தமிழர் அரசியலில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய யதார்த்தங்கள்..!! (கட்டுரை)

Read Time:23 Minute, 42 Second

image_6344a9f7c5தமிழர் அரசியல் தளம், இன்றைய நிலையில் பல சுவாரஸ்ய களங்களைக் கொண்டதாக அமைந்து வருகின்றது.

ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டதாகத் தமது நகர்வுகள் உள்ளதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல் தலைமைகள், அதனூடாகத் தமிழ் மக்களுக்கு எழுந்துள்ள ஐயப்பாடுகளைக் களைவதற்கான ஏதுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளனவா என்பது தொடர்ந்தும் கேள்விக் குறிகளாகவே காணப்படுகின்றன.

வட மாகாண சபையின் செயற்பாடுகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நகர்வுகளும் மக்களின் எதிர்கால நலன்கள் என்ற வகையில், எதை ஆக்கபூர்வமாக முன்வைக்கின்றன? குறிப்பாக, வரவுள்ள புதிய அரசமைப்பின் ஊடாக, தமிழ் மக்கள் எத்தகைய அனுகூலங்களைப் பெறவுள்ளார்கள் என்பதைத் தெளிவுபடுத்தவேண்டிய தேவை பலமாகவே உள்ளது.

வெறுமனே வாக்குகளை போட்டுவிட்டு, பார்த்திருக்கும் அல்லது காத்துக்கொண்டிருக்கும் சமூகமாக, இன்றைய தமிழ்ச் சமூகம் இல்லை. இதைப் பல அரசியல் நிகழ்வுகளும் விவாத மேடைகளும் வெளிச்சம் போட்டுக் காட்டிவருகின்றன.

அரசியல் தலைவர்கள் என்றால், முகம்கொடுத்துக் கதைப்பதற்குத் தயங்கிய மக்கள் சமூகமாக, இன்றைய சமூகமில்லை. இதையும் பல நிகழ்வுகள் எடுத்தியம்பி விட்டன. அதற்குக் காரணம், தமது பிரதிநிதிகள் தொடர்பாகக் கொண்டுள்ள அக்கறையும் வெறுப்புணர்வுமேயாகும் என்பதை மறுப்பதற்கில்லை.

வட மாகாணசபையில், ஒரு கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ள இரு பிரிவுகள் என்ற நிலைமை, முன்னுதாரணமாகக் கருதப்பட்ட ஒரு மாகாணசபைக்கு ஏற்பானதாக இல்லை என்பதை, இதுவரை எந்த உறுப்பினரும் உணர்ந்துகொள்ளவுமில்லை; உணர்ந்து கொள்ள வேண்டுமே என்ற அக்கறையும் இல்லை. இது, அவர்களது சுயநல அரசியலின் வகிபாகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

வெறுமனே அமைச்சர்கள் மாற்றமும் அது தொடர்பான கேள்வி – பதில் விளக்கங்களும் 30 வருடங்களுக்கும் மேலாக நீடித்த, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின், இன்றைய தேவையா என்பது உணரப்படவேண்டிய விடயமாகும்.

அரசியல் செல்நெறிகளையும் அதன் உள்ளார்ந்தங்களையும் புரிந்து கொள்ளும் நிலைமை, நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கிராம மக்களுக்குமே உள்ளது. இந்நிலையில், அன்றாடம் தமது ஜீவனோபாயத்துக்காக ஓடிஓடி உழைக்கும், ‘இது ஓட்டைவீடு, ஒன்பது வாசல்’ என வாழும் மக்களுக்கு, அரசியல் தொடர்பாகக் கரிசனை கொள்ளும் நாட்டம் அல்லது போக்கு காணப்படாது.

எனவே, அவர்களது அன்றாடத் தேவையான, வாழ்வியல் போராட்டத்துக்கான நிவர்த்திப்புகளும் அவர்களது பிரதேசம் சார்ந்த அபிவிருத்திகளுமே உடனடித் தேவைகளாக உள்ளன.

