முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கோரி நிற்கும் கடப்பாடு..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 39 Second

IMG_8096முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக நாளை காலை (மே 18) மீண்டும் கூடப் போகின்றோம்.
மௌன வணக்கம் செலுத்தி, அஞ்சலிச் சுடரை ஏற்றி, நினைவு உரைகளை நிகழ்த்திவிட்டுக் கலைந்து செல்வதுடன் இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முடித்துக் கொள்ளப்போகிறோம்(?).

அப்படியானால், முள்ளிவாய்க்காலில் நாம் மேற்கொள்ள வேண்டிய கூட்டுச் சத்தியத்துக்கான கடப்பாடு எங்கு போனது? முள்ளிவாய்க்கால் என்பது நினைவேந்தலுக்கான களம் மட்டும்தானா? அதனை மீறிய கூட்டுப் பொறுப்பையும் நீதி கோரலுக்கான தார்மீகத்தையும் அது கொண்டிருக்கவில்லையா? இப்படி ஏராளமான கேள்விகளினால் தொக்கி நிற்கிறது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலம்.

கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு, சில மணி நேரங்களுக்குள் முடிந்து போனது. அரசியல் தலைவர்கள் பெருமெடுப்பில் வாகனங்களில் வந்தார்கள்; அஞ்சலிச் சுடரேற்றினார்கள்; உணர்ச்சி பொங்க உரையாற்றினார்கள்; கண நேரத்தில் கலைந்து போனார்கள்.

அத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முடிந்து போனது. அங்கு பொதுமக்களை ஒருங்கிணைத்து, அவர்களின் கூட்டுணர்வுகளைப் பிரதிபலிக்கச் செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அதுவொரு தேர்தல் கால அரசியல் நிகழ்வு போல நடந்து முடிந்தது.

மாண்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திப் பிரார்த்திப்பது என்பது அனைவரதும் அடிப்படை உரிமை. அதுவும், பல்லாயிரக்கணக்கான உயிர்களைத் திட்டமிட்டு பலிகொண்ட பெரும் அயோக்கியத்தனத்துக்கு எதிராகக் கூட்டுணர்வோடு ஒருங்கிணைவதும் பெரும் கடமை. ஆனால், இவற்றோடு ஒட்டிக் கொண்டு வரும் தார்மீகம் என்பது மாண்டுவிட்ட உறவுகளுக்கு நாங்கள் செய்ய வேண்டியவை. அவை பற்றிய உரையாடலை எங்கிருந்து, எப்படி ஆரம்பிப்பது என்பது தொடர்பில் கடந்த எட்டு ஆண்டுகளாக அல்லாடிக் கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்திலும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் முள்ளிவாய்க்கால் காயங்களைப் பற்றி நிறையவே பேசுகின்றோம்; அழுகின்றோம்; அஞ்சலிக்கின்றோம்.

ஆனால், முள்ளிவாய்க்காலில் இருந்து எழுந்து வருதல் பற்றிச் சிந்தித்திருக்கின்றோமா என்றால் அது ஏமாற்றமான பதில்களை முகத்தில் இறைக்கின்றது.

ஒப்பாரிகள் வலி நீக்கிகள்; அதனை மறுக்க முடியாது. ஆனால், கடப்பாடுகளை மறந்துவிட்டு தொடர்ந்தும் ஒப்பாரிகளை வைப்பது மாத்திரம் தான் எமது வேலையா? அப்படியானால், தொடர்ந்தும் படுகுழிகளுக்குள் படுத்திருப்பதைப் பற்றித் தான் சிந்திக்கப் போகின்றோமா?

இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகின்றன. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்கு நெருங்கிய காலம். மூன்று தசாப்த காலமாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் மக்கள், அதன் பாதிப்புகளில் இருந்து குறுகிய காலத்தில் வெளியேறிவிட முடியாது என்பது உண்மை. ஆனால், எட்டு ஆண்டுகள் என்பது குறுகிய காலம் இல்லை. ஆனால், அந்தக் காலப்பகுதியை மிகமிகக் குறுகிய காலம் மாதிரியே நாம் நம்பிக் கொண்டிருக்கின்றோம். அதுதான் இங்குள்ள பெரும் பிரச்சினை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கூட்டுணர்வோடு செய்வதற்கே நாங்கள் அல்லாட வேண்டியிருக்கின்றது. வடக்கு மாகாண சபை ஒரு பக்கமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்னொரு பக்கமும் சிவில் சமூக- சமய அமைப்புகள் சில இன்னொரு பக்கமுமாக நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றன.

நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான தார்மீகம் இந்த அமைப்புகள் அனைத்துக்கும் உண்டு. ஆனால், தனித் தனியாகப் பிரிந்து நிற்பதனூடாக வெளிப்படுத்தப்படும் செய்தி என்ன? கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு தேர்தல் கால அரசியல் நிகழ்வு மாதிரியே நடத்தப்பட்டது என்கிற குற்றச்சாட்டுகளை யாரும் மறுக்க முடியாது.

ஆனால், அதனைத் தொடர அனுமதிப்பதால், யாருக்கு என்ன இலாபம்? பெரும் கூட்டுணர்வு ஒன்று சேர்க்கப்பட வேண்டியது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் களம்.

ஆனால், அந்தக் களம் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்தாளப்பட்டு, கூட்டுணர்வின் அதிர்வு இல்லாமல் மலினப்படுத்தப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, வடக்கு மாகாண சபை, சிவில் சமூக அமைப்புகள், மத நிறுவனங்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசியத் தளத்தின் முக்கிய தரப்புகள் எல்லாம் ஒருமித்துச் சங்கமிக்க வேண்டிய கனதியை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கோரி நிற்கின்றது.

இதை தேர்தல் அரசியல் நிகழ்வாக வடிவமைப்பதிலிருந்தும் தங்களுக்கிடையிலான போட்டி மனநிலையைத் தள்ளிவிட்டு ஒருங்கிணைவதற்குமான கடப்பாட்டை வலியுறுத்தி நிற்கின்றது.

இரா.சம்பந்தனோ, சி.வி.விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ இன்னும் யார் யாரோ, அந்த இடத்தை நோக்கி எப்போதோ நகர்ந்து இருக்க வேண்டும்.

ஆனால், இம்முறையும் தனித்தும் பிரிந்தும் நின்று அஞ்சலி செலுத்தப் போகின்றோம்; ஒருவரையொருவர் குறை கூறிக் கலையப் போகின்றோம். எப்போதுமே கூட்டுணர்வின் சக்தி வழங்கும் அதிர்வு முக்கியமானது. அது, தோல்வி மனநிலையிலிருக்கும் தமிழ்த் தேசியத் தளத்துக்கு மிகவும் அவசியமானது. அதனை, முள்ளிவாய்க்காலில் இருந்தும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

போர் வெற்றிகளோ, அது வடிவமைக்கும் வெற்றி வாதமோ நீண்டு நிலைப்பதில்லை. ஆனால், கூட்டுணர்வுடன் கூடிய நினைவேந்தல்கள் தலைமுறைகள் தாண்டி நீடித்து நிலைக்கக் கூடியவை. அவை, சார்ந்த சமூகங்களுக்கான கடப்பாடுகளை மீள மீள வலியுறுத்தி வருவன. அதனைத் தக்க வைத்தல் என்பதே வரலாற்றில் வெற்றியை உறுதி செய்யும்.

ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது கடந்த காலங்களில் மே மாதம் முழுவதுமாக இருந்து சில வருடங்களாக ஒரு வாரத்துக்குள் (மே 12- 18) சுருங்கிவிட்டது. இதனைப் பெரியளவில் தப்பும் சொல்ல முடியாது. 30 நாட்களில் மெல்ல மெல்லச் சேரும் அஞ்சலி செலுத்துவதற்கான கூட்டுணர்வை, ஏழு நாட்களுக்குள் ஒருங்கிணைக்கும் போது, அதன் கனதி அதிகரிக்கும்.

ஆனால், அதனைச் செயற்படுத்தும் போது, மிகவும் திட்டமிட்ட ரீதியிலும் சித்தாந்த ரீதியிலும் தெளிவாக வடிவமைக்க வேண்டும். சில இடங்களில் அஞ்சலிச் சுடர்களை ஏற்றுவதோடு, நினைவேந்தல் வாரம் என்கிற அடையாளம் பூரணமாகிவிடாது.

இம்முறையும் செம்மணியில் ஆரம்பித்து, பல இடங்களிலும் நினைவுச் சுடர்கள் ஏற்றப்படுகின்றன. ஆனால், அந்தச் சுடர்களை ஏற்றும்போது, அங்கு கூடுபவர்களின் எண்ணிக்கை நூறையாவது தொட்டிருக்கின்றதா என்கிற கேள்வி எழுகின்றது.

