‘பந்தை’ விளையாட தயாராகும் உயர்நீதிமன்றம்..!! (கட்டுரை)

Read Time:13 Minute, 44 Second

image_ce9609b39cதமிழகத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தின் தலைவிதியை சென்னை உயர்நீதிமன்றம் வருகின்ற செப்டெம்பர் 20 ஆம் திகதி முடிவு செய்யப் போகிறது.

அரசியலில் “புயல்” வீசுவது மட்டுமல்ல- “பூகம்பமும்” சேர்ந்து நிகழுமோ என்ற சூழல் தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கிறது. “ஒரு வாரத்துக்குள் ஆட்சியைக் கவிழ்ப்பேன்” என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் சசிகலாவின் தலைமையிலான அ.தி.மு.கவை தற்போது வழி நடத்தும் டி.டி.வி.தினகரன்.

“சட்டம் மூலமும், மக்கள் மன்றம் மூலமும் இந்த ஆட்சி வீழ்த்தப்படும்” என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். “எங்களை ஆட்டவோ அசைக்கவோ முடியாது” என்று பதில் சவால் விட்டிருக்கிறார் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி.

இப்படி முக்கோணத்தில் தமிழக அரசியல் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், மாநில அரசு நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்த சட்டப் போராட்டம் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தை எட்டியுள்ளது.

அ.தி.மு.கவின் பொதுக்குழுவில் “சசிகலா நீக்கம்” “ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஒருங்கிணைப்பாளர்; இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்” “அ.தி.மு.கவின் பொது செயலாளருக்கு இருந்த கட்சி அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் வழங்கியது” என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், அதில் பொதுச் செயலாளரின் அதிகாரங்களை அளித்த விவகாரம் அ.தி.மு.கவின் உள்கட்சி விதிக்கு முரண்பட்டு நிற்கிறது.

அதனால்தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட மறு தினமே, தினகரன் தரப்பு எம்.பிக்கள் இந்திய தேர்தல் ஆணையத்தை சந்தித்து “எடப்பாடி தலைமையில் கூடிய பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆகவே உயர்நீதிமன்றம், ஆளுநர் மாளிகை, தேர்தல் ஆணையம் என்ற மூன்று இடங்களில் இப்போது தமிழக அரசின் தலையெழுத்தும், அ.தி.மு.க என்ற கட்சியின் உயிர் மூச்சும் அடங்கியிருக்கிறது.

தமிழக அரசியல் பல “முதல் சம்பவங்களை” இப்போது காண்கிறது. ஓர் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தும், அந்த அரசை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாமல் ஆளுநர் இருப்பது முதல் முறையாக நடைபெறுகிறது.

அ.தி.மு.க ஆட்சியை எதிர்த்து வாக்களித்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்காமல், முதல்வர் பற்றி ஆளுநரிடம் முறையிட்டதற்காக தகுதி நீஉபெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள் என்று உயர்நீதிமன்றத்தை அணுகியிருப்பதும் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக அரங்கேறுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஓர் அரசியல் கட்சிக்குள் “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை” உருவாக்கி, அந்தக் குழு கட்சியை வழிநடத்தும் என்ற “மாதிரி நடைமுறை” முதன் முதலாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி ஒன்றில் நடைபெற்றுள்ளது. ஆகவே அரசியலில் தமிழகத்தை பொறுத்தமட்டில் “அசாதாரண சூழல்” நிலவுகிறது என்றால், இதுவே சிறந்த உதாரணங்களாக இருக்கின்றன.

ஆளும் அரசின் ஸ்திரமின்மை, அரசு நிர்வாகத்தை மிகவும் பாதித்துள்ளது. ‘நீட்’ தேர்வில் மத்திய அரசிடம் முறைப்படி அழுத்தம் கொடுத்து விலக்கு பெற முடியவில்லை. அரசு ஊழியர்கள் போராட்டத்தை, அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை எச்சரிக்கை செய்து போராட்டத்தை வாபஸ் பெற வைத்து, மக்களுக்கு அரசு ஊழியர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட இன்னல்களைத் தீர்த்து வைத்துள்ளது. ஆசிரியர்கள் போராட்டத்தை நீதிமன்றமே தலையிட்டு நிறுத்தியிருக்கிறது.

18 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் எடுத்த நடவடிக்கையை தொடருவதற்கு உயர்நீதிமன்றம் “செக்” வைத்திருக்கிறது. எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து விட்டு, அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழலை சென்னை உயர்நீதிமன்றம் தடுத்து, சட்டமன்ற ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது.

இது மட்டுமல்ல, கதிராமங்கலம் போராட்ட விவகாரத்தில் கைதானவர்களை ஜாமினில் விடுதலை செய்வதற்கு கூட நீதிமன்றங்கள் கடுமை காட்டியதால்தான் அந்த போராட்டங்கள் பிசுபிசுத்துள்ளன. இதன் அடிப்படையில் பார்த்தால் இன்றைக்கு தமிழகத்தில் நீதிமன்றங்களின் தலையீடு இல்லையென்றால் அரசு நிர்வாகமே மேலும் மோசமாக ஸ்தம்பித்துப் போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது மாதிரி சூழ்நிலைகள் எழுந்த கடந்த காலங்களில் “அரசியல் சட்டப்படி ஆட்சி நடைபெறவில்லை” என்று கருதி அரசியல் சட்டத்தில் உள்ள 356 வது பிரிவைக் பயன்படுத்தி மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டுள்ளது கடந்த கால வரலாறு.
“அரசியல் சட்டத்தில் 356-வது பிரிவு செயலற்ற பிரிவாக (Dead letter) இருக்கட்டும்” என்று அரசியல் சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் கருதினாலும், பிரதமர்களால் மிகவும் அதிகமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இந்திய அரசியல் சட்டப் பிரிவு 356தான் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அரசியல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பிறகு 1954இல் முதல் முறையாக “பெப்சு” மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அல்லாத மாநில அரசாங்கத்தைக் கலைக்க பிரயோகிக்கப்பட்டது.

