயனாளிகள் பங்குபெற வைக்கப்பட்டதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அதுவும், யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டம் என்று கூறப்பட்டே அவர்கள் அழைக்கப்பட்டதாகவும், அவ்வாறு வராவிட்டால், வீடு வழங்கப்படாது என்று கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் உண்மையாக இருந்தால், அது கீழ்த்தரமான நடவடிக்கையாகும். அவர்களுடைய மாபெரும் திட்டம், நியாயமற்ற முறையில் இல்லாது செய்யப்பட்டது என்று அவர்கள் கருதினாலும் கூட, மக்களாக விரும்பி மேற்கொள்ளாத ஆர்ப்பாட்டங்களால் எவ்வித பயனும் கிடையாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேநேரத்தில், அந்தப் “போராட்டத்தில்” கலந்துகொண்ட மக்களை, சமூக ஊடக இணையத்தளங்களில், சிலர் கேலி செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது. நாட்டின் மத்திய, மாநில அரசாங்கங்களாலும் அரசியல்வாதிகளாலும் கைவிடப்பட்ட மக்கள், தாங்கள் இருப்பதற்கான வீடொன்றை, அறக்கட்டளையொன்றின் உதவியுடன் பெறவிருக்கிறார்கள்.

அதற்காக அவர்கள், தங்களுக்கு விருப்பமில்லாத சில விடயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. இது, இப்பிரச்சினையால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், அந்த மக்கள் மாத்திரமே என்பதைக் காட்டி நிற்கிறது என்பதுதான் யதார்த்தமானது.

அதைத் தவிர, இலங்கைக்கு ரஜினிகாந்த் வர முற்பட்ட விடயத்தால், வேறு எவரும் பாதிக்கப்படவில்லை என்பதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.Post a Comment

Protected by WP Anti Spam