அச்சத்தை விதைக்கும் பிரசார உத்தி..!! (கட்டுரை)

Read Time:20 Minute, 23 Second

article_1491810717-Untitled-1newஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றாலும், நாடாளுமன்றத்தின் ஆயுளை இன்னொரு பதவிக்காலத்துக்கு நீட்டிப்பதற்கான சர்வசனவாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மையைப் பெறுதல் என்பது ஜனாதிபதித் தேர்தலைவிட பெரும் சவாலானது என்பதை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியும் நன்கு உணர்ந்திருந்தன.

ஆகவே, சர்வசனவாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மையைப் பெற்றுவிடத் தம்மாலான சகல கைங்கரியங்களையும் ஆற்றுவதற்கு ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம் தயாரானது.

ஒருபுறத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க, “மக்கள் தமது வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காகவேனும் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிக்க விளையும் இந்த முயற்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” என்று பிரசாரத்தை முன்னெடுத்த வேளையில், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தான் மக்களின் வாக்குரிமையை மதிப்பதாகத் தனது பிரசாரத்தை முன்னெடுத்தார்.

அவர் தனது பிரசாரப் பேச்சுகளில், “1970-1977 வரை சிறிமாவோவின் ஆட்சிக்காலத்தில், மக்களின் அனுமதியோ, மக்களாணையோ இன்றி சிறிமாவோ எதேச்சாதிகார முறையில் நாடாளுமன்றத்தின் ஆயுளை இரண்டு வருடங்கள் நீட்டித்திருந்தார். ஆனால், நான் அதுபோல எதேச்சாதிகார முறையில் நடக்கவில்லை. மாறாக நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிப்பதற்கு இலங்கையிலுள்ள சகல மக்களினதும் மக்களாணையைக் கோரியிருக்கிறேன்” என்று கூறினார்.

பொதுத் தேர்தலுக்குப் போகாமல், அரசியலமைப்புக்குத் திருத்தமொன்றைக் கொண்டு வந்து, சர்வசனவாக்கெடுப்பு என்றொரு குறுக்குவழியைப் பயன்படுத்தி ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கமானது நாடாளுமன்றத்தின் ஆயுளை இன்னொரு பதவிக்காலத்துக்கு நீடிக்க முயற்சிப்பது, அவர்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுள்ள வரலாறு காணாத பெரும், பெரும்பான்மைப் பலத்தைத் தக்கவைக்கவே என்பது மக்களுக்கு தெரியாமலோ, புரியாமலோ இல்லை.

பல ஊடகவியலாளர்களும் அரசியல் விமர்சகர்களும் இதனைச் சுட்டிக்காட்டினார்கள். மேலும் சிலர் இதிலுள்ள பெரும் ஆபத்தையும் சுட்டிக் காட்டினார்கள். அதாவது, பெரும் அதிகார பலத்தைக் கொண்டு, அரசியலமைப்புக்குத் திருத்தங்களைச் செய்து, அந்தப் பெரும் அதிகார பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதானது, இலங்கையில் ஜனநாயகத்தைப் பலமிழக்கச்செய்து, வல்லாட்சியை உருவாக்கிவிடும் என்பது பல விமர்சகர்களினதும் கருத்து.

ஆனால், ஜே.ஆரை ஆதரித்தவர்களோ, ஜே.ஆர் ஜனநாயக வழியிலேயே செயற்படுவதாகவும் அதனால்தான் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிக்க மக்களிடம் மக்களாணையைக் கோரி சர்வசனவாக்கெடுப்புக்கு சென்றுள்ளதாகவும் ஆகவே, வல்லாட்சி என்பதெல்லாம் இதிலில்லை என்றும் ஜே.ஆரின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார்கள்.

நக்ஸலைட் சதி

எது எவ்வாறாயினும், ஜே.ஆரோ, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமோ இந்தச் சர்வசனவாக்கெடுப்பை இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை. எவ்வாறேனும் போதிய பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கில் பல தகிடுதத்தங்களை அரங்கேற்றத் தயாரானார்கள்.