இந்நிலையில், மக்களின் இத்தகைய தேவைகளைப் பூர்த்தி செய்வதை விடுத்து, தமக்கிடையில் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டும் இழுபறிப்பட்டுக் கொண்டும் இருப்பதான சுயநல அரசியல் பெயற்பாடுகள், மாதக்கணக்கில் நீடிக்கின்றது. ஏன் வருடக்கணக்கு என்றும் கூறலாம். செய்யவேண்டிய செயற்பாடுகளை மறந்துவிடுதல் அல்லது தட்டிக்கழித்தல் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு அல்லது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள மக்களுக்கு ஏற்பானதாக அமைந்துவிடாது.

வட மாகாணசபை என்பது, பெரும் இன்னல்களைச் சந்தித்த மக்களுக்கு ஆறுதலாக அமையும் என்பது, அதன் ஆரம்ப காலத்தில், வடக்கைச் சேர்ந்த ஒவ்வொருவரிடமும் காணப்பட்ட ஆழமான எதிர்பார்ப்பாகும். அதன், நிதி மூலங்களின் ஊடாக, வடபிரதேசத்தின் மேம்பாடு அதிகரிக்கும் என்ற எண்ணப்பாடு அதீதமாகவே காணப்பட்டது.
முக்கியமாக, முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் மீதான அதீத நம்பிக்கை, துறை சார்ந்த அமைச்சர்கள், வலியும் வழியும் உணர்ந்த உறுப்பினர்கள் என, தமிழர்களின் துன்பங்களைத் துடைக்கக்கூடிய ஞானம் உள்ள அமைப்பாக, தமிழர்களாலும் தென்பகுதி அரசியல்வாதிகளாலும் வட மாகாணசபை பார்க்கப்பட்டது.

ஆனால், அத்தனை நம்பிக்கைகளும் தவிடுபொடியாகியது போல், மாகாணசபையின் முதலாவது ஆட்சிக்காலத்திலேயே, பல கோணங்களாகப் பிழவுபட்டு, அரசியல் நகர்வில் வினைத்திறனற்றதாகக் காணப்படுகின்றது.

வடக்கு மாகணசபையின் எதிர்க்கட்சித் தரப்பினரையும் இணைத்துக் கொண்டு, ஆக்கபூர்வமானதும் முன்னுதாரணமும் கொண்ட சபையாக, முன்னகர எத்தனித்த சபை, அங்கு ஏற்பட்ட காழ்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகள், நான்பெரிதா, நீபெரிதா என்ற போட்டித்தன்மைகள், உட்கட்சிப் பூசல்கள் என விஸ்வரூபமெடுத்த ஒவ்வொரு நரகாலித்தனங்களாலும் மாகாணசபையைச் சிதறடித்தது. இத்தகைய நிலைமாறிய விளைவுகளின் தொடர்ச்சியில், இனிவரும் காலங்களில் எதனைச் செய்யப்போகிறது? எப்படிச் செயற்படப் போகின்றது போன்ற ஐயப்பாடுகளை வெகுவாக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தின் இராஜினாமா, போக்குவரத்து அமைச்சர்
பா. டெனீஸ்வரன் தனது கட்சிக்கு எதிராகவும் முதலமைச்சருக்கு எதிராகவும் கொண்டுள்ள அதிருப்தியான கொள்கைகள் என்பன, எவ்வாறான களச்சூழலை, தமிழர் அரசியலுக்கு வழங்கப்போகின்றன என்பதை ஆராயத் தலைப்படவேண்டும்.

குறிப்பாக, முன்னாள் சுகாதார அமைச்சர், தமிழரசுக்கட்சியின் முக்கிய புள்ளிகளில் ஒருவராக காணப்படும் நிலையில், அவருக்கு மாகாண சபையின் ஒரு சாராரால் வழங்கப்பட்ட அழுத்தங்கள் மற்றும் தொடர்ச்சியாக அவரை அமைச்சுப்பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற முதலமைச்சரின் இறுக்கமாக செயற்பாடு, தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையில் மாகாணசபை மீதான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன.

இதற்கும் அப்பால், தமிழீழ விடுதலை இயக்கமான ‘டெலோ’, தனது சிபார்சின் ஊடாக, போக்குவரத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்ட, பா. டெனிஸ்வரனோடு மாரடித்து வருவது, தற்போது அவரது அமைச்சுப் பொறுப்பை அவரிடமிருந்து மீளப்பெறுமாறு, முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கும் நிலைமை வரை சென்றுள்ளது. இத்தகைய, புறம்போக்குத் தனங்கள் அக்கட்சிக்குள்ளேயே குழப்பகரமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளன.

