இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் பதவி விலகுகிறார் – 7 மந்திரிகள் ராஜினாமா எதிரொலி
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருக்கும் டோனிபிளேர் பதவி விலகக்கோரி ஒரு மந்திரி மற்றும் 6 துணை மந்திரிகள் எம்.பி பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். அவர் பதவியில் நீடிப்பதற்கு எதிர்ப்பு அதிகரித்து இருப்பதை தொடர்ந்து பிளேர் பதவி விலகுகிறார். டோனி பிளேர் கடந்த 9 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். 3 முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறார். அவரது பதவிக்காலம் 2009-ம் ஆண்டு தான் முடிகிறது. இந்த நிலையில் அவர் பதவி விலகக்கோரி இளைய மந்திரியான டாம் வாட்சன் உள்பட 7 எம்.பி.க்கள் பதவி விலகினார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பிளேரின் விசுவாசிகளாக கருதப்பட்டவர்கள்.
இது பிளேர் முகாமில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் பிளேர் எதிர்ப்பு எம்.பிக்களுக்கு, அடுத்த ஆண்டு பதவிவிலகி விடுவார் என்ற உறுதிமொழி அளிக்கப்பட்டது. பதவி விலகுவது பற்றிய அறிவிப்பை அடுத்த ஆண்டு மே மாதம் 31-ந் தேதி அறிவிப்பார் என்றும் செய்தி வெளியானது. இந்த நிலையில் 7 பேர் ராஜினாமா செய்தனர்.
ஆதரவு குறைந்தது
டோனிக்கு பிறகு பிரதமர் பொறுப்புக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுபவர் நிதி மந்திரி கார்டன் பிரவுன். இவர்தான் பிளேருக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை தூண்டிவிடுகிறார் என்று கூறப்படுகிறது. 7 மந்திரிகள் ராஜினாமா விவகாரம் சுமூகமான பதவிமாற்றம் இருக்காது என்பதை வெளிப்படுத்தி உள்ளது.
பிளேருக்கு ஆதரவு குறைந்து வருவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன. இதனால் தான் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ஈராக், லெபனான் போர்கள், ஊழல்விவகாரம், நிர்வாகத் திறமையின்மை ஆகியவை அவருடைய ஆதரவு சரிந்ததற்கு காரணம் ஆகும்.
திருமதி தாட்சருக்கு நேர்ந்த கதிதான்
பிளேருக்கு முன்பு பிரதமராக இருந்த திருமதி தாட்சரும் கட்சிக்குள் ஏற்பட்ட எதிர்ப்பால் தான் கவிழ்க்கப்பட்டார். அவர் பிரதமராக நீடித்தால் தேர்தலில் தோல்விதான் கிடைக்கும் என்பதால் அவரது கட்சியினரே அவரை கவிழ்த்துவிட்டனர். அந்தக்கதியைத் தான் இப்போது பிளேரும் சந்திக்க வேண்டி இருக்கிறது. எதிர்பாராத இந்த எதிர்ப்பு காரணமாக பிளேர் பதவி விலகத்திட்டமிட்டு இருக்கிறார்.
அவர் பதவி விலகினால் அந்த இடத்தை பிடிப்பதற்கு நிதி மந்திரி கார்டன் பிரவுன், உள்துறை மந்திரி ஜான் ரீடு, கல்வி மந்திரி ஆலன் ஜான்சன் ஆகியோர் இடையே போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.