By 1 August 2017 0 Comments

பெரிய பிரச்சினையாக இன்னமும் உள்ள மாணவர் இடைவிலகல்..!! (கட்டுரை)

image_30d5bc5d11பெருந்தோட்டப் பகுதிகளில், பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்களின் தொகை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இது, கல்வியின் முக்கியத்துவத்தை உணராத ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு என்றும் கூறலாம்.

நான்கு புறங்களும் தேயிலை மலைகளால் சூழப்பட்ட பச்சையத்துக்குள், 50 சதவீதம் கற்றுத்தேர்ந்த சமூகம் இருப்பதைப் போன்றே, முழுமையான கல்வி அறிவைப் பெறாத சமூகமும் உள்ளது.

கல்வி வளர்ச்சியில் மத்திய மாகாணம் பின்தங்கியுள்ளதாக, கல்வி அமைச்சு அடிக்கடி கூறிவருகின்றது. இதனால், மலையகத்தில் கல்வித்துறையை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

மத்திய மாகாணத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் செயற்றிட்டம் தொடங்கி, பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவது வரை, அனைத்து மட்டங்களிலும், கல்வி வளர்ச்சிக்கு, மத்திய கல்வி அமைச்சு பங்காற்றி வருகின்றது.

இது வரவேற்கத்தக்க விடயமே. ஆனால், பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பது, இதுவரை ஊடகங்களில் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படவில்லை என்றே கூறலாம்.

இலங்கையில், குறிப்பாக மலையகத்தில், பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களை இனங்கண்டு, அவர்களை மீளவும் பாடசாலைகளில் இணைக்கும் செயற்றிட்டத்தை, சர்வதேச ரீதியில் இயங்கிவரும் “சேவ் த சில்ரன்” அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இதைத் தவிர, சில பிரதேசங்களில் பொலிஸ் அதிகாரிகள் கூட, இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தரவுகள் என்ன சொல்கின்றன?

இலங்கை தொகைமதிப்புப் புள்ளிவிவரத் திணைக்களத்தால், இவ்வாண்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை, இது சம்பந்தமான முக்கியமான தரவுகளைத் தருகிறது. 2016ஆம் ஆண்டுக்கான சிறுவர் நடவடிக்கைக் கருத்துக்கணிப்புத் தொடர்பான அந்த அறிக்கை, இவ்வாண்டு பெப்ரவரி 21ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையின்படி, இலங்கையிலுள்ள சிறுவர்களாக (5 தொடக்கம் 17 வயதுடையோர்) 4,571,442 பேர் காணப்படுகின்றனர். அவர்களில் 9.9 சதவீதமானோர் (452,661 பேர்), பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. அவ்வாறு செல்லாதவர்களில் 51,249 பேர் (11.3 சதவீதம் பேர்), இதற்கு முன்னரும் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. இதில், 12-17 வயதுக்கு இடைப்பட்ட 6,630 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறு பாடசாலைகளுக்குச் செல்லாதோரில், சுமார் 52 சதவீதமானோர், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாலேயே பாடசாலைகளுக்குச் செல்வதில்லை என்று கூறுகின்றனர்.

ஆனால், 17.2 சதவீதமானோர் (77,730 பேர்), கல்வியில் நாட்டமில்லை அல்லது கல்வி என்பது பெறுமதியானது எனக் கருதவில்லை என்ற காரணத்தால், பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. 14,922 பேர் (3.3 சதவீதமானோர்), வறுமை காரணமாகவும், 7,567 பேர் (1.7 சதவீதமானோர்), குடும்பத்துக்கு உதவும் தேவைகள் காரணமாகவும், பாடசாலைகளுக்குச் செல்வதில்லை என்று தெரிவிக்கின்றனர்.

இன்னும் குறிப்பாக, 4,913 பேர் (1.1 சதவீதமானோர்), பொருத்தமான பாடசாலைகளுக்காகக் காத்திருப்பவர்களாகவும் வீட்டுக்கு அண்மையாகப் பாடசாலை இல்லை என்று கூறுபவர்களாகவும் உள்ளனர். 3,853 பேர் (0.9 சதவீதமானோர்), பாடசாலைகளுக்குச் செல்லும் வழியில் பாதுகாப்பில்லை, ஆசிரியர்களாலோ அல்லது மாணவர்களாலோ துன்புறுத்தப்பட்டமை அல்லது துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை ஆகிய காரணங்களால், பாடசாலைகளுக்குச் செல்லாதவர்களாக உள்ளனர்.

