டிஜிட்டல் சாம்ராஜ்யங்கள்: அனைத்தையும் அறிந்தவர்கள்..!! (கட்டுரை)

Read Time:21 Minute, 12 Second

article_1490861055-Digital-Empire-05-newநீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் எங்கேயெல்லாம் போனீர்கள் என்றும் எமக்குத் தெரியும். நீங்கள் எதைப்பற்றி இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் கிட்டத்தட்ட எமக்குத் தெரியும்” இது கூகிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான எரிக் ஸ்மிட்டால் உதிர்க்கப்பட்ட சொற்கள்.

மேம்போக்காக இதுவொரு சாதாரணமான கூற்றுப்போல் இருந்தாலும், கொஞ்சம் ஆழமாக அவதானிப்பின் இக்கூற்றின் தீவிரத்தையும் தனிமனித சுதந்திரத்தின் எல்லைகளின் குறுக்கத்தையும் அறியமுடியும். அறியவியலும் கூகிள் போன்றதொரு ஊடக, இணைய நிறுவனமும் ஒவ்வொருவரையும் கண்காணிக்கிறது என்ற செய்தியை எதுவித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாகச் சொல்லவியலுகிறது என்பது, இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகைப் பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றத்தை வழங்கி விடுகிறது.

நாம் எதை நம்ப வேண்டும்? எதைச் சந்தேகிக்க வேண்டும்? எதை நேசிக்க வேண்டும்? எதை வெறுக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? எதை யோசிக்க வேண்டும்? எதை இரசிக்க வேண்டும்? எதை வாங்க வேண்டும்? எங்கு வாங்க வேண்டும்? எப்படி வாங்க வேண்டும்? எதை உண்ண வேண்டும்? எதை உடுத்த வேண்டும்? என நம் வாழ்வின் சகல அம்சங்களையும் கட்டளையிடுகிற அதிகாரமாகவும் தீர்மானிக்கின்ற சக்தியாகவும் ஊடகங்களின் நிலைமாற்றம் இலகுவில் நிகழ்ந்ததொன்றல்ல.

வெகுஜன ஊடகங்களின் தோற்றம் மக்களாட்சித் தத்துவத்தின் செல்வாக்குடன் சேர்ந்து நிகழ்ந்ததொன்று. ஊடகம், வெகுஜன ஊடகமாக மாறியதன் வரலாறு முதலாளித்துவம், ஜனநாயகம், அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்குடன் பின்னிப் பிணைந்ததாகும்.

முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தையும் மன்னராட்சியையும் இடம்பெயர்த்து தனக்கெனத் தனியான இடத்தைப் பெற்றுக் கொண்ட நிலையில், அதன் ஜனநாயக முகமூடி அரசால், ஆற்றப்படுகிற செயல்களுக்காக மக்களின் ஒப்புதலை வேண்டி நின்றது. மக்களிடம் ஒப்புதலை எதிர்ப்பேதுமின்றிப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையாக ஊடகத்தினை அறிவியல் வளர்ச்சி சாத்தியமாக்கியது.

வெகுஜன ஊடகங்கள் மக்களுக்குத் தொடர்ந்து செய்தி சொல்கின்றன; அவர்களுக்கு கேளிக்கையையும் அளிக்கின்றன. அவற்றைப் படிக்கும் அல்லது பார்க்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் நடத்தை முறைகளையும் விதைக்கின்றது. அதனூடாகச் சமூகத்தின் நிறுவனங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டு, இயங்குவதற்கான தகுதியையும் அறிவையும் உடையவர்கள் ஆக்குகின்றன.

இன்னொரு வகையில், மக்கள் தெரிய வேண்டியவை எவை என்பதைத் தீர்மானிக்கின்றன. அதன்மூலம், ஊடகங்கள் பொதுப்புத்தியில் கருத்து ஒப்புதலை உருவாக்குகின்றன.

இது, இன்றைய ஊடக உலகை, யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்கிற கேள்வியை எழுப்புகிறது. 1983 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஊடகங்களில் 90 சதவீதமானவற்றை 50 பெருநிறுவனங்கள் கட்டுப்படுத்தின.

2012 ஆம் ஆண்டு 90 சதவீதமான அமெரிக்க ஊடகங்களை ஆறு பெருநிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. இன்றைய ஊடக உலகு, டிஜிட்டல் சாம்ராச்சியங்களினால் (Digital Empires) கட்டுப்படுத்தப்படுகிறது.

