அடக்குமுறையை நியாயப்படுத்திய போராட்டம்..!! (கட்டுரை)

Read Time:20 Minute, 27 Second

image_65dd698bdbதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலும், அவர் அந்தப் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில்லை என்று சிங்கள மக்கள் மத்தியில், குறிப்பாகத் தெற்கிலுள்ள எதிர்க்கட்சிகள் மத்தியில், ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அது முற்றிலும் பிழையான கருத்தும் இல்லை.

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமல்லாது, நாட்டில் முக்கியமான சகல விடயங்கள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சம்பந்தனும் அவரது கட்சியும் பொதுவாகத் தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழர்களுக்கு முக்கியமான விடயங்களைப் பற்றி மட்டுமே, அனேகமாகக் கருத்துத் தெரிவிக்கின்றன.

ஆனால், கடந்த மாதம் 25 ஆம் திகதி, நடைபெற்ற பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதைப் பற்றி தமது கருத்துகளைத் தெரிவித்து இருந்தனர்.

உண்மையிலேயே, அது முழு நாட்டினதும் தலைவிதியை மாற்றக் கூடிய வேலைநிறுத்தமாக இருந்தமையைப் பலர் உணரவில்லை. அந்த வகையில், தமிழ்த் தலைவர்கள், அது தொடர்பாகத் தமது கருத்துகளைத் தெரிவித்தமை, அவர்களும் அந்த அபாயத்தை உணர்ந்து இருந்ததை எடுத்துக் காட்டுகிறது.

நாட்டில் அண்மைக் காலத்தில், இடம்பெற்ற வேலைநிறுத்தங்களில் இந்தப் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலைநிறுத்தமே மிகவும் மடத்தனமான வேலைநிறுத்தம் எனலாம்.

அந்த வேலைநிறுத்தம், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல என்பது அதன் அர்த்தமல்ல. அதைக் காலவரையறையற்ற வேலைநிறுத்தமாக நடத்த முற்பட்டமையே சம்பந்தப்பட்ட தொழிற்சங்கவாதிகளின் மடமையாகும்.

அது, உண்மையிலேயே காலவரையறையற்ற வேலைநிறுத்தமாகத் தொடர்ந்திருந்தால் எவ்வாறான நிலைமை ஏற்பட்டு இருக்கும் என்று ஊகிக்கக் கூடியவர்கள் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த வேலைநிறுத்தம், ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அரசாங்கத்திடம் மூன்று மாற்றுத் தீர்வுகளே இருந்தன. ஒன்றில் அரசாங்கம், வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை நிறைவேற்ற வேண்டும். அதாவது, அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட எண்ணெய்த் தாங்கிகளை சீனாவுக்கும் திருகோணமலையிலுள்ள ஆங்கிலேயர்கள் ஸ்தாபித்த எண்ணெய்த் தாங்கிகளில் சிலவற்றை இந்தியாவுக்கும் குத்தகைக்கு விடுவதைக் கைவிட வேண்டும்.

அத்தோடு, வேலைநிறுத்தக் காரர்களின் கோரிக்கையின்படி, சபுகஸ்கந்தையிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைப் பழுதுபார்த்து, மீண்டும் தொழிற்படச் செய்ய வேண்டும்.

இவற்றில், சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, மீண்டும் தொழிற்படச் செய்ய வேண்டும் என்பது, அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், மற்றைய இரண்டு கோரிக்கைகளையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அரசாங்கம், பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது. குறிப்பாக, நீண்ட காலமாகப் பல அரசாங்கங்களால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன் சுமை, நாட்டின் அபிவிருத்திக்குப் பெரும் தடையாக இருக்கிறது.

அதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகமானது, கப்பல்கள் வராததன் காரணமாக, நட்டத்தில் இயங்கும் துறைமுகமாகும். எனவே, அதையும் நாட்டு வருமானத்தினாலேயே பராமரிக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில்தான் அரசாங்கம், இந்தத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து, அதனோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரதேசத்தில், தொழில் பேட்டையொன்றையும் ஆரம்பிக்க, அத்துறைமுகத்தையும் அதைச் சுற்றிய சில காணிகளையும் எண்ணெய்த் தாங்கிகளையும் சீன நிறுவனமொன்றுக்குக் குத்தகைக்கு விட முடிவு செய்தது.

