விற்று விடுவாரா சம்பந்தன்? ‘வரலாம், வராமலும் போகலாம்’..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 44 Second

image_666f0120c5இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2016ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு மூலம் தீர்வு காணப்படும் என்று திட்டவட்டமாகக் கூறி வந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தீர்வு வரலாம், வராமலும் போகலாம்” என்று கூறுகின்ற நிலைக்கு இப்போது வந்திருக்கிறார்.

2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவரும் என்ற நம்பிக்கையில் தான், அவர் அந்தக் காலக்கெடுவை முன்வைத்திருந்தார்.

ஆனால், கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழித்துத்தான், அந்த இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கிறது.

ஆனாலும் கூட, இரா.சம்பந்தனிடம், தீர்க்கமான ஒரு நம்பிக்கையை இப்போது காண முடியவில்லை என்பதையே, “வரலாம், வராமலும் போகலாம்” என்ற அவரது ஆகப்பிந்திய கருத்து உணர்த்தியிருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதுதான் அவர் இதைக் கூறியிருக்கிறார்.

இரா.சம்பந்தன் இதைக் கூறுவதற்கு சில நாட்கள் முன்னதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், “தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் இரா.சம்பந்தனின் முயற்சி வெற்றி பெறுமா?” என்று ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, அவர் “நடக்கலாம், நடக்காமலும் போகலாம்; சம்பந்தன் அதற்கு முயற்சிக்கிறார், எனினும் தீர்வு அவரது கையில் இல்லை” என்பது போல பதிலளித்திருந்தார்.

அத்துடன், கடந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட, தமிழீழத்தைப் பெற்றுத் தருவதாகத்தான் கூறினார். ஆனால், அவரால் முடியவில்லை என்ற உதாரணத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இரா.சம்பந்தனின் முயற்சிகள் வெற்றி பெறும் என்று நம்புகின்ற நிலையிலோ, நம்ப முடியாது என்று கூறுகின்ற நிலையிலோ முதலமைச்சர் விக்னேஸ்வரன் இருக்கவில்லை. அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டுச் சிந்திக்கின்றபோது, இதுதான் உண்மை நிலை எனலாம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தக் கருத்தை வெளிப்படுத்திய போது, அதை முன்னிறுத்தி யாரும் விமர்சனங்களை முன்வைத்ததாகத் தெரியவில்லை.

ஆனால், இரா.சம்பந்தனின் கருத்து வெளியானதுமே, அதை நகைக்கும் வகையில், சமூக ஊடகங்களில் கருத்துகள் பதிவாகியிருப்பதைக் காண முடிகிறது.

சமூக ஊடகங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும், வன்மங்களையும் குவிக்கின்ற களமாக மாறியுள்ள சூழலில், அதனூடான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களும், கருத்துப் பரிமாற்றங்களும் அருகிப் போய் விட்டன.

அவ்வாறான முயற்சிகளை முன்னெடுப்பவர்கள் கூட, சில அருவருப்பான அணுகுமுறைகளால் தமது முயற்சிகளில் இருந்து பின்வாங்குவதைக் காண முடிகிறது.

சமூக ஊடகங்களில் இரா.சம்பந்தனையும் கூட்டமைப்பையும் வசைபாடுவது புதிய விடயங்களல்ல. எனவே, இப்போது அவருக்கெதிராகத் தொடுக்கப்படும், இனிமேலும் தொடுக்கப்படும் விமர்சனங்களை யாரும், பெரிதாகக் கண்டு கொள்ள முடியாது.

ஆனால், அரசியல் களத்தில் உள்ள யதார்த்தங்களையும், சாதக பாதகங்களையும் புரிந்து கொள்ளாமல், காய்களை நகர்த்தி விட முடியாது என்ற சம்பந்தனின் கருத்தில் உள்ள நியாயப்பாடுகளை அவ்வளவு இலகுவாக யாராலும் புறக்கணித்து விட முடியாது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் காத்திரமாகச் செயற்பட்டிருக்கலாம் என்ற ஆதங்கமும் கோபமும் பலரிடம் காணப்படுகிறது.