இன்றைய சமூக ஊடக உலகில், பிரதானமான 10 சமூக ஊடகங்களில் நான்கு பேஸ்புக்குக்குச் சொந்தமானவை. உலகின் 70 சதவீதமான செய்தி இணையத்தளங்கள், கூகிள் மற்றும் பேஸ்புக்கின் ஊடாகவே பயனாளிகளை வந்தடைகின்றன.

பாரம்பரிய ஊடகங்களின் அதிகாரம் மெதுமெதுவாக மாற்றமடைந்து டிஜிட்டல் சாம்ராச்சியங்களின் அதிகாரம் உறுதி செய்யப்பட்டு விட்டது. உலகின் அதிகாரம் மிக்க பெரிய ஊடக நிறுவனங்களின் வரிசையில் முதன்மையான இடம் கூகிள் நிறுவனத்துக்குரியது. இரண்டாவது இடம் வால் டிஸ்னிக்கும் ஜந்தாவது இடம் பேஸ்புக்குக்கும் உரியது. இவை டிஜிட்டல் சாம்ராச்சியங்களின் ஏகபோகத்தை உறுதிசெய்துள்ளன.

அதேவேளை, மாற்றுக்கருத்தாளர்களைக் குறிவைக்கும் உபாயமாக ஊடகங்கள் பயன்படுகின்றன. பொதுக்கருத்தை உருவாக்கி இசைவைப் பெற நினைப்பவர்கள், எதிரிகளை வீழ்த்தும் உபாயங்களை ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கிறார்கள். இன்று இவை ஒருவகையான போர்முறையாக மாறிவிட்டது.

மக்களிடம் ஒரு விடயத்தைக் கொண்டு சேர்ப்பதற்கும் குறித்தவொரு விடயத்தை மக்களை ஏற்கச் செய்வதற்கும் இடையிலான வேறுபாடு பெரியது. மக்களுக்கான பிரதானமான தகவல் தெரிவிக்கும் வழிமுறையாக ஊடகங்கள் இருக்கின்றன.

மக்கள் ஊடகங்களில் சொல்லப்படும் தகவல்களைப் பெரும்பாலும் உண்மை என நம்புகிறார்கள். அவ்வகையில் குறித்தவொரு கருத்தை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்கும் வலு ஊடகங்களின் கைகளில் இருக்கிறது.

அதேவேளை, இதை வாய்ப்பாகப் பயன்படுத்தும் ஊடகங்கள், பொதுக்கருத்தை உருவாக்குதல், மக்களின் இசைவைப் பெறுதல் போன்ற காரியங்களை மிகவும் நுட்பமாகச் செய்கின்றன. இவ்விடத்திலேயே மக்களுக்கு வழங்கப்படும் தகவலை யார் தீர்மானிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

குறித்த விடயங்களுக்கான மக்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொள்வதற்கு ஊடகங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பது இங்கு கவனிக்க வேண்டியது. ஊடகங்கள் அதிகாரம் வேண்டி நிற்கின்ற மக்களின் இசைவைப் பெற்றுக் கொடுப்பதை தங்களது முக்கியமான கடமையாகக் கொள்கின்றன.

மக்களுக்கு எதிரான கொள்கைகள், செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை மக்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும்படி செய்வது, அதாவது அவர்களுக்கு எதிரானவற்றுக்கு அவர்களின் இசைவை உற்பத்தி செய்தலை ஊடகங்கள் எவ்வளவு நுணுக்கமாகச் செய்கின்றன என்பதை நோம் சொம்ஸ்கி தனது ‘இசைவு உற்பத்தி’ (Manufacturing Consent) என்ற நூலில் விளக்குகிறார். அவரது கருத்துப்படி “ஊடகங்களில் செய்திகள் ஐந்து வடிகட்டிகளால் வடிகட்டப்பட்டு எஞ்சியவையே செய்திகளாகக் கிடைக்கின்றன” என்கிறார்.

