பொன்சேகாவுக்கு மீண்டும் இராணுவ பொறுப்பா?..!! (கட்டுரை)

Read Time:21 Minute, 35 Second

sarath-fonseka-1நாட்டில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி நடத்திச் செல்லும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அரசாங்கத்தின் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப் போவதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்தை அடுத்து அது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

அமைச்சர் ராஜித தெரிவித்த கருத்தை அரசாங்கத்தின் ஏனைய சில அமைச்சர்களே மறுத்துள்ளனர். அதேவேளை, அமைச்சர் சரத் பொன்சேகாவும் அதனை மறுக்காமல் அதற்கு நெருங்கிய ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மீண்டும் இராணுவத் தளபதி பதவியை அல்லது முப்படைகளினது கூட்டுத் தளபதி பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி, பொன்சேகாவிடம் கோரியதாகவும் போதிய அதிகாரங்களுடன் தமக்கு அந்தப் பொறுப்புகளில் ஒன்றை வழங்குவதாக இருந்தால், தாம் ஏற்றுக் கொள்ளத் தயார் என பொன்சேகா அப்போது கூறியதாகவும் ராஜித சேனாரத்ன, அமைச்சரவை முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

பொன்சேகா விரைவில் அந்தப் பதவிகளில் ஒன்றை ஏற்றுக் கொள்வார் எனவும் அவர் மேலும் கூறியிருந்தார்.
பொன்சேகாவும் அதன் பின்னர், அவரது தொகுதியான களனியில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது, இதனைப் பற்றிக் கருத்து தெரிவித்து இருந்தார். “இராணுவத் தளபதி பதவியை ஏற்றுக் கொள்வீர்களா” என்று ஜனாதிபதி முதலில் கேட்டதாகவும் தாம் சைகை மூலம் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவே, அவ்வாறாயின், “கூட்டுத் தளபதிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்களா” என ஜனாதிபதி மீண்டும் கேட்டதாகவும் அதற்கும் தாம் சைகை மூலம் மறுப்புத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

அதனை அடுத்து, “வேலை நிறுத்தங்கள் போன்றவற்றினால் அத்தியாவசிய சேவைகள் தடைப்படும் நிலை இருப்பதனால், அவ்வாறான நிலைமைகளைக் கையாளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியுமா” என ஜனாதிபதி கேட்டதாகவும் தாம் அதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் பொன்சேகா அந்தக் கூட்டத்தின் போது, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

ஆனால், தொழில் அமைச்சர் டபிள்யூ. டி. ஜே செனவிரத்னவிடம் ஊடகவியலாளர்கள்,அதைப் பற்றிக் கேட்டபோது, அவர் மற்றொரு கருத்தைத் தெரிவித்தார். “தாம் இவ்வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும், தொழில் அமைச்சர் என்ற வகையில் பலர் இந்தச் செய்தியைப் பற்றித் தம்மிடம் கேட்டதாகவும், அதனை அடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட வேறு சில அமைச்சர்களிடம் இதைப் பற்றித் தாம் கேட்டதாகவும் ஜனாதிபதி அதனை ‘சீரியசாக’ கேட்கவில்லை என அவர்கள் தெரிவித்ததாகவும் செனவிரத்ன கூறியிருந்தார்.

அந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டிலிருந்து ஜோன் செனவிரத்ன எழுந்து சென்றதன் பின்னர், அங்கு வந்த அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, “ஜனாதிபதி அதனை விளையாட்டாகக் கேட்கவில்லை” எனவும் ‘சீரியசாகவே’ அவர் பொன்சேகாவிடம் அந்தப் பொறுப்பை வழங்க முற்பட்டதாகவும் அவ்வாறு செய்யத்தான் வேண்டும் எனவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் கடற்றொழில் அமைச்சருமான மஹிந்த அமரவீர, இந்தச் செய்தியைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது, “தொழிற்சங்க போராட்டங்களை அடக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை” எனக் கூறியிருந்தார். அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவும் கேலியாவே சரத் பொன்சேகாவிடம் ஜனாதிபதி மேற்கண்டவாறு கேட்டார் எனக் கூறினார்.

