`திரிகோணமலை சம்பூர் பகுதி எங்களுக்குதான்’ கைப்பற்றிய இடத்தை திருப்பி தர முடியாது
திரிகோணமலை சம்பூர் பகுதி தங்களுக்குதான் என்றும் அதை திருப்பி தரமுடியாது என்றும் விடுதலைப்புலிகளுக்கு ராணுவம் பதில் அளித்து உள்ளது. இலங்கையில் திரிகோணமலை அருகே உள்ள சம்பூர் பகுதியை விடுதலைப்புலிகளிடம் இருந்து சமீபத்தில் ராணுவம் கைப்பற்றியது.
சம்பூரை ராணுவம் கைப்பற்றியதன் மூலம் போர் நிறுத்தம் செயல் இழந்துவிட்டது என்றும் அங்கிருந்து ராணுவம் வெளியேறாவிட்டால் விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்துவார்கள் என்றும் அந்த இயக்கத்தின் அமைதி செயலக தலைவர் எஸ்.புலித்தேவன் கூறி உள்ளார்.
ராணுவம் பதில்
ஆனால் சம்பூரை விடுதலைப்புலிகளிடம் திரும்ப ஒப்படைக்க முடியாது என்று இலங்கை ராணுவம் அறிவித்து உள்ளது. இதுபற்றி இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கெகலியா ரம்புக்வெல்லா கூறியதாவது:-
வாபஸ்பெற முடியாது
சம்பூரில் இருந்து திரிகோணமலை துறைமுகத்தின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதால் அங்கிருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த நகரை ராணுவம் கைப்பற்றியது.
எனவே சம்பூரை விட்டுக்கொடுக்க மாட்டோம். அங்கிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது என்ற கேள்விக்கே இடம் இல்லை. விடுதலைப்புலிகளின் சவாலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.
தாக்குதல்
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள முகமலை என்ற இடத்தின் மீது விடுதலைப்புலிகள் சிறிய ரக பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. விடுதலைப்புலிகளின் தளங்கள் மீது போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. விடுதலைப்புலிகளின் பல பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. இவ்வாறு கெகலியாக ரம்புக்வெல்லா கூறினார்.