கவர்ச்சி உடை அழகிப்போட்டியில் பாகிஸ்தான் பெண் சாதனை
கவர்ச்சி உடை அழகிப்போட்டியில் பாகிஸ்தான் பெண் பட்டம் வென்று சாதனை படைத்தார். அழகிகள் `பிகினி’ என்று அழைக்கப்படும் கவர்ச்சி உடை அணிந்து ஒய்யாரமாக வலம் வரும் அழகிப்போட்டி சீனாவில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 18 வயது முதல் 25 வயது நிரம்பிய 47 அழகிகள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த அழகிப்போட்டியில் இந்தியாவில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை.
பாகிஸ்தான் பெண் பட்டம்
இதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 22 வயதான மரியா மோடென் என்பவர் அழகி பட்டத்தை வென்றார். அவருக்கு “முத்து ராணி” (குயின் பெர்ல்) என்ற பட்டமும், ரூ.2 1/2 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஒரு பெண், `பிகினி’ உடை அழகிப்போட்டியில் வென்று இருப்பது இதுவே முதல் முறையாகும்.
மரியா தற்போது அமெரிக்காவில் குடியிருந்து வந்தாலும் அவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பாகிஸ்தானில் இருக்கும் காராச்சி ஆகும். கடந்த 8 ஆண்டுக்கு முன்பு தான் அவரது குடும்பம் அமெரிக்கா சென்றது. டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் அவர் ஓட்டல் நிர்வாகம் பற்றி படிப்பு படித்து வருகிறார்.
மகிழ்ச்சி அடைகிறேன்
அழகிப்போட்டியில் வென்றது பற்றி சீனா பத்திரிகைக்கு மரியா பேட்டி அளித்த போது, “இந்த பிகினி அழகிப்போட்டியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் முதல் பெண் நான் தான். நான் இஸ்லாமிய நாட்டை சேர்ந்தவள். இது போன்ற போட்டிகளில் பெண்கள் பங்கேற்க கூடாது என்ற எண்ணம் தற்போது குறைந்து வருகிறது. எனது குடும்பத்தினர் எனக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். ஆகவே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்தார்.
மும்பையில்
மரியா மோடென் தற்போது ஒரு பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி கொடுப்பதற்காக மும்பைக்கு வந்து இருக்கிறார். இதற்கு முன்பு கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற அழகி போட்டி ஒன்றில் மரியாவுக்கு “சுற்றுலா ராணி” என்ற பட்டம் கிடைத்தது. இப்போது அவர் 2-வது பட்டமாக `முத்து ராணி’யாக தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.