ஆனாலும், அதற்கான மூலோபாயம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்ற தெளிவு, பெரும்பாலானவர்களிடம் இல்லை என்றே கூறலாம்.

தவறுகளைச் சுட்டிக்காட்டத் தெரிந்த பலருக்கும், அதற்குத் தீர்வுகளைக் கூறுவதற்குத் திறமை இருப்பதில்லை. அதேநிலைதான், தமிழ்த் தேசிய அரசியல் களத்திலும் இருக்கிறது.

2016ஆம் ஆண்டு முடிந்தவுடன், தீர்வைப் பெற்றுத் தரவில்லை என்ற விசனத்தை வெளிப்படுத்தும் போது, அதற்கான புறச்சூழல் எவ்வாறு இருந்தது என்பதைப் பலரும் மறந்து விடுகின்றனர்.

பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஒரு கட்டத்தில், தன்னால் செய்யக் கூடிய அனைத்தையும் விரைவாகவே செய்து விடுவதாகவும், ஆனால், பிறரைக் கொண்டு செய்விக்க வேண்டிய விடயங்களில் தான், தாமதம் ஏற்படுவதாகவும் சம்பந்தன் கூறியிருக்கிறார்.

அரசமைப்பு மாற்றம், அரசியல் தீர்வு , தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்று அனைத்துமே, ஒரு பக்கத்தில் இருந்து நகர்த்தக்கூடிய விடயங்களாக இருக்கவில்லை.

அரசாங்கத் தரப்பு, அதை எதிர்த்து நிற்கும் ஒன்றிணைந்த எதிரணி, பௌத்த மத பீடங்கள், என்று ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட, கட்டமைப்புகளுடன் போராடியே இணக்கப்பாடுகளை ஏற்படுத்த வேண்டிய சூழல் இருப்பதைப் பலராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ் மக்களுடன் உரிமைகளைப் பகிர்ந்து கொள்வதில் இருந்து நழுவிக் கொள்வதில், சிங்கள பௌத்த பேரினவாத தலைமைகளுக்கு நீண்ட அனுபவமும் வரலாறும் இருக்கிறது.

இலங்கைத்தீவு, சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே, தமிழ்த் தலைமைகளை ஏதோ ஒரு விதத்தில், பேச்சுகளில் இருந்து வெளியேற்றி, தமது காரியத்தைச் சாதித்து வந்திருக்கிறார்கள் அவர்கள். விடுதலைப் புலிகளின் தலைமையை இராணுவ வழியில் அகற்றினார்கள். ஏனைய தமிழ்த் தலைமைகளை விட்டுக்கொடாத தமது ‘பிடிச்சிராவி’த் தன்மையின் மூலம், வெளியேற்றினார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவும் கூட, தனது ஆட்சிக்காலத்தில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, அதே அணுகுமுறையைக் கையாண்டு தான் பேச்சுகளில் இருந்து வெளியேற்றியிருந்தார்.

பேச்சுகள் என்ற பெயரில் நேரத்தை வீணடித்து தமிழர் தரப்பின் பொறுமையைச் சோதித்து, பேச்சுக் களத்தில் இருந்து வெளியேற்றுவது அல்லது, எதையும் விட்டுக் கொடுக்காமல் வெளியேற வைப்பது அவர்களின் உத்தியாகவே இருந்து வந்திருக்கிறது.

அதுபோன்றதொரு நிலை, மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், இரா.சம்பந்தன் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்களுடன் தமிழர் தரப்பில் பேச்சுகள் நடத்தப்பட்டபோது, இருந்த சூழலை விட தற்போது உள்ள சூழல் வேறுபட்டது.

சர்வதேச ஆதரவு என்ற பலம் அரசாங்கத்துக்கு இருக்கிறது. இன்னொன்று பேச்சுகள் இல்லாவிடின், போரின் மூலம் தீர்வு காணலாம் என்ற தெரிவு தமிழர் தரப்புக்கு இல்லாமல் போயுள்ள தருணம் இது.