அதன் பிறகு 130க்கும் மேற்பட்ட முறை, இந்தப் பிரிவின் கீழ் மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்தப் பிரிவால் இரு முறை பாதிக்கப்பட்டது தி.மு.க; ஒரு முறை பாதிக்கப்பட்டது அ.தி.மு.க நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்குப் பிறகு, தேர்தலில் வெற்றி பெற்று 1977 இல் ஆட்சிக்கு வந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் காங்கிரஸ் ஆட்சியில் ஒன்பது மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.

அதேபோல் 1980 இல் மீண்டும் வெற்றி பெற்று வந்த பிரதமர் இந்திரா காந்தி, ஜனதா கட்சி ஆண்ட ஒன்பது மாநில அரசுகளை இந்த 356 வது பிரிவின் கீழ் கலைத்தார். நாட்டை ஆண்ட பிரதமர்களில் 50 முறை 356 ஆவது பிரிவைப் பயன்படுத்தி, மாநில ஆட்சிகளை கலைத்த பிரதமர் இந்திரா காந்தி மட்டுமே! அந்த அளவுக்கு மத்தியில் உள்ள அரசுக்கு மாநில அரசை கலைக்கும் இந்த பிரிவு உதவியிருக்கிறது.

ஆனால், அதன் பிறகு 356 வது பிரிவு பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு மாநில கட்சிகளிடமிருந்து கிளம்பியது. “சர்க்காரியா கொமிஷன் பரிந்துரைகளும்”, “எஸ்.ஆர் பொம்மை வழக்கில்” உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளும் இந்தப் பிரிவின் ஆதிக்கத்தை ‘பிரேக்’ போட்டு நிறுத்தி வைத்துள்ளது.

அதனால்தான் இப்போது தமிழகத்தில் இது போன்ற அசாதரண சூழ்நிலையில் கூட, 356 ஆவது பிரிவைப் பயன்படுத்துவதில் மத்திய அரசு தயங்கி நிற்கிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க முன் வருவதால் மட்டுமே மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இப்போது தமிழகத்தில் நிர்வாகம் ஓரளவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த ஸ்திரமற்ற நிலைமை தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. மாநில வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவரும் “இந்தியாவில் சிறந்த மாநிலமான தமிழகம் இப்படி சீரழிந்து கொண்டிருக்கிறதே” என்ற ஏக்கத்தில் உள்ளார்கள்.

இந்த நெருக்கடியில் மத்திய அரசோ, மாநில ஆளுநரோ அமைதி காப்பது நியாயமில்லை என்ற எண்ணம் தமிழக மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. இந்த அரசு தொடர வேண்டுமென்றால் உடனடியாக சட்டமன்றத்தில் அரசுக்கு இருக்கும் பலத்தை நிரூபிக்க சொல்வதே ஒரே வழி. இந்த அரசின் மீது மீண்டும் மக்களுக்கு நம்பிக்கை பிறக்க ஏதுவாக இருக்கும்.

ஆனால், ஆளுநர் தயங்குவதால், அவர் வைத்திருந்த “பந்தை” இப்போது உயர்நீதிமன்றமே “விளையாடுவதற்கு” தயாராகி வருகிறது. “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், ஆளுநர் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு செப்டெம்பர் 20 ஆம் திகதிக்கு வழக்கைத் தள்ளி வைத்துள்ளது. சட்டமன்றத்தை கூட்டுவதும், அங்கு ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை நிரூபிக்கச் சொல்வதும் மாநிலத்தின் ஆளுநராக இருப்பவரின் பிரத்தியேக அதிகாரம்.

அதில் நீதிமன்றங்கள் “அரிதிலும் அரிதாகவே” தலையிட்டு வந்திருக்கின்றன. இப்படியொரு சூழ்நிலையில் முதன் முதலில் உத்தரபிரதேச மாநிலத்தில் கல்யாண் சிங் அமைச்சரவை கலைக்கப்பட்ட போது, சட்டமன்ற வாக்கெடு ப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

21 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்கிறோம் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த பிறகும், தனது அரசியல் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி “சட்டமன்ற வாக்கெடுப்புக்கு” உத்தரவிடாமல் இருக்கும் ஆளுநரின் செயலால் இப்போது ஆளுநரின் நடவடிக்கையும் உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு போகும் துரதிர்ஷ்டவசமான சூழல் உள்ளது.

சபாநாயகர், ஆளுநர் போன்றவர்களின் நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது “கடைசி கட்ட முயற்சியாகவே” இதுவரை இருந்து வந்திருக்கிறது.

அப்படியொரு கடைசி கட்ட முயற்சியில் சென்னை உயர்நீதிமன்றம் வருகின்ற செப்டெம்பர் 20 ஆம் திகதி ஆளுநர் மற்றும் சபாநாயகரின் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப் போகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இப்படியொரு சந்தர்பத்தில் உயர்நீதிமன்றம் தலையிடுவதும் முதல் முறையே!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரியங்காவை மனம் திறந்து பாராட்டிய சோனாக்ஷி சின்கா..!!
Next post தீரன் அதிகாரம் ஒன்று டீசர், டிரைலர், படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!