அதன் முதல்படி “நக்ஸலைட் சதி” என்ற பெயரில் அரங்கேறியது. 1982 ஒக்டோபர் 28 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அன்றைய கல்வி அமைச்சரும், ஜே.ஆரின் நெருங்கிய உறவினருமான ரணில் விக்ரமசிங்க, நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹெக்டர் கொப்பேகடுவ வென்றிருப்பாரேயானால், அதனைத் தொடர்ந்து பெரும் “நக்ஸலைட் சதி” ஒன்று முன்னெடுக்கப்பட்டு, நாட்டில் பல அதிரடி மாற்றங்களை அரங்கேற்றத் தயாரானதாகத் தங்களுக்கு அறியக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.

ஹெக்டர் கொப்பேகடுவ வென்றிருந்தால், அவர் தேர்தலுக்கு முன் சொன்னது போல சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் மீள அளிக்கப்பட்டிருக்க மாட்டாது எனவும், சிறிமாவோவின் மருமகனும், இடதுசாரிச் சார்புடையவருமான விஜய குமாரணதுங்க பிரதமராக நியமிக்கப்படுவதுடன், இலங்கை இராணுவமும் படைகளும் அவர்களுக்குச் சார்பானவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் அத்தோடு சிறிமாவோ பண்டாரநாயக்கவைப் படுகொலை செய்வதற்கான திட்டமொன்றும் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்தப் பேச்சுப் பற்றி, தன்னுடைய கட்டுரையொன்றில் கருத்துரைக்கும் கலாநிதி ராஜன் ஹூல், இது எந்த அடிப்படையுமில்லாமல், அவசர கதியில் முன்வைக்கப்பட்ட கருத்து என்கிறார்.

ரணில் விக்ரமசிங்க அடிப்படையும் முழுமையுமற்ற இந்தத் தகவல்களை வதந்தி வகையில், தன்னுடைய பாடசாலை நண்பனான அநுர பண்டாரநாயக்கவிடமிருந்து அறிந்திருக்கலாம் என்றும், அநுர பண்டாரநாயக்கவுக்கும் விஜய குமாரணதுங்கவுக்கும் இருந்த பதவிச் சண்டையும் அநுரவின் ஐ.தே.க மற்றும் வலதுசார்பு நிலையும் விஜயவின் இடதுசார்பு நிலையும் எல்லாம் இந்த வதந்திகள் சதியாக பார்க்கப்பட காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

நாடாளுமன்றத்தில் இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் ஜயக்கொடி எதிர்ப்புத் தெரிவித்தபோது, அதனை மறுத்துப் பேசிய அமைச்சர் காமினி திசாநாயக்க, “உங்கள் தலைவியின் மகளின் கணவரான விஜய குமாரதுங்கதான் நக்ஸலைட்டுகளின் தலைவர். உங்கள் தலைவியின் மகள் (சந்திரிகா பண்டாரநாயக்க) தான் அவரின் உதவியாளர். அதற்கு மேலதிகமாகக் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, பிரசாரத்தை முன்னெடுத்த ஒரு குழு இருக்கிறது. அந்தக் குழுதான் ஜனாதிபதியைப் படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்தது. நக்ஸலைட்டுகள் யாரென்று அறிய உங்களுக்கு விருப்பம் என்றால், உங்களுடைய வீட்டுக்குள்ளேயே தேடுங்கள்” என்று முழங்கினார்.

அச்சத்தை விதைத்தல்

ரணில் விக்ரமசிங்க மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த “நக்ஸலைட் சதி” என்ற விடயத்துக்கு ஜனாதிபதி ஜே.ஆர் மேலும் தூபமிடும் கருத்துகளை முன்வைத்தார். 1982 நவம்பர் மூன்றாம் திகதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெளியிட்ட அறிக்கையொன்றில், தான் இந்த நக்ஸலைட் சதி பற்றி ஒக்டோபர் 21 ஆம் திகதியே அறிந்திருந்ததாகவும், அந்தத் திட்டத்தின் படி தன்னையும் தனது அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்கள் சிலரையும், அநுர பண்டாரநாயக்கவையும் இலங்கைப் படைகளின் தளபதிகளையும் கொல்வதற்கும் சிறிமாவோ பண்டாரநாயக்கவை சிறைப்பிடிக்கவும் சிலர் சதி செய்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும் பொதுத் தேர்தலுக்கு செல்வதில் உள்ள ஆபத்தானது, அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி, சில ரவுடிகள் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்து விடுவார்கள் எனவும், அவர்கள் ஜனநாயக அமைப்பைப் பலவீனப்படுத்தி, தமது “நக்ஸலைட் சதியை” பலப்படுத்தி, அடுத்த தேர்தலில் தமது “நக்ஸலைட்” அரசாங்கத்தை உருவாக்கிவிடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் பிரசார உத்திகளில் அச்சத்தை விதைத்தல் (fearmongering / scaremongering) என்றொரு உத்தியுண்டு. அதாவது மக்களிடையே திட்டமிட்டு, அச்சத் தந்திரோபாய (scare tactics) ரீதியில் பொது அச்சத்தை விளைவிப்பதனூடாக, அவர்களிடையே உளவியல் ரீதியான தாக்கத்தை விளைவித்து, அதன் மூலம் தாம் அடைய நினைப்பதை அடைந்து கொள்ளும் உத்தி அது. சுருங்கச் சொல்வதாயின், மக்களிடையே அநாவசியமான பெரும் அச்சத்தை விளைவித்து, அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் உத்தியாகும்.