போராட்ட அமைப்பாக இருந்த ‘டெலோ’ ஜனநாயக வழிக்கு வந்ததன் பின்னர், மக்கள் மத்தியில் ஜனநாயக அரசியல் செயற்பாட்டில் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், தமது இயக்கப் போராளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், வெளி நபர்களுக்கு முக்கியத்துவத்தை அளித்து, தேர்தல் களத்தில் பங்கேற்கச் செய்து, அவர்களை மேன்மைப்படுத்திய செயற்பாடு, அக்கட்சியின் ஆரம்பகாலப் போராளிகளுக்கு சினத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

பா. டெனிஸ்வரனுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள், பல மணிநேரமாக ஒன்றுகூடிய, ‘ டெலோ’ ஆறு மாத காலங்களுக்கு, அவரைக் கட்சியில் இருந்து, தற்காலிகமாக நீக்குவது என்ற முடிவுக்கு வந்திருந்தது.

இவ்வாறான முடிவை, பல வாதப்பிரதிவாதங்கள், சிரமங்களுக்கு மத்தியிலேயே தலைமைத்துவத்தினால் எடுக்க முடிந்துள்ளது. இருந்தபோதிலும், ‘டெலோ’ சார்ந்த மாகாணசபை உறுப்பினர்கள், அவரைக் கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனவும், அவரது அமைச்சுப்பதவியை பறித்து, வைத்தியகலாநிதி குணசீலன் அல்லது விந்தன் கனகரட்ணத்துக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் வலியுறுத்தியிருந்தனர்.

எனினும், மரக்கொத்தி எல்லா மரத்திலும் கொத்துவதுபோல், வாழை மரத்தில் கொத்தி, சிக்கியது போல், ‘டெலோ’வும் இத்தனை வருட அரசியல் செயற்பாட்டில் பா. டெனிஸ்வரனிடம் மாட்டி, முழித்துக்கொண்டிருப்பதாகவே, அரசியல் நிலைமைகளைப் பார்க்கும்போது தோன்றுகின்றது.

எதிர்வரும் ஆண்டுகளில், நடைபெறப்போகின்ற தேர்தல்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு முகம்கொடுக்கப் போகின்றது என்ற அங்கலாய்ப்பு அல்லது எதிர்பார்ப்பு கூட்டுக்கட்சிகளிடம் காணப்படுகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலைமைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எங்கு கொண்டு சென்று விடும் என்ற கருத்தியல் ஒட்டம், இன்று மக்கள் மத்தியில் வேகமாகவே ஓடத்தொடங்கியுள்ளது.

பா. டெனிஸ்வரனுடனான அரசியல் மோதல்கள் மற்றும் முதலமைச்சருக்கான ஆதரவு போக்குகளினால் தமிழரசுக் கட்சியுடனான உறவுவில் விரிசலும் மோதல்களும் டெலோவுக்குள் காணப்படுகின்றன.

இந்நிலையில், சுழற்சி முறையிலாக ஆசனப் பகர்வில் தமது கட்சியைச் சார்ந்த ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை புளொட் முன்வைத்திருந்தபோதிலும், தமிழரசுக்கட்சியால் உதாசீனம் செய்யப்பட்டு, ஈ.பி.ஆர்.எல்.எப் ஊடாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, யாழ். வணிகர் சங்கத் தலைவரைத் தமது கட்சிக்குள் உள்வாங்கியது.

அவ்வேளை​யில், அந்த ஆசனத்தைத் தமிழரசுக்கட்சி, தான் எடுத்துக்கொண்டமை முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழரசுக்கட்சியுடன் மென்போக்கைத் தமது கட்சியின் தலைவர் கைக்கொண்டமையினாலேயே இந்நிலை ஏற்பட்டதாகக் கருத்துகள் உலாவுகின்றன. அத்துடன், அக்கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கும் தலைமைக்கும் இடையிலான மனக்கசப்புகளும் ஒருபுறம் கூட்டமைப்புக்குள் குழப்பமாக இருக்கிறது.

