கிழக்குப் பல்கலைக்கழகத்தின்மீது அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா?..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 40 Second

image_ced6d3a24eபல்கலைக்கழகம் என்பது அதன் பெயருக்குப் பொருத்தமானதாகவே இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. கற்கைநெறிகளைச் சுதந்திரமாக அனுபவித்துக் கற்கின்ற ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனம் என்பதும் இதன் ஒரு கருத்தாகும்.

ஆனால், பகடிவதை என்பது முக்கியமானதொன்றாகப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் மனப்பிறழ்வுகள், அனர்த்தங்கள், பின்னடைவுகள் மிகவும் மோசமானது.

அதனால்தான், தற்போது பல்கலைக்கழகங்களில் பகடிவதை தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதில் ஈடுபடுபவர்களைப் பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கிவிடுவதுடன், அவர்கள் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்க முடியாத நிலைமையும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பகடிவதையில் மாணவர்கள் ஈடுபடவே செய்கின்றனர். கட்டுப்பாடுகள் எதுவுமில்லாத கட்டாக்காலிகளாகக் கல்வியைக் கற்றுவிட்டுப் போகலாம் என்ற நிலைப்பாடு அல்லது அதற்கான சுதந்திரம் தமக்கு வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் உருவாகி இருக்கிறது.

கிழக்குப் பல்கலைக்கழகம் இதற்கு நல்லதொரு உதாரணமாகும். பல்கலைக்கழகப் பாரம்பரியத்தில், மாணவர்கள் குற்றம் செய்தால் அவருக்கு இன்னவகையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது நிர்வாகம் சார்ந்த விதிகளாகும்.

இந்த ஒழுக்க விதிகளை மாணவர்கள் கடைப்பிடிக்கா விட்டால், அதற்கு எவ்வாறான நடவடிக்கையைப் பல்கலைக்கழக நிருவாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதும் ஏற்புடைமை செய்யப்பட்டுள்ளது.

தமக்கு வழக்கப்பட்ட தண்டனை அல்லது வரைமுறை மாற்றப்பட வேண்டும் என்று கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னால், மாணவர் குழு ஒன்று போராட்டங்களை நடத்தி வருகின்றது.

ஆனால், இற்றைவரைக்கும் அவர்கள் இந்தப் போராட்டத்துக்குச் சொல்லும் காரணம், “எமது பல்கலைக்கழகத்தில் சி.சி.டி.வி கமெரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. எமது பட்டப்படிப்பும் சரியான நேரத்தில் நிறைவடைவதில்லை; இழுத்தடிக்கப்படுகின்றது. இதுவரைக்கும், எமது விடுதியிலுள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்து தரப்படவில்லை; விடுதி பல்கலைக்கழகத்துக்குள்ளே இருக்கும் போது, எம்மை வெளியில் விட்டிருக்கின்றார்கள்; எமக்கு பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசிக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது. அதற்காகவே நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்கின்றோம்” என்பதாகவே உள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடைமுறைகளுடன் மாணவர்கள் ஒத்துழைப்புடனும் சுந்திரமாகவும் இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாடு முற்றாக அற்றுப் போயுள்ளது.

பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி மற்றும் மகாபொல புலமைப்பரிசில் போன்ற பிரச்சினைகள், பிரதான பிரச்சினை தான். மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்நிற்கும் மாணவர்களுக்கு எந்தவித நியாயமுமற்ற முறையில் வகுப்புத் தடைகள் வழங்கப்படுவது, மாணவர்கள் மத்தியில் போராட்டத்துக்கான நியாயப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோன்று, மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியைப் பூர்த்திசெய்து பட்டத்தாரியாக வெளியேறுவதற்குப் பொதுவாக நான்கு வருடங்கள் ஆகும். ஆனால், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறுவதற்கு ஆறு முதல் ஏழு வருடங்கள் செல்வதாக மாணவர்கள் குறைப்படுவதில் நியாயம் உண்டு.

