நாடெங்கிலும் இன அழிப்பு..!! (கட்டுரை)

Read Time:18 Minute, 17 Second

image_eae3fec3c21983 ஜூலை 25ஆம் திகதி, கொழும்பை மையமாகக் கொண்டு, தமிழ் மக்கள் மீதான இன அழிப்புத் தாக்குதல்கள் நடந்தேறின. கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மேல்மாகாணத்தின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்குதலுக்குள்ளானதோடு, தமிழ் மக்களின் சொத்துகளும் உடைமைகளும் தீக்கிரையாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டன.

கொழும்பைத் தாண்டி காலி, கேகாலை, திருகோணமலை, வவுனியா ஆகிய நகரங்களிலும் தமிழ் மக்களின் சொத்துகளுக்கும் உடைமைகளுக்கும் எரியூட்டும் தாக்குதல்கள் நடந்தேறின.

அத்துடன், தமிழ் மக்களின் சொத்துகளைச் சூறையாடும் சம்பவங்களும் நடந்தன. இத்தனை நடந்தும் இலங்கையின் ‘அதிமேதகு’ ஜனாதிபதியும் இலங்கை அரசாங்கமும் ‘கள்ள மௌனம்’ சாதித்துக் கொண்டுதான் இருந்தனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதேயன்றி, அது வினைத்திறனாகச் செயற்படுத்தப்பட்டு, இந்த இன அழிப்பு வன்கொடுமையைக் கட்டுக்குள் கொண்டுவரவில்லை.

முழுமையாக அரச இயந்திரத்தின் பாதுகாப்பு வேலிகள் நிறைந்த வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கூடத் தமிழ்க் கைதிகளுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை, 35 தமிழ்க்கைதிகள், இன அழிப்புத் தாக்குதலில் பலியெடுக்கப்பட்டார்கள்.

ஜூலை 26 ஆம் திகதி, கொழும்பில் முன்னைய நாளைவிடக் கொஞ்சம் அமைதியாகவே விடிந்தது. ஆனால், மத்திய மலைநாட்டின் தலைநகர் என்றறியப்படும் கண்டி நகரிலும் நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட மலையகத்தின் ஏனைய சில பகுதிகளிலும் நிலைமை மோசமடையத் தொடங்கியிருந்தது.

மதியமளவில், கண்டி நகரின் பல பகுதிகளிலும் தமிழருக்குச் சொந்தமான வணிக, வர்த்தக நிலையங்கள் மீது, இன அழிப்புத் தாக்குதல்கள் நடத்தப்படத் தொடங்கின.

பேராதனை வீதி, காசில் வீதி, கொழும்பு வீதி, திருகோணமலை வீதி எனக் கண்டி நகரின் முக்கிய வீதிகள் எங்கிலுமிருந்த தமிழருக்குச் சொந்தமான வணிக, வர்த்தக ஸ்தாபனங்கள் மீது இனவெறிக் கும்பல் எரிபொருள் வீசி, எரியூட்டியழித்தது.

கண்டியில் தமது இன அழிப்புத் தாக்குதல்களை நடத்திய இந்தக் கும்பல், கண்டி நகரிலிருந்து அடுத்து கம்பளை நகருக்கு நகர்ந்து அங்கும் தமது கோர இன அழிப்புத் தாக்குதல்களை நடத்தியது. 26ஆம் திகதி மாலையில், கண்டியிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

மலையகத்தைப் பொறுத்தவரையில், அங்கு வாழ்ந்த தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதியாக இருந்தவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான். இவர் ஜே.ஆருக்கு ஆதரவளித்ததோடு, ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்.

‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் கோரமுகம் மலையகத்துக்கும் பரவியபோது, ஜூலை 26 ஆம் திகதி, அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஜனாதிபதி ஜே.ஆரைக் காண ஜனாதிபதி மாளிகைக்கு விரைந்தார்.