முதலாவது வடிகட்டியாகச் செயல்படுவது ஊடக நிறுவனங்களின் அளவு. அந்த நிறுவனங்களின் முதலாளிகளின் சொத்து மதிப்பு, அவர்களின் இலாபங்களின் அளவு என்பனவாகும். அத்துடன் அவற்றின் ஏகபோகமான ஆதிக்கம் செலுத்தும் அளவைத் தீர்மானிப்பது, உலகில் தவிர்க்க இயலாததாக்கப்பட்டுள்ள உலகமயமாக்கல். இது முழு வீச்சில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், ஊடகமானது சந்தைப் பொருளாதாரத்துடன் குறிப்பாக உலகளாவிய சந்தைகளுடன் ஐக்கியமாகி விட்டன.

இந்த ஊடகங்களைச் சார்ந்தே அவற்றின் விளம்பரங்கள் மூலம் பெரு வணிகநிறுவனங்களும் பல்தேசியக் கம்பெனிகளும் தங்களது சரக்குகளுக்கு பெரும் அங்கிகாரம் பெறுகின்றன. இதன் மூலமாகவே சந்தைச் சரக்கு ஊடுருவிய பண்பாட்டு உலகமயமாக்கலும் நடைபெற்று வருகிறது.

பெரும் ஊடக நிறுவனங்கள் பெரும் தொழில் நிறுவனங்களாகவும் பல்தேசியக் கம்பெனிகளாகவும் இருக்கின்றன. அவை, ஏகபோக முதலாளிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இவை, இலாப நோக்கில் செயல்படும் சந்தைப் பொருளாதார சக்திகள் விதிக்கும் வரம்புகளுக்குள்தான் செயல்படுகின்றன.

மேலும், இவை மற்றைய தொழில் நிறுவனங்கள், பல்தேசியக் கம்பெனிகளுடன் அனைத்து வகை உறவுகளுடன் இயங்குகின்றன. எனவே, இந்த முதன்மையான வரம்பைத் தாண்டி எந்தச் செய்தியும் வாசகர்களையோ அல்லது பார்வையாளர்களையோ சென்றடைவதில்லை.

இரண்டாவது வடிகட்டியாகச் செயல்படுவது, விளம்பரங்கள் மற்றும் விளம்பரதாரர்களின் நலன்கள். ஊடகங்கள் விற்பனையின் மூலம் ஈட்டும் வருவாயை விட, விளம்பரங்களினால் ஈட்டும் வருவாய் அதிகம். ஊடகங்கள் விளம்பரங்களில் தங்கியே இயங்குகின்றன. இதன் விளைவால், எக்காலத்திலும் விளம்பரதாரர்களின் நலன்களே அனைத்தையும் தீர்மானிப்பதாக அமைகின்றன.

பெரும்பாலான நிகழ்ச்சிகள் விளம்பரதாரர்களுக்காகவே வடிவமைக்கப்படுகின்றன. இங்கு விளம்பரங்களுக்காக நிகழ்ச்சிகள் அன்றி, நிகழ்ச்சிகளுக்காக விளம்பரங்கள் அல்ல.

மூன்றாவது வடிகட்டி செய்திக்கான மூலங்களாகும். செய்தியை வழங்கும் மூலங்களான அரசாங்க நிறுவனங்கள், பிற அரச, தனியார் துறைகளின் அதிகாரிகள், பொலிஸ் மற்றும் இராணுவத்துறை உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் ஆகியோர் ஊடகங்களுக்கு எனச் செய்திகளைத் தீர்மானிக்கும், வழங்கும் மூலங்கள்.

எனவே, இவர்களின் நலன்களுக்குட்பட்டே செய்திகள் வெளியிடப்படுகின்றன. இவர்களுக்கு எதிரான செய்தியை வெளியிடுவது, செய்தி அளிக்கும் மூலத்தைப் பகைத்துக் கொள்வதாகும். எனவே, அதை ஊடகங்கள் செய்வதில்லை. அதேபோல மூலங்களே செய்திகளின் தன்மையையும் அதன் வீச்சையும் எல்லையையும் தீர்மானிக்கின்றன.

நான்காவதாக, செய்திகளின் அல்லது நிகழ்ச்சிகளின் எதிர்நிலைக் கருத்துருவாக்கம். ஒரு செய்தியோ, கட்டுரையோ அல்லது ஒரு நிகழ்ச்சியோ பொதுவெளியில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து, ஆசிரியருக்குக் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் மூலமாக எதிர்வினைகள் வரும்.