பல்கலைக்கழகம் என்பது இழுத்து மூடுவதற்கும் போராட்டங்கள் நடத்துவதற்குமானதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனாலும், நமது வரிப்பணம் வீணாய்ப்போகிறது என்று யாரும் கவலைப்பட்டதாயில்லை.

ஜனவரி இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள விடுதி நடைமுறை அறிவித்தல் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

பல்கலைக்கழகத்தின் நிருவாகம் அறிவிக்கும் எந்த ஒரு தீர்வையும் மாணவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு வெளிப்படையாக எந்தக் காரணமும் இல்லையாயினும், இறுதியில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உப தலைவர்கள் அடங்கிய குழுவினர் வந்தாறுமூலைக்கு வருகை தந்து, அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி வழங்குங்கள் என்று பல்கலைக்கழக நிருவாகத்துக்கு கட்டளையிட்டனர்.

நாட்டிலுள்ள ஏனைய, எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லாத நடைமுறை ஒன்றை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிக்கும் வரையில், பொலிஸாரைப் பயன்படுத்தியும் கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்தினரால் தீர்வுகாண முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பது வெளிப்படையாக யாராலும் சொல்லப்படவில்லை.

அதேபோன்று, தற்போது மாணவர்களுக்கு எதிராக 20 வரையான ஒழுக்காற்றுப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றபோதும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட மாணவர்கள், கடந்த பல வாரங்களாகப் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

ஒழுங்காற்று நடவடிக்கைகளின் நிமித்தம், பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள மாணவர்கள், மாணவர் விடுதிகளில் தங்கியுள்ளனர். அவர்களை வெளியேறும்படி, சிரேஷ்ட விரிவுரையாளர்கள் கட்டளையிட்டும் அதற்கு அந்த மாணவர்கள் கட்டுப்படவில்லை அல்லது செவிமடுக்கவில்லை. கட்டுப்படாத மாணவர்களுக்கு ஆதரவாக, ஏனைய மாணவர்களில் சிலரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

ஆனால், பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிரான போராட்டத்தை நடாத்தும் மாணவர்கள், “உபவேந்தர், தனது சொந்தச் செலவுகளுக்காகப் பல்கலைக்கழகத்திலுள்ள பணத்தைப் பாவிக்கின்றார். அதாவது எமக்குக் கிடைக்க வேண்டிய ‘மாபொல’ புலமைப்பரிசில் சரியான முறையில் கிடைக்கப்பெற வேண்டும்” என்று தெரிவித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருந்த மாணவர்கள், ஜூன் மாதம் இரண்டாவது, வாரத்திலிருந்து பிரதான வாயில் முகப்புக்கு அருகில், வீதியோரமாகக் கூடாரம், அமைத்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் நிர்வாகத்துக்கு எதிராகப் போராடுவதால், பட்டம் பெற்று வௌியேறும்காலம் பின் தள்ளிப்போகிறது என்ற குற்றச்சாட்டுக்கு, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களாகிய தாமும் ஒரு காரணம் என்பதை உணராமல் இருக்கின்றார்கள்.

இத்தகைய போராட்டங்களினால்தான், தாங்கள் இந்தப் பல்கலைக்கழகத்துக்குள்ளேயே ஆறு வருடங்களுக்கு மேல் இருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது என்பதையெல்லாம் சிந்திப்பதற்கு ஏன் யாரும் தயாரில்லை?

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நிலைமையைக் கேள்விக்குட்படுத்தும் அல்லது குற்றம்சாட்டும் மாணவர்கள், தமது கல்வியில் விரிவுரையாளர்களுக்கோ நிர்வாகத்துக்கோ அக்கறையில்லை என்ற குற்றச்சாட்டின் யதார்த்தம் என்ன என்பது ஆராயப்பட வேண்டியதாகும்.