இந்த இரண்டு காரணிகளாலும், தமிழர் தரப்புக்கு அதிகபட்ச பொறுமை தேவைப்படுகிறது. பொறுமையை இழந்து பேச்சுகளில் இருந்து விலகிக் கொண்டால், சர்வதேச அரங்கில் தமிழர்களே, பேச்சுகளின் மூலம் தீர்வு காணத்தயாராக இல்லை என்ற முத்திரை குத்தப்பட்டு விடும் ஆபத்து உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

இதுபோன்ற நிலை ஏற்படுவதைத் தவிர்க்கவே சம்பந்தன் கவனம் செலுத்துகிறார் என்பது தெளிவாகவே தெரிகிறது.

அதேவேளை, பேச்சுகள், தீர்வுகள் என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் போக்குக்கு முடிவு கட்டாமல், அதன் பின்னால் செல்வது சரியானதா என்ற எதிர்க்குரல்களில் உள்ள நியாயத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இணைந்திருப்பதைச் சாதகமான விடயமாக இரா.சம்பந்தன் கருதிக் கொண்டிருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ என்ற வலுவான எதிர்க்காரணி ஒன்று இதற்குக் குறுக்கே இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவைத் தாண்டி ஓர் அரசியல்தீர்வைப் பெற்றுக் கொள்வது அவ்வளவு சுலபமானதாக இருக்காது.

ஜே,ஆர். ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களின் ஆட்சிக்காலத்தில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய அரசியல் சூழலும் பலமும் இருந்தது.

நாடாளுமன்றப் பெரும்பான்மை பலமும், மக்கள் செல்வாக்கும் இவர்களிடம் இருந்த போதும், அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால், தற்போது, இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்திருந்தாலும், ஜே.ஆர், சந்திரிகா, மஹிந்த போன்றவர்கள் கொண்டிருந்த வலுவான அரசியல் தளம், தற்போதைய அரசாங்கத்திடம் இல்லாதமை பெரும் பலவீனமாகும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறக்கூடிய ஆற்றலைத் தற்போதைய அரசாங்கம் கொண்டிருந்தாலும், அதை இழுத்து விழுத்தக் காத்துக் கொண்டிருக்கும் சக்திகள் மிகவும் பலமானவை என்பதை மறந்து விட முடியாது.

முன்னைய ஜனாதிபதிகளுக்கு இந்தளவுக்கு வலுவான எதிர்ச் சக்திகள் இருக்கவில்லை.
எதிர்ப்புகளைச் சமாளித்து, தீர்வைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய ஆற்றலைத் தற்போதைய அரசாங்கம் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை கூட்டமைப்பிடம் இருக்கிறது. அதனால்தான் பொறுமையோடு காத்திருக்கிறது.

நிலையான தீர்வை அவசரமாகக் கொண்டு வர முடியாது; மெதுவாகவும் உறுதியாகவும் தான் அதைச் செய்ய முடியும் என்று ஐ.நா வரை சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்.

இது அவரது வெற்று வாக்குறுதியாக அமைந்து விடாது என்ற நம்பிக்கை சம்பந்தன் போன்றோரிடம் காணப்படுகிறது.

இருந்தாலும், அவர்களுக்குத் தற்போதைய தீர்வு முயற்சிகளின் மீது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்த முடியாதிருப்பது கவனிக்கத் தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை, தீர்வு நிச்சயம் கிட்டும் என்று கூறிக் கொண்டிருந்தவர், “கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்” என்று கூறத் தொடங்கியிருப்பதை, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை, சம்பந்தனுக்கு குறையத் தொடங்கியிருக்கிறது என்பதைத்தான் தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஆனாலும், தம்மால் எந்தக் காரியமும் கெட்டுவிடக் கூடாது என்பதில் மாத்திரம் அவர் உறுதியாக இருக்கிறார்.

அதேவேளை, தாங்கள் தமிழ் மக்களை விற்கவோ அவர்களின் உரிமைகளை அடகு வைக்கவோ மாட்டோம் என்பதையும் சம்பந்தன் கூறியிருக்கிறார். இது எந்தளவுக்கு உண்மையானது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெர்சல் படத்தை விளம்பரம் செய்ய தடை..!!
Next post ‘செக்ஸ்’ விவகாரம்: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா? கங்கனா ரணாவத் கேள்வி..!!