இவற்றை மொத்தமாக எடுத்துப் பார்க்கும் போது, சீரியசாகவோ இல்லையோ ஜனாதிபதி, அமைச்சர் பொன்சேகாவிடம் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதைப் பற்றி கேட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

இதன் காரணமாக இப்போது பல தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
கூட்டு எதிரணி, பொது எதிரணி என்ற பெயர்களில் தம்மை அழைத்துக் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான குழுவினர் இந்தச் செய்தியை அடுத்து, அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் இராணுவ ஆட்சி முறையை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.

உண்மையிலேயே பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது போன்றதோர் பொறுப்பை வழங்குவதாக இருந்தால் அதனையிட்டு மிகவும் அச்சம் கொள்வது பொது எதிரணியே. அதிலும் குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பமே.

அவர்கள்தான், நாட்டில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது அதன் அர்த்தம் அல்ல. பொன்சேகாவுக்கு மஹிந்த செய்த கொடுமைகளின் காரணமாக, பொன்சேகாவுக்குப் பயந்து மஹிந்த வாழ்கிறார்.

பொன்சேகா 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டு மஹிந்தவுக்கு அரசியல் ரீதியாகச் சவால் விட்டதை அடுத்து, மஹிந்த மிகக் கொடூரமான முறையில் அவரைப் பழி வாங்கினார்.

அவர் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவரைச் சிறையில் அடைத்தார். அவரது ஓய்வூதியத்தையும் பதக்கங்களையும் நீதிமன்றத்தின் மூலம் பறித்தார். அவரது பெயரை இராணுவ தளபதி பட்டியலில் இருந்து நீக்கினார்.

பொன்சேகா விடுதலையானதன் பின்னர், மஹிந்தவை அரசியல் ரீதியாக வீழ்த்துவதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்ததை அடுத்து, ஒன்பதாம் திகதி காலை ரணில் விக்கிரமசிங்க, மஹிந்தவை சந்தித்து ஆட்சி அதிகார பரிமாற்றத்தைப் பற்றி கலந்துரையாடியிருந்தார்.

“பொன்சேகா, தமது குடும்பத்தைப் பழி வாங்க மாட்டாரா” என ரணில் விக்கிரமசிங்கவிடம் அப்போது மஹிந்த கேட்டதாக அக்காலத்தில் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. அந்தளவுக்கு பொன்சேகாவுக்கு பயம்.
எனவே, பொன்சேகா மீண்டும் இராணுவ அதிகாரங்களைப் பெறுகிறார் என்று அமைச்சர் ராஜித கூறும்போது, மஹிந்த குடும்பத்தினர் அச்சம் கொள்வது ஆச்சரியப்படத்தக்க விடயம் அல்ல.

குறிப்பாக, பல அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் பின்னால் மஹிந்தவின் ஆட்கள் இருப்பதாகச் செய்திகள் வரும் நிலையில், பொன்சேகாவுக்கு இராணுவ அதிகாரம் வழங்கப்படுவதானது மஹிந்தவின் குடும்பத்துக்கு அது ஆபத்தாகத்தான் தெரியும்.

அண்மைக் காலத்தில் அரச மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மேலும், அவை வேலை நிறுத்தம் செய்வதாக அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. மேலும், பல துறைகளிலும் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக மிரட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததை அடுத்து, அந்தக் குப்பை மேட்டிலிருந்து அகற்றப்பட்ட குப்பைகளையும் நாளாந்தம் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சேரும் குப்பைகளையும் கொட்டுவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் பல இடங்களுக்கு எடுத்துச் சென்றன.

ஆனால், அந்த இடங்களில் குப்பை கொட்டுவதை அவ்வப் பகுதி மக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் அரச நிறுவனங்கள் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்கின. இந்த நிலையிலேயே அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு செய்யும் இதுபோன்ற, எதிர்ப்புகளை சமாளிக்க ஒரு பொறிமுறை இருக்க வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அமைச்சரவைக் கூட்டத்தின் போது கூறியதாகவும் பொன்சேகாவுக்கு அப் பொறுப்பை வழங்க அப்போதே ஜனாதிபதி முன்வந்ததாகவும் செய்திகள் கூறின.

இதுபோன்ற எதிர்ப்புகளைச் சமாளிக்க ஏன் மற்றொருவர் நியமிக்கக் கூடாது? இந்த விடயத்தில் பொன்சேகாவிடம் என்ன விசேட பண்புகள் அல்லது அல்லது திறமைகள் இருக்கின்றன?