ஜே.ஆரைச் சந்தித்த தொண்டமான், உடனடியாக அவசரகாலநிலையைப் பிரகடனப் படுத்த வேண்டும் என்று வேண்டினார். ஆனால், ஜே.ஆர் தயக்கம் காட்டினார். “அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டாலும், படைகள் என்னுடைய உத்தரவுக்குப் பணிவார்களா”? என்று ஜே.ஆர் தனது தயக்கத்தை வெளிப்படுத்தியதாக சௌமியமூர்த்தி தொண்டமான் பற்றித் தன்னுடைய நூலில் ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.

மலையகத்தில் நடந்த தாக்குதல்கள் பற்றித் தனது நூலொன்றில் கருத்துரைக்கும் ரஜீவ விஜேசிங்ஹ, ‘கொழும்பிலே தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காது, பிரிவினைக்குச் சோரம் போகிறார்கள் என்று அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சாக்குச் சொன்னார்கள்.

ஆனால், மலையகத்தின் பிரதிநிதியான சௌமியமூர்த்தி தொண்டமான், கடந்த ஐந்து வருடங்களாக, இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக, அரசாங்கத்தோடுதான் இருந்து வருகிறார். இன்று அவருடைய மக்களின் நிலையும்தான் மோசமாகியிருக்கிறது. இது அரசாங்க ஆதரவாளர்களின் மேற்கூறிய தர்க்கத்தைத் தகர்க்கிறது’ என்று பதிவு செய்கிறார்.

பற்றியெரிந்த திருகோணமலை

இதேவேளையில், 26ஆம் திகதி இரவு, திருகோணமலை நகரின் நிலைமை இன்னும் மோசமாகியது. தமது முகாமிலிருந்து வெளியே வந்து, திருகோணமலை நகருக்குள் நுழைந்த கடற்படையைச் சேர்ந்த 80 சிப்பாய்கள், டொக்யாட் வீதி, பிரதான வீதி, மத்திய வீதி, வடக்கு கடற்கரை வீதி மற்றும் திருஞானசம்பந்தன் வீதி உட்பட்ட பல இடங்களிலுமுள்ள தமிழ் மக்களுக்கு, சொந்தமான கட்டடங்கள், சொத்துகள் மற்றும் உடைமைகள் மீது, இன அழிப்புத் தாக்குதல் நடத்தி, அவற்றை எரியூட்டி அழித்தனர்.

இந்தக் கடற்படைச் சிப்பாய்களால் ஏறத்தாழ 170 எரியூட்டல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றோடு இவர்கள் நின்றுவிடவில்லை. திருகோணமலை சிவன் கோவில் மீதும் தாக்குதல்கள் நடத்தியிருந்தார்கள்.

கடற்படைச் சிப்பாய்களின் இந்தத் தாக்குதலுக்கு ஒரு வதந்திதான் காரணம் என 1983, ‘கறுப்பு ஜூலை’ பற்றிய தன்னுடைய நூலில் ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார்.

அதாவது, ‘யாழ்ப்பாணத்திலுள்ள காரைநகர் கடற்படை முகாம், விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கைப்பற்றப்பட்டுவிட்டது என்றும், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நாக விகாரை, தமிழர்களால் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் வந்த ஒரு வதந்தியினால் சினம் கொண்டே, திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து வெளியே வந்த 80 சிப்பாய்கள் இன அழிப்புத் தாக்குதல் நடத்தினார்கள்’ என்று அவர் பதிவு செய்கிறார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 27ஆம் திகதி காலை, ஆகாயமார்க்கமாக திருகோணமலை விரைந்த கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அசோக டி சில்வா, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், 81 கடற்படைச் சிப்பாய்களைக் கடற்படையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி 81 சிப்பாய்களும் கடற்படையிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஆக, 170 எரியூட்டல் சம்பவங்களை நடத்தி, சிவன் கோயில் மீது தாக்குதல் நடத்தி, மிகப்பெரிய இன அழிப்பு தாக்குதல் நடத்தியவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய தண்டனை, கடற்படையிலிருந்து நீக்கப்பட்டதுதான்.

27ஆம் திகதியும் தொடர்ந்த பெரும் இன அழிப்பு

ஜூலை 27 ஆம் திகதி, புதன்கிழமையும் இன அழிப்புத் தாக்குதல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தன. இன்னும், ஜே.ஆரும் அவரது அரசாங்கமும் தமது கள்ள மௌனத்தைத் தொடர்ந்தனர்.