இதற்குமப்பால், ஈ.பி.ஆர்.எல்.எப் தமது கட்சியினூடாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களைத் தமிழரசுக்கட்சி தமக்குள் உள்ளீர்த்துக்கொள்ளும் நிலையில், எவ்வாறு கூட்டாகத் தொடர்ந்தும் செயற்படுவது என்ற நியாயமான கொதிநிலையில், வெளிப்படையாகவே தமிழரசுக் கட்சியை விமர்சித்து வருகிறது. குறிப்பாக, சுரேஸ் பிரேமச்சந்திரனின் செயற்பாடுகள் நீண்ட காலக் கூட்டுக்கு வழிசமைக்காது போய்விட்டதைப் புடம்போட்டுக் காட்டுகின்றது.

இவ்வாறான, நிலையிலேயே தமிழரசுக் கட்சிக்குள்ளும் உட்கட்சி மோதல்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன. தமிழரசுக்கட்சியின் மூலமே, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முதல்வராகக் களம் இறங்கியிருந்தார். ஆனால், இப்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் எந்தக்கட்சி என்றே தெரியாத நிலையில் உள்ளார். இந்நிலையில், மாகாணசபையில், தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஒரு சாராராக செயற்பட்டு வருவதும் ஏனைய சிலர் முதலமைச்சரின் பின்னால் நிற்பதும் தமிழரசுக்கட்சியின் உட்கட்சிப் பூசலை வெளிக்காட்டுகின்றது.

இவை மாத்திரமின்றி, யாழ், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை, மேடை போட்டுத் தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் விமர்சித்து வருகின்றமையும் தமிழர் அரசியல் முன்னகர்வில் ஏற்புடையதாக அமையவில்லை.

இக்காலச் சூழலிலேயே, புதிய அரசமைப்புக்கான முனைப்புகள் மத்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த கால அரசமைப்புகளின் உருவாக்கத்தின்போது, தமிழர்களின் பங்களிப்பு இல்லாத நிலையில், ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலான அரசமைப்புகளின் சிறுபான்மையோர் உரிமைகள் குறித்த சரத்துகள் அமைந்திருந்தன.

இந்நிலையில், தற்போது தமிழர்களின் மத்தியில் அதிகளவான ஆதரவையும் செல்வாக்கையும் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்வாங்கியதாக, புதிய அரசமைப்புக்கான முனைப்புகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இத்தகைய முனைப்புகள், தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்த்துவைப்பதில் எவ்வளவு தூரம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதான தெளிவு, இதுவரை தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

ஒவ்வொர் அரசியல் தலைமையும் மாறுபட்ட கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நிலையில், யதார்த்தமான நிலைமையை எடுத்தியம்புவது யார் என்பதை அறிந்துகொள்வதில் மக்கள் குழம்பியுள்ளமை மறுப்பதற்கில்லை.

சிங்கள அரசியல் தலைமைகள், தமிழர்களுக்கு பெரியளவிலான அதிகாரங்களை வழங்கப்போகின்றது அல்லது நாட்டைக் கூறுபோட்டுக் கொடுக்கப்போகின்றது என்ற கருத்தியலை தென்பகுதியில் விதைத்து வரும் நிலையில், தமிழர் தரப்பு இருவேறு கருத்தியல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றது.

தமிழர்கள் எதிர்பார்த்த அளவிலான அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசுக்கட்சி சார்ந்த தரப்பினரும் கூட்டமைப்பின் ஏனைய கட்சியினர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆகியோர் இவ் அரசமைப்பும் தமிழர்களை ஏமாற்றி விடும் என்ற வாதத்தை முன்வைத்துச் செல்கின்றனர்.

எனவே, அரசமைப்பொன்றின் உருவாக்கத்துக்கு முன்னராக மக்கள் கருத்தறியும் குழு உருவாக்கப்பட்டு, மாவட்டம் மற்றும் பிரதேச ரீதியில் கருத்துகளை பெற்றிருந்தாலும், அந்த அமர்வுகளில் மக்கள் எவ்வான கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்ற தெளிவுபடுத்தலை தமிழர் அரசியல் தலைமைகள் முன்வைத்திருக்கவில்லை.

இதன் காரணமாக, தமது தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் கூட, அரசமைப்புத் தொடர்பான கருதாய்வு அமர்வுகளில் முன்வைக்கப்பட்டிருந்தமையை இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டும்.