அதிக தருணங்களில் சுடரை ஏற்றுபவர்கள் பத்துக்கும் குறைவானவர்களாக இருக்கின்றார்கள். அதைப் படம்பிடிக்கும் ஊடகவியலாளர்களின் தொகை அதையும் தாண்டியது.

இந்த நிலைக்கு என்ன காரணம்? ஏன் மக்களை அழைத்துவர முடியவில்லை? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிக்கப் போகின்றோம் என்று ஊடகங்களில் அறிவிப்பதோடு விடயங்கள் அப்படியே விடப்படுகின்றன. மாறாக, உள்ளூர் அமைப்புகளுக்கு ஊடாகவோ, அமைப்பு ரீதியிலோ திட்டமிட்ட ஒருங்கிணைப்பும் தெளிவு படுத்தல்களும் சாதாரண மக்கள் மத்தியில் செய்யப்படுவதில்லை.

எப்போதுமே ஊடகங்களினூடு மாத்திரம் அரசியலையும் போராட்டங்களையும் நடத்திவிட முடியும் என்று சில தரப்புகள் நம்பிக் கொண்டிருக்கின்றன. அது, நம்பிக்கையா அல்லது களத்தில் இறங்கி வேலை செய்வதற்கான ஆர்வமின்மையா தெரியவில்லை. அதன் பிரதிபலிப்புகளையே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்துக் காட்சிகள் முன்னிறுத்துகின்றன.

ஒரு பக்கம் ‘பேஸ்புக்’கில் சண்டை பிடித்துக் கொண்டும், உணர்ச்சி பொங்க எழுதிக் கொண்டும் இருக்கிறோம். இன்னொரு பக்கம், பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக பத்திகள் எழுதப்படுகின்றன.

ஆனால், இவையெல்லாம் மக்களை நோக்கிச் சென்றிருக்கின்றதா என்றால், இல்லை. உரையாடல்கள் என்பது சமூக முன்னேற்றத்துக்கு அடிப்படையானவை. ஆனால், அந்த உரையாடல்களில், பயனுள்ள பக்கங்கள் செயல் வடிவம் பெறும் போதுதான், அதன் பயனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், தமிழ்த் தேசியச் சூழல் தற்போது பேசிக் கொள்ளும் அளவுக்கு செயல் வடிவங்களின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றதா என்றால் இல்லை. அதன் விளைவுகளை நாம் தொடர்ந்தும் எதிர்கொண்டிருக்கின்றோம். அதையே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்து நாட்களும் எம்முன்னால் நிறுத்துகின்றன.

இன்னொரு பக்கம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு சடங்காக மாத்திரம் பார்த்துக் கொள்ளும் மனநிலை புலம்பெயர் தேசத்தில் தொற்றிக் கொண்டிருக்கின்றது.

நாம் சென்று அஞ்சலி செலுத்துவதோடு விடயங்கள் முடிந்துவிட்டன. அடுத்து மாவீரர் நாளுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவோம். தமிழ்த் தேசியப் போராட்டக் கணங்கள், அவ்வளவு இலகுவான விடயங்களாக மாறிவிட்டனவா?
அதன் எதிர்காலக் கடப்பாடுகள் பற்றிய தீர்க்கமான முடிவுகளை நோக்கி ஏன் இன்னமும் புலம்பெயர் சமூகம் நகரவில்லை. ஒப்பீட்டளவில் இந்த இடத்தில் தாயகத்திலுள்ள மக்களுக்கு உணர்வுபூர்வமாகப் பெரும் ஆறுதலைப் புலம்பெயர் சமூகம் வழங்கியிருக்க வேண்டும்.

இங்கு ஆறுதல் என்பது வலிகளைப் பகர்ந்து கொள்வது மாத்திரமல்ல. தாயகத்திலுள்ள மக்கள் எதிர்கொண்டு நிற்கும் வாழ்தலுக்கான சவால்களையும் பகர்ந்து கொள்வதாகும்.

முள்ளிவாய்க்காலில் நாம் செய்ய வேண்டிய சத்தியம் மிக முக்கியமானது. அதற்கு எங்களை நாங்கள் சீக்கிரமாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், காலம் எங்களை மன்னிக்காது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படம் எடுக்கும் போது ரஜினி காலில் விழ ரசிகர்களுக்கு தடை..!!
Next post ரஜினிகாந்த் மண்டையில் ஒன்றும் இல்லை: மார்க்கண்டேய கட்ஜு விளாசல்..!!