நுவரெலியா மாவட்டம், கந்தப்பளைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 162 மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோக ரணபாகு தெரிவித்திருந்தார்.

நுவரெலியா, ஒலிபண்ட் தோட்டத்தின் மூன்று பிரிவுகளில் 66 மாணவர்களும் கந்தப்பளையிலுள்ள 8 தோட்டங்களில் 96 மாணவர்களுமாக, மொத்தம் 162 மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இடைவிலகியிருப்பது தெரியவந்துள்ளது.

வறுமை, பாதணி, புத்தகப் பைகளை வாங்க முடியாமை போன்ற காரணிகளினாலேயே, இவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளதாக, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்களைப் பாடசாலைகளிலில் மீள இணைப்பதற்காக, பாடசாலை அதிபர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், இவ்வாறு இடைவிலகிய மாணவர்களின் கல்விக்கு, தங்களாலான அனைத்து உதவிகளையும் மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மத்திய மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களில், நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தின் நிலையே இது.

9 மாவட்டங்களைக் கொண்ட பெருந்தோட்டப் பகுதியில், நூற்றுக்கணக்கான தோட்டங்களில், திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படுமாயின், இலட்சக்கணக்கான மாணவர்களை, பாடசாலைகளில் மீள இணைக்க வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்படுவர் என்பதே உண்மை.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒரு சில சமூகவியலாளர்கள், பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களுக்கு, கல்வியின் அவசியத்தை உணர்த்தி, மீளவும் அம்மாணவர்களை பாடசாலைகளில் இணைக்கும் பொறுப்புமிக்க சமூகப்பணியை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதையும் இங்கு கூற வேண்டியிருக்கிறது.

பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை இனங்கண்டு, அவர்களை பாடசாலைகளில் மீள இணைக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளோம் என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், ஊடகமொன்றுக்குக் கடந்தாண்டு கூறியிருந்தார். அவர் கூறியதைப் போன்று, இடைவிலகிய மாணவர்கள் மீளவும் பாடசாலைகளில் இணைக்கும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில், சரியான தகவல்கள் இதுவரை இல்லை.

ஆனால், கொழும்பை போன்ற நகர்புறங்களிலுள்ள பிரபல ஆடையகங்கள், நகையகங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான தளங்கள, பலசரக்குக் கடைகள் உள்ளிட்ட பல வியாபார நிலையங்களில், 10-16 வயதுக்கு சிறுவர், சிறுமியர்களைக் காணும்போது, கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியது இன்னும் செயலளவில் இல்லை என்பது ஊர்ஜிதமாகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை, பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களில் 19.1 சதவீதமான மாணவர்கள், சிறுவர் தொழிலாளர்களாக உள்ளதாக, சிறுவர் செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவர்களில், 20.8 சதவீதமானவர்கள், 12-14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 1.1 சதவீதமானவர்கள் 5-11 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரியவருகின்றது.

சிறுவர்களைவிட சிறுமியர்களே அதிகமாக, சிறுவர் தொழிலாளிகளாக உள்ளதாகவும், இது 24.7 சதவீதமென்றும், அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்கள், பெருந்தோட்டப் பகுதிகளிலேயே அதிகம் உள்ளதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெருந்தோட்டப்புறங்களை பொறுத்தவரை, வறுமை என்னும் கோரத்தாண்டவத்தில், கல்வியின் முக்கியத்துவத்தை அந்தச் சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதை, ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால், மதுபான விற்பனை நிலையங்கள், இலங்கையில் குறிப்பாக மலையகத்தில் அதிகமாக இருப்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மதுபானசாலைகளுக்கு வழங்கும் பணத்தில் ஒரு பாதியை, பெற்றோர், தமது பிள்ளைகளின் கல்விக்குப் பயன்படுத்தலாம். பிள்ளைகளின் கல்வியை இழப்பதற்கு, வறுமை என்ற காரணத்தை திரும்பவும் திரும்பவும் கூறுவதில் பயனில்லை என்றே, இந்தப் பத்தியாளர் கருதுகிறார்.