ஒவ்வொரு மாணவரும் வாழ்க்கையை வெற்றி கொள்வதற்காகவே பல்கலைக்கழகத்துக்குள் காலடி எடுத்து வைக்கின்றார். ஆனால், வீணாகவும் மேலதிகமாகவும் பல வருடங்கள் கழிந்து போகும் போதும், தங்களுடைய பட்டங்களை நிறைவு செய்ய முடியாத நிலை, மாணவர்களுக்கு ஏன் ஏற்படுகிறது என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது.

பல்கலைக்கழகத்துக்குள் அனைவருக்கும் விடுதி வழங்கப்படவேண்டும் என்பதும் நிர்வாகத்தின் நடவடிக்கைகளைப் பிழை என்று சொல்வதும் இவற்றுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டுத் தங்களது காலத்தைத் தாங்களே வீணடிக்கிறார்கள் என்பதும் ஒருபக்க வாதமாக இருக்கிறது.

அத்துடன், மாணவர்கள் போராட்டங்களை நடத்துவதனால் அனைத்து மாணவர்களினதும் கல்வியும் பாதிக்கப்படுகின்றது என்பது முக்கியமானதும் யதார்த்தபூர்வமானதுமானதுமாகும்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்கான நடவடிக்கைகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அப்போதிலிருந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள், இப்போதும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்பது மாணவர்களது கருத்தாக இருந்தாலும், மாணவர்களுக்குச் சுத்தமான தண்ணீர் கூடக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும்போது, சி.சி.டி.வி கமெரா போன்ற தேவையற்ற செலவுகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படுவது, சிறந்த நிர்வாகமொன்றின் செயற்பாடாக அமையுமா என்று கருத்தும் மாணவர்கள் பக்கத்திலிருந்து வெளிப்படுத்தப்படுகின்றது.

பகடிவதைகள் என்ற வன்முறைகள் இடம்பெறும்போது, 119 இலக்கத்துக்கு யார் வேண்டுமானாலும் முறையிடக்கூடிய நிலை காணப்படுகையில், மாணவர்கள் செய்யும் அட்டகாசத்தைப் பொதுமக்களும் பல்கலைக்கழக நலன் விரும்பிகளும் கண்டும் காணாதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்களின் இத்தகைய போக்கு, மாணவர்களின் கட்டுக்கடங்காத் தனத்துக்குக் காரணமாகும். இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டுமாக இருந்தால், தங்களது வரிப்பணத்தில் நடாத்தப்படும் ஓர் உயர்கல்வி நிறுவனத்தில் நடைபெறுகின்ற பிரச்சினைகள் குறித்து, மக்கள் கேள்விகேட்கும் நிலையொன்று தேவை.

38 வருட வரலாற்றைக் கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வன்முறைக் கலாசாரங்கள் குறிப்பிட்ட காலங்களுக்கு முன்பிருந்தே தோற்றம் பெற்றன. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு, ஆரம்பம் முதலே விரிவுரையாளராக இருந்து, கடந்த வருடத்தில் உபவேந்தராகப் பதவியேற்ற கலாநிதி ரி.ஜெயசிங்கம் அவர்கள்தான் இறுக்கமானதும் தீர்க்கமானதுமான தீர்வை முன்வைக்க வேண்டும்.

ஆனாலும், அரசியல் அழுத்தங்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குள் பிரயோகிக்கப்படுகிறதா அல்லது அப்படிப் பிரயோகிக்கப்படலாம் என்ற அச்சங்கள் இருக்கின்றனவா என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.

எப்படியிருந்தாலும் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருப்பதானது சிறப்பானதொரு முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது. அமைதியான, ஆரோக்கியமான உயர்மட்ட பெறுபேறுகளை வெளிப்படுத்தி, சமூகத்தை வழிப்படுத்தும் பல்கலைக்கழகமாக கிழக்குப் பல்கலைக்கழகம் எப்போது மலரும்?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பார்வையற்ற மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ‘மைம்’ கோபி..!!
Next post ‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி..!!