அத்தோடு, பிராந்தியத்தில் நாடுகளோடு, நற்புறவைப் பேணிப் பாதுகாப்பதற்காகத் திருகோணமலையிலுள்ள சில எண்ணெய்த் தாங்கிகளை, இந்தியாவுக்குக் குத்தகைக்கு வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்தது.

இந்த முடிவானது, நூறு சதவீதம் சரியானதாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், அரசாங்கம், தற்போதைய நிலையில் எடுக்கக்கூடிய சிறந்த முடிவு, அதுதான் என வாதிடுகிறது. எனவே, வேலைநிறுத்தக் காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இல்லை.

அவ்வாறாயின், வேலைநிறுத்தத்தை எதிர்கொள்ள, அரசாங்கத்திடம் உள்ள அடுத்த மாற்றுத் தீர்வு என்ன? இதற்கு முன்னர் பல தொழிற்சங்கப் போராட்டங்களின் போது நடந்து கொண்டதைப் போல், அவர்கள் வேலைநிறுத்தம் செய்யட்டும்; நாம் அதை அடக்குவதும் இல்லை; கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும் இல்லை என்று ‘சும்மா’ இருப்பது.

ஆனால், ஏனைய தொழிற்சங்கப் போராட்டங்களின்போது, அவ்வாறு நடந்து கொண்டாலும், அரசாங்கம் இந்த வேலைநிறுத்தத்தின்போது, அவ்வாறு ‘சும்மா’ இருக்க முடியாது.

ஏனெனில், அதன் முதலாவது நாளிலேயே, நாட்டில் மக்களின் சுமூகவாழ்வு வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அது தொடர்ந்தால், முதலாவதாக நாட்டின் சகல பகுதிகளிலும் போக்குவரத்து முடங்கிப் போய்விடும். வீதிகளில் வாகனங்கள் இருக்காது; ரயில் பாதைகளில் ரயில் ஓடாது; ஏழைகளும் செல்வந்தர்களும் ஒரே விதமாகப் பாதிக்கப்படுவார்கள்.

அலுவலகங்களுக்கும், ஏனைய வேலைத்தளங்களுக்கும் ஊழியர்களோ அதிகாரிகளோ செல்ல முடியாமல் போய்விடும். வங்கிகள், துறைமுகங்கள், கடைகள் மற்றும் ஏனைய வர்த்தக நிறுவனங்கள், பாடசாலைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள், சந்தைகள் ஆகிய அனைத்து நிறுவனங்களும் முடங்கிப் போய்விடும்.

உணவு, தண்ணீர், மருந்து, மின்சாரம் போன்றவற்றின் விநியோகம் தடைப்பட்டுவிடும். மக்கள் கிளர்ந்தெழுவார்கள். அதுவே அரசாங்கத்தின் முடிவாகும். நல்லாட்சி அல்ல; எந்தப் பெயரால் பதவிக்கு வந்தாலும், எந்தவொரு அரசாங்கமும் அந்தநிலை உருவாக, இடமளிக்கப் போவதில்லை.

அவ்வாறாயின், அரசாங்கத்தின் மூன்றாவது மாற்றுத் தீர்வு அடக்குமுறையே. அதுதான் இடம்பெற்றது. இதற்குக் காரணம், வேலைநிறுத்தம் காலவரையறையற்றதாக நடைபெறும் என அறிவித்தமையாகும்.

அது, ஓரிரு நாள் நடைபெறும் அடையாள வேலைநிறுத்தமொன்றாக இருந்தால், சிலவேளை அரசாங்கம் அதைப் பொறுத்திருக்கக் கூடும். அவ்வாறு செய்யாமல், இதைக் காலவரையறையற்ற போராட்டமாக நடத்தியமையே மடத்தனமாகும்.

அரசாங்கம் வேலைநிறுத்தத்தை அடக்காதிருந்து, நாம் முன்னர் கூறியதைப் போன்ற, கிளர்ச்சி நாட்டில் ஏற்பட்டு இருந்தால், சிலவேளை அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற குரல் பலமாக ஒலித்திருக்கும்.

அரசாங்கத்தைப் பாதுகாப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தெற்கே வாழும் மக்கள் குறைகூறுவார்கள். குழப்பங்கள் எந்தெந்தத் திசைக்குத் திரும்பும் என்பதைக் கூற முடியாது. இராணுவத் தலையீடுகள் ஏற்படவும் கூடும். அவ்வாறான பதற்ற நிலையில், நல்லிணக்க முயற்சிகள் முற்றாகத் தோல்வியுறும்.