வறுமை ஒருபுறமிருக்க, கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்திராத ஒரு சமூகம், மலையகத்தில் இன்னும் இருந்துகொண்டுதான் உள்ளது.

தேயிலைத் தோட்டங்களை மட்டுமே நம்பியிருக்கும் பெற்றோர், தமது பிள்ளைகள், நான்கு எழுத்துகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, தமது பிள்ளைகளை பாடசாலையில் இணைத்து விடுகின்றார்களே தவிர, கல்வியின் முக்கியத்துவத்தை அவர்கள் உணரவில்லை. இவ்வாறான பெற்றோருக்கு, வறுமை என்பது வெறுமனே ஒரு காரணமாகிப் போனது.

எனவே, மாணவரின் இடைவிலகலில், வறுமை மட்டுமல்ல, பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. அது, யாவரும் அறிந்ததே. ஒரே விடயத்தை திரும்பத் திரும்பக் கூறுவதால், எதுவும் மாறிவிடப்போவதில்லை. அதற்கான மாற்றுவழிகளை இனங்காணுவதே, தற்போதைய தேவையாக உள்ளது.

இலங்கையின் கல்விச் சூழலில், கட்டாயக் கல்வியின் தேவை வலியுறுத்தப்பட வேண்டும். அதற்கு, மிகக் கடுமையான சட்டவரையறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
எந்தவொரு மாணவனும், க.பொ.த உயர்தரத்தைக் கற்று முடிக்காமல், பாடசாலையிலிருந்து இடைவிலக முடியாது என்ற சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும்.

அவ்வாறு பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் நிலை ஏற்படுமாயின், அதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் பதில் கூற வேண்டிய வகையிலான நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும்.

அதேபோன்று, சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்தும் வியாபாரிகளுக்கு எதிராகவும், கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

சர்வதேச ரீதியில் சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும்கூட, அவை ஏட்டளவில் உள்ளனவே தவிர, நடைமுறையில் இல்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும்கூட, இலங்கை போன்ற நாடுகளில் அது முழுமையாக அமுல்படுத்தப்படுகின்றதா என்பது கேள்விக் குறியே.

அந்தச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்குமாயின், மலையகம் போன்ற பிரதேசங்களில் இடைவிலகும் மாணவர்களின் தொகை, அதிகரித்திருக்காது.

தமது பிள்ளைகள் வைத்தியராக, பொறியியலாளராக வர வேண்டும் என்று நினைக்கும் தொழில் வழங்குநர்கள், தமது பிள்ளைகளின் செருப்புகளைத் தேய்ப்பதற்காக, ஓர் ஏழைத் தாயின் பிள்ளையையே பணயம் வைக்கின்றார்கள்.

சேற்றில் முளைத்த செந்தாமரைபோன்று, ஏழைத் தாயின் பிள்ளைகளையும் உயர்த்துவதற்கு, ஓரிரு நல்லுள்ளங்கள் இருப்பதை மறுத்துவிடவும் முடியாதுதான்.
எனவே, இனிவரும் காலங்களில், கல்வித் தகைமையற்ற யாரையும் தொழிலுக்கு அமர்த்துவதில்லை என்ற நிபந்தனைகள் கொண்டுவரப்பட வேண்டும்.

அதேபோன்று, பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோரை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான செயற்றிட்டங்கள், நடமாடும் சேவைகள், விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேபோன்று, பாடசாலையிலிருந்து இடைவிலகிய 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்குவதுடன், கிராமங்கள், தோட்டங்கள் தோறும் சென்று இத்தகைய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தினால், பாடசாலையிலிருந்து இடைவிலகும் ஒரு சமூகத்தை தடுத்து நிறுத்த முடியும்.

ஒரு காலத்தில், தெற்காசியாவில் கல்வித்துறையில் மிளிர்ந்து விளங்கிய இலங்கை, அண்மைக்காலமாக, கல்வியில் ஒருவித மந்தநிலையை அடைவது போன்ற நிலையை, நாங்கள் உணரக்கூடியதாக இருக்கிறது.

இந்த நிலை மாற்றப்பட்டு, மலையகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து, அதற்கேற்பப் பணியாற்றுவது, ஆரோக்கியமான, செழிப்பான இலங்கையின் எதிர்காலத்துக்கு மிக அவசியமானதாகும்.Post a Comment

Protected by WP Anti Spam