உறக்கமின்றித் தவிக்கும் மக்களின் வாழ்வில் நிம்மதி எப்போது?..!! (கட்டுரை)

Read Time:15 Minute, 0 Second

article_1490688506-Elephan-newமுச்சக்கர வண்டி மாத்திரமே செல்லக்கூடிய அந்த, மணல் பாதை புத்தம்புரி ஆற்றுப்பகுதியிலுள்ள மணல்சேனை கிராமத்தை நோக்கி செல்கின்றது. பாதையில் ஒரு சந்தி குறுக்கிடுகிறது. அதில் ஒரு கண்ணீர் அஞ்சலி பதாதை கட்டப்பட்டிருகின்றது .

யானை அடித்து உயிரிழந்த அமரர் சிவராசா கமலநாதன் நினைவாகத்தான் அந்த ‘பனர்’ கட்டப்பட்டிருந்தது. பனரைத் தாண்டி சில மீற்றர்கள் தூரத்தில், கட்டிப் பூசப்படாத ஒரு கல்வீட்டை அடைந்தோம். அங்கு, இன்னமும் மரணவீட்டுக்கான சோகம் நிறைந்திருந்தது. அயல்வீடுகளைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் என முற்றத்தில் குழுமியிருந்தார்கள். நாற்பது வயதை எட்டியிராத கணவனின் மரணம் நாகேஸ்வரியின் குடும்பத்தை மட்டுமன்றி, ஒட்டுமொத்த கிராமத்தையே கலங்கடித்திருக்கின்றது என்பதை அங்கு நிலவிய சூழலால் விளங்கிக்கொள்ள முடிந்தது.

“ஐந்து, ஆறுமணிக்குப் பிறவு வெளியில் போகமுடியாது; யானைகள் வந்துவிடும்” என்று அச்சத்துடன் பதறும் நாகேஸ்வரி, தனது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகிடுமோ என பயப்பீதியுடன் காணப்படுகின்றார்.

அறுவடைக்குப் போன கமலநாதன் யானைஅடித்து இறந்த பிறகு கூட, கிராமத்தை பாதுகாப்பதற்கு முறையான பாதுகாப்பு வேலிகள் போடப்படவில்லை என கிராம மக்கள் ஆதங்கப்படுகின்றார்கள்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் எல்லைப்பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் யானைத்தாக்குதல்களால் பெருந்தொகையான எல்லைப்புற மக்கள் அச்சத்துடனேயே வாழ்க்கை நடத்தும் நிலை தோன்றியுள்ளது.

யானைகளை யமனைப் போன்று பார்க்கப்படும் சூழல் மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் ஏற்பட்டிருக்கிறது.

இரவுகளை நித்திரையில்லாமல் கழிப்பதனால், கல்வியில் ஊக்கங் காட்டமுடியாத மாணவர்களையும் இரவு வேளைகளில் நித்திரையில்லாது யானைகளைத் துரத்தித்துரத்தியே சோர்ந்து போகும் குடும்பத்தவர்களும் என்று படுவான்கரைப் பிரதேசங்கள் காணப்படுகின்றன.

இரவு வேளைகளில் நிம்மதியான தூக்கம் இல்லாமையால், தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் மீண்டும் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் சூழலிலிருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்ளப் போகிறோம் என்பதுதான் அவர்கள் முன் உள்ள, விடைதெரியாத முக்கிய கேள்வியாகும். அதே​போல் மாணவர்களின் கல்வியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பாடசாலையிரிருந்து இடைவிலகுவதும், சிறுவயதிலேயே தொழிலுக்குச் செல்லுகின்ற நிலையும் உருவாகி வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை என்பது மாவட்டத்தின் பெரும் பகுதியாகும். இப்பிரதேசமே விவசாயத்துக்கும் கால்நடை வளர்ப்பு போன்ற உற்பத்திக் துறைகளுக்காகப் பயன்படும் பிரதேசமாகும். இங்கு தொடர்ச்சியாக யானைகளின் தொல்லை இருந்து வருகிறது.