அரசாங்கம் வேலைநிறுத்தத்துக்கு எதிராக, அடக்குமுறையை உபயோகித்தமை அந்த வகையில் சரியென்றாலும் அது அரசாங்கத்துக்குத் தவறான சமிக்ஞையை வழங்கியிருக்கலாம். எதிர்காலத்தில் ஏனைய நியாயமான போராட்டங்களுக்கு எதிராகவும் அடக்கு முறையைப் பாவிக்க அரசாங்கம் தயங்காது.

தொழிற்சங்கப் போராட்டங்களை அடக்க, அரசாங்கம் இராணுவத்தை அனுப்பிய முதலாவது முறை இதுவல்ல. 1996 ஆம் ஆண்டு, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும், இராணுவத்தின் பலாத்காரத்தின் உதவியால், அரசாங்கம் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முறியடித்தது.

அந்த வருடம், இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் எந்தவித இணக்கமும் ஏற்படவில்லை.

மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராகவும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த ஜெனரல் அனுருத்த ரத்வத்த, அதற்கு முன்னைய வருடம் வடக்கில் ‘ரிவிரெஸ’ இராணுவ நடவடிக்கை மூலம், யாழ்ப்பாணம் உட்பட வலிகாமத்திலும் வடமராட்சியிலும் பெரும் பகுதியைப் புலிகளிடமிருந்து கைப்பற்றி நாட்டில் பெரும் செல்வாக்குள்ளவராக மாறியிருந்தார்.

வேலைநிறுத்தம் தொடரவே, அவர் மின்சக்தி அமைச்சர் என்ற வகையில், தமது கடமை முடிவடைந்து விட்டதாகவும் இனித் தாம், பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் கடமையை நிறைவேற்றப் போவதாகவும் கூறினார். அதன்படி, மின்சார சபையின் தொழிற்சங்கத் தலைவர்களையும் ஊழியர்களையும் தேடி இராணுவம் அனுப்பப்பட்டது. அவர்கள் மறைந்திருந்த இடங்களிலிருந்து, பலாத்காரமாகப் பிடித்து வரப்பட்டு, இராணுவ அரசாங்கத்தின் கீழ் நடைபெறுவது போல், பலாத்காரமாகச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலைநிறுத்தம் காலவரையறையற்றதாக நடத்த முற்பட்டமை, அதன் பிரதான குறை என்பதை நாம் முன்னர் கூறினோம்.

உண்மையிலேயே முழு நாடும் முடங்கிப் போகும், அவ்வாறான தொழிற்சங்கப் போராட்டமொன்று, நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றும் கிளர்ச்சியொன்றின் ஓரங்கமாக மட்டுமே இடம்பெற முடியும்.

1995 ஆம் ஆண்டு புலிகள் கொலன்னாவ எண்ணெய் விநியோக நிலையத்தைத் தாக்கி, ஒருகொடவத்தை எண்ணெய்த் தாங்கிகளுக்குத் தீமூட்டியதை, அதன்படி விளங்கிக் கொள்ளலாம். ஆனால், புலிகளின் திட்டமும் வெற்றி பெறவில்லை.

பெற்றோலியக் கூட்டுத்தாபன வேலைநிறுத்தம் நடத்தப்பட்ட காலமும் பொருத்தமாக இருக்கவில்லை. நாளாந்தம் ஆர்ப்பாட்டங்களாலும் வேலைநிறுத்தங்களாலும், குறிப்பாக மருத்துவர்களின் வேலைநிறுத்தங்களாலும் மக்கள் அவதியுற்று, ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் வெறுத்து நிற்கும் ஒரு காலகட்டத்திலேயே, இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, மக்கள் ஆதரவு அதற்கு இருக்கவில்லை. மாறாகக் குண்டர்கள் வேலைநிறுத்தக் காரர்களைத் தாக்கியதையும் மக்கள் குறைகூறவில்லை.

வடக்கிலும் தெற்கிலும் மக்கள் போராட்டங்களின் போதும், தமது காட்டு தர்பாரை நடத்துவதற்காகக் குண்டர்களை ஏவுவது, ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் கைவந்த கலையாகும்.