அவர் ஒரு திறமையான இராணுவ அதிகாரி. உண்மையிலேயே மஹிந்த ராஜபக்ஷ, புலிகளுக்கு எதிரான போரின் வெற்றிக்கு தாம்தான் காரணம் எனக் கூறினாலும் போர் வெற்றிக்கான பெருமையோ உரிமையோ முதலாவதாக பொன்சேகாவையே சென்றடைய வேண்டும்.

போரின் போது, அரச படைகள் எங்கே பிழை விடுகின்றன என்பதைக் கண்டு பிடித்து, செய்ய வேண்டியவற்றை முன்மொழிந்தவர் பொன்சேகாவே. இதற்கு முன்னர் இருந்த இராணுவத் தளபதிகள் அந்த நிலைமைகளை காணவில்லை.

படைபலம் அதிகரிப்பு, புலனாய்வுத் துறையின் பாரிய வளர்ச்சி, சிறிய குழுக்கள் மூலம் தாக்குதல் மற்றும் ஒரே நேரத்தில் பல முனைகளில் தாக்குதல் போன்ற புதிய போர் உத்திகள் பொன்சேகாவாலேயே வகுக்கப்பட்டன.

உண்மையிலேயே, அவர் அக்காலத்தில் போர் வெற்றிக்காக எதனையும் செய்யும் ஒரு போர் வெறியராகவே இருந்தார். போர் முடிவடைந்தவுடன் ‘ஐடிஎன்’ தொலைக் காட்சியில் தோன்றி, பொன்சேகாவை பாராட்டிய அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய பாதுகாப்பு ஆலோசகரை மேற்கோள் காட்டி, பொன்சேகாவே உலகிலேயே மிகச் சிறந்த இராணுவத் தளபதி என்றார்.

இதுதான் பொன்சேகாவின் திறமை. போர் வெற்றிக்கு அவர் மட்டும்தான் காரணம் என்று, இதனால் அர்த்தம் கொள்ளக் கூடாது. புலிகளின் ஆயுதக் கப்பல்களை கடற்படை அழிக்காவிட்டால், புலிகளின் விமானங்களை விமானப் படை அழித்து, புலிகளின் அசைவுகளை அவ்வப்போது படம் பிடித்து, இராணுவத்துக்கும் கடற்படைக்கும் அனுப்பிக் கொண்டு இருக்காவிட்டால், போர் இன்னமும் நடைபெற்றுக் கொண்டு இருக்கக் கூடும். தரையில், புலிகள் எதிர்பார்க்காத நிலைமைகளை தோற்றுவித்தமையே பொன்சேகாவின் பங்காகும்.

அதற்கு மிகப் பெரும் திறமை இருக்க வேண்டும். அது இல்லாதிருந்ததினாலேயே பொன்சேகாவுக்கு முன்னர் இருந்த இராணுவத் தளபதிகள் திண்டாடினர்.

இப்போது பொன்சேகாவின் இந்தத் திறமையையே வேலை நிறுத்தங்களின்போது, அரசாங்கம் பாவிக்கப் போகிறது போலும். பொன்சேகாவிடம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கும் திறமை இருப்பதாக எவருக்கும் தெரியாது.

தொழிற்சங்கப் போராட்டங்களின்போது, பொன்சேகாவின் திறமையால் என்ன செய்ய முடியும். அப்போராட்டங்களை அடக்கவே முடியும். அதனையா ஜனாதிபதி விரும்புகிறார்?

பதவிக்கு வரும்போது, என்னதான் கூறினாலும் இலங்கையை இது வரைஆட்சி செய்த இரு பிரதான கட்சிகளும் அவற்றுக்கு துணையாக இருந்த இடதுசாரி கட்சிகளும் தொழிற்சங்கப் போராட்டங்களின்போது அடக்குமுறையையே தீர்வாகக் கொண்டு செயற்பட்டன.