செய்தி அல்லது நிகழ்ச்சி பெரும் சர்ச்சைக்குரிய விடயமாயின் வழக்குகள், நேரடி மிரட்டல்கள் வரும். இதன்மூலம் அதிகாரபீடத்துக்கு எதிரான குரல்கள் நசுக்கப்படும். பல சமயங்களில் அம்மிரட்டல்களைப் பொருட்படுத்தாது செயற்பட்டாலும் கூட பொருளாதார ரீதியில் அவ்வூடக நிறுவனத்தை நிலைகுலையச் செய்யவியலும்.

நிறைவான வடிகட்டி, வர்க்க வேறுபாடும் சோசலிச எதிர்ப்பும். பெரும்பாலான ஊடகங்கள் சோசலிச எதிர்ப்பை இயல்பாகவே கொண்டுள்ளன. இவற்றுக்கமைய சோசலிச சிந்தனைகளின் மீதான அவதூறுகளுக்கும் பொய்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். சாதாரண மக்களின் பிரச்சினைகள் வெறுமனே பொதுப்புத்தி மட்டத்திலிருந்து மட்டுமே அலசி ஆராயப்படும்.

மெய்ப்பொருள் காணுவது, இந்தத் தகவல் யுகத்தில் மிகவும் கடினம். எனினும், ஆழமாகத் தேடினால் உண்மை சில கிடைக்கும். முன்னர் போலவே, இப்போதும் பொய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இன்றைய காலப்பகுதியில் உற்பத்தியாகும் பொய்களின் உற்பத்தித் தரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே போகிறது.

பொய்களை நம்பகமானவையாக்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட முயற்சிகள் கூடிய கவனத்துடன் எடுக்கப்பட்டன என்பது உண்மையாக இருக்கலாம். ஆனாலும், இப்போது பொய்களின் நோக்கம் அவற்றை எல்லோரும் எப்போதும் நம்ப வேண்டும் என்பதல்ல; பல, குறுகிய காலப் பாவனையின் பின் தூக்கி எறிவதற்கானவையாகும்.

பல பொய்கள், ஓர் அபிப்பிராயத்தை உருவாக்குகின்ற நோக்கில் அல்லது ஏற்கெனவே உள்ள சில எண்ணங்களை வலுப்படுத்துகின்ற நோக்கில் உற்பத்தியாகின்றன.

“ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அது உண்மையாகிவிடும்” என்கிற கலாநிதி கொயபெல்ஸின் பாஸிஸ நடைமுறை, அவதானிப்புப் பற்றிப் பகிரங்கமாகப் பேசாது போனாலும், அந்த நடைமுறையைத் தந்திரமாக நிறைவேற்றப் பல முகவர்களைத் தம்வசம் வைத்துத்தான் சி.ஐ.ஏ முதலாக றோ வரையிலான உளவு நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளன.

அவற்றுக்கு உடந்தையாக ஊடக நிறுவனங்கள் பல இயங்கி வந்துள்ளன. இப்போது இணையத் தளங்களும் சேர்ந்து கொண்டுள்ளன. தகவல் புரட்சி என்கிறார்களே, அதில் இப்போது தகவல் புரட்டும் பெருமளவில் உள்ளது.

ஏராளமான அரை உண்மைகளிடையே உண்மைகளைக் கண்டறிவது மேலும் மேலும் கடினமாகி வருகிறது. ஓர் அரை உண்மையை நம்ப விரும்புகிறவர்கள், அதில் தமக்கு வசதியான பகுதிகளைத் தேர்ந்து பரப்புகிறார்கள்.

இதன் மூலம், பலரது சாட்சியமாக ஒரே பொய் சொல்லப்படுகிறது. அதை நம்ப விரும்புகிறவர்கள் அதற்கப்பால் எதையுமே தேடப் போவதில்லை. மாறாக வருகின்ற எந்தத்தகவலையும் புறக்கணித்து விடுகிறார்கள். அவர்களுக்கு வசதியாகவே அவர்கள் தேடி வாசிக்கின்ற நாளேடுகளும் விரும்பிக் கேட்கிற வானொலி நிலையங்களும் பார்க்கிற தொலைக்காட்சி நிலையங்களும் தேடுகிற இணையத் தளங்களும் அமைகின்றன.