வடக்கில், ஐ.தே.க குண்டர்கள், 1981 ஆம் ஆண்டு, நடத்திய காட்டு தர்பாரின் சின்னமாக, யாழ்ப்பாண நுலகம் இன்னமும் கருதப்படுகிறது.

1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம், நாளொன்றுக்கு 10 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரி, வேலைநிறுத்தம் செய்த ஊழியர்களில் 40,000 பேரை, ஐ.தே.க அரசாங்கம் சேவையிலிருந்து நீக்கியது.

அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், அதே கோரிக்கைகளை முன்வைத்து, தொழிலாளர்கள் கொழும்பில் ஆரப்பாட்டம் செய்த போது, குண்டர்கள் அவர்களைத் தாக்கி, சோமபால என்ற தொழிற்சங்கவாதியைப் படுகொலை செய்தனர்.

அந்தப் பழக்க தோஷத்தின் காரணமாகவோ என்னவோ, இம்முறை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு எதிராகவும் குண்டர்கள் ஏவப்பட்டு இருந்தனர். அவர்கள், ஊழியர்களைத் தாக்குவதை, தொலைக்காட்சி மூலம், நாடே பார்த்துக் கொண்டு இருந்தது.
குண்டர்களை, ஐக்கிய தேசியக் கட்சி ஏவவில்லை எனவும், வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களே, வேலைநிறுத்தக்காரர்களைத் தாக்கினர் என்றும் ஐ.தே.க கொலன்னாவ தொகுதி அமைப்பாளர் எஸ்.எம். மரிக்கார் கூறியிருந்தார்.

இதையே ‘வரலாறு மீளுகிறது’ (history repeats) என்பார்கள். முன்னாள் அமைச்சர்களான லலித் அத்துலத்முதலியும் காமினி திஸாநாயக்கவும் ஐ.தே.கவிலிருந்து விலகி, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கிய பின்னர், 1992 ஆம் ஆண்டு, கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

அப்போது, ஐ.தே.க அரசாங்கத்தின் குண்டர்கள், அவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் தாக்கினர். இப்போது மரிக்கார் கூறியது போலவே, அப்போதும் “ஆர்ப்பாட்டத்தினால் சிரமங்களை எதிர்நோக்கிய ரயில் பிரயாணிகளே, ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினார்கள்” என்று அப்போதைய பிரதமர், டி.பி. விஜேதுங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

2001 ஆம் ஆண்டு, பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் அதன் பின்னர், பதவிக்கு வந்த மஹிந்தவின் அரசாங்கமும் அடக்குமுறையை, பிரச்சினைகளைத் தீர்க்கும் விதிமுறையாகப் பாவித்தன.

புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலத்தில், வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு வற்புறுத்தி, அம்முகாம்களின் முன், வடபகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதையடுத்து, ஆர்ப்பாட்டங்களை வழிநடத்திய புலி உறுப்பினர்கள் கடத்தப்பட்டனர். அத்தோடு ஆர்ப்பாட்டங்கள் நின்றுவிட்டன.

மஹிந்தவின் காலத்தில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போதும் மண்ணெண்ணெய் விலையைக் குறைக்குமாறு சிலாபத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போதும் வெலிவேரியாவில் மக்கள் தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த போதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.

இவை, நியாயமற்ற அடக்குமுறைகளாகும். ஆனால், பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், முறையற்ற போராட்டத்தின் மூலம் அடக்குமுறையை வரவழைத்துக் கொண்டனர்.

தமது போராட்டத்தை மக்கள் உணராத நிலையிலும், மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் வெறுக்கும் நிலையிலும் நாட்டில் அராஜகம் ஏற்படக் கூடிய வகையில் வேலைநிறுத்தம் ஒன்றை நடத்த முற்பட்டு, அடக்குமுறையை ஆதரிக்கும் நிலைக்கு, மக்களைத் தள்ளிவிட்டனர். அது எதிர்காலத்தில் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் கீழும் அடக்குமுறை, பிரச்சினைகளைத் தீர்க்கும் விதிமுறையாவதை குறிக்கின்றதா என்பதே கேள்விக்குறியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் வீட்டில் தற்போது தனிமைப்படுத்தப்படும் நபர்..!! (வீடியோ)
Next post `வேலையில்லா பட்டதாரி-2′ திரையரங்கு உரிமையை கைப்பற்றிய சூப்பர்ஸ்டார்?..!!