“குடியிருக்க இடமில்லாமல் பாதி பக்கமாகக் குடியிருக்கும் நிலையை யானை உருவாக்கிவிட்டிருக்கிறது. யானை பிடிக்கப்படும் போதுதான் சந்தேசமாக இருக்கிறது. மற்றைய கிளை யானைகள் வந்தால் (கூட்டம்) லைற்றைப்பிடித்தால் போய்விடும். இந்த யானைகள் லைற்றைப்பிடித்தால் நேராக வந்து வீட்டைத்தான் உடைக்கிறது. எங்களுக்கு சாப்பிட இருக்கும் சோற்றுப் பானையா, கறிச் சட்டியா, சீனி, தேயிலை, உப்பு , அரிசி, நெல்லு எதையும் விட்டுவைக்காது. இவ்வாறு பெரிய பிரச்சினைகளுக்குள் இங்கு உயிர் தப்பி இருப்பது பெரிய விசயம்’ என்று மட்டக்க்ளப்பு, கண்டியனாறு பிரதேசத்தில் வசிக்கும் முதியான்சிலாகே அப்புகாமி புஞ்சிபண்டா கூறுகின்றார்.

“எங்களது கிராமம் காட்டுப் பகுதியான கிராமம்; இங்கு மின்சார வசதிகள் எதுவுமில்லை. விவசாயப் பயிர்களையும் யானை அழிக்கிறது. பயிர்களின் விளைச்சல்களை சாப்பாட்டுக்குக் கூட பயன்படுத்த முடியாதுள்ளது, இந்த யானைகளின் அட்டகாசம் காரணமாக பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்ட பலர் இங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டனர் . ஒரு நாள் இரவு 11 மணியிருக்கும், வீட்டைச் சுற்றி அடித்துக் கொண்டிருந்த வேளை, நாங்கள் எல்லோரும் அழுது, ஒவ்வொரு அறையாக மாறி மாறி இருந்தோம். அப்பா அருவாக்கத்தியை எடுத்து எறிந்துதான் துரத்திவிட்டோம்” என்கிறார் கண்டியனாறைச் சேர்ந்த அமிர்தலிங்கம் யசோதா (25).

இப்பிரதேசத்தில் வனவிலங்குப்பாதுகாப்புத் திணைக்களத்தினர் பாதுகாப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற வேளையிலேயேகூட சம்பவங்கள் நடைபெறுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று தெற்கு, ஏறாவூர் பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு, போரதீவு பற்று ஆகிய ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் யானைகளின் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

2009ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில், இந்த யானைப் பிரச்சினைகள் காரணமாக 660 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 30பேர் காயமடைந்துள்ளதாகவும் வன பரிபாலன திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் 2009 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் 61 பேர் உயிரிழந்துடன் 50 யானைகளும் இறந்துள்ளன.

யுத்தம் நிறைவு பெற்றபின்னர் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திக்கும் யானைகள் மக்கள் மீது அட்டகாசம் நடத்துவதற்கும் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் யானைகளினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியாத நிலைமையே இருந்து வருகிறது.

யுத்தம் முடிவுற்ற பின்னர் மக்கள் தமது வாழ்வாதாரங்களுக்காக இருக்கின்ற தொழிலான விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களை சுதந்திரமாகச் செய்யப் புறப்பட்டனர். அவ்வேளை காடுகளில் இருந்த யானைகள் மக்களைத் தாக்க முற்பட்டன. அத்துடன், இடம் பெயர்ந்து வேறு இடங்களில் இருந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி விவசாயத்தில் ஈடுபட்டதுடன், இருப்பிடங்களையும் அமைத்துக் கொண்டனர். இவை யானைகளால் தாக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றமை குறித்து மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

யானைகளிலிருந்து பாதுகாப்பதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. அவை சரியான பராமரிப்பு இன்மை காரணமாக பயனற்றுப் போயின. அதற்கு மக்களும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகின்றனர். அதாவது, மாவட்டத்தில் பல கிலோமீற்றர்கள் நீளமான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவை முழுவதையும் வன பரிபாலனத்திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பராமரித்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, பொது மக்கள், தமக்கு அருகிலிருக்கும் வேலிகளைப் பராமரித்து, புற்கள் வளர்வதை தடுத்து, சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும் என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது.

