குப்பை மேட்டு கொள்ளிவால் பேய்கள்..!! (கட்டுரை)

Read Time:12 Minute, 40 Second

image_db6f433f33கொக்கட்டி மரத்துக்குக் கீழே முனிவர் ஒருவர் தவமிருந்தவராம். முனிவருக்கு யாரோ தீங்கு செய்ததாகவும், அந்த முனிவர சாபக்கேடால ‘கோதாவாரி’ என்று சொல்கின்ற அம்மைநோய் வந்து, கனக்கப்பேர் செத்து, குடிக்கத்தண்ணி இல்லாமல் ஆக்கப்பட்டு, எல்லாரும் திருவெந்தியன் மேடு, கல்லடித்தெரு, சிங்களவாடி- போய் குடியேறினதாக சரித்திரம் இருக்கிறது”.

“இந்த இடப்பெயர்வுக்குப் பிறகு, மூன்று தினப் பூசையும் இல்லாமல் திருப்பெரும்துறை என்ற கிராமமே காடாகிப் போயிற்று; இதற்குரிய ஆதாரம் இருக்கிறது. எங்கட மூதாதைகள் சொன்னதைச் சொல்றன்”. என்கிறார் திருப்பெருந்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர்.

‘மட்டக்களப்பு மான்மியம்’ என்ற மட்டக்களப்பின் வரலாற்றைக் கூறும் நூலிலும், திருப்பெருந்துறை குறித்த பல வரலாற்றுச் சம்பவக் குறிப்புகள் காணப்படுகின்றன.

நாகரிகமடைந்த மனிதக்குடியிருப்புகள் இங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த மக்கள் கோவில்கள் கட்டி வழிபட்டார்கள் என்றும் துறைமுகத்தில் வள்ளங்களிலேயே வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள் என்றும் மட்டக்களப்பு மான்மியத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இன்றும் அழிபாடடைந்த நிலையிலும் கைவிடப்பட்ட நிலையிலும் இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல வரலாற்றுச் சான்றுகள் ஆலயச் சூழல்களிலும் துறைகளிலும் காணப்படுகின்றன.

இத்தகைய சிறப்புகள் பெற்ற திருப்பெருந்துறை கிராமம் இன்று பெரும் ‘சில்லெடுப்பு’க்குள் சிக்கிக்கொண்டு தவிக்கிறது. அதற்குக் காரணம், குடியிருப்பிலிருந்து 30 அடி தூரத்தில் இருக்கும் குப்பை மேடு.

இந்தக் குப்பைமேட்டினால் திருப்பெரும்துறை கிராமத்தின் இயல்பு வாழ்க்கை கெட்டு, சுற்றுச்சூழல் சீர்கெட்டு,அந்தக்கிராமத்து மக்கள் ‘அனலில் விழுந்த புளு’ப்போல் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

குப்பை மேட்டில், குப்பை எரிவதால் காற்றுப் போக்கில், கிராமத்துக்குள் வீசும் புகை மண்டலம், பசியாறுவதற்காக உணவுத்தட்டைக் கையிலெடுத்தால் உணவு தெரியாத வகையில் மொய்க்கும் இலையான்கள், மஞ்சள் நிறத்தில் காணப்படும் கிணற்று நீர், மனிதக்கழிவுகள், உணவுக்கழிவுகள், விலங்குக்கழிவுகள் போன்ற கழிவுகளில் இருந்து எழும் ‘துர்வாடை’ எனத் திருப்பெரும்துறை கிராமத்து மக்கள், நிம்மதியைப் பறிகொடுத்து,தொல்லைகளினால் துடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் குப்பைகள் அகற்றப்படாமலும் மற்றும் லொறிகளில் ஏற்றப்பட்ட குப்பைகளைக் கொட்டுவதற்கு வழி இன்றியும் நகரின் குப்பை அகற்றும் முகாமைத்துவம் செயலிழந்து காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாநகரத்தில் இதுவரை காலமும் சேகரிக்கப்பட்ட திண்ம மற்றும் திரவக் கழிவுகள் திருபெரும்துறை குப்பை மேட்டில்தான் கொட்டப்பட்டு வந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

“1935 ஆம் ஆண்டு, வலையிறவு கிராம சபையாக இருக்கும்போது, வெள்ளைக்காறன் காலத்திலேயே ‘சொலிட்வேஸ்டு’க்கு உரியதும் ‘லிக்குயிட் வேஸ்ட்டு’க்கு உரியதுமான காணி ஒதுக்கப்பட்டது. அந்தநேரமிருந்தே, தொடர்ந்து இற்றை வரைக்கும் கொட்டிக்கொண்டிருந்தனாங்கள்” என்கிறது, மட்டக்களப்பு மாநகரசபை வட்டாரங்கள்.

