பதவி ‘காலியாகிறது’சிக்கலில் டோனி பிளேர்
பதவியை விட்டு விரைவில் விலகுமாறு பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேருக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டனை ஆண்டு வரும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிளேர் அடுத்த ஆண்டுக்குள் பதவி விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை பதவியில் இருக்க பிளேருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உண்டு. ஆனால், பிளேர் தலைமையில் கட்சி தேர்தலை சந்தித்தால் தோல்வி உறுதி என தொழிலாளர் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
மேலும் அமெரிக்காவுக்கு ஒரேயடியாக அடிபணிந்து இங்கிலாந்து நடந்து கொள்வதை தொழிலாளர் கட்சியினர் ஏற்கவில்லை. குறிப்பாக இராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய விவகாரங்களில் பிரிட்டன் தன்னிச்சையாக நடந்து கொள்ளாமல் அமெரிக்கா சொன்னபடி ஓவர் ஆட்டம் போட்டுவிட்டதாக அக் கட்சி எம்பிக்களும் பொது மக்களும் கருதுகின்றனர்.
சமீப காலமாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் இதை உறுதி செய்துள்ளன. பிளேருக்கு ஆதரவு மடமடவென சரிந்து வருகிறது. இதனால் பிளேர் விரைவிலேயே ராஜினாமா செய்துவிட்டு தனக்கு அடுத்தபடியாக பிரதமராகப் போகும் நபரை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுத்து வருகிறது. பிளேரைத் தொடர்ந்து பிரதமராகும் நிலையில் அக் கட்சியின் முக்கிய தலைவரான கோர்டான் பிரௌன் உள்ளார்.
கட்சியில் அவருக்கு பெரும்பாலான எம்பிக்களின் ஆதரவு உள்ளது. இதையடுத்து அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே பிளேரை பதவி விலகச் செய்துவிட்டு பிரதமராகும் ஆசையில் வேகம் காட்டி வருகிறார் பிரௌன். இதனால் பிரௌன்பிளேர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பிரௌனுக்கு ஆதரவான 8 துணை அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதோடு, பிளேர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இந்நிலையில் நேற்று பிரௌன்பிளேர் இடையே சந்திப்பு நடந்தது. அதில் இருவரும் காரராசமாக பேசிக் கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன.
கட்சியிலும் மக்கள் மத்தியிலும் தனது செல்வாக்கு சரிந்துள்ளதாலும் நெருக்கடி அதிகரித்துள்ளதாலும் அடுத்த ஒரு வருடத்துக்குள் பதவி விலகுவதாக பிளேர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தொழிலாளர் கட்சியின் சார்பில் தனக்கு அடுத்தபடியாக யார் பிரதமர் பதவிக்கு நிறுத்தப்படுவார் என்பதை பிளேர் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் டெய்லி டெலிகிராப் நடத்திய கருத்துக் கணிப்பில் பிளேர் ஓராண்டுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர் கட்சியினரிடையே சேனல் 4 தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் 38 சதவீதம் பேர் பிளேர் உடனே விலக வேண்டும் என்று கூறியுள்ளனர்.