ட்ரம்ப்பின் கீழ் வெளிநாட்டுக் கொள்கைகள்..!! (கட்டுரை)

Read Time:12 Minute, 56 Second

downloadஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக, இராஜதந்திர அனுபவங்கள் எவையுமற்ற டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்ட போது, ஐ.அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில், பாரியளவு மாற்றங்கள் ஏற்படுமென்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. முன்னைய ஜனாதிபதிகளைப் போல், இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடவோ அல்லது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவோ அவர் முயல மாட்டார் என்பது, பலரது எதிர்பார்ப்பாக இருந்தது.

இலங்கையிலும் கூட, அந்த எண்ணம் காணப்பட்டது. ட்ரம்ப்பின் வெற்றியை வாழ்த்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, “ஏனைய நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடாத போக்கையுடைய வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்ட ட்ரம்ப்”இன் வெற்றியை வரவேற்பதாகக் கூறியிருந்தார். அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ போன்றோரும், அவ்வாறான நம்பிக்கையையே வெளிப்படுத்தியிருந்தனர்.

அவர்களது நம்பிக்கைகள் தவறானவை என, அப்போதே சிலர் எடுத்துக் கூறியிருந்தாலும், அவர்களின் எதிர்பார்ப்பையும் குறைகூற முடியாது.

உதாரணமாக, சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாட்டை, அப்பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்பது, ஐ.அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ட்ரம்ப்போ, சிரியாவில் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்று தெரிவித்து வந்தார். அத்தோடு, அசாட்டை நீக்குவது குறித்துக் கருத்துத் தெரிவிக்கவும் மறுத்துவந்தார்.

தவிர, ஈராக்கில் ஐ.அமெரிக்கப் படையெடுப்பு நடத்தப்பட்டமை தவறானது எனவும் அவர் கூறினார். அந்தப் படையெடுப்பு நடத்தக்கூடாது என, ஆரம்பத்திலிருந்தே தான் சொன்னதாக, உண்மையற்ற தகவலை அவர் சொன்னாலும் கூட, இப்போதைய நிலையில், அவரது நிலைப்பாடு அது என்றே பலரும் நம்பினர்.

ஆனால், ட்ரம்ப்புக்கு வாக்களித்த அவரது கடும்போக்கு ஆதரவாளர்கள், அவரது நடவடிக்கைகளால் எவ்வளவுக்கு ஏமாற்றமடைந்துள்ளனரோ, அந்தளவுக்கு, அவரது வெளிநாட்டுக் கொள்கைகள் பற்றிய எதிர்பார்ப்புகளும், ஏமாற்றத்தைத் தந்துள்ளன.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் வெளிநாட்டுக் கொள்கைகள் பற்றிய எதிர்வுகூறல்களை வழங்குவதற்கு, அவருடைய அண்மைக்கால சில நடவடிக்கைகளையும் அவற்றின் பின்விளைவுகளையும் ஆராய்வது பொருத்தமானது.

ஐ.அமெரிக்க மக்களில் சுமார் 40 சதவீதமானவர்களால் மாத்திரமே ஆதரவளிக்கப்படும் ஜனாதிபதி ட்ரம்ப், தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட, மிகப் பெரியளவிலான வெளிநாட்டுக் கொள்கை வெளிப்பாடாக, சிரியாவில் மேற்கொண்ட தாக்குதலைக் கூற முடியும்.

பஷார் அல் அசாட் தலைமையிலான அரசாங்கத்தின் படைகள், அப்பாவிப் பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொண்டதாகக் கூறப்படும் இரசாயனக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் விமானத் தளம் மீது, தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலின் பயன்கள் என்ன, அது சந்தித்தது என்ன என்பது தொடர்பான கேள்விகள், இன்னமும் காணப்படுகின்றன. குறிப்பாக, தாக்குதலை மேற்கொள்ளப் போவதாக, ரஷ்யப் படையினருக்கு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ரஷ்யாவால் ஆதரவளிக்கப்படும் சிரியப் படையினருக்கு, அச்செய்தி போய்ச்சேரும் என்பதைக் கூறுவதற்கு, வெற்றிலையில் மை போட்டுப் பார்க்கும் திறன் தேவைப்படாது. மாறாக, சாதாரண பொது அறிவே போதும். எனவே, சிரியப் படையினருக்கு, பெருமளவுக்குச் சேதம் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால், இன்னொரு நாட்டில் படை மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முடிவு என்பது, எமது நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் எதிர்பார்த்த, “வெளிநாடுகளில் மூக்கை நுழைக்காத” வெளிநாட்டுக் கொள்கை கிடையாது. மாறாக, வழக்கமான ஐ.அமெரிக்க நடவடிக்கை தான். இன்னும் சொல்லப் போனால், அரச, அரசாங்கப் படைகள் மீது, நேரடியாகத் தாக்குதல் நடத்துவதென்பது, கடந்த சில ஆண்டுகளில் நடக்காத ஒன்று ஆகும்.