“நாங்க என்ன தீர்வு வந்தாலும் இனிமேல் குப்பை கொட்டுறத்துக்கும் மலம் கொட்டுறத்துக்கும் இனிமேல் இடமளிக்க மாட்டோம்” என்று ஒற்றைப்படையாகச் சொல்கிறது திருப்பெருந்துறை கிராமம்.

கோத்துக்குளம், கதலிவனம், சேத்துக்குடாகண்டம், வேம்பையடிதுறை, விடத்தல்முனை ஆகிய ஐந்து குறிச்சிகளையும் உள்ளடக்கிய கிராமமே திருப்பெருந்துறையாகும். கிராமத்தின் நிர்வாகப் பதிவுகளின்படி, 447 குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன. வடக்கிலிருந்து தெற்காக மூன்றரைக் கிலோமீற்றர், கிழக்கிலிருந்து மேற்காக மூன்றரைக் கிலோமீற்றர் நீளஅகலத்தையுடைய விஸ்தீரணம் கொண்டதே திருப்பெருந்துறை கிராமம் ஆகும்.

கிழக்கும் மேற்கும் மட்டக்களப்பு வாவியை எல்லையாகவும் வடக்கில் மட்டக்களப்பு – கொழும்பு வீதி உட்பட, சின்னஊறணி, பெரிய ஊறணி ஆகிய கிராமங்களை எல்லையாகவும் தெற்கில் விமானநிலையமும் அதற்கப்பால் திமிலத்தீவு, வலையிறவு, புதூர் கிராமங்களையும் எல்லையாகக் கொண்டதே திருப்பெருந்துறை கிராமம் ஆகும்.
“இந்தத் தண்ணியைப் பாருங்க… (தண்ணீர் இளம் மஞ்சள் வர்ணத்தில் இருந்தது) இந்த வயரைப் பாருங்க…(வயரின் நிறம், அதன் வகை தெரியாதளவுக்கு இலையான்கள் மொய்த்திருந்தன) இந்தத் தண்ணியை ஆய்வு நடத்தி, சயனைட்டுக்குச் சமமான நஞ்சு இந்தத் தண்ணியில் இருக்கு என்று அறிக்கை தந்திருக்கிறார்கள். அம்பாறை மாவட்டத்திலிருந்து அகதியாக வந்தனாங்கள்; எங்களைக் கொண்டு வந்து பலாத்காரமாகக் குடியேற்றிப் போட்டு, திரும்பக் குடிபெயரச் சொல்லிச் சொல்றாங்கள்.

குப்பை இருக்குத்தானே, குப்பையில் கீழுக்கு ஊறும் தண்ணி, இந்தக் கிணற்றுத் தண்ணியோட வந்து கலந்துட்டுது. இந்தத் தண்ணி பாவிக்கக்கூடாது என்று முதல்செய்த ஆய்விலேயே சுற்றாடல் அதிகார சபை சொல்லீட்டாங்கள். குடிச்சால் சாவினம்.

மீள்குடியேற்றம் செய்யேக்கை ஜிஎஸ்க்கு எம்சிக்கு ஒவ்வீஸ் கட்டிக் கொடுத்தவை. இந்தக் குப்பை நாத்தத்தால் இங்க இருக்கேலாது என்று போட்டாங்கள். அரசாங்க ஊழியர், அதிகாரிகள் இருந்து வேலை செய்ய முடியாதென்றால், அப்ப குப்பை நாத்தத்துக்குள்ள நாங்கள் இருக்கலாம். மக்கள் இருக்கலாமா? ஜி.எஸ் கொஞ்சக்காலம் சகிச்சுக்கொண்டு இருந்தவர். இங்க இருக்கேலாது என்று சொல்லிப்போட்டு, அவர் வாடகைக்கு வீடொன்று எடுத்திருந்தவர்” என்று திருப்பெருந்துறை ‘கிராமம்’, தனது அவலங்களைச் சொன்னது.

திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ வட்டாரங்கள்…. “சிக்கல் வந்தது என்ன என்று சொன்னால், வாகனம் பழுதாகிப் போச்சு. வாகனம் மிதிச்சு மிதிச்சு ‘டம்’ பண்ணும். எல்லாம் பிளட்டாக இருக்கும். ஒரு மாதமா பெரிய கஷ்டமாகிப் போச்சுது. றிப்பெயர் எல்லாம் பண்ணினாங்கள். பாட்ஸ் ஒன்று வரஇருக்குது. ‘டம்பண்ணி டம்பண்ணி’ ஒரு லெவலுக்கு வந்த பிறகு,கிரவல் போட்டு ‘பில்’ பண்ணி விடுவோம். ஒன்றை பில்பண்ணி விட்டோம். படிப்படியாக இதை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அடுத்ததை ‘பில்’ பண்ண ஆயத்தமாகின்ற போதுதான், நெருப்புச்சம்பவம் நடைபெற்றது.ஆக எங்களுக்கு பின்பக்கம், சின்னதோடு கால் ஏக்கர் காணி இருக்கிறது. அதை பில் பண்ணீட்டு ஒரு பூங்கா மாதிரி…..”

“அதோடு தரம்பிரித்தல் செய்யத்தொடங்கி விட்டோம். உக்கிற கழிவு, உக்காத கழிவு, கண்ணாடிகள் வேற, காட்போர்ட் வேற, குசினிக்கழிவுகள்…. ஒரு நாளைக்கு இப்படி பிரித்துப் பிரித்து எடுப்பாங்கள். 60 அடிப் பள்ளத்துக்குத்தான் குப்பைபோட்டு நிறவி வருகின்றது. 10ஆயிரம் லோட் கிறவல் ஏத்தினால் எவ்வளவு பள்ளமாகுமெண்டு யோசித்துப்பாருங்க. பழைய திருப்பெரும்துறையாக்கள் வேற. இவங்கள வந்து, 1994 ஆம் ஆண்டு சம்மாந்துறை, வீரமலையில் இடம்பெற்ற இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு, அஷ்ரப் வந்து தமிழ் ஆக்களை இங்க குடியேற்றினவர். குடியேற்றும்போது, அப்போதைய முதல்வர் செழியேந்திரம் ஐயா, ‘மோஷன்’ ஒன்று போட்டவர். இதில மக்களைக் குடியேற்றாதீங்க. ஏனென்றால், குடியிருப்பதற்கு இடம் உகந்தல்ல என்று. ஆறு ஏக்கர் விஸ்தீரணம். ஆக்கள் கூட பிடிச்சுப் பிடிச்சு புடி இல்லை”

“குப்பைகளைத் தரம்பிரிக்கிற சிஸ்டத்தைக் கொண்டுவந்து, இதில உக்கக்கூடிய குப்பைகளை எல்லாம் கொம்போஸ்ட் செய்கிறத்துக்கு ஒரு பகுதி எடுத்துவிட்டு மற்றது உக்கமுடியாத குப்பைகளை டம்மிங்கில் செய்துகொண்டு வந்தோம். இதற்கான எதிர்ப்பு வந்துதான் இந்த நெருப்பு… யாரோ எரித்திருக்கலாம் என்று கருதுகின்றோம்”

“அங்க இருக்கிற ஆக்களை சகல வசதிகளோயும் இன்னொரு இடத்தைக் கொடுத்து, குடியேற்றினால் நிரந்தரமாக இதற்கொரு தீர்வுவரும்.சோலிட்வேஸ்டாக இருந்தாலும் லிக்குயிட் வேஸ்டாக இருந்தாலும் அவற்றை நவீனமுறையில் கையாள்வதற்கு இந்த இடம்தான் பொருத்தமான இடம்” என்று கூறுகின்றது மட்டக்களப்பு மாநகர சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள்.

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் தினசரி 23 தொன் உக்கக் கூடிய குப்பைகளும் எனையவை 43 தொன்னுமாக மொத்தம் 70 தொன் வரையில் சேகரிக்கப்படுகிறது. நகரத்தில் இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் திருப்பெருந்துறை குப்பைமேடு காணப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்..!!
Next post அண்ணா செய்வீர்களா? விஜய் சேதுபதிக்கு கௌதம் கார்த்திக் வைத்த கோரிக்கை..!!