ஒரு நாட்டிலே பெருங்கலவரங்கள் ஏற்படும்போது, அந்நாட்டின் தலைவர் ஊடகங்களூடாக மக்களுடன் நேரடியாக உரையாடி, நிலைமையை எடுத்துரைத்து, மக்களை அமைதி காக்குமாறு வேண்டுவதுதான் உலக வழமை.

24ஆம் திகதி இரவு வெடித்த கலவரம், 25, 26, 27ஆம் திகதிகளிலும் தொடர்ந்தது. இந்த நான்கு நாட்களிலும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவோ, அவரது அமைச்சரவைச் சகாக்களோ, அமைதியே காத்து வந்தனர். இது மிகவும் அசாதாரணமான மௌனம். இது நிறையக் கேள்விகளையும் ஐயங்களையும் நிச்சயம் எழுப்புகிறது.

27ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அது நடந்தவேளையில் நாடெங்கிலும் பல இன அழிப்புச் சம்பவங்களும் நடந்தேறின. 27ஆம் திகதி திருகோணமலையில் ஒரு தமிழ் தாதியும் அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டார்கள்.

பற்றியெரிந்த மலையகம்

கண்டியிலிருந்து கம்பளைக்கும், நாவலப்பிட்டிக்கும், ஹட்டனுக்கும் இன அழிப்புத் தாக்குதல்கள் பரவியிருந்தன. பதுளையில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது.

27ஆம் திகதி மதியமளவில் பஸார் வீதிக்குள் நுழைந்த இன அழிப்புக் கும்பலொன்று, தமிழருக்குச் சொந்தமான வணிக, வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.

அங்கிருந்த பொருட்களைத் தூக்கி வீதியில் வீசியது. பின்னர், வீதியில் வீசப்பட்ட பொருட்களுக்கு, இந்த இன அழிப்புக் கும்பல் எரியூட்டியது. பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாதிருந்தது. அங்கிருந்து பரவிய இன அழிப்புத் தாக்குதல்கள் பதுளையில் அமைந்திருந்த தமிழ் மக்களின் வீடுகளை நோக்கி நகர்ந்தது.

தமிழ் மக்களின் வாசஸ்தலங்கள் மீது இன அழிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டு அவை எரியூட்டி அழித்தொழிக்கப்பட்டன. இதில் சட்டத்தரணி எஸ்.நடராஜா மற்றும் அறுவைச்சிகிச்சை நிபுணர் டொக்டர் சிவ ஞானம் ஆகியோரின் வீடுகளும் உள்ளடக்கம்.

பொலிஸாரினால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது போகவே, தியத்தலாவ இராணுவ முகாமிலிருந்து, இராணுவத்தினரைப் பொலிஸார் வரவழைத்தனர்.

இந்த நிலையில், பதுளையிலிருந்த பஸ்களிலும் வான்களிலும் வெளியேறிய இன அழிப்புக் கும்பல், ஹாலி-எல்ல, பண்டாரவளை மற்றும் வெலிமட பகுதிகளை நோக்கிப் பயணித்தது.

27ஆம் திகதி மாலை, ஹாலி-எல்ல, பண்டாரவளை, வெலிமட ஆகிய நகர்களிலும் இன அழிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அந்நகரங்கள் கொழுந்து விட்டெரிந்தன. இதற்கடுத்து, இரவுப் பொழுதில் லுணுகல நகர்மீது, இன அழிப்புத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. மலையகத்தின் பல்வேறு பகுதிகளும் 27ஆம் திகதி கொழுந்து விட்டெரிந்தன.

உயிரோடெரிப்பு

கொழும்பைப் பொறுத்தவரையில் 27ஆம் திகதி கொஞ்சம் அமைதியாகவே இருந்தாலும், கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு பெரும் சம்பவம் நடந்தேறியது.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 27ஆம் திகதி காலை, யாழ். செல்லவிருந்த ரயில் புறப்படத் தாமதமானது. இதேவேளை, அநாதரவாக ஒரு பொருள், ரயிலில் இருப்பதைக் கண்ட ரயில்வேப் பாதுகாவலர்கள், தேடுதலுக்காகப் படையினரை அழைத்தனர்.