இந்த உத்தியானது வரலாற்றுக் காலத்திலிருந்து அரசர்கள் முதல் பலராலும் பயன்படுத்தப்பட்டதொரு உத்தியாகும். நவீன உலகில் அடல்ப் ஹிட்லர் முதல், டொனால்ட் ட்ரம்ப் வரை இதே உத்தியினை தமது அரசியல் அடைவுகளுக்காகப் பயன்படுத்தியிருந்தார்கள்.

“நக்ஸலைட் சதி” பிரசாரத்தின் ஊடாக ஜே.ஆரும் இதே பயத்தை விதைக்கும் தந்திரோபாயத்தையே முன்னெடுத்தார். நக்சலைட்டுகள் என்ற சொல்லானது இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட் மாக்ஸிஸ பயங்கரவாதக் குழுவைச் சார்ந்தவர்களைக் குறிக்கிறது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நக்சல்பரி என்ற கிராமத்தில் அந்தப் பயங்கரவாத இயக்கம் தொடங்கப்பட்டதால் “நக்ஸல்” என்ற பெயரைப் பெற்றது. இது 1969 காலப்பகுதியில் உருவானது. இந்தப் பயங்கரவாத இயக்கத்தை இந்திய அரசு இரும்புக் கரம் கொண்டு செயற்பட்டதுடன், நக்ஸலைட்டுகளுக்கு எதிரான பிரசாரமும் மும்முரமாக இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், 1982 காலப்பகுதியானது உலகளவில் மாக்ஸிஸத்துக்கு எதிராகப் பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட காலம் எனலாம். பிரித்தானியாவில் “இரும்புப் பெண்மணி” மார்க்ரட் தட்சர் பிரதமராகவும் அமெரிக்காவில் றொனால்ட் றீகன் ஜனாதிபதியாகவும் இருந்த காலப்பகுதி இது.

இவ்விருவரும் தீவிர மாக்ஸிஸ, கம்யுனிஸ எதிர்ப்பாளர்கள். ஆகவே உலகளவில் மாக்ஸிஸத்துக்கும் அதனால் விளைந்த பஞ்சம், படுகொலைகள் என்பற்றுக்கும் எதிராகக் கடும்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தப் பின்புலத்தில்தான் இலங்கையிலும் ஜே.ஆர் அரசாங்கத்தினால் “நக்ஸல் சதி” என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

1982 நவம்பர் 14 ஆம் திகதி வெளியான “த சண்டே டைம்ஸ்” பத்திரிகையில், நாடாளுமன்ற ஹன்ஸாட் மேற்கோள்காட்டப்பட்டு, எட்டு முக்கிய நக்ஸலைட்டுகள் என விஜய குமாரதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரட்ணசிரி விக்ரமநாயக்க, ஹெக்டர் கொப்பேகடுவ, ரீ.பீ.இலங்கரட்ண, கே.பீ.சில்வா, ஜீ.எஸ்.பீ.ரணவீர (அத்த பத்திரிகையின் ஆசிரியர்), மற்றும் ஜனதாச நியதபால ஆகியோரது பெயர்களும் படங்களும் பிரசுரமானது.

கைதுகளும் தடுத்து வைப்புகளும்

வெறும் பிரசாரத்தோடு இது நிற்கவில்லை. இதனை அடுத்த கட்டத்துக்கு ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நகர்த்திச் சென்றது. நவம்பர் 14 ஆம் திகதி வன்முறையைத் திட்டமிட்டவர்கள் எனப் பலரும் கைது செய்யப்பட்டார்கள்.

