By 16 April 2017 0 Comments

”நானும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறேன்… நானும் சாகவா?!” – மைனா நந்தினி கண்ணீர்..!!

Medical: Syringe

Medical: Syringe

சின்னத்திரை நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திகேயன், கடந்த வாரம் மன அழுத்தம் காரணமாக; குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது, சின்னத்திரை கலைஞர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், ‘எனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தை ராஜேந்திரனே காரணம்’ என கார்த்திகேயன் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து, ‘மைனா’ நந்தினி மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இதனையடுத்து நந்தினியின் வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில், நடிகை நந்தினி, அவரது தந்தை ராஜேந்திரன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், அந்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இருவரும் கைதாகலாம் என்று தகவல் பரவியது.

மேலும், இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு கேட்டு, மனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்பட்டது. இது குறித்து நந்தினியிடமே பேசினோம்.

“இந்த வழக்கில் முன்ஜாமீன் அவசியம் இல்லை என்று நீதிபதி கூறிவிட்டார். இதில் மேல் முறையீடு எல்லாம் செய்யும் எண்ணம் இல்லை.

எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நான் அமைதியாக இருக்கவே விரும்புகிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஓடி ஒளியவும் விரும்பவில்லை.

உங்கள் முன்னாடி, இங்கேயேதான் இருக்கிறேன். கடந்த மூன்று மாதங்களாகவே எனக்கும், கார்த்திக்குக்கும் இடையில் பிரச்னை இருந்தது எல்லாம் உண்மைதான். சில காரணங்களால் நாங்கள் இரண்டு பேரும், பிரிந்து வாழ்ந்தோம்.

அப்போதெல்லாம், என் மீது எந்தக் குறையும் சொல்லாத கார்த்திக்கின் குடும்பத்தினர், இப்போது என்னைப் பல விதமாகப் பேசுகிறார்கள். நான் கார்த்திக்குடன் வாழும் வரை, அவருடைய அம்மாவை.. நானும் அம்மா என்றுதான் அழைத்தேன்.

ஆனால், அவரே இப்போது எனக்கு எதிராகப் பல அவதூறுகளை பரப்புகிறார். நான் பலருடன் ஊர் சுற்றுவதாகப் பேசி, என்னை அழ வைத்துப் பார்க்கிறார்.

கார்த்திக் இறந்தபோது, அவருடைய முகத்தைப் பார்க்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு, நான் இடுகாட்டில்தான் அவர் முகத்தைப் பார்த்தேன். எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை?

ஒரு பெண் இந்தச் சமூகத்தால் எந்த அளவுக்கு அசிங்கப்பட முடியுமோ, அந்த அளவுக்கு நான் அசிங்கப்பட்டு விட்டேன். இன்னும் என்னிடமிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

அவர்கள் இருக்கும் வீட்டின் அட்வான்ஸ் பணமும், அந்த வீட்டில் உள்ள பொருட்களும் என்னுடையதுதான். நான் உயிராக நினைத்த கார்த்திக்கே இறந்துபோன பிறகு, அந்த பணம், பொருட்கள் எல்லாம் எனக்குத் தேவையே இல்லை.

எனக்கு யார் என்றே தெரியாதவர்கள்கூட, என்னைப் பற்றி தப்புத் தப்பாக பேசுகிறார்கள். நான் அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு போட்டால் என்ன ஆகும். அவர்களுடைய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

நான் நல்லவள்.. நல்லவள் என்று யாரிடமும் நற்சான்றிதழ் வாங்க வேண்டிய நிர்பந்தம் இல்லை. என்னை என் வீட்டில் உள்ளவர்கள், என் நண்பர்கள் நம்புகிறார்கள்.

எனக்கு அதுபோதும். இதுவரை அவர்கள் பேசிய பேச்சுக்கே நான் மனம் தளர்ந்து சோர்ந்துவிட்டேன். கார்த்திக் மன உளைச்சலால்தான் தற்கொலை செய்துகொண்டார்.

எனக்கும் இப்போது அப்படிப் பல மன உளைச்சல்கள். நானும் சாகட்டுமா? நான் செத்தால், எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடுமா? எனக்கு ஏன் இந்தச் சோதனை?

நான் காதலித்த ஒரே பாவத்துகாக, கார்த்திக் குடும்பத்தைப் பற்றி எதுவுமே விசாரிக்காமல், என்னைத் திருமணம் செய்து கொடுத்தார்கள். ஆனால், அந்த வாழ்க்கை ஒரு வருடம் கூட முழுசாக நீடிக்கவில்லை.

கார்த்திக் இறப்புக்குப் பிறகு பல அதிர்ச்சியான தகவல்கள் காதுக்கு வருகின்றன. இத்தனை நாள், நான் ஏமாற்றப்பட்டு வாழ்ந்துகொண்டு வந்திருக்கிறேன் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

அந்த மன உளைச்சலையெல்லாம் தாண்டி, கார்த்திக் குடும்பத்தினர் என்னைப் பற்றி பேசுவதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் பெற்றோர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். இந்தப் பேச்சையெல்லாம் கேட்டு சுக்கு நூறாகி உடைந்து போய்விட்டார்கள்.

என்னுடைய அப்பா-அம்மா, தம்பி மூன்று பேரும் எனக்குக் குழந்தைகள். அந்த மூன்று குழந்தைகளையும் இனி நான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக இன்னும் சில நாட்கள் உயிரோடு இருக்க வேண்டும்.

என் தம்பிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட்டு, என் அப்பா-அம்மாவின் சில ஆசைகளை நிறைவேற்றி முடித்த பிறகு, கடவுள் என்னை அழைத்துக்கொள்ளட்டும். நான் நிம்மதியாகக் கண் மூடுகிறேன்.

என் வீட்டில் உள்ள மூன்று குழந்தைகளுக்காக நான் இன்னும் சில காலம் ஓடியாடி உழைக்க வேண்டியிருக்கிறது. மீடியாவில் இருப்பதால், குடும்பப் பிரச்னைகளை எல்லாம் மூடி மறைத்துக்கொண்டு… பல இடங்களில் கட்டாயமாக சிரிக்க வேண்டி இருக்கிறது.

ஆடிப்பாடி, சிரித்து நடிக்க வேண்டியிருக்கிறது. அதையும் நான் செய்ய வேண்டும். ஆனால், அதற்கு எனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை. ஒரு பெண்ணுக்கு உள்ள சராசரி வலிகளும், வருத்தங்களும் எனக்கும் இருக்கிறது. மன வலி, உடல் வலிகளுடன் போராடுகிறேன்.

என்னைத் தயவு செய்து ஒரு நடிகையாகப் பார்க்காதீர்கள். என்னை ஒரு பெண்ணாகப் பாருங்கள். என் வலிகளும், வருத்தங்களும் உங்களுக்கும் புரியும்” என்று கண்ணீர் மல்கப் பேசினார்.Post a Comment

Protected by WP Anti Spam