அத்துடன், விவசாயிகள் தவிர கால்நடை வளர்ப்பாளர்களும் கவனயீனமாகப் பாதுகாப்பு வேலிகள் தொடர்பில் செயற்படுகின்றனர். இவர்கள் கால்நடைகளுக்காக இந்த வேலிகளை வெட்டிவிடும் செயற்பாடுகளும் நடைபெற்றிருக்கின்றன.

தீர்வு விரைவு படுத்தப்படாத சரியான தீர்வு முன்வைக்கப்படாத எந்த ஒரு விடயமும் சிறந்ததொரு பயனைத்தந்து விடுவதில்லை என்பதற்கு இந்த யானைத் தொல்லைப் பிரச்சினை நல்லதொரு உதாரணமாகும். குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதனைத் தவிர்த்து உறுதியான தீர்வுக்கு வழி தேடவேண்டும் என்பது இப்போதைய நிலையாக இருக்கிறது.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் பல்வேறு தடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டு, அதனால் அம்பாறையில் இருந்து இயங்கிக் கொண்டிருந்த வனபரிபாலன சபையினர் மட்டக்களப்பிலும் தமது காரியாலயப் பிரிவுகளைத் திறந்து செயற்படும் நிலை தோன்றியிருந்தது. அவர்கள் இப்போது தனி அலகாகவும் இயங்கி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள யானை அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு ஒரே வழி யானைகளைப் பிடித்து வேறு இடத்தில் கொண்டுசென்று விடுவதேயாகும்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கிராமங்களுக்கு யானைகள் வராமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் என்றும் தற்போது பெருந்தொகையான யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் பாதிக்கப்படும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகளின் தொல்லைகளுக்குத் தீர்வைத் தரும் வகையில், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்கத் தாமதிக்கும் போதெல்லாம், மேட்டுநிலப் பயிர்களான சோளன், கச்சான், போன்றவற்றுடன், தென்னை, வயல் நிலங்களையும் கரும்பு போன்றவற்றையும் யானைகள் அழித்து வருகின்றன.

மின் தடுப்பு வேலி சுமார் 86 கிலோமீட்டர் அமைக்கப்பட்டாலும், அவை பராமரிக்கப்படாமையினால் வீணாகிப்போகிற நிலையுமுள்ளது. ஆனாலும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு வேலி அமைத்துப் பிரயோசனம் இல்லை என்ற வகையில் தொடர்ச்சியான வேலியை அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு தற்போது அதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருகிறது.

யானைத்தாக்கத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உயிரிழப்பு, வீடுகள், பயிர்ச் சேதங்களுக்கு சிறியளவிலான பணத்தொகைகளை வழங்கி எந்த விதமான முழு நிவாரணமும் கிடைத்துவிடப் போவதில்லை. என்பதனால், விரைந்து நிரந்தர முடிவுகள் எட்டப்படுவது சிறப்பானதாக இருக்கும்.

மாவட் செயலகத் தகவல்களின் படி 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையில் 37 பேருக்கு மரணத்துக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த வருடம் வரையில் வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் நட்டயீடு;டுக்குப் பதிலாக இவ்வருடம் முதல் இரண்டு லட்சம் ரூபா நட்டஈடு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .

மாவட்டத்தில் யானைகள் தொடர்ந்தும் பிரச்சினைகளாக உள்ளன என்ற அடிப்படையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லைப்பிரதேசங்களிலுள்ள காட்டுப்பகுதி யானைகளின் வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை என்பதே தெரிகிறது. அந்த அடிப்படையில் இந்த யானைகளை சரணாலயங்களில் கொண்டு சென்று விடுவதே பொருத்தமாக இருக்கும் என்பது மக்களது கருத்தாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த வருடத்தில இருண்டு யானைகள் பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுவல்லவா காதல்: கணவன் இறந்தவுடன் மனைவி உயிரும் பிரிந்த சோகம்..!!
Next post ரஷ்ய ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் உடல் சிதறி பலி..!! (வீடியோ)