அன்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ரட்ணசி‌றி விக்ரமநாயக்கவும் தடுத்து வைக்கப்பட்டார். நவம்பர் 19 ஆம் திகதி “நக்ஸலைட்” என்ற சந்தேகத்தின் பெயரில் விஜய குமாரதுங்க அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். ஆனால் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.

1982 நவம்பரில் ரட்ணசி‌றி விக்ரமநாயக்க உட்பட 11 பேருக்கெதிராக 1980 ஆம் ஆண்டு (ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்) பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்த, மற்றும் வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டமை என்ற குற்றங்கள் தொடர்பில் குற்றப்பத்திரிகை சட்ட மா அதிபரினால் கொழும்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையே இந்தப் “பொது மற்றும் தனியார் சொத்துகளுக்குப் பாதிப்பினை ஏற்படுத்த, மற்றும் வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்ட” குற்றமாகும்.

கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறை

மேலும், ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை எதிர்த்து கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்த ஹெக்டர் கொப்பேகடுவவுக்கும் அரசாங்கத் தரப்பிலிருந்து கடும் அழுத்தம் தரப்பட்டது. அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டார்.

“நக்ஸல் சதி” என்பது பெரும் பிரசாரமாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. பெரும்பாலான ஊடகங்களும் அரசாங்கத்தின் இந்தப் பிரசாரத்துக்குத் துணைபோனதாக இடதுசாரிகள் குற்றம் சுமத்தினார்கள்.

இடதுசாரிகள் நாட்டைக் கைப்பற்றச் சதி செய்கிறார்கள் என்ற பெரும் பீதி மக்களிடம் விதைக்கப்பட்டது. அந்தச் சதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான வைரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களுக்குப் பங்கிருப்பதாகவும் காட்டப்பட்டது.

இதன் மூலம், அச்சத்தை விதைத்தேனும் சர்வசனவாக்குரிமையில் வென்றிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டதை நாம் அவதானிக்கலாம். சிவில் சமூகத்தினர் சிலரும், சமூக ஆர்வலர்கள் சிலரும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் இந்த விசமப் பிரசாரத்தைக் கண்டித்தாலும் அரசாங்கத்தின் பிரசாரப் பலத்துக்கு முன்னால் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்தப் பிரசாரத்தோடு மட்டும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நின்றுவிடவில்லை. அவர்கள் சர்வசனவாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மையைப் பெறுவதற்கு எதனையும் செய்வதற்குத் தயாராகவே இருந்தார்கள். முழு அரச இயந்திரத்தையும் தமது பிரசாரத்துக்காகப் பயன்படுத்தியதாக பல அரசியல் விமர்சகர்களும் ஆய்வாளர்களும் கருத்துரைக்கிறார்கள்.

பொலிஸாரும் காடையர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கெதிராகக் களத்தில் இறக்கப்பட்டார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டு, பல தஸ்தாவேஜூகள் கைப்பற்றப்பட்டன. அச்சகங்கள் பல மூடப்பட்டன. சில பத்திரிகைகளும் மூடப்பட்டன.

அரசாங்கத்துக்குச் சார்பான பிரசாரம் தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் ஆயுட்கால நீட்டிப்புக்கு எதிரான பிரசாரத்துக்கு என்னென்ன வழிகளிலெல்லாம் முட்டுக்கட்டையிட முடியுமோ, அத்தனை வழிகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

ஏன் அந்த அமைதி?

நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் முயற்சிக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசாரிக்கட்சிகளும் ஒன்றிணைந்து பிரசாரத்தை முன்னெடுத்த நிலையில், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதை எதிர்த்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அவர்களோடு சேர்ந்து அதனை எதிர்க்காமல், அமைதி வழியில் பயணித்தார்கள். ஏன் அந்த அமைதி?

( அடுத்த வாரம் தொடரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் பாகங்களை வாங்கி குறைந்த விலையில் ஐபோன் தயாரித்த ஸ்காட் ஆலென்..!! (வீடியோ)
Next post சமுதாய உணர்வை காயப்படுத்தியதாக வழக்கு: ராக்கி சாவந்த் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு..!!