இதில், இந்தத் தாக்குதல் மீதான விமர்சனங்கள், அல் அசாட்டை நியாயப்படுத்தும் வாதங்களாகக் கருதப்படக்கூடாது. அல் அசாட்டை விமர்சிக்கும் அதே நேரத்தில், இன்னொரு நாட்டின் அரசாங்கப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதையும் விமர்சிக்க முடியும். ஆனால், அல் அசாட், உண்மையிலேயே சர்வாதிகாரி போன்று செயற்படுகிறார் என்பதற்காக நடத்தப்படும் தாக்குதல், நாளைய தினம், ஐ.அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைகளோடு ஒத்துக் கொள்ளாத இன்னொரு நாடு மீது நடத்தப்படாது என்பதற்கு, எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ், சிரியா மீது பல்லாயிரக்கணக்கான ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன தானே, எனவே இந்த ஒற்றைத் தாக்குதல் மாத்திரம் எவ்வாறு விசேடமாகும் என்ற கேள்வியெழுப்பப்பட முடியும். ஆனால், ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், அரசாங்கப் படைகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டவை கிடையாது. அதற்காக, அந்தத் தாக்குதல்கள் சரியானவை என்று ஆகிவிடாது. ஆனால் அந்த விடயம், சற்று முரண்பாடு மிகுந்த ஒன்றாகும். அது, தனியாக ஆராயப்பட வேண்டியதாகும்.

அத்தோடு, மிக முக்கியமான அம்சமாக, சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களால், ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு, தனிப்பட்ட ரீதியிலும் நன்மைகள் ஏற்பட்டிருக்க முடியும் என்பது தான்.

2013ஆம் ஆண்டில், சிரியாவில் இரசாயனத் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது, அந்நாடு மீது தாக்குதல் நடத்தப்படுமென, அப்போதைய ஜனாதிபதி ஒபாமா, எச்சரிக்கை விடுத்தார். அப்போது, சாதாரண பிரஜையாக இருந்த ட்ரம்ப், “தனது ஆதரவு குறைவடைவதைத் தொடர்ந்து, இப்போது ஜனாதிபதி ஒபாமா, தாக்குதல் நடத்தப் போகிறார் பாருங்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தலில் ரஷ்யத் தலையீடுகள், மக்களின் ஆதரவு வீழ்ச்சி போன்ற காரணங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், ஒபாமா செய்வதாக அவர் குற்றஞ்சாட்டிய அதே காரணத்துக்காக மேற்கொள்ளப்பட்டிருக்காது என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் கிடையாது.

அதேபோன்று, இங்கு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களின் வகையில், ஜனாதிபதி ட்ரம்ப், வியாபார முதலீடுகளைக் கொண்டுள்ளார் என்ற தகவலும் வெளிப்படுத்தப்பட்டது. இதுவும், அவரது தனிப்பட்ட நலன், இதில் உள்ளடங்கியுள்ளதோ என எண்ண வைக்கிறது.

அடுத்த முக்கியமான விடயம், ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட, பாரிய குண்டுத் தாக்குதல் ஆகும். ஐ.அமெரிக்க வரலாற்றில், அணுகுண்டு அல்லாத மிகப்பெரிய குண்டை, கடந்த வியாழக்கிழமை, ஆப்கானிஸ்தானில் வீசியிருந்தது. அச்சின் மாவட்டத்திலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்களை இலக்குவைத்து, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் தன்மை காரணமாக, “குண்டுகளின் அன்னை” என்று இது அழைக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில், 94 ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக, ஐ.அமெரிக்கா தெரிவித்தாலும், ஒருவர் கூடப் பாதிக்கப்படவில்லை என்று, அக்குழு தெரிவிக்கிறது.

இதில், உயிரிழப்புகள், சேதங்கள் ஆகியன ஒருபக்கமிருக்க, அந்தளவு மிகப்பெரிய குண்டை, ஆப்கானிஸ்தானில் வீசுவதற்கு எடுக்கப்பட்ட முடிவு குறித்து, புருவங்கள் உயர்ந்திருக்கின்றன.

ஈராக், சிரியா போன்ற நாடுகள் போலன்றி, நேரடியான போர், பெருமளவில் இடம்பெறாத ஆப்கானிஸ்தானில், எதற்காக, ஐ.அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அணுவாயுதமல்லாத குண்டை வீச வேண்டுமென்ற கேள்வி, நியாயமானது தான். இதற்கு, ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமிட் கர்ஸாய் முன்வைத்துள்ள விமர்சனங்களைப் பார்ப்பதும் முக்கியமானது.

தனது ஆயுதங்களைச் சோதிப்பதற்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவினர் தனது நாட்டில் இருப்பதை, ஐ.அமெரிக்க இராணுவம் பயன்படுத்துகிறது என்று, கர்ஸாய் குற்றஞ்சாட்டினார். அவரது குற்றச்சாட்டை, இலகுவில் புறந்தள்ளிவிட முடியாது.

ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ஐ.அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகள், இந்த நடவடிக்கைகளை, சந்தேகக் கண்ணுடனேயே பார்க்க வேண்டியிருக்கிறது. எனவே, பலரும் எதிர்பார்த்ததைப் போன்றல்லாது, வழக்கமான – அல்லது வழக்கத்தை விட அதிகளவிலான, மோசமான – தலையீடுகளையே, ஜனாதிபதி ட்ரம்ப்பின் அரசாங்கமும் மேற்கொண்டுள்ளது என்பது வெளிப்படையானது. அத்தோடு, எதிர்காலத்தில், இது மேன்மேலும் தொடருவதற்கான வாய்ப்புகளே உள்ளன. எனவே, அடுத்த 3 ஆண்டுகளும் 9 மாதங்களும், ஐ.அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைகள் என்ற அடிப்படையில், முன்னைய காலங்களை விடப் பெரிதளவு மாற்றங்களை எதிர்பார்ப்பதில், எந்தவிதப் பயன்களும் இல்லை என்று தான் தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என அனைத்திலும் கலக்கும் நிகிஷா பட்டேல்..!!
Next post 3 வாரத்தில் கோழி முட்டைகளை அடைகாத்து பொரிய வைத்த ஆண்: அதிசய சம்பவம்..!!