யாழ்ப்பாணம் செல்லும் ரயிலில் கணிசமானளவில் தமிழர்களும் சிங்களவர்களும் இருப்பது வழமை. இந்த இடத்தில், ரயிலில் இருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படத் தொடங்கியது.

அங்கிருந்த தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்தே, தாக்குதல் நடத்தப்பட்டதாக ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க பதிவு செய்கிறார். இந்த இன அழிப்புத் தாக்குதலில் 11 தமிழர்கள் உயிரோடு எரியூட்டப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மீண்டும் இன அழிப்புத் தாக்குதல்கள்
25ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் நடந்த இன அழிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, சப்பல் பகுதியில் எஞ்சியிருந்த தமிழ்க் கைதிகளும் வேறு சில தமிழ்க் கைதிகளும் பாதுகாப்பு கருதி, இளையோர் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தனர். 27ஆம் திகதி மீண்டும் ஒரு கலவரம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் வெடித்தது.

சப்பல் பகுதியிலிருந்த சிறைக்கைதிகள் இரவுணவுக்காகச் சென்றபோது, ஏறத்தாழ 40 சிறைக்கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு, விறகுவெட்டும் பகுதிக்கு விரைந்து, அங்கிருந்த மரக்கட்டைகள், கோடரிகள் என்பற்றை ஆயுதமாக எடுத்துக் கொண்டு, தமிழ்க்கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளையோர் பகுதிக்கு விரைந்தனர்.

அங்கிருந்த சிறைப் பூட்டுகளை உடைத்து, உள்நுழைய அவர்கள் முயன்று கொண்டிருந்த போது, அவர்களை நோக்கிச் சென்ற காந்தியம் அமைப்பின் இணை ஸ்தாபகரும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவருமான டொக்டர் இராஜசுந்தரம், தம் அனைவரையும் தயவுசெய்து விட்டுவிடுமாறும், தாம் கொலையோ, கொள்ளைகளோ செய்தவர்கள் அல்ல என்றும், தாம் அஹிம்சை மீது நம்பிக்கை கொண்ட இந்துக்கள் என்றும், பௌத்தர்களாகிய நீங்களும் கொலை செய்வது தகாது என்றும் மன்றாடியதாகவும், இதன்போது பூட்டை உடைக்கும் தமது முயற்சியில் வெற்றிகண்ட இன வெறிக் கும்பல், உடனடியாக உள்நுழைந்த டொக்டர் இராஜசுந்தரத்தைப் பிடித்து இழுத்துச் சென்று அடித்துக் கொன்றதாகவும், இந்தச் சம்பவத்திலிருந்து தப்பிய காந்தியம் அமைப்பின் இணை ஸ்தாபகரான ஏ.எஸ்.டேவிட் பதிவு செய்திருக்கிறார்.

இதேவேளை, ஏற்கெனவே 25ஆம் திகதி தாக்குதல்களில் தப்பியிருந்த ஏனைய தமிழ்ச் சிறைக் கைதிகள் இம்முறை தம்மைப் பாதுகாக்கத் தயாராக இருந்தார்கள், அவர்கள் கதிரை, மேசைகளை உடைத்து, மரக்கட்டைகளை ஆயுதமாகத் தாங்கி, தம்மைத் தாக்க வந்த இனவெறிக் கும்பலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

இதேவேளை, சிறைச்சாலையினுள் நுழைந்த படைகள், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இத்தோடு, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த தமிழ்க் கைதிகள் உடனடியாக மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இதேவேளை, 27ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம், நடந்த கலவரங்களுக்கு உண்மையான காரணங்களைத் தேடுதல், அல்லது விசாரணை நடத்துதல் பற்றி ஆராயாமல், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கையையும் சாடும் களமாக மாறியிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 13 வயது கர்ப்பிணி சிறுமியை திருமணம் செய்த 13 வயது சிறுவன்..!! (வீடியோ)
Next post கேரள நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு..!!