அல்லது தொழிற்சங்கத் தலைவர்களை விலை கொடுத்து வாங்கி அப்போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்தனர்.
1953 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரசித்தி பெற்ற நாடளாவிய ஹர்த்தால், 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற 21 அம்சக் கோரிக்கைக்கான போராட்டம், 1980 ஆம் நடைபெற்ற பிரசித்தி பெற்ற ஜூலை பொது வேலை நிறுத்தம் ஆகியவற்றின் தோல்விக்கு அடக்குமுறையும் காட்டிக் கொடுத்தலுமே காரணமாகின. சில தொழிற்சங்கப் போராட்டங்களின் போது, தொழிலாளர்கள் கொல்லப்பட்டும் இருக்கின்றனர்.

1970 களில் பதுளை கீனகலை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமொன்றின் போது, ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். 1970 ஆம் ஆண்டு தோட்டக் காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது, தலவாக்கலை, டெவன் தோட்டத்தின் தொழிலாளியான சிவன் லச்சுமணன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இடம்பெற்றன.

சந்திரிகா குமாரதுங்க, ஜனாதிபதியாக இருக்கும் போது மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும் எரிசக்தி மின்சக்தி அமைச்சராகவும் முன்னாள் இராணுவ அதிகாரியான ஜெனரல் அனுருத்த ரத்வத்தேயே இருந்தார்.

அவர் தமது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இராணுவத்தைப் பாவித்து, தமது அமைச்சின் வேலை நிறுத்தம் செய்த ஊழியர்களை பலாத்காரமாக பிடித்துக் கொண்டு வந்து வேலையில் அமர்த்தினார்.இது இராணுவ ஆட்சி நிலவும் ஒரு நாட்டிலேயே இடம்பெற முடியும்.

2012 ஆம் ஆண்டு அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியில் கை வைக்க முற்பட்டபோது, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்கள் அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மஹிந்தவின் அரசாங்கம் அப்போது துப்பாக்கிப் பிரயோகம் செய்து ரொஷேன் சானக்க என்ற ஊழியரை சுட்டுக் கொன்றது. 2013 ஆம் ஆண்டு மண்ணெண்ணெய் விலையைக் குறைக்குமாறு கோரி சிலாபத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது, அந்தனி என்ற மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எனவே, மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தைப் பாவித்துத் தொழிற்சங்கப் போராட்டங்களை அடக்க மாட்டார் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. அதேவேளை, தொழிற்சங்க போராட்டங்களின் போது மட்டுமல்லாது, சுத்தமான தண்ணீரைக் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய வெலிவேரிய – ரத்துபஸ்வல மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து மூவரைக் கொலை செய்த அரசாங்கத்தின் தலைவரான மஹிந்தவுக்கு அவ்வாறு மைத்திரிபால இராணுவத்தைப் பாவிப்பதை விமர்சிக்க தார்மிக உரிமையும் இல்லை.

ஆயினும் சில தொழிற்சங்கப் போராட்டங்களை அனுமதிக்க முடியாதுதான். சில தொழிற்சங்கப் போராட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டவையாகும். ‘சைட்டம்’ தனியார் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போதும் மஹிந்த அக்கல்லூரி மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி, அதற்கு கடன் கொடுத்து உதவும் போதும்; மஹிந்தவின் காலத்தில் கொத்தலாவலை தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிக்கும் போதும் மௌனமாக இருந்துவிட்டு, இப்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் எனப் பகிரங்கமாக கூறிக் கொண்டு, தொடர் போராட்டங்களை நடத்தும் போது, அது அரசியல் நோக்கம் கொண்ட போராட்டம் அல்ல எனக் கூற முடியாது.

எனினும் அரசாங்கம், இராணுவப் பலத்தால் தொழிற்சங்கப் போராட்டங்களை அடக்க முற்படுவதாக இருந்தால் அதனை அனுமதிக்கவும் முடியாது. அது நாளை தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட சகல தொழிலாளர்களையும் பாதிக்கும். அதேவேளை, அது சர்வதேச ரீதியில் அரசாங்கத்தின் நற்பெயரையும் கெடுத்துவிடும். மஹிந்தவின் ஆட்சி கவிழ அவரது அடக்குமுறைக் கொள்கையும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். இது அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் அவப் பெயரைத் தேடித் தரும். .

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெருப்பு கோளமாக மாறிய விமானம்: விமான விபத்து நடந்ததெப்படி?..!! (வீடியோ)
Next post 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார் ‘மாட்டுக்கார வேலன்’..!!