மதமாகட்டும், அரசியலாகட்டும், நாம் நமது குருட்டு நம்பிக்கைகளின் கைதிகளாக உள்ளவரையும் நம்மை ஏய்ப்பது எவருக்கும் எளிது. நாம் ஏமாற விரும்புகிற விதமாகவே நாளாந்தம் நாம் ஏய்க்கப்படுகிறோம். அவ்வாறே நாம் பிறரை ஏய்ப்பதிலும் ஒத்துழைக்கிறோம். இதுதான் துயரமிகு உண்மை.

சில விடயங்கள் நடக்கும்போது, நடப்பதைச் சொல்வதைவிட, நடந்தததைத் தொடர்ந்து, என்ன நடக்கும் என எச்சரிப்பது அவசியமானது. இதனாலேயே ஊடகத் துறையினரது சமூகப் பொறுப்பு முக்கியமானது.

ஊடக நிறுவனங்களது எசமானர்கள் எதை விரும்பினாலும், உண்மைக்குப் புறம்பான விடயங்கள் பற்றி மக்களை எச்சரிப்பது அவர்களது கடமையாகிறது. ஊடகத் துறையினர் தம்மிடையே ஒன்றுபட்டு நின்றால் அவர்களில் பலர் தமது மனச்சாட்சிக்கு விரோதமாகப் பேசவும் எழுதவுமான நிலைமையை அவர்களால் தவிர்க்க இயலும்.

மக்களை எச்சரிக்கத் தவறுகிற ஊடகங்கள் தமது நம்பகத் தன்மையை இழந்துள்ளன. ஊடகத்துறை ஊழியர்களால் அதிகாரத்தை மீற இயலும். அது அவர்களது சமூகக் கடமையும் உரிமையுமாகும். மக்களுக்கு உண்மைகளைச் சொல்வது என்பது வெறுமனே தெரிந்தெடுத்த தகவல்களைச் சொல்வதல்ல; சொல்ல வேண்டிய பிறவற்றைச் சொல்வதும் சொல்லப்பட்ட பொய்களை மறுப்பதும் உண்மையைச் சொல்லுவதன் ஒரு முக்கியமான பகுதி. இவையெல்லாம் இன்றைய உலகில் பெறுமதியிழந்துள்ளன.

இன்றைய டிஜிட்டல் சாம்ராச்சியங்கள் வெறுமனே ஊடகங்களுடன் முடிந்துவிடுவதில்லை. அவை, சமூக அசைவியக்கத்தின் ஒவ்வொன்றுடனும் நெருங்கி வருகின்றன.

இதன் தீவிரத்தை உணர, ஓர் உண்மைச் சம்பவம் போதுமானது. பல்கலைக்கழகம் செல்லும் 19 வயதான தனது மகளுக்கு, கர்ப்பகால சத்துணவுகளுக்கான கழிவுக் கூப்பனைப் பிரபலமான பல்பொருள் அங்காடி நிறுவனமொன்று அனுப்பியிருப்பதைக் கண்டு தந்தை கோபம் கொண்டார்.

அவ்வங்காடியின் கிளையொன்றுக்குச் சென்று, இவ்வாறானதொரு தவறான செயலைச் செய்தமைக்காக, மேலாளருடன் சண்டையிடுகிறார். சில நாட்கள் கழித்து தன் மகள் உண்மையிலேயே கருவுற்றிருப்பதைத் தந்தை அறிந்து கொள்கிறார்.

தந்தைக்குத் தெரியாதது பல்பொருள் அங்காடிக் கடைக்காரனுக்கு எப்படித் தெரியும்? இதுதான் டிஜிட்டல் சாம்ராச்சியங்களின் பலம். அவை தனிமனிதனின் சகல அலுவல்களிலும் தலையிடுகின்றன. நீங்கள் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, பார்க்கும் தொழில், பொழுதுபோக்குத் தெரிவுகள், மருத்துவமனை என அனைத்தும் ஒரே வலைப்பின்னலில் இணைக்கப்படுகின்றன. இவ்வாறுதான் இன்று டிஜிட்டல் சாம்ராச்சியங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

முடிவற்ற ஏமாற்றுகளின் வலைப்பின்னலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதிகாரத்தின் கட்டளைகளாலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சமூகத்தில், உண்மைகள்தான் மிக எளிதாக நழுவிப் போய்விடுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்த 7 நாளில் பெண் குழந்தையை கோவிலில் வீசிவிட்டு சென்ற தாய்..!!
Next post ஏப்ரல் 7-ல் மீண்டும் விருந்தளிக்க வரும் `பாகுபலி’..!!