இந்நிலையில், அரசமைப்புத் தொடர்பான, விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அதன் உள்ளடக்கத்தை கிராமமட்ட ரீதியில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இதைவிடுத்து, வெறுமனே தமது அரசியல் காழ்புணர்ச்சிக்கான கருப்பொருளாக அரசமைப்பைத் தொடர்ந்தும் கையாண்டு வருவது தமிழர்களை அரசியல் அனாதைகளாக்கி, பின்னோக்கிச் செல்லவே வழிசமைக்கும் என்பதே உண்மை.

தென்பகுதியில், ஜே.வி.பி போன்ற இடதுசாரிக்கட்சிகள், தற்கால அரசியல் சூழலை இளைஞர்கள் முதல் வயோதிபர் வரை தெளிவுபடுத்தும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. இந்நிலையில் தமிழர் பகுதிகளில் அவ்வாறான நிலை காணப்படாமை ஏன் என்ற கேள்வியை எழும்புகின்றது.

மக்கள் பிரதிநிதிகளின் இயலாமையா அல்லது அவர்கள் தற்கால அரசியல் நிலைமைகளை புரிந்துகொள்ளவில்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.

இன்றைய, இளம்தலைமுறை வாக்காளர்களாக உருவாகியுள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட பலர், யுத்தத்தின் தாக்கம், தமிழர் பிரச்சினை மற்றும் தேசிய அரசியலில் தமிழர்களின் பங்கு தொடர்பில் பெரியளவில் எதையும் ஆழமாகவோ அல்லது பொதுவாகவோகூட அறிந்தவர்களாகச் சொல்லமுடியாது.

அவர்களது சிறுபிராயக் காலம், யுத்தம் இடம்பெற்று முடிந்த காலப்பகுதியில் காணப்படுவதனால் அவர்களுக்குத் தமிழர்களின் கடந்த கால வரலாற்று உண்மைகள் சொல்லிக்கொடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது.

அவர்களைப் பொறுத்தவரையில், இன்றைய நிலையில், எவ்வித பிரச்சினைகளும் தமிழர்களுக்கு இல்லை என்பதாகவே உணர்கின்றனர். ஆகவே, சுதந்திரக் காற்றை முழுமையாகச் சுவாசிப்பதான உணர்வை அவர்கள் வெளிக்காட்டும் நிலைமை உள்ளது.

அவர்களிடம் தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம், தாயகம் போன்ற வார்த்தைகளை எடுத்தியம்பும்போது, வியப்புடனும் ஏளனமாகவும் பார்க்கும் நிலைமை சில இடங்களில் காணப்படுகின்றது.

எனவே, யுத்தம் முடிவடைந்து சுமார் எட்டு ஆண்டுகளிலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளமையானது, எதிர்வரும் காலங்களில் புதிய வாக்காளர்களாக உருவாகப்போகின்ற இளைஞர்களது நிலையை உணரவேண்டும்.

ஏனெனில், புதிய அரசமைப்பு மீதான வாக்களிப்பு, இடம்பெறுமாயின் புதிய வாக்காளர்களாக உருவாகியுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாக்குகள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையில் அவர்களது பங்கும் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும், இத்தகைய நிலையை எதிர்கொள்வதற்கான செயற்திட்டம் ஒன்றை, இன்று வரை தமிழ் அரசியல் தலைமைகள் செயற்படுத்த தலைப்படவில்லை என்பதே வேதனை.

எனவே, எதிர்வரும் காலங்களில் மாகாணசபையின் செயற்பாடுகளே தமிழர்களின் முக்கிய பிரச்சினையாக வெளிக்காட்டுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்தாலேயே தமிழர் அரசியல் பிரச்சினை தீரும் என்ற போலி வேசங்களைக் களைந்து, ஆக்கபூர்வமான அரசியல்த் தீர்வை நோக்கிச் செல்ல, தமிழ் அரசியல்த் தலைமைகளாகத் தம்மை வெளிக்காட்டிக்கொள்பவர்கள் திடசங்கற்பம் எடுக்கவேண்டும்.

இல்லையேல், எதிர்வரும் காலங்களில் தமிழர்கள் தென்பகுதி பெரும்பான்மை கட்சிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலைமையே தோற்றுவிக்கப்பட்டு விடும் என்பது மறுப்பதற்கில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 24-ம் புலிகேசிக்காக உடல் எடையை குறைத்த வடிவேலு..!!
Next post